பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

541

இத்தாலி

கொள்ளலாம். விவாகரத்தினால் முரிவு ஏற்பட்டால் தான் இந்த நியதி; கணவனுடைய மரணத்தினால் முரிவு ஏற்படுமானால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விதவை இத்தத்தைக் கைக்கொண்டே ஆகவேண்டும்.

கணவனுடைய மரணத்தின் சமயத்தில், மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால், அவள் 4 மாதம் 10 நாள் இத்தத் இருக்கவேண்டும்; கர்ப்பிணியாக இருந்தால், பிரசவம் வரையில் அல்லது 4 மாதம் 10 நாள் வரையில், இரண்டில் எது நீண்ட காலமோ அதுவரையில் இத்தத் இருக்கவேண்டும்.

விவாகரத்தினால் விவாக முரிவு ஏற்படும்போது பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகாமலிருக்குமானால், மூன்று மாதவிடாய் முடியும் வரையில் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டம் கூறுகிறது. ஷியா சட்டம் இதையே சற்று மாற்றி, மூன்று துஹ்ர் (ஒரு துஹ்ர் என்பது இரண்டு மாதவிடாய்க் கிடையிலுள்ள சுத்த காலத்தைக் குறிக்கிறது) பூர்த்தியாகிற வரையில் இத்தத் இருக்கவேண்டுமென்று ஏற்படுத்தியிருக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மாதவிடாய் நின்றிருக்குமானால், பிரசவம் வரையில் இத்தத் இருக்கவேண்டும். வயதானதின் காரணமாக மாதவிடாய் நின்றுபோயிருக்குமானால், மூன்று மாதங்கள் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டமும், 78 முழு நாட்கள் இருந்தால் போதுமென்று ஷியா சட்டமும் கூறுகின்றன. குழந்தை பெறும் பிராயம் கடந்திருந்தாலோ, பெண் புஷ்பவதியாகாமலிருந்திருந்தாலோ, அவள் இத்தத் இருக்கவேண்டியதில்லை என்பதும்பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷியா விதியாகும்.

ஆனால் இத்தத் முடிவதற்கு முன்னால், மறு விவாகம் நடக்குமானால், அந்த விவாகம் சட்டத்திற்குப் புறம்பானது (Void) ஆகாது; ஒழுங்கற்றது (Irregular) என்றே கருதப்படும்.

கணவன் மனைவியர்க்கிடையே புணர்ச்சி ஏற்பட்டிராத விடத்தும், கணவனுடைய மரணத்துக்குப்பின் விதவை இத்தத் இருக்கவேண்டும் என்று விதிக்கப்படுவது, இறந்த கணவனிடத்துக் காட்டும் மரியாதையின் அறிகுறியாகும்.

கணவனுடைய மரண தினத்திலிருந்தோ, விவாகரத்தின் தினத்திலிருந்தோ இத்தத் ஆரம்பமாகிறது. கைக்கொள்ள வேண்டிய இத்தத் காலத்துக்குப் பின்னரே, கணவனின் மரணச் செய்தியோ, விவாகரத்தைப்பற்றிய செய்தியோ மனைவியை வந்து சேருமானால், அன்றிலிருந்து அவள் இன்னொரு இத்தத் காலத்தைத்தொடங்கி அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. விவாகரத்து செய்யும் கணவன், இத்தத் காலத்தில் மனைவிக்குப் போஷணை கொடுக்கவேண்டும்.

பிரதானமாக, இத்தத், பெண்ணின் மறு மணத்துக்குத் தற்காலிகத் தடையாக விதிக்கப்பட்டதாயினும், தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியினுடைய இத்தத் காலம் முடிகிற வரையில், சிற்சில சந்தர்ப்பங்களில், புருஷனும் இன்னொரு மணம் செய்துகொள்வதினின்றும் தடுக்கப்படுகிறான். எம். எம். இ


இத்தாலி தென் ஐரோப்பாவின் மத்தியிலுள்ளஒரு தீபகற்பம். இது மத்தியதரைக் கடலுக்குள் நீண்டு இருக்கிறது. பரப்பு : 1,19,710 ச.மைல்; நீளம்: 700 மைல்; அகலம்: 150 மைல். கிழக்கே ஏட்ரியாடிக் கடலாலும், தெற்கே மத்தியதரைக் கடலாலும், மேற்கே டிரீனியன் கடலாலும், வடக்கே ஆல்ப்ஸ் மலைத்தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் கணவாய்களான மான்ட்செனி, செயின்ட் காடர்டு, சிம்ப்லான், செயின்ட் பெர்னார்டு ஆகியவற்றின் வழியே இந்நாட்டின்மீது படையெடுப்பது முற்காலத்தில் எளிதாயிருந்தது.

இத்தாலி

இயற்கைப் பகுதிகள் : இவற்றை மூன்றாகப் பிரிக்கலாம்:1.வடக்கேயுள்ள ஆல்ப்ஸ் பகுதி: இதன் சரிவு இத்தாலியின் பக்கத்தில் செங்குத்தாக உள்ளது; சராசரி உயரம் 10,000 அடி; வடமேற்கே மிக உயரமாயும் குறுகலாயும் உள்ளது. இங்குள்ள பிளாங்க் சிகரம் 15,780 அடி; 2. இதற்குத் தெற்கேயுள்ள போ நதி பாயும் பிரதேசம்: இங்கு முன்பு ஏட்ரியாடிக் கடல் வியாபித்திருந்தது; சுற்றுப்புற மலைகளிலிருந்து வந்த மண் பிற்காலத்தில் இவ்விடத்தை நிரப்பிச் சமவெளியாக்கியது. 3. அப்பினைன் மலைகள்: இவை வடக்கே டிரீனியன் கடலருகே தொடங்கித் தீபகற்பத்தின் இடைப்பகுதியில் ஏட்ரியாடிக் கடல் அருகே வந்து, தென்பகுதியில் மறுபடியும் டிரீனியன் கடல் பக்கம் வந்து முடிகின்றன. ஆர்னோ, டைபர் என்னும் ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகி டிரீனியன் கடலிற் கலக்கின்றன.

தட்பவெப்பம்: இந்நாட்டின் தீபகற்பப் பகுதியில் மத்தியதரைத் தட்பவெப்பம் காணப்படுகிறது; கோடையில் 75° பா; குளிர்காலத்தில் 40°-45° பா. ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி 30 அங். பெரும்பாலும் குளிர் காலத்திலேயே மழை அதிகம். வட இத்தாலியில் மத்திய ஐரோப்பியத் தட்பவெப்பம் காண்கிறது; வெப்ப நிலையில் அதிக வேறுபாடு தோன்றுகிறது; கோடையில் 75° பா. குளிர்காலத்தில் 35° பா.40-60 அங்குல மழை பெரும்பாலும் கோடையில் பெய்கிறது. ஆதலால் மத்தியதரைத் தட்பவெப்பத்தில் உண்டாகும் ஒலிவமரம் வட இத்தாலியில் காணப்படுவதில்லை. அப்பினைன் சரிவுகளில் செஸ்ட்நட் மரங்கள் நிறைந்த காடுகள் மிகுதியாக உள்ளன; அம் மலைகளின் சிறிது உயர்ந்த பகுதிகளில் பைன்களும் தேவதாருக்களும் காணப்படுகின்றன.

மக்கள் தொகை: மக்: 467 இலட்சம் (1951). இது நாடு முழுதும் ஒரே சீராக இல்லை. போ சமவெளியில் இது மிக அதிகம். மக். அடர்த்தி ச. மைலுக்கு 650. மக்களில் 97% கத்தோலிக்க மதத்தினர்; எஞ்சியவர் யூதர்களும் பிராட்டெஸ்டென்டுகளும்.

விவசாயம் (1850): மக்களில் 50% வீவசாயத் தொழில் செய்பவர்கள். மொத்தப் பரப்பு 766 இலட்சம் ஏக்கர். இதில் 91.3% உற்பத்திக்குரிய நிலமாகவும் காடாகவும் உள்ளது. சாகுபடி நிலத்தில் தானியப்