பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைநாடகம்

531

இஞ்சி

லும், அறிவினைத் தெளிவடையச் செய்தலும், மனத்தை ஒருமை நிலையில் நிறுத்தலும், புகழ்பட வாழச் செய்தலும். உறுதிப் பொருளை வற்புறுத்தலும், முடிந்த பயனைக் கூறுதலும், மெல்லோசையால் மன அமைதியைத் தருதலும், உச்சநிலையாகிய ஓசையால் மக்களது உணர்வைத் தூண்டித் தொழிற்படச் செய்தலும் இசைப் பாடலாற் பெறும் எண்வகைப் பயனெனக் கொள்வர். தமிழ் முன்னோர். க.வெ.

நூல்கள் : சங்கத் தொகை நூல்கள் : சிலப்பதிகாரமும் அதன் உரைகளும்: ஆபிரகாம் பண்டிதர், கருணாமிருத சாகரம்: விபுலாநந்த அடிகள், யாழ்நூல் : பூர்வீக சங்கீத உண்மை.


இசைநாடகம் (Opera): சாதாரண நாடகத்தில் பாட்டும் இசையும் இருக்கலாம்; ஆனால் அவை முக்கியமானவையல்ல. இசைநாடகத்தில் பாட்டும் இசையுமே முக்கியம். பழங் காலத்திலிருந்தே பாட்டுடன் கூடிய நாடகங்கள் நடிக்கப் பெற்றதுண்டு. ஆனால் பாத்திரங்களின் சம்பாஷணைக்குப் பதிலாக வேறு குரல் இசையையோ, கருவி இசையையோ பயன்படுத்தும் வழக்கம் இருந்ததில்லை. பழங்காலக் கிரேக்க நாடக அரங்கு உச்சநிலையை அடைந்திருந்த காலத்தில் மேற்கூறிய வகையில் அமைந்திருந்த இசைநாடகங்கள் பல இயற்றப்பட்டு நடிக்கப்பட்டு வந்தன. அம்முறையைப் பின்பற்றிப் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் இசைநாடகங்களை இயற்றி நடிக்கத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வெனிஸ் நகரில் நடிக்கப்பட்ட இசைநாடகங்களை ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து காண்பது வழக்கம். முதன் முதலில் பழங்காலப் புராணக் கதைகளை இசைநாடகங்களாக அமைத்தார்கள். ஆனால் அவற்றைப் பொதுமக்களும் விரும்பத் தொடங்கியபின் வீரமும் காதலும் நிறைந்த கதைகள் இசை நாடகங்களாக உருப்பெற்றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு இசைநாடகப் பகுதியைச் சேர்த்து நடித்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் இடையில் வேடிக்கைக் கதைகளை இசைநாடகமாக எழுதும் பழக்கம் தோன்றியது. இசைநாடகத்தின் கேலி வடிவமாக வாட்வில் (Vaudeville) என்ற நாடக வடிவம் தோன்றியது.

மேனாட்டு இசையாசிரியர்களில் புகழ்பெற்ற ஹாண்டல், மோசார்ட், வாக்னர், சாய்கோவ்ஸ்கி, முஸ்ஸார்ஸ்கி ஆகியோர் சிறந்த இசைநாடகங்களை எழுதியுள்ளனர். இசைநாடகத்திற்கு இசையின் தரத்தை விட நாடகப் பண்பே முக்கியமானது. இசை நாடக ஆசிரியர் இசை யொலிகளால் மக்களின் உள்ளத்தில் எவ்வாறான உணர்ச்சிகள் தோன்றும் என்பதை அறிந்திருப்பதோடு நாடகக் கலையின் நுணுக்கங்களையும் பயின்றிருக்கவேண்டும்.

கதையையும் சம்பாஷணைகளையும் இசை வடிவில் கொண்டு, இசைநாடகங்கள் போன்ற நாடகங்கள் இந்தியாவிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுட் சில நாட்டிய நாடகங்களாக நடிக்கப்பட்டன என்பதற்குச் சான்று உள்ளது. இவற்றுள் தியாகராஜரது நௌகா சரித்திரம், பிரகலாத பக்த விஜயம், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம், அருணாசலக் கவிராயரின் இராம நாடகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


இசை நுணுக்கம்: ஓர் இசை இலக்கண நூல். இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் என்பவனுக்கு இசை யறிவிக்க, அகத்தியர் மாணவர்களிற் சிகண்டியார் என்பவர் இயற்றிய நூல் என்பர். இஃது இடைச்சங்க காலத்தது என்று அடியார்க்கு நல்லாருரையாலும், இடைச்சங்கப் புலவர்க்கு நூலாயிருந்ததென இறையனார் அகப்பொருளுரையாலும் அறியலாம். அகத்திய முனிவர் மாணவர் என்று இக் காலத்து வழங்கும் பெயர்களில் சிகண்டியார் பெயர் இல்லை.


