பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலிய மொழி

549

இத்தாலிய மொழி

மொழியிலேயே எழுதினபடியால், அதுமுதல் அதுவே இத்தாலி நாட்டின் இலக்கிய மொழியாக ஆயிற்று.

15ஆம் நூற்றாண்டில் பழைய கிரேக்க இலக்கியங்களையும் லத்தீன் இலக்கியங்களையும் கண்டுபிடிக்கவும் படிக்கவும் நேர்ந்ததும், மறுபடியும் லத்தீன் மொழியின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கிற்று. அதனால் புலவர்கள் லத்தினையும் இத்தாலி மொழியையும் கலந்து மணிப்பிரவாளம் போல் எழுதத் தொடங்கினர். ஆனால் இந்தப் பழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் குறைந்து போய், இறுதியில் தாந்தேயின் மொழியே வெற்றி பெற்றது. 19ஆம் நூற்றாண்டில் இத்தாலிய அரசு ஏற்பட்ட காரணத்தால் அந்த வெற்றி நிலைத்து நிற்பதாயிற்று. இப்பொழுது நாட்டில் பல மொழிப் பேதங்கள் காணப்படினும், கல்வி கற்ற இத்தாலியர் அனைவரும் டஸ்கன் மொழியையே பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

இத்தாலிய மொழி கேட்பதற்கு மிகவும் இசை இனிமையுடையது. இத்தாலிய மக்களுடைய எழுத்து மொழிபோலவே பேச்சு மொழியும் இருக்கும். இம்மொழிச் சொற்களின் ஈற்றெழுத்துப் பெரும்பாலும் உயிரெழுத்தாகவே இருக்கும். மேலும் இம்மொழியின் உயிரெழுத்துத் தொகை ஏனைய மொழிகளின் உயிரெழுத்துத் தொகையினும் மிகுதி. உயிர்ப்பை அடக்கி இசைபாடுவதுபோலவேதான் இந்த மொழியைப் பேச வேண்டும். எந்த மொழியிலும் இத்தாலிய மொழியைப்போல் எளிதாக இசை பாட முடியாது என்பர்.

இலக்கியம்: 13ஆம் நூற்றாண்டில் வட இத்தாலியில் சமய சம்பந்தமான காவியங்களும் தென் இத்தாலியில் சமய சம்பந்தமற்ற பாடல்களும் உண்டாயின. II - ம் பிரெடரிக் சக்கரவர்த்தி கவிஞனாயிருந்ததோடு புலவர்களை ஆதரித்தும் வந்தான். அவனுடைய ஆதரவில் இத்தாலிய மொழி வளர்ந்து வருவதாயிற்று. புலவர்கள் அதை மேன்மையுறச் செய்வதற்காக அநேகமாக எல்லோரும் ஒரேவிதமான மொழியை உபயோகிக்கலானார்கள்.

மேலும் அந்த நூற்றாண்டில் தோன்றிய சமய மறுமலர்ச்சியும் மொழியின் வளர்ச்சிக்கும் இலக்கியச் சிறப்புக்கும் துணை செய்தது. அசிஸி பிரான்சிஸ் முனிவர் (1182-1226) எழுதிய தோத்திரப்பாடல்கள் ஆதி இத்தாலியச் சமயக் கவிதைகளில் தலைசிறந்து விளங்குவதாகக் கூறுவர். அவருக்குப் பின் வந்த ஜாக்கோ போன்டா தோடி என்பவருடைய கீதங்களும் உணர்ச்சி மயமானவை.

டஸ்கனி மாகாணம் 1282-ல் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கியது. அதனால் அங்கு மிக உயர்ந்த இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் எள்ளித் திருத்தும் கவிதை (Satire) களும், அரசியல் கவிதைகளும், காதலியை அரசியாகக் கொண்டாடும் பாடல்களும் அதுவரை தோன்றாத புதிய இத்தாலிய இலக்கிய இனங்களாகும். அவற்றுடன் சிறந்த ஒட்டுவமைக் (Allegory) கதைகளும் இயற்றப்பட்டன. 13ஆம் நூற்றாண்டில் கவிதைகளும் கதை நூல்களும் ஏராளமாகத் தோன்றியபோதிலும் வசன நூல்கள் வெகு சொற்பமாகவே இருந்தன.

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த தாந்தே (1265-1321) என்பவரே இத்தாலியக் கவிஞர்களுள் தலைசிறந்தவர். இவர் உலக மகா கவியுமாவார். இவருக்குப் புகழ் தந்து நிற்பது இவருடைய தேவ கீதம் (Divine Comedy).

13ஆம் நூற்றாண்டின் இறுதியில் உணர்ச்சிப் பாடல் (Lyric) திடீரென்று செழித்தோங்கத் தொடங்கிற்று. அதற்கு முக்கிய காரணர் காவல்கான்டி என்பவர். அவர் கலையின் அவசியத்தை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு தம்முடைய கவியைப் பயன்படுத்தினார். அவருடைய கவிதைகளைப் படிப்பவர் இத்தாலிய இலக்கியத்தில் புதியதோர் சகாப்தத்தைக் காண்பர். சினோ டா பிஸ்டியோ என்பவர் காதலின் இன்னல்களை வருணித்திருப்பது மிகுந்த சுவையுடையதாகும். அவருடைய பாடல்களில் காதல், துக்கம் இரண்டின் உளவியல் தத்துவம் பரிபூரணமாகக் காணப்படுகின்றது என்று கூறலாம். அவருடைய பாடல்களைவிட உயர்ந்தவை தாந்தேயின் பாடல்களே ; வேறு இல்லை.

அவருக்குப் பின்வந்த பீட்ரார்க் (1304-1374) சுதந்திர உணர்ச்சி உடையவர். அக்காலத்தில் அவருக்கு இணையான கவிஞர்கள் இல்லை. தற்கால மக்களிடம் காணப்பட்ட அதிருப்தி, உற்சாகமின்மை, திருப்தி அடைய முடியாமை என்னும் இம்மூன்றும் அவரிடம் எப்பொழுதும் குடிகொண்டிருந்தன. அவருடைய காதற் பாடல்கள் மிகுந்த சுவையுடையவை.

அவர் காலத்திய மற்றொரு பெரும்புலவர் பொக்காச்சியோ (1313-1375). அவருக்கு உலகப் புகழைத் தேடிக் கொடுத்த நூல், நூறு கதைகள் அடங்கிய டெக்கமெரான் என்பதாகும். அவருடைய கதைகளின் சிறப்புக்குக் காரணம் பாத்திரங்களின் வருணனையும்,ஆசாபாசங்களின் சித்திரமுமாகும்.

தாந்தேயைப்போல் பாசியோ (Fazio) போன்றவர்கள் காவியங்களும், பொக்காச்சியோவைப்போல் கயோவானி போன்றவர்கள் கதைநூல்களும் எழுதினர். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய செயின்ட் காதரைன் அம்மையார் எழுதியுள்ள கடிதங்கள் பக்திச் சுவை சொட்டுவனவாக உள. கொலம்பினி என்பவருடைய கடிதங்களும் சிறந்தனவே.

14ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியங்கள் பொதுமக்கள் சுவைக்கக் கூடியனவாக இருந்தன. நகைச்சுவை ததும்பும் நூல்களே அதிகமாக இயற்றப் பெற்றன. பல கவிஞர்கள் அரசியல் சம்பந்தமான காவியங்களும் செய்தனர். இந்தக் காலம் முதலாகத் தான் 'பீட்ரார்க்கியர்கள்' என்பவர் அதாவது பீட்ரார்க்கைப் போல் காதலைச் சிறப்பித்துப் பாடும் கவிஞர்கள் காணப்படுகின்றனர். ஆனால் பீட்ரார்க்குக்குப் பின்வந்த புலவர்கள் தாந்தே, பீட்ரார்க்கு, பொக்காச்சியோ ஆகியவர்களுடைய இத்தாலி லக்கியங்களைப் போற்றிய போதிலும், தங்கள் நூல்களை லத்தீன் மொழியிலேயே இயற்றி வந்தனர்.

15ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி இயக்கம் தோன்றிற்று. அதன் பயனாகப் பரலோகத்தைப் பற்றிய சிந்தனையே மக்கள் மனத்தில் குடிகொள்ளத் தொடங்கியது. புலவர்கள் இடைக்காலத்து மதநூல்களை வெறுத்துப் பழைய கிரேக்க நூல்களையே அதிகமாகப் போற்றத் தலைப்பட்டனர். அதனால் இத்தாலிய இலக்கிய வளர்ச்சிக்கு இடையூறு விளைவதாயிற்று.

ஆயினும் லாரென்சோ டி மெடிச்சீ என்னும் புகழ்பெற்ற சகலகலா பண்டிதர் பண்டைய நூற்புலமையும் இத்தாலிய இலக்கியப் பற்றும் உடையவராக இருந்தார். அவரும் அவருக்குப் பின்வந்த பொலிஷன் என்பவரும் பண்டைய நூல் அழகுகளுடன் மிகச் சிறந்த இத்தாலியக் கவிதைகளை இயற்றினர். இந்தக் காலத்தில் மூன்று இலக்கியக் கழகங்கள் (Academies) முறையே பிளாரன்ஸிலும் நேப்பிள்ஸிலும் ரோமிலும் தோன்றின.

மறுமலர்ச்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் இதிகாசக் காவியங்கள் எதுவும் தோன்றவில்லை. காதல்,