பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைத் தமிழ்

526

இசைத் தமிழ்

தொகை, திருக்குறள் ஆகிய பழந்தமிழ் நூல்களிலும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திலும் இசைத்தமிழ் பற்றிய அரிய நூன் முடிபுகள் பல பரந்து கிடக்கின்றன.

பண்டைநாளிலே இசைவளர்த்த குடும்பத்தார் பாணரென்னும் பெயரினராவர். “துடியன் பாணன் பறையன் கடம்பனென், றிந்நான் கல்லது குடியும் இல்லை” என வரும் 325ஆம் புறப்பாடலால் இப்பாணர் பழந்தமிழ்க் குடிகளென்பது புலனாகும். அன்னோர் வாசித்த யாழ்க்கருவியின் இயல்பும், அவர் தம் வாழ்க்கை முறையும் பழந்தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றன.

இற்றைக்கு 1800 ஆண்டுகளின் முன்பு காவிரிப்பூம் பட்டினத்திலே மருவூர்ப்பாக்கத்திலே பெரும் பாணர்க்கு இருக்கை அமைந்திருந்ததென்பதையும், அக்காலத்து வாழ்ந்த இசையறிஞர் துளைக்கருவி வாசிப்போர், தோற்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி யிசைப்போர், கண்டத்தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த்தார்களென்பதனையும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையால் அறிகிறோம்.

ஆடல் மகள் நாடக அரங்கிற் புகுந்து ஆடும்போது ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழ் வல்ல கவிஞன், மத்தளம் முழக்குவோனாகிய தண்ணுமையாசிரியன், வேய்ங்குழலூதுவோன், யாழாசிரியன் என்னும் இவர்கள் அவளது ஆடலுக்குத் துணைபுரிந்தனர் எனச் சிலப்பதிகார அரங்கேற்று காதையால் அறிகின்றோம்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப் பேசப்படுகிறது. அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க்கையோடு தொடர்பில்லாத வேற்றுச் சமயங்கள் தமிழ்நாட்டிலே புகுந்து வேரூன்றினமையால், தமிழ் மக்கள் மனவுறுதி யிழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங்களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற்காலத்தும் இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அருளாசிரியர் சிலர் தோன்றி இயலும் இசையும் வளர்த்தனர். இக்காலத்தே வாழ்ந்த காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும், மூத்த திருப்பதிகமும் தெய்வத் தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் வாழ்ந்த காலம் கி.பி. 650 வரையிலாகுமென ஆராய்ச்சியாளர் கூறுவர். திருவெருக்கத்தம்புலியூரில் வாழ்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் மனைவியார் மதங்க சூளாமணியாருடன் சீகாழிப்பதிக்கு வந்து, அளுடைய பிள்ளையாரை வணங்கி, அவர் பாடியருளிய திருப்பதிகங்களைத் தம் யாழிலிசைத்துப் பாடித் தமிழ் நாடெங்கும் சென்று இசைவளர்த்தார் என்பது வரலாறு. அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையதாகும். திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்தவனான மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மன்னன் இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளில் வல்லவன். புதுக்கோட்டையினை யடுத்துள்ள குடுமியா மலையில் இவ்வேந்தனாற் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டின் முடிவிலே. “எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய“ எனத் தமிழிற் பொறிக்கப்பட்டுளது. இதனை ஊன்றி நோக்குங்கால் இக்கல்வெட்டு அக்காலத்து வழங்கிய பழந் தமிழிசை மரபினைக் கூறுவதென்பது நன்கு தெளியப்படும். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய திருப்பதிகங்களும் இக்கல்வெட்டும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வழங்கிய இசை மரபினைத் தெளிவாகத் தெரிவிப்பன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தே மதுரையில் வாழ்ந்த இசைப் பாணராகிய பாணபத்திரனார் திருவாலவாய்ப் பெருமான் பாடிக் கொடுத்த திருமுகப் பாசுரத்தைப் பெற்றுச் சென்று, சேரநாட்டினை யாண்ட சேரமான் பெருமாளைக் கண்டு பெரும்பொருளைப் பரிசிலாகப் பெற்றனர். தேவார ஆசிரியர் காலத்தை யடுத்துச் சோழ நாட்டில் உறையூரிலே தோன்றிய திருப்பாணாழ்வார் என்னும் பாணர் திருவரங்கச் செல்வனார்க்கு இசைத் தமிழ்த் தொண்டு செய்து ஈறிலாப் பேறு பெற்றனர். இசையில் வல்ல ஆனாய நாயனார் வேய்ங்குழலில் இறைவனது திருவைந்தெழுத்தை இசைச் சுரங்களாகக் கொண்டு வாசித்து, இசையுருவாகிய இறைவனது திருவருள் பெற்றனர். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி பழந்தமிழ்ப் பண்களும் பழைய இலக்கணத்திற்கேற்ற தாளமும் அமையப் பெற்றதாகும். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தினரெனக் கருதப்பெறும் அருணகிரியார் முருகப் பெருமானைப் பாடிய திருப்புகழ்ப் பாக்கள் சந்த இசையிலே சிறந்தவையாய் உள்ளத்தைக் கவரக்கூடியவை.

தெய்வத்தைப் போற்றிய இசைப்பாடலை வாரம் என்ற பெயரால் இளங்கோவடிகள் வழங்கியுள்ளார். இயற்றமிழுக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாகிய செய்யுளியக்கம் நான்காம். அவை முதனடை, வாரம், கூடை, திரள் என்பன. மிகவும் தாழ்ந்த செலவினையுடையது முதனடை. மிகவும் முடுகிய நடையினையுடையது திரள். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய்ச் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது வாரப்பாடல். சொற்செறிவும் இசைச் செறிவும் உடையது கூடைப்பாடல். இந்நான்கினுள் இழுமென ஒழுகிய இன்னோசையும் செம்பாகமாகப் பொருளுணர்த்துந் தெளிவும் அமைந்தது வாரப்பாடலே யாகும். இயலிசைத் துறையில் வல்லவர்களே இவ்வார இசையினைப் பாடவல்லவராவர். இத்திறமையில்லாதார் அமைக்கும் இசை சிதைவுடையதென்பதைத் தொல்காப்பியனார் (தொல் - மரபு) நன்கு விளக்குகிறார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இறைவனது திருவருளை இன்சொற்படுத்தியும் இன்னிசைப்படுத்தி பாடிய செழும் பாடல்களே தேவாரம் என்ற பெயராற் போற்றப்பெறுகின்றன. இத் தேவாரத் திருப்பதிகங்களும், இவற்றின் பண்ணமைதியும் இடைக்காலத்தில் போற்றுவாரின்றி அருகி மறையும் நிலையிலே நம்பியாண்டார் நம்பிகள் ஆதரவு கொண்டு திருமுறைகளைத் தொகுத்தவனாகிய திருமுறை கண்ட சோழ மன்னன், திருவெருக்கத்தம்புலியூரில் திருலேகண்ட யாழ்ப்பாணர் மரபிற் பிறந்த பாடினியாரைக் கொண்டு தேவாரத் திருப்பதிகங்களுக்குரியபழைய பண்ணமைதியினை வகுத்தமைத்தனன் எனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் தௌலதாபாத் தேவகிரி இராச்சியத்தில் சிம்மணராஜ சபையில் சமஸ்தான வித்துவானாக விளங்கிய சாரங்கதேவர் என்னும் பெரியார் தமிழ்நாட்டிற்கு வந்து, இங்கு வழங்கிய தேவாரப்பண்களை நன்குணர்ந்து, அப்பண்கள் சிலவற்றின் இலக்கணங்களைத் தாம் இயற்றிய சங்கீத இரத்தினாகரம் என்னும் வடமொழி இசைநூலில் பொன்னேபோற் போற்றி வைத்துள்ளார். பாஷாங்க இராகங்களைக் கூறுமிடத்துத் தக்க இராகத்தின் விபாளையாகிய தேவாரவர்த்தனி என்றும், மாளவ-