பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

545

இத்தாலி

பேரன் லொரென்சோவும் பிளாரன்ஸை ஆண்டபோது (1434-92) இத்தாலிய மறு மலர்ச்சி உச்ச நிலையை அடைந்தது; இவர்களுக்கு முன்னமேயே பிளாரன்ஸுப் புலவர்களான தாந்தே (1265-1321), பீட்ரார்க் (1304- 74), பொக்காச்சியோ (1313-75) ஆகியோர் கிரேக்க நூல்களை இத்தாலியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள். இத்தாலியச் சிற்பிகளிற் சிறப்படைந்தவர்கள் கிபர்டி (1378-1455), புரூனலெஸ்கி (1379-1446), டொனாடெல்லோ (1386-1466) மைக்கல் ஆஞ்ஜிலோ (1475-1564) முதலானவர்கள். ஓவியக்காரர்களில் உலகப் பிரசித்தி யடைந்தவர் லியனார்டோ டா வீன்சீ (1452-1519). ரோமாபுரியில் போப்புக்களின் ஆதரவின்கீழ்க் கலைகள் முன்னேற்றமடைந்தன. போப் V-ம் நிக்கலஸ் (1447-55) வாட்டிக்கன் நூல் நிலையம் என்ற பெரியதோர் நூல் நிலையத்தை நிறுவினார். ரோமில் மைக்கல் ஆஞ்ஜிலோவும், ராபியலும் (Raphael, 1483-1520), வெனிஸில் டிஷியனும் (1477-1576) பழைய மதக் கட்டுப்பாடுகளை மீறிச் சுதந்திர உணர்ச்சியுடன் உயிர் ததும்பும் ஓவியங்களை வரைந்தனர்.

15ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரெஞ்சு அரசர்கள் இத்தாலிமீது படை யெடுத்தார்கள். 1494-ல் VIII-ம் சார்லஸ் பிளாரன்ஸ் பீசா, ரோம், நேபிள்ஸ் முதலிய நகரங்களுட் பிரவேசித்தபோது இவனுக்கெதிராக வெனிஸ் அரசாங்கத்தாரும் போப்பும், ஸ்பெயின் அரசனான பர்டினாண்டும், சக்கரவர்த்தி மர்க்சிமிலியனும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். இதை யறிந்த சார்லஸ் இத்தாலியை விட்டு வெளியேறினான். சார்லஸுக்குப்பின் XII-ம் லூயி 1499-ல் இத்தாலி மீது படை யெடுத்தபோது இவனும் பர்டினாண்டும் தென் இத்தாலியைக் கைப்பற்றித் தமக்குள் பங்கிட்டுக் கொள்வதென்று ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இவர்கள் நேபிள்ஸைக் கைப்பற்றிய பிறகு பாகம் பிரித்துக் கொள்ளும்போது சண்டையிட்டுக்கொண்டார்கள். லூயி அநேக முறை தோற்கடிக்கப்பட்டான். லூயிக் கெதிராகப் போப்பும், சக்கரவர்த்தியும், இங்கிலாந்து அரசனான VIII-ம் ஹென்ரியும் பர்டினாண்டுடன் 'ஹோலி லீக்' என்ற புனித உடன்படிக்கையைச் செய்துகொண்டார்கள். மிலான் தவிர மற்ற எல்லாப் பிரதேசங்களையும் லூயி இழந்தான். இச் சச்சரவுகள் மூலம் போப் VI-ம் அலெக்சாந்தரும், அப் போப்பின் புத்திரன் சீசர் போர்ஜியாவும் மிகுதியான இலாபத்தை யடைந்தனர். லூயிக்குப்பின் I-ம் பிரான்சிஸ் இத்தாலிமீது படையெடுத்து, மரிக்னானோ யுத்தத்தில் பெரிய வெற்றி பெற்றான் (1515). ஆனால் இவன் 1525-ல் சக்கரவர்த்தி V-ம் சார்லஸின் சேனைகளால் பாவீயாவில் தோற்கடிக்கப்பட்டுக் கைதி யாக்கப்பட்டான். பாவீயா யுத்தத்திற்குப்பின் வெனிஸும் சவாயும் தவிர, மற்ற இத்தாலிய நாடுகளெல்லாம் சக்கரவர்த்தி V-ம் சார்லஸின் ஆதிக்கத்தின் கீழ் வந்து, அவன் நியமித்த கவர்னர்களாலும் அதிகாரிகளாலும் சுரண்டப்பட்டுத் தாழ்நிலையை அடைந்தன. ஒரு காலத்தில் கொழுத்த செல்வம் படைத்த லாம்பர்டு நகரங்கள் புதிய வியாபார மார்க்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் தம் வியாபாரத்தை யிழந்து வறுமை நிலையை யடைந்தன. பிளாரன்ஸில் சாவனரோலா (Savonarola) செய்த புரட்சியால் (1494) துரத்தப்பட்ட மெடிச்சி பிரபுக்கள் 1512-ல் திரும்பினர். இவர்கள் மறுபடியும் 1527-ல் வெளியேற்றப்பட்டுக் கடைசியில் 1530-ல் போப், சக்கரவர்த்தி ஆகியோருடைய சேனைகளின் உதவியால் தம் ஆட்சியைத் திரும்பப் பெற்றார்கள். 1527-ல் சக்கரவர்த்தியிடமிருந்து சரியாகச் சம்பளம் பெறாத கான்ஸ் டபிள் டி பூர்பனின் (Constable de Bourbon) சேனைகள் ரோமைக் கொள்ளையடித்துக் கலைக் கருவூலங்களை யழித்தன. இந் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு XIV-ம் லூயியின் யுத்தங்கள் வரை இத்தாலியில் அமைதி நிலவியது. டிரென்ட் கவுன்சில் (1545-63) மூலம் போப் பிராட்டஸ்டென்டு கொள்கைகள் பரவவொட்டாமல் அவற்றைத் தடுக்க முயன்றார். சக்கரவர்த்தி V-ம் சார்லஸ் இறந்த பிறகு மிலானும், நேபிள்ஸும், சிசிலியும் அவன் மகன் ஸ்பெயின் நாட்டு மன்னன் II ம் பிலிப்பை யடைந்தன. இவனோடு போர் புரிந்த II-ம் ஹென்ரி 1559-ல் டஸ்கனி, கார்சிகா, பீட்மான்ட் முதலிய பிரதேசங்களில் சில கோட்டைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற உரிமைகளைத் துறந்தான். இதன்பின் இத்தாலிய நாடுகள் எல்லாமே ஸ்பெயினுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ கீழ்ப்படிந்திருந்தன. இவற்றில் சவாயும் டஸ்கனியும் தவிர மற்றவை பிற்போக்கான நாடுகளாயிருந்தன.

16ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பிறகும் சவாய் படிப்படியாக முன்னேறியது. 1562-ல் சவாய்ப் பிரபு இம்மானுவல் பிலிபர்ட் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து டூரினைக் கைப்பற்றினான். பிலிபர்ட்டுக்குப்பின் வந்த சவாய்ப் பிரபுக்கள் வட இத்தாலியில் தம் ஆதிக்கத்தைப் பரப்ப முயன்றார்கள். ஸ்பானிய வாரிசு யுத்தத்தில் (1701-14) சவாய்ப் பிரபு லூயிக்கு எதிராக யுத்தஞ்செய்து, யூட்ரெக்ட் உடன்படிக்கைப்படி (1713) சிசிலியையும், 'அரசன்' என்ற பட்டத்தையும் பெற்றான். மேலும் இந்த உடன்படிக்கைப்படி ஹாப்ஸ்பர்க் வமிசத்தைச் சேர்ந்த ஆஸ்திரிய அரசனான சக்கரவர்த்தி VI-ம் சார்லஸ் பூர்பன் வமிசத்தைச் சேர்ந்த ஸ்பெயின் அரசனிடமிருந்து மிலானையும், நேபிள்ஸையும், சார்டீனியாவையும், மான்டூவாவையும் பெற்றான். ஆகவே இத்தாலியின் பெரும்பாகம் ஸ்பெயினின் ஆட்சியினின்று ஆஸ்திரியாவின் ஆட்சிக்கு மாறியது. 1720-ல் ஆஸ்திரியா சவாய் அரசனுக்கு சார்டீனியாவைக் கொடுத்துவிட்டுச் சிசிலியைத் தான். ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனால் இந்த ஹாப்ஸ்பர்க் ஆதிக்கம் நீடிக்கவில்லை. போலந்து நாட்டு வாரிசு யுத்தத்தின்போது பூர்பன் சார்லஸ் ஆஸ்திரியாவிற்கெதிராக யுத்தஞ் செய்து நேபிள்ஸைக் கைப்பற்றினான். நேபிள்ளிலும் சிசிலியிலும் ஸ்பெயினின் ஆதிக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது (1738). இதற்குப் பிறகு பிரெஞ்சுப் புரட்சிவரை இத்தாலியில் அரசியல் நிலைமையில் பெரிய மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. ஏற்கெனவே (1735) டஸ்கனியில் மெடிச்சி வமிசம் கியான் காஸ்டோனுடன் முடிவடைந்தபோது டஸ்கனி ஹாப்ஸ்பர்க் பிரதேசங்களுடன் சேர்க்கப்பட்டது. 1768-ல் ஜெனோவா கார்சிகாவைப் பிரான்ஸுக்கு விற்றது.

பிரெஞ்சுப் புரட்சியாற் கிளம்பிய புயல் இத்தாலியின் அரசியல் நிலைமையில் மிகப் பெரிய மாறுதல்களை உண்டாக்கிற்று. பல நூற்றாண்டுகளாக ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டு இத்தாலியை ஐரோப்பிய அரசர்களின் போர்க்களமாக்கிய பல்வேறு அரசுகளை நெப்போலியன் நொடிப்பொழுதில் ஒழித்து இத்தாலியில் ஒற்றுமையை நிலைநாட்டினான். முதலில் சார்டீனியா நெப்போலியனுக்குப் பணிந்து நீஸ், சவாய் இரண்டினையும் பிரான்ஸுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்துகொண்டது (1796). ரிவோலி யுத்தத்தில்