பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதயம்

554

இதயம்

கூட அவ்வாறு செய்யும். இவ்வியக்கம் இதயத்தின் சைனோ ஆரிகுலர் நோடு (Sino auricular node) என்னும் ஒரு குறிப்பிட்ட பாகத்தினின்றே பிறக்கின்றது.

இதயம் நான்கு அறைகளாலாயது. அதன் உள்ளிருக்கும் ஒரு தசைச்சுவர் அதை இடப்பக்கம் வலப்பக்கம் என இரண்டாகப் பிரிக்கிறது. வலப்பக்கம் மேலறை (Right Auricle), கீழறை (Right Ventricle) என்று இரண்டு அறைகளாகவும், இடப்பக்கம் மேலறை (Left Auricle) கீழறை (Left Ventricle) என்று இரண்டு அறைகளாகவும் பிரிந்துள்ளன. வலப் பக்கத்தில் சற்று நீலங் கலந்த சிவப்பான அசுத்த இரத்தமும், இடப் பக்கத்தில் மிகச் சிவப்பான சுத்த இரத்தமும் காணப்படும். அறைகளுக்குள் திரைச்சீலை போன்ற சவ்வுகள் உள்ளன. அவற்றைக் கதவுகள் (வால்வுகள்) என்று கூறுவர். அவை முன்னுக்குப்போகும் இரத்தத்தைப் பின்னுக்குத் திரும்பவொட்டாமல் தடுக்கும். வலக்கீழறையிலுள்ள கதவு மூன்று முக்கோணப் பிரிவுள்ளது. அதனை மூவிதழ்க் கதவு என்பர். அது வலக்கீழறைக்கு வரும் இரத்தத்தைத் திரும்ப வல மேலறைக்குக் செல்லாதபடி தடுக்கும். இடக் கீழறையில் இரண்டு பிரிவுகளுள்ள ஈரிதழ்க் கதவு உண்டு. நுரையீரல் தமனியும் பெருந் தமனியும் முறையே வல இடக் கீழறைகளிலிருந்து புறப்படும் இடங்களில் பிறைவடிவான கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மூன்று ஒரே மட்டத்தில் அமைந்திருக்கின்றன. இவை அங்கியில் இருக்கும் பைபோல இருக்கின்றன. இரத்தம் அறைகளிலிருந்து தமனிக்குப் போகும்போது வழிவிடுகின்றன. இரத்தம் திரும்பிவருமானால் அது பைகளில் நிரம்பி, வழியடைந்து விடும்.

வல மேலறையும் இட மேலறையும் இரத்தம் வந்து வடியும் அறைகள். வலக் கீழறை இரத்தத்தை நுரையீரலுக்கும் இடக் கீழறை இரத்தத்தை உடம்பு முழுவதுக்கும் பாய்ச்சும் அறைகள். இரத்தம் வடியும் அறைகள் மெல்லிய தசைகளாலும், இரத்தம் பாய்ச்சும் அறைகள் தடித்த தசைகளாலும் அமைந்துள்ளன. கீழ் அறைகளுக்குள் இடக் கீழறையே இரத்தத்தை உடம்பு முழுவதும் பரப்பி ஓடும்படி செய்வதால் மிகவும் தடித்த தசைகளால் ஆக்கப் பெற்றிருக்கிறது. இடக் கீழறையின் தசைகள் வலக் கீழறையின் தசைகளைவிட மூன்று மடங்கு தடிப்புடையனவாகும். உடம்பிலுள்ள அசுத்த இரத்தமானது இரண்டு பெரிய சிரைகள் மூலம் வல மேலறைக்கு வருகிறது. மேலறை நிறைந்ததும் அது சுருங்குகிறது. அதனால் அங்குள்ள இரத்தம் கீழறைக்கு வருகிறது. கீழறை சுருங்கும்போது இரத்தம் நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்குச் செல்லுகிறது. அங்கு அது தன்னிடமுள்ள கார்பன் டை ஆக்சைடு நீங்கப்பெற்று, ஆக்சிஜனை ஏற்றுச் சிவந்த சுத்த இரத்தமாக நுரையீரல் சிரை வழியாக இட மேலறைக்கு வருகிறது. அவ்வறை சுருங்கும்போது சிவந்த இரத்தம் இடக் கீழறைக்கு வந்து நிறைகிறது. கீழறை சுருங்கும்போது இந்த இரத்தம் பெருந்தமனி (Aorta) வழியாக உடல் முழுவதும் பரவுவதற்காகச் செல்லுகிறது. இரத்தமானது இப் பெருந்தமனியில் பல கிளைகளின் வழியாகப் பிரிந்து, ஒவ்வோர் உறுப்புக்கும் சென்று, பற்பல தந்துகிகளாகப் பிரிந்து, இரத்தத்திலுள்ள ஆக்சிஜனையும் உணவையும் கொடுத்துவிட்டு, அசுத்தங்களைச் சுமந்து, மறுபடியும் தந்துகிகள் ஒன்றாகச் சேர்ந்து வடி குழாய்களாகின்றன. இறுதியில் பெரிய சிரைகள் வழியே வல மேலறைக்கு வந்து சேர்கிறது.

இவ்வாறு, இரத்த ஓட்டம் நடைபெறுவதற்காக இதயத்திலுள்ள மேலறைகள் இரண்டும் ஒரே காலத்தில் சுருங்குவதும், கீழறைகள் இரண்டும் ஒரே காலத்தில் சுருங்குவதும் நிகழ்கின்றன. மேலறைகள் சுருங்கும் நேரம் கீழறைகள் சுருங்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்காம். இந்த இரண்டு விதச் சுருங்குதல்களும் நிகழ்வதை இதயச் சுருக்கம் (Systole) என்று கூறுவர். இச் சுருங்குதல் நிகழ்ந்ததும், இதயம் அதே கால அளவுக்குச் சற்று விரிந்து இளைப்பாறுகிறது. இதை இதய விரிவு (Diastole) என்று கூறுவர். இவ்வாறு சுருங்குதல், விரிதல் ஆகிய இரண்டு செயல்களையும் கொண்டது ஓர் இதயச் சுற்று (Cardiac Cycle)என்பர். இவ்வாறு இதயம் ஒரு நிமிஷத்தில் 72 முறை சுருங்கி விரிகிறது. இதை நாடித்துடிப்பு (Pulse) என்றும் கூறுவர். ஒவ்வொரு கீழறையும் ஒரு துடிப்பில் 5 கன அங்குல இரத்தத்தை வெளியேறச் செய்கிறது. அதனால் இதயம் இருