பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

548

இத்தாலிய மொழி

உண்டு. இவ்வவையினர் மந்திரி சபையைக் கேள்விகள் கேட்கலாம். மந்திரி சபை கீழ்ச்சபைக்குப் பொறுப்புள்ளதேயன்றிச் செனெட்டிற்குப் பொறுப்புள்ளதல்ல.

இயற்றப்பட்ட சட்டங்கள் மிகவும் பொதுவான முறையிலேயே இருந்தன. இச்சட்டங்களின் விவரங்களை யெல்லாம் நிருவாகத்தின் அவசரச் சட்டங்கள், விதிகள், உத்தரவுகள் மூலம் விரிவுபடுத்தினர். ஆகையால், நிருவாகத்தார் இயற்றிய சட்டங்கள் ஏராளமாகக் குவிந்தன.

நீதி இலாகாவின் தலைமையில் ஓர் அப்பீல் கோர்ட்டு உண்டு. இதன் கீழ்ப் படிப்படியாகப் பல நீதிமன்றங்கள் இருந்தன. அப்பீல் கோர்ட்டு, கீழ்க் கோர்ட்டு நீதிபதிகளின் அதிகார எல்லையை நிருணயிக்கவும், அவ்வெல்லையை மீறிய நீதிபதிகளைத் தண்டிக்கவும் அதிகாரம் பெற்றிருந்தது. ஜூரி முறை இருந்தது எனினும் அது நன்கு நடைபெறவில்லை. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் சம்பந்தமான வழக்குக்களுக்கென விசாரணை மன்றங்கள் தனியே இருந்தன. நீதிபதிகளை மந்திரி சபையின் சிபாரிசையொட்டி அரசனே நியமித்தான்.

நாட்டின் 25 மாகாணங்களையும் நிருவகிப்பதற்கு மாகாணத் தலைவர்களும் மந்திரிசபைகளும் இருந்தன. இம்மாகாணத் தலைவர் மத்திய அரசாங்கத்தின் ஏஜன்டாகவே இருந்துவந்தார். நகரங்களும் கிராமங்களும் கம்யூன்களாகப் பிரிக்கப்பட்டன. அக்கம்யூன்களின் மேயர்கள் மாகாணத் தலைவர்களிடமிருந்து உத்தரவு பெற்று அலுவல் பார்த்தனர்.

தொழில்களிலும் உத்தியோகங்களிலுங்கூடப் படிப்படியான ஆதிக்கமுறை இருந்துவந்ததால், எங்கும் பாசிச அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சி ஒன்றே நடைபெற்றது. தொழிற்கூட்டுக்கள் நிலவி வந்ததால், பாசிச ஆட்சியைத் தொழிற்கூட்டு இராச்சியம் என்றும் கூறுவதுண்டு.

இத்தாலிக்கு விரோதமாயிருந்த நேச நாடுகளின் முன்னேற்றம் (1943) முசொலீனியின் ஆதிக்கத்தைச் சிதைத்தது. அவர் பதவியினின்றும் விலகிக்கொள்ளவே, அவருக்குப்பின் பிரதமரான மார்ஷல் படாளியா பாசிசக் கட்சியைக் கலைத்துவிட்டான். படாளியாவிற்குப் பின்வந்த அரசாங்கம் விக்டர் இம்மானுவலை அரச பதவியினின்றும் விலகச் செய்து இளவரசனை ரீஜன்டாக நியமித்தது. எல்லாக் கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் முறையில் அரசாங்கமும் மாற்றியமைக்கப் பெற்றது (1944). நேசநாட்டு ராணுவ அரசாங்கம் ஒன்று, கைப்பற்றிய பிரதேசங்களில் இடையிற் சில காலம் வரையில் அதிகாரம் செலுத்தி வந்தது. பிறகு இத்தாலிய அரசாங்கத்திற்கு முழு ஆதிக்கமும் சர்வதேச அந்தஸ்தும் அளிக்கப்பட்டன.

1946 ஜூனில் ஒரு குடியொப்பத்தின் மூலம் அரச பதவி நிராகரிக்கப்பட்டது. மன்னரும் இளவரசரும் நாடு கடந்தனர். குடியொப்பத்தின் முடிவு பெரும்பான்மையோரின் முடிவேயாயினும், பலர் அம்முடிவை எதிர்த்தும் வாக்களித்தனர். இத்தாலி குடியரசாயிற்று. குடியரசை ஆதரித்த பெரும்பாலோர் வட இத்தாலியைச் சார்ந்தவர்களே. அரச வமிசத்தினர் அயல் நாட்டவராகக் கருதப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். புதிய திட்டத்தின்படி பட்டங்கள் அளிப்பது நின்றுவிட்டது.

1947 டிசம்பரில் கூடிய ஒரு அரசியல் நிருணய சபை புது அரசியலை வகுத்தது. அது 1948 ஜனவரி 1லிருந்து நடைமுறைக்கு வந்தது. அரசியல் சட்டத்தில் 139 ஷரத்துக்களும் 18 இடைக்கால விதிகளும் அடங்கியுள்ளன. இவ்வரசியல் சட்டத்தின்படி பார்லிமென்டு என்பது பிரதிநிதி சபையும் செனெட்டும் சேர்ந்தது. பிரதிநிதி சபை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வயது வந்தோர் வாக்குரிமைப்படி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பெறுவது. 80,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி யிருக்கவேண்டும். அவர் 25 வயதிற்கு மேற்பட்டவராதல் வேண்டும். செனெட்டு 6 ஆண்டிற்கொருமுறை, பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப் பெறும். ஒவ்வொரு பிரதேசத்திலும் 6 அங்கத்தினர்கள் ஆக 2 இலட்சம் மக்களுக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். செனெட் அங்கத்தினர்களில் ஒருவரான ஜனாதிபதி 5 அங்கத்தினர்களைச் செனெட்டிற்கு நியமனம் செய்வார்.

பார்லிமென்டோடு ஒவ்வொரு பிரதேசக் கவுன்சிலிலிருந்தும் 3 அங்கத்தினர்களும் சேர்ந்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தேர்தலுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோர் வேண்டும். ஜனாதிபதி 50 வயதேனும் பூர்த்தியானவரா யிருக்க வேண்டும். அவர் 7 ஆண்டிற்குப் பதவியிலிருப்பார். செனெட்டின் தலைவர் குடியரசின் உபஜனாதிபதியாக இருப்பார். தமது பதவியின் இறுதி ஆறு மாதங்களில் தவிர வேறு காலங்களில் ஜனாதிபதி பார்லிமென்டின் இரு சபைகளில் எதையும் கலைத்துவிடலாம்.

நிருவாகத்திற்காக இத்தாலியை 19 பிரதேசங்களாகப் பிரித்துள்ளனர். பிரதேசங்கள் மாகாணங்களாகவும் கம்யூன்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. பிரதேசங்களின் நிருவாகம், பிரதேசக் கவுன்சிலாலும் நிருவாகக் குழுவாலும் அக்குழுவின் தலைவராலும் நடத்தப்படுகிறது.

பதினைந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புக் கோர்ட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசியலைப் பற்றிய சட்ட நிருணயத்தின் இறுதி அதிகாரம் இதற்கு உண்டு. இக்கோர்ட்டு இராச்சியத்திற்கும் பிரதேசங் களுக்குமிடையே ஏற்படும் தகராறுகளை விசாரிக்கும். ஜனாதிபதியையும் மந்திரிகளையும் கூட விசாரிக்க இக் கோர்ட்டுக்கு உரிமை உண்டு. ரத்து அதிகாரக் கோர்ட்டு ஒன்று ரோமில் இருக்கிறது. சில்லரைச் சிவில் தாவாக்களை விசாரிக்கும் தனிப்பட்ட உத்தியோகஸ்தர் களும் இருக்கின்றனர்.

1929-ல் போப்பிற்கும் இத்தாலிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் புது அரசியலின் 7 ஆம் ஷரத்துப்படி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதமே இத்தாலிய இராச்சியத்தின் மதம். சட்டப்படி பிராட்டெஸ்டென்டு முதலிய மதத்தவர்களுக்கும் சம உரிமைகளிருப்பினும், அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மதஸ்தாபன மேலதிகாரிகளைப் போப் நியமிக்கிறார். நியமனம் செய்யப்படுபவர்களுடைய பெயர்ப்பட்டி இத்தாலிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். சி. எஸ். ஸ்ரீ.


இத்தாலிய மொழி: இத்தாலிய நாட்டில் ஆதியில் இருந்த மொழி லத்தீன். ஆனால் அந்த மொழி இத்தாலியில் பல பாகங்களிலும் பலவாறு பயிலப் பெற்று வந்தது. அதனால் ரோம் சாம்ராச்சியம் வீழ்ச்சியுற்றவுடன் அந்த வேறுபட்ட லத்தீன்மொழிப் பேதங்கள் தனித்தனி மொழிகள்போல் ஆயின. ஆயினும் டஸ்கனி என்னும் பகுதியில் பயின்ற மொழியே லத்தீனை விட்டு அதிகமாக விலகாததாகும். ஆதலால் 14ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்த நூல்கள் அனைத்தும் லத்தீன் மொழியிலேயே ஆக்கப் பெற்றிருப்பினும், தாந்தே என்னும் உலகப் பிரசித்திபெற்ற பெரும்புலவர் தம்முடைய காவியத்தை டஸ்கன்