பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இட்சுவாகு

532

இடம், காலம், காரணம்

தடுப்பதுடன பயிருக்குப் பசுந்தழை யுரமுமாகிறது. நடவான 30 அல்லது 40 நாட்களுக்குப்பின் இரண்டாம் முறையாகவும், பின் ஒரு மாதத்தில் மூன்றாம் முறையாகவும் மேல் குறித்தபடி தழைபோட்டுப் பாத்திகளை மூடவேண்டும். இதன்பின் மாதமொருமுறை தழைபோடுதலும், களை எடுத்து விட்டுப் பாத்திகளிலிருந்து சரிந்த மண்ணை எடுத்து அவற்றின் ஓரத்தில் அணைத்தலும் வேண்டும். பாத்திகளில் மழைத் தண்ணீர் தேங்காதிருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டியது முச்கியம். இல்லையேல் கிழங்குகள் அழுகிப் போவதுடன் பயிரும் நஷ்டமாகும். நவம்பர் கடைசியிலிருந்து டிசம்பர் வரை இஞ்சி மகசூல் எடுப்பு நடைபெறும். அப்பொழுது பயிரின் இலைகள் மஞ்சள் நிறம் கொடுத்து உலர ஆரம்பிக்கும். நன்றாய்ச் சுத்தப்படுத்திய இஞ்சி ஓர் ஏக்கருக்கு 8.000 ராத்தல் முதல் 20,000 ராத்தல்வரை கிடைக்கும். இதில் நல்ல தரமான கிழங்குகளை விதைக்கு எடுத்துக் கொட்டகை போன்ற குளிர்ந்த நிழலுள்ள இடத்தில் குழியுண்டாக்கி, அதில் போட்டுக் காற்றோட்டத்திற்கு வசதியாக ஒரு சிறு தொளையுள்ள பலகையால் மூடி வைப்பார்கள்.

இஞ்சியில் பலவகைகள் உண்டு. நீல இஞ்சி, சேர நாடு, ராஜோல், ஜோர்ஹட் என்பன சிலவகைகள்.

சுக்கு உண்டாக்குதல் (Curing) : இஞ்சியை மண், வேர் முதலியவைகளை நீக்கிச் சுத்தம் செய்தபின், மேல் தோலையும் சுரண்டி எடுத்துவிட்டு, அது கெட்டியாகி முரித்தால் ஓடியும்வரை வெயிலில் உடனே உலர்த்த வேண்டும். அப்படி உலர்த்தியதே சுக்கு. இதைத் ‘தேய்த்த‘ அல்லது ‘பூசிய’ சுக்கு என்பார்கள். இஞ்சியைச் சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து உலர்த்தி, அதன் நிறத்தை வெண்மையாக்குவம் உண்டு.

பயன்கள் : இஞ்சி உணவில் வாசனைக்காகவும் காரத்திற்காகவும் பயன்படுகிறது. முன்காலத்தில் மேனாட்டில் திராட்சரச மதுவில் வாசனைக்காகச் சேர்க்கப்பட்டு வந்தது. மருந்துகளில் ஜீரணசக்தியைக் கொடுக்கவும், தெம்பு உண்டாக்கவும் சாதாரணமாக உபயோக்கப்படுகிறது. பண்டைக்காலத்தில் மனிதனுக்கு வலிமையைக் கொடுக்கவும், விஷமுறிவிற்கும் இதைப் பயன்படுத்தினார்கள். இங்கிலாந்தில் இது பிளேக்கு நோய்க்கு மருந்தாகவும் பயன்பட்டது. குடும்பம் : ஜிஞ்சிபெரேசீ இனம்: ஜிஞ்சிபெர் அபிஷினேல் (Zingiber officinale). அ. அ. ச.


இட்சுவாகு சூரிய அரச குல முதல்வன்; திரேதாயுகத்தில் அயோத்தியை ஆண்டவன். இவனுடைய நூறு மக்களுள் இரண்டாமவன் நிமி என்பான் மிதிலைவமிசத்தின் தந்தை.


இட்டார்சி மத்தியப் பிரதேசத்தில் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள பட்டணம். வாரந்தோறும் பெரிய கால்நடைச் சந்தை கூடுகிறது. முக்கியமான ரெயில் சந்திப்பு.


