பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/602

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதக்கா

553

இதயம்

இத்தாலிய சர்வாதிகாரியான முசொலீனி இத்தியோப்பியாவின் மீது போர் தொடுத்து, அதை இத்தாலியச் சாம் ராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டார். இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாட்டுப்படைகள் இத்தாலியரை இத்தியோப்பியாவை விட்டு விரட்டி, நாட்டின் சுதந்திரத்தை 1941-ல் நிறுவின. முன்பு இத்தாலிக்குச் சொந்தமாயிருந்த எரிட்ரியா 1952 செப்டம்பர் 15 லிருந்து ஐ.நா.ஏற்பாட்டின்படி இத்தியோப்பியாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் எரிட்ரியாவும் இத்தியோப்பிய மன்னரின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. இந்நாட்டின் மன்னர் I- ம் ஹெய்லி சிலாசி நீகஸ் என்றழைக்கப்படுகிறார். நீகஸ் என்பதன் பொருள் அரசர் என்பதாகும். எம். வீ. சு.

அரசியல் அமைப்பு: இந்நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநிறுத்தும் பொறுப்புச் சக்கரவர்த்தியினுடையது. அரசாங்க நிருவாகம் ஒரு மந்திரி சபையால் நடத்தப்படுகிறது. செனெட்டும் பிரதிநிதிகள் சபையும் சட்டமியற்றும் ஜனநாயக உறுப்புக்கள். மேனாட்டு முறையில் மக்கள் ஆட்சி இன்னும் பெருகவில்லை. நாடு 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு கவர்னர் ஜெனரல் உண்டு. இம் மாகாணங்களின் உட்பிரிவு ஒவ்வொன்றிற்கும் ஒரு கவர்னர் உண்டு. கவர்னர் ஜெனரல் உள்நாட்டு மந்திரியின் அதிகாரத்தின்கீழ் இருப்பார். மாகாணப் பொருளாதாரம் நிதிமந்திரியின் கட்டுப்பாட்டில் இருக்கும். அடிஸ் அபாபாவிலிருக்கும் உச்ச நீதிமன்றமே நாட்டில் உயர்ந்த அப்பீல் கோர்ட்டு. குற்றச் சட்டத்தொகுப்பு ஒன்று சென்ற இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. வெளிநாட்டார் பெற்றுவந்த தனி உரிமைகளும் சலிகைகளும் சமீபகாலத்தில் நீக்கப்பட்டன. அரசியல் குற்றங்களை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் உள்ளன. இத்தியோப்பியாவிலுள்ள முக்கியமான மக்கள் இனம் அம்ஹாரர் எனப்படும். அவர்கள் தொகை சு. 20 இலட்சம். அவர்கள் மத்திய பகுதியில் உள்ளனர். அவர்களுடைய மொழியாகிய அம்ஹாலிக் என்பதே அரசாங்க மொழி. சிறுபான்மையாளரான முஸ்லிம்கள் உள்ள முக்கிய ஊர் ஹாரர். மக்:25,000 (1953). சி. எஸ். ஸ்ரீ.


இதக்கா (Ithaca) மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. பரப்பு: 37 ச. மைல். மக்: சு. 9319 (1940). சாராயமும் ஆளிவிதை எண்ணெயும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ஹோமர் இயற்றிய ஆடிசி என்னும் இதிகாசத்தின் கதைத்தலைவனான ஆடிசியஸ் என்ற யுலிசீஸ் ஆண்ட தீவு தலைநகர் வதி.


இதயம் என்பது இரத்தத்தை உடல் முழுவதும் பரவும்படி செய்வதற்காக அமைந்த உறுப்பாகும். இரத்தமானது உயிர் நிலைத்திருப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படுவதால், அதை இடைவிடாமல் ஓடச்செய்யும் இதயம் எல்லா உறுப்புக்களிலும் மிகவும் ஏற்றமுடையதாகும். இது நெஞ்சறையினுள் இரண்டு நுரையீரல்களுக்குமிடையே ஒரு சவ்வுப் பைக்குள் அடங்கியிருக்கிறது. அந்தப் பையை இதய உறை (Pericardium) என்று கூறுவர்.

இதயம் கூம்பு வடிவினதாய் அடிப்பாகம் வலது தோளை நோக்கியும் நுனிப்பாகம் கீழிறங்கி இடது விலாப்பக்கம் 5-6 விலாவெலும்புகளுக்கு இடையிலுமிருக்கும். விலாவின் இடப் பக்கம் விரல்களை வைத்தால் இதயத் துடிப்புத் தெரியும். அவ்விடமே இதயத்தின் நுனி உள்ளது. அது மார்புக் காம்புக்கு (Nipple) 1 1/2 அங்குலம் கீழ் இருக்கும். இது கைமுஷ்டி அளவுள்ளதாய், சராசரி 5 அங்குல நீளமும், 3 1/2 அங்குல அகலமும், 2 1/2 அங்குலம் குறுக்களவும் உடையதாயிருக்கும். சிலருக்கு இதனினும் பெரியதாகவும், ஒருவருக்கே பல சமயங்களில் பல விதமாகவுமிருக்கும். பொதுவாக இதயத்தின் நிறை உடம்பின் நிறையில் 150-ல் ஒன்றாக இருக்கும். அதன் கொள்ளளவு பிறந்த குழந்தையிடம் 22 க. செ. மி. ஆகவும்,

இதயத்தின் நிலை

1, 1 நுரையீரல்கள்
2 இதயம்
3 இடது காறையடித்தமனி
4 இடது கழுத்துத்தமனி
5 மூச்சுக் குழல்
6 வலது கழுத்துத் தமனி
7 வலது காறையடித்தமனி

8 வலது நுரையீரலை அறுத்து, தமனி. வடிகுழாய். மூச்சுக்குழல் ஆகியவற்றின் கிளைகளைக் காட்டியிருப்பது.

பதினாறு வயது இளைஞனிடம் 150 –160 க. செ.மீ. ஆகவும் இருக்கும். பதினாறு வயதுக்குப்பின் பத்து ஆண்டுக்காலம் மிக விரைவாகப் பருக்கும். அதன் பின் மெதுவாக வளரும். இறுதியில் 50 வயது ஆணில் 290க.செ.மீ.ஆகவும், பெண்ணில் 266 க. செ.மீ.ஆகவும் காணப்படும். ஆணினுடைய இதயம் 11 அவுன்ஸ் நிறையும், பெண்ணினுடைய இதயம் 9 அவுன்ஸ் நிறையுமிருக்கும்.

இதயத்தைப் பொதிந்துள்ள உறையானது இதயம் நுரையீரல்களுடனும் நெஞ்சுடனும் உராயாமல் தடுக்க உதவுகிறது. உறையினகத்தேயுள்ள மெல்லிய சவ்விலிருந்து ஊறும் வழுவழுப்பான நீர் இதயம் விரிந்து சுருங்கும்போது உராயாமல் தடுக்க உதவுகிறது. இதயத்தின் சுவர்களில் இதயத்துக்கு இரத்தம் தரும் குழாய்கள் உள்ளன. இதயத்தின் தசைகள் கை கால்களிலுள்ள தசைகள் போன்ற இயக்குத் தசைகளுமல்ல, இரப்பையிலுள்ள தசைகளைப்போன்ற இயங்கு தசைகளுமல்ல.இவை ஒருவகைச் சிறப்பான தசைகள். இத் தசைகள் தாமாகத் தனித்து நின்று இயங்கும் தன்மையன. இதயத்தை வெளியே எடுத்துப் போஷித்து வந்தால் அது பல மணிநேரம் இயங்கிக்கொண்டிருக்கும். இதயத்தின் ஒரு சிறு துண்டு