இஞ்சி

இஞ்சி:இஞ்சி முக்கியமான வாசனைப் பண்டங்களில் ஒன்று. இதன் தாயகம் ஆசியாக் கண்டத்தின் வெப்பவலயம். இப்போது இது இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, சீனம், ஜப்பான், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள் முதலியவிடங்களில் பயிராகிறது. இதை வாசனைப் பண்டமாகவும், மருந்தாகவும், ஆதிகால முதல் இந்தியரும் சீனரும் பயன்படுத்தி வந்தனர் என்பது நூல்களிலிருந்து தெரிகிறது.

இஞ்சி என்பது செடியின் மட்டத்தண்டுக் கிழங்கு (Rhizome). இச்செடி. 1 - 3 அடி வளரும். இதன் தண்டு இலை உறைகளால் மூடப்பட்டிருக்கும். வெளிர்பச்சை நிறமுள்ளது. இரண்டு வரிசையாக அமைந்த மாறொழுங்குள்ளது. 6 அங்குலத்திற்கு மேல் நீளமுள்ளது. முனை கூராக காம்பில்லாதவை. மஞ்சரி சுமார் ஓர் அடி நீளமிருக்கும். இஞ்சிக் கிழங்கை மெல்லிய தோல் மூடியிருக்கும். இதிலிருந்து சல்லி வேர் இஞ்சி வந்திருக்கும். இதில் குருத்துக்கள்நிறைந்திருக்கும். ஒவ்வொரு குருத்தும் முளைத்துத் தனிச்செடியாகும் ஆற்றலுள்ளது.

சாகுபடி: இஞ்சிச் சாகுபடிக்கு நல்ல வளமும் காற்றோட்டமுமுள்ள நிலம் வேண்டும். சாகுபடி வெப்பம் இதன் சாகுபடிக்கு முக்கியமானது. இவ்விரண்டு அனுகூலங்களோடு, நல்ல வடிகாலும், போதுமான மழையுமுள்ள இடமெங்கும் இது பயிராகும். இஞ்சிக் கிழங்கைக் குருத்துக்கள் உள்ள துண்டுகளாக்கி, நட்டுப் பயிர் செய்கின்றனர். மலையாளம், தென்கன்னடம் முதலிய மேற்குக் கடற்கரைப் பிரதேசங்களில் இது அதிகமாக வானவாரிப் பயிராக விளைகிறது. இங்குச் சித்திரை கடைசி அல்லது வைகாசி முதல் வாரத்தில் கோடை மழை பெய்ததும் நிலத்தை உழுது, அதில் 3 அடி அகலமும், வேண்டிய அளவு நீளமுமுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும். இடையில் வடிகாலுக்காக ஓரடி வாய்க்கால் இருக்க வேண்டும். அந்தப் பாத்திகளில் 9 முதல் 12 அங்குலம் தூரத்துக் கொன்றாகச் சிறு குழி செய்து, அக்குழியில் ஒவ்வொரு பிடி பொடிசெய்த மாட்டு எருவைப் போட்டு, ஒன்று அல்லது இரண்டு முனைகளுள்ள சுமார் ஓரங்குலமுள்ள இஞ்சித் துண்டுகளை நட்டு அக்குழியை மூடவேண்டும். இவ்விதம் நட ஓர் ஏக்கருக்கு 800 முதல் 1,200 ராத்தல்வரை விதைக் கிழங்குகள் வேண்டும். நடவான பாத்திகளைச் சீக்கிரம் மட்கக் கூடிய பசுந்தழை ஏக்கருக்கு 4,000 முதல் 8,000 ராத்தல் வரை போட்டுக் கனமாக மூடவேண்டும். இது பாத்திகளில் மண் மழையின் வேகத்தால் கரைவதைத்-