இட்ரிசி (1100 - சு. 1160) அரேபியாவைச் சேர்ந்த பூகோள அறிஞர்; இவர் தாம் முகம்மது நபியின் மரபில் வந்ததாகக் கூறிக்கொண்டார். ஸ்பெயின், பார்பரி, ஆசியாமைனர் முதலிய இடங்களில் பிரயாணம் செய்துவிட்டு வந்த இவர், சிசிலியில் அரசனாயிருந்த II-ம் ரோஜர் என்பவன் அவையில் தங்கினார். இவர் உலகப் படம் ஒன்றை வெள்ளியில் தயார்செய்து அவ்வரசனுக்கு அளித்தார். அவ்வரசன் பல நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி, அந்நாடுகளைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு வரச் செய்து, இட்ரிசியை ஒரு பூகோள நூல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அவ்வேண்டுகோளின்படி இட்ரிசி இயற்றிய உலக விளக்கம் அல்லது ரோஜர் நூல் என்னும் நூல் 1154-ல் பூர்த்தி செய்யப்பட்டது. இடைக்கால பூகோள அறிஞர்கள் இயற்றிய பூகோள நூல்களில் இத்நுலே முதன்மைத்தானம் வசிக்கிறது. இட்ரிசி மருத்துவம், அறம் முதலிய பொருள்களைப் பற்றியும் எழுதினார். இவர் செய்யுளியற்றுவதிலும் வல்லவராயிருந்தார்.


இட்ருரியா இத்தாலி நாட்டில் எட்ரஸ்கர்கள் வாழ்ந்த பகுதி. இவர்கள் வாழ்ந்த காலம் ஏறக்குறைய கி.மு. 1044 என்பர். ரோமாபுரி ஒரு சிற்றூராக இருந்த காலத்திலே இட்ருரியா பெரிய சாம்ராச்சியத் தலைநகராயிருந்தது. இட்ரூரியா என்பது இப்போது டஸ்கனி என்று வழங்குகிறது. எட்ரஸ்கர்களின் நாகரிகம் தனிப்பட்டதாகும். அவர்களுடைய மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததன்று. இவர்கள் கைத்தொழிலிலும் கனித் தொழிலிலும் சிறந்திருந்தார்கள். ரோம நாகரிகம் பல அமிசங்களை எட்ரஸ்கர்களிடமிருந்து பெற்றதாகக் கூறுவர்.


இட்ஜுமோ (Idjumo, ?-1756) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய நாடகாசிரியர். இவர் இலக்கியத் தேவதையாகக் கருதப்படும் சுகவாரா என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு ராஜதந்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதிய நாடகம் பேர்பெற்றதாகும். இதனினும் சிறந்தது இவருடைய சியூஷின்குரா என்னும் நாடகமாகும்.


இடங்கழிநாயனார் சோழநாட்டில் கோனாட்டைச் சேர்ந்த கொடும்பாவூரிலிருந்த அரசர். வேளிர் குலத்தவர். சிவன் கோயிலைச் செம்மையாய்ப் பரிபாலித்தவர். சிவனடியாருக்கு அமுது செய்விப்பதற்காக வறிஞரான சிவனடியார் ஒருவர் தம் அரண்மனையிலிருந்த நெல்லைத் திருடியபோது அவருக்கு மேலும் நெல்லும் பொன்னும் கொடுத்து முத்தி பெற்றவர்; பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர்.


இடபம் (ரிஷபம்): மேஷ முதல் எண்ணிய இராசிகளுள் இரண்டாவது; வைகாசி மாதத்தில் சூரியன் இருக்கும் இராசி; கிருத்திகையின் கடைசி மூன்று பாதங்களும், உரோகிணியும் மிருகசீரிடத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியது. இந்த இராசியில் முக்கியமானது கிருத்திகை நட்சத்திரத் தொகுதி. இது ஆறு நட்சத்திரங்கள் அடங்கியது. எம். வே.


இடம், காலம், காரணம் என்பன அறிந்து கொள்ள முடியாதவை என்று எண்ணக்கூடிய அடிநிலைப் பொருள்களாக எப்பொழுதும் தத்துவ சாஸ்திரிகளுக்குத் தோன்றி வருகின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் என்று ஏதேனும் சொல்லத் தகுந்ததாக இருப்பின், அது சார்ல்ஸ் லாம் (Charles Lamb) என்பவர் கூறியது தான். “என் மனத்தை இடம், காலம் என்பவை குழப்புவதைவிட அதிகமாக வேறு எதுவும் குழப்பக் காணோம். அதுபோல அவற்றைவிடக் குறைவாகக் குழப்புவதும் வேறு எதுவுமில்லை. அதற்குக் காரணம் யாதெனில் நான் அவற்றைப் பற்றி ஒருபொழுதும் சிந்திக்காதிருப்பதுதான்” என்று அவர் தம் நண்பர் ஒருவருக்கு எழுதினார். இவற்றைக் குறித்து மேனாட்டில் நடந்துள்ள முக்கியமான ஆராய்ச்சி வரலாறு வருமாறு:

கிரேக்கத் தத்துவ சாஸ்திரிகளும் கணித சாஸ்திரிகளும் : உளநூல் முறையில் பார்த்தால்,