பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடும்பன்

537

இடையன் பூச்சி

ஜப்பான் போன்ற சில கீழ்நாடுகளில் இவ்வழக்கம் தொன்று தொட்டே இருந்து வருகிறது.


இடும்பன் (1) அரக்கு மாளிகையினின்று உயிர் பிழைத்த வீமனுடன் போர் செய்து மாண்ட அரக்கன். இடும்பனின் உடன்பிறந்தாளாகிய இடும்பி வீமனை விரும்ப, வீமன் தாய்சொற்படி அவளை மணந்துகடோற்கசனைப் பெற்றான். இடும்பிக்குக் கமலக்கண்ணிஎன்ற பெயருமுண்டு.

(2) அசுரர்க்கு ஆயுதவித்தை கற்பித்தவன். குமாரக் கடவுளுடன் போரிட்டு மூர்ச்சிக்க, இடும்பி அழ, குமாரக்கடவுள் உயிர்ப்பித்துத் தமது கணத்தலைவனாக்கினார்.

(3) கரடிகள் தலைவன், இராமன் துணைவன்.

(4) விநாயகர் பெருமூச்சால் இறந்தவன்.


இடும்பாவனம் தஞ்சாவூர் மாவட்டம், திருத்தருப்பூண்டிக்குத் தெற்கே 10 மைலில் உள்ளது. இதுஇடும்பன் பூசித்த தலம். விநாயகர் வெண்மை நிறம்; வெள்ளை விநாயகர் எனப் பெயர் பெறுவர். சுவாமி சற்குணநாதேசுரர்; அம்மன் மங்கலநாயகி. திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது.


இடும்பி: பார்க்க : இடும்பன்.


இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர். பத்துப் பாட்டுக்களில் சிறுபாணாற்றுப்படையை ஏறுமாநாட்டு நல்லியக்கோடனைத் தலைவனாகக் கொண்டு எழுதியவர். இடைக்கழி நாடு என்பது சென்னைக்குத் தென்மேற்கில் உப்பங்கழிகளுக்கு இடையே உள்ள சிறு நாடு. இந்நாட்டிலே நல்லூர் என்ற ஊரும் உள்ளது.


இடைக்காட்டுச் சித்தர் சித்தர்களுள் ஒருவர். கொங்கணர் மாணவர். சங்ககால இடைக்காடர்வேறு, இவர் வேறு. இவர் பாடிய நூல் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என வழங்கும்.


இடைக்காடனார் சங்ககாலப்புலவர். இடைக்காடு என்னும் ஊரினராதலின் இப்பெயர் பெற்றார். தஞ்சாவூர் ஜில்லா, பட்டுக்கோட்டைத் தாலுகாவில் இவ்வூருள்ளது. மலையாளத்தைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவர் கபிலருடைய தோழர், புலவர்களிடம் அன்புடையவர். சிறந்த கவிஞர். சுருங்கச்சொல்லிவிளங்கவைத்தலில் விருப்புடையவர். உவமையைத் திறம்பெற அமைப்பவர். இவருடைய செய்யுட்களில் முல்லைத் திணையும், மழையும், இடையர் பண்பும் காணப்படுவதால் இவரை இடையரென்பர். இவர் பாடிய செய்யுட்கள் 11 (நற். 142,221,316; புறம்.42; அகம். 139, 194, 274,284,304,374; குறுந்.251). மற்றும் இவர் ஊசிமுறி, அறுபது வருட வெண்பா, மூவடி முப்பதுமுதலான நூல்கள் செய்தாரென்பர். ”ஒழிந்தன இடைக்காடனார் பாடிய ஊசிமுறியுட் கண்டு அலகிட்டு கொள்க” என்று யாப்பருங்கல விருத்தியில் வருகிறது. மூவடி முப்பது பழைய வுரையுடன் வெளியாகியிருக்கிறது. ஊசிமுறி என்னும் நூலில் 54 செய்யுட்கள் பழைய உரையுடன் இருப்பதாகப் பூரணலிங்கம்பிள்ளையவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஊசி-எழுத்தாணி. இவர் ஒரு பாண்டியனிடம் சில செய்யுட்களைப் பாடிக் கொண்டு சென்றார் என்றும், அவன் மதியாமல் இருந்தான் என்றும், இவர் சினந்து சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டுவிட்டு, வடபுறத்திலே சென்று ஓரிடத்தில் தங்கியிருந்தார் என்றும், சோமசுந்தரப் பெருமான் சங்கப்புலவருடன் இவர் பின்சென்று இவருடன் தங்கிவிட்டாரென்றும், பாண்டியன் கலக்கமுற்று, இவரை வேண்டி வழிபட்டு வருத்தத்தைத் தீர்த்தானென்றும் திருவிளையாடற் புராணங்கள் கூறும். இவரைப்பற்றிக் கர்ணபரம்பரை கூறுவதை அபிதான சிந்தாமணியிற் கண்டு கொள்க.


இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்; இப்பெயர் ஊரால் வந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வரலாறு இவர் பாட்டுக்களால் விளங்கும் (புறம் 76-79).


இடைச்செருகல் என்பது இடையிலே சேர்க்கப்பட்டது எனப் பொருள்படும். முன்னோர் பாடிய நூல்களிலே இடைச்செருகல் காணப்படுகிறதென்று அறிஞர்கள் கூறுகின்றனர். முன்பின்னுள்ள செய்யுட்களின்பொருளுடன் பொருந்தாமலிருப்பதும், பொருத்தமிருப்பினும் வேண்டப்படாமல் இருப்பதும், நடைவேறுபாடு காணப்படுவதும் இவைபோல்வனவும் இவ்வாறு கருதுவதற்குக் காரணம்.

முன்னோர் செய்யுளைப்போல எழுதவேண்டும் என்னும் ஆவலும், நூலாசிரியர் கருத்தல்லாதிருப்பினும் தம் கருத்தை நுழைக்கும் எண்ணமுங் கொண்டவரால் இடைச்செருகல் உண்டாயிருக்கலாம். அன்றியும் தனிச்செய்யுட்களாக வழங்கும் சில பிற்காலத்தே ஒருவரால் இவை இந்த நூல்களில் இருந்து விடுபட்டிருக்கலாம் என்னும் எண்ணத்துடன் சேர்க்கப்பட்டிருத்தலும் கூடும்.

எனவே, இடைச்செருகல் எனப்படுபவை இடைச்செருகலாக இல்லாமல் இருத்தலுங்கூடும். பொருத்தமாக இருப்பவை இடைச் செருகலாய் இருத்தலுங்கூடும். வெள்ளியம்பலத்தம்பிரான் என்பவரும், கந்தியார் என்பவரும் முன்னோர் செய்யுட்களிலே இடைச்செருகலாகப் பாடிச் சேர்த்துள்ளனர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவை முறையே வெள்ளிப் பாடல் கந்தியார் பாடல் என வழங்குகின்றன. பார்க்க: வெள்ளிப்பாடல், கந்தியார்.


இடையன் சேந்தங் கொற்றனார் சங்க காலப் புலவர். இளஞ்சேட் சென்னியைப் பாடியவர். வடுகருடைய தோல்வியைக் கூறியிருக்கிறார் (அகம். 375).


இடையன் நெடுங்கீரனார் சங்ககாலப் புலவர் (அகம். 166).


இடையன் பூச்சி (Mantis) : கும்பிடு பூச்சி என்றும் இதைச் சொல்லுவார்கள். கரப்பான், வெட்டுக்கிளி முதலிய பூச்சிகளின் வமிசத்தைச் சேர்ந்தது. கடித்துண்ணும் தாடைகளையும், வளர்ச்சியில் இளம் பூச்சிப் பருவத்தையும் பெற்ற இப் பூச்சியின் முன்ஜதைக் கால்களின் இடை நீண்டும், தொடையும்முன்னங் காலும் வேறு பூச்சிகளைப் பிடித்துண்பதற்கேற்றவாறு அமையப்பெற்று மிருக்கின்றன. இப்பூச்சிகளின் மார்பின் முதற்பாகம் மற்றிரு பாகங்களைக் காட்டிலும் நீண்டிருக்கிறது. இரண்டு ஜதை இறக்கைகளும் கரப்பான் பூச்சிக்கிருப்பதுபோலிருக்கும். பெண் பூச்சி முட்டைகளை, உலர்ந்துபோய் நுரை போலக் காணும் கூண்டு ஒன்றினுள் வைக்கின்றது. சில நாட்கள் சென்று சிறு இடையன் பூச்சிகள் அதிலிருந்து வெளிவரும். காங்கைலஸ் (Gongylus) என்ற இடையன் பூச்சியின் பல பாகங்கள் இலைபோல் அகன்றிருக்கின்றன. அது பார்ப்பதற்கு ஒரு பூப்போல் இருக்கும். ஹம்பர்ட்டியெல்லா (Humbertiella) என்பது மரப்பட்டையின் நிறத்தையுடைய ஓர் இடையன் பூச்சி. ஜே. சா.