பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைக்கவை

525

இசைத்தமிழ்

கையாளப்படும் விரிவான செய்முறையே காரணமாகும்.

ஜாலரா போன்ற கஞ்சக் கருவிகளில் எழுப்பப்படும் ஒலியை இசையையொத்த சந்தம் எனலாம். இவற்றில் இசைச் சுரங்களைத் தாளவடிவில் வெளிப்படுத்தலாமேயொழிய வேறு அலங்காரங்களையோ, தனிச் சுரங்களையோ பெற இயலாது. (முக்கியமான இசைக்கருவிகளுக்குத் தனிக்கட்டுரைகள் பார்க்க).


இசைக்கவை (Tuning Fork) நல்ல எஃகினாலான கவை.

இசைக்கவை

உதவி :
சென்கோ

சிக்காகோ.

இதன் கிளைகளில் ஒன்றைத் தட்டினால் அதன் இரு கிளைகளும் அதிர்ந்து கலப்பற்ற நாதத்தைவெளியிடுகின்றன. இந்நாதத்தின் சுதி கிளைகளின் நீளத்தையும் பருமனையும் பொறுத்திருக்கும். இசைக்கவையின் நாதம் ஒலியியல் சோதனைகளில் திட்ட ஒலியாகப் பயனாகிறது. ஒலியியற் கருவிகளை இசைக்கவையைக் கொண்டு சுதி மீட்டலாம். இசைக்கவையை மின்சாரத்தால் இயக்கித் தொடர்ந்து ஒலிக்குமாறு செய்யலாம். இதன் இயற்கை அதிர்வெண் ஏறக்குறைய எப்போதும் மாறாதிருக்கும். ஆனால் வெளி வெப்ப மாறுபாடுகளால் இதன் மீள் சக்தியில் விளையும் சிறு மாறுதல்களால் இதன் அதிர்வெண்ணும் சிறிதளவு மாறுபடலாம். ஆகையால் திருத்தமான சோதனைகளில் இதைப் பயன்படுத்துகையில் இதன் வெப்பநிலை மாறாது வைப்பது அவசியமாகிறது.


இசைஞானியார் சோழநாட்டில் திருவாரூரில்பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்.


இசைத்தமிழ்: சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி யேற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ். “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறுவர்.

மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம். பல இயற்பாக்களோடு இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவினோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது பண்ணாதலின் பண்ணென்பதும் காரணப் பெயராம்.

மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும் துன்பத்திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு அறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரையளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.

அழகிய செந்தாமரை மலரையும் அதனோடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஓவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நுண்ணிய வரைகளினாலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றான். இவ்வுருவத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஓசை. பின் அவ்வோவியத்தின் மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்றான். இயற்றமிழ்ப் பாவினோடு இசையினை இயைத்துப் பாடுதலென்பது இவ்வாறு நிறந் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். “நிறந்தோன்ற” எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப்படும்.

கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறை பற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.

“இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.

சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதியமும், பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ்மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை ஒரு புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை யியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. (கலாக்ஷேத்திர வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று). இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும் இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.

இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டையிசைத் தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளையும், இசைபாடும் முறையினையும், அம்முறை தவறினால் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பல உள்ளன. குமரியாறு கடல்கோளால் அழிவதற்குமுன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன்றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யுளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவனவாகிய இசைநூல் முடிபுகளும் கூத்து நூல் முடிபுகளும் இந்நூலிற் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்-