பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலிய மொழி

551

இத்தாலிய மொழி

உண்டாக வேண்டுமானால் பண்டைய கிரேக்க லத்தீன் இலக்கியங்களைப் பின்பற்றும் இலக்கிய எழுச்சியும் அவசியம் என்று அறிஞர்கள் எண்ணினர்.ஆகவே தேசபக்தியும் பண்டைய இலக்கிய பக்தியும் இத்தாலிய இலக்கியத்தின் உயிர்நாடிகள் ஆயின.

ஆல்பியெரீ (Alfieri,1749-1803), கொடுங்கோலனை ஆயுதம் கொண்டு எதிர்க்க வேண்டும் என்னும் கிரேக்கக் கொள்கையில் ஊறியவர். அவருடைய துன்ப நாடகங்கள் அனைத்தும் கொடுங்கோலனைக் கொன்று சுதந்திரம் தேடும் விஷயத்தை வைத்தே எழுதப் பெற்றுள. அதனுடன் அவர் அலங்கார நடையையும் தாக்கினர். விறுவிறுப்பான எளிய நடையையே ஆதரித்தனர். அவருக்குப் பின்வந்த புலவர்கள் அவருடைய கருத்துப்படியே நூல்கள் செய்யலாயினர். அத்தகையவர்களுள் சிறந்தவர்கள் பாஸ்கோலோ (Foscolo)வும் மாண்டியும் ஆவர். இத்தாலியர்கள் எப்பொழுதும் தங்கள் பழம் பெருமையைப் பாராட்டிக் கொள்வதில் அவாவுடையவர்கள். அதனை யொட்டியே பாஸ்கோலோ தமது சிறந்த காவியத்தைச் செய்துளார். அவருடைய வசன நூல்களுள் சிறப்புடையது ஆங்கில ஆசிரியர் ஸ்டொன் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பாகும். மாண்டிக்குக் கிரேக்க மொழியில் பாண்டித்தியம் கிடையாதாயினும், இலியாது காவியத்துக்கு அவர் செய்த மொழிபெயர்ப்பு ஹோமருடைய உணர்ச்சி ததும்புவதாக இருக்கின்றது.

இவ்விருவருக்கும் பின்வந்த நிக்கொலீனி நாட்டுப்பற்றைச் சலியாது காக்கும்பொருட்டு அரசியற்பொருள்களை வைத்தே தம் துன்ப நாடகங்களை இயற்றினார். கார்லோட்ரோயா என்னும் வரலாற்றுப் புலவர் முந்தையோர் புகழ்ச்செயல்களை எழுதி மக்களுக்கு ஊக்கம் ஊட்டினார்.

அரசியல் கிளர்ச்சி நடந்த அந்தக் காலத்திலேயே மொழிபற்றிய வாதங்கள் கிளம்பின. சில புலவர்கள் தாந்தே முதலிய பண்டைய ஆசிரியர்கள் கையாண்ட இத்தாலிய மொழியே வேண்டுமென்றனர். அவர்கள் 'தூய மொழியினர்' என்று அழைக்கப்பட்டனர். மற்றவர்கள் பிரெஞ்சுச் சொற்களைக் கலந்து கொள்வதில் பிழையில்லை என்று விவாதித்தனர். தாந்தே மொழியே இத்தாலிய மொழி என்று மான்ஜானி (Manzoni) கூறியதே இறுதியில் வெற்றிபெற்றது. அக்காலத்தில் அரசியல், இலக்கிய வாதங்கள் போலவே இம்மொழி வாதமும் மிகக் கடுமையாக நடந்து வந்தது. அநேகமாக எல்லாப் புலவர்களும் அதில் கலந்துகொண்டனர்.

மான்ஜானீ எழுதிய பிரோமெசி ஸ்போசி (Promessi Sposi) என்னும் வரலாற்று நாவல் அமரத்துவம் வாய்ந்தது. அதில் மனிதனுடைய பண்புகளை எல்லாம் அழகிய ஓவியமாகக் தீட்டியுளார்.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த கவிஞர் களுள் சிறந்தவர் லியாபார்டி. அவரே இத்தாலிய இலக்கியத்தில் இயற்கையைப் பற்றியும் துக்கத்தைப் பற்றியும் எழுதியுள்ள கவிஞர்களுள் தலைசிறந்தவர். அவரே தாந்தேக்குப் பின்வந்த கவிஞர்களுள் பெரியவர் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அதனுடன் உரை நடைக்குரிய பண்புகள் அனைத்தும் வாய்க்கப்பெற்ற நடை எழுதுவதில் திறமை யுடையவர்களுள் இவரும் ஒருவர்.

வீசோ (Vieusseau) வரலாற்று மாசிகை மூலம் நாட்டுப் பற்றை வளர்த்தார். ரஷ்ய அரசாங்கம் அதை வெளியிடவொட்டாமல் செய்தது. அக்காலத்தில் பிளாரன்ஸ் நகரமே, இத்தாலியின் இதர பகுதிகளிலிருந்து துரத்தப்பட்ட நாட்டுப் பற்றுடையவர்களுடைய புகலிடமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் வீசோவின் வீட்டில் கூடுவார்கள். அவர்கள் அரசிபலைவிட இலக்கியத்தைப் பற்றியே அதிகமாக சர்ச்சை செய்த போதிலும் அவர்களுடைய மனம் முழுவதையும் கொள்ளை கொண்டு நின்றது இத்தாலி நாட்டைப்பற்றிய எண்ணம் ஒன்றே.

குராஜி (Guerrazi, 1804-1873) குடியரசுக் கட்சியினர்; மாட்ஸீனியின் சீடர். இவர் கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்காகவே தம்முடைய எழுத்து வன்மை முழுவதையும் பயன்படுத்தினார். மாட்ளீனி இலக்கியம். கலை, இசை ஆகியவற்றைப்பற்றி எழுதினார். கயோபெர்ட்டி என்னும் பாதிரியார் சுதந்திர தாகத்தின் காரணமாகத் தம் பாதிரித் தொழிலைத் துறந்து சுதந்திர நூல்கள் எழுதினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த புலவர்களில் சிறந்தவர் கார்டூச்சீ (Carducci, 1835-1907) என்பவரும் அரசியல் நோக்கமுடைய இலக்கியக் கர்த்தாவாகவே விளங்கினார். அவர் சிறந்த உரைநடை நூல்களும் இலக்கியச் சுவை ஆராய்ச்சி நூல்களும் இயற்றியுளர், டான்னூன்சையோ (1F63- 1938) அவருக்குப் பின்வந்த கவிஞர்களுள் தலைசிறந்தவர்.

அன்டோனியோ போகஜாரோ (Antonio Fogazzero, 1842-1911) என்பவரையே எல்லோரும் இத்தாலிய நாவலாசிரியர்களுள் மிகச் சிறந்தவர் என்று பாராட்டுகிறார்கள். கிரேஜியா டெலெடா (Grazia Delada) என்னும் அம்மையாருடைய நாவல் 1926ஆம் ஆண்டில் நோபெல் பரிசு பெற்றது. பிராண்டலோ (1867-1986) என்னும் நாவலாசிரியர் அதை 1934-ல் பெற்றார்.


இத்தியோப்பிய மொழி : ஆப்பிரிக்காவின் கீழ்க் கரையிலுள்ள இத்தியோப்பிய நாடு தொடக்கத்தில் எகிப்தியரால் தூபியா என்றும், பின்னர்க்கிறீஸ்தவ வேதநூலின் பழைய ஏற்பாட்டில் குஷ் என்றும் அழைக்கப்பட்டது. ஆதிக்கிறீஸ்தவர்கள் இத்தியோப்பியா என்றனர். அராபியர் ஹபாஷ் என்று வழங்கினர். இச் சொல்லினின்று பிறந்ததே அபிசீனியா என்ற பெயர். இப்போது இந்நாட்டின் அரசாங்கப் பெயர் இத்தியோப்பியா என்பதாம்.

இந்நாட்டில் தொடக்கத்திலிருந்தவர் நீக்ரோக்கள். பின்னர் வரலாற்று முன்காலத்தில் ஹாமிட்டிக் வகுப்பினர் வந்து சேர்ந்தனர். கிறிஸ்துவுக்குப்பின் பல காலங்களில் செமிட்டிக் வகுப்பினர் தென் அரேபியாவிலிருந்து வந்து, தம்முடைய பண்பாட்டையே நாட்டின் பிரதானப் பண்பாடாகச் செய்தனர்.

இவர்கள் கொண்டு வந்த கீஸ் (Geez) மொழி இத்தியோப்பிய மொழியாயிற்று. ஆயினும் செமிட்டிக் நூல்கள் வலமிருந்து இடமாக எழுதுவதுபோல் எழுதாமல் இத்தியோப்பிய மொழியில் இடமிருந்து வலமாகவே எழுதினார்கள். கீஸ் மொழியானது டைகிரே, டைகிரினா, அம்ஹாரிக் என மூன்று உருவங்கள் பெற்றது. அவற்றுள் அம்ஹாரிக் மட்டுமே இப்போது வழங்கிவருகிறது. பண்டைய கீஸ் மொழி மத விஷயங்கட்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.

இலக்கியம்: இத்தியோப்பிய நாட்டின் வரலாறு சாலமோன் கால முதல் உள்ளதாயினும் இதன் இலக்கியம் கிறிஸ்தவச் சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்து துவங்குகின்றது. ஆயினும் நாலாம் நூற்றாண்டில் நாட்டுமக்கள் கிறிஸ்தவர்கள் ஆனபிறகு உண்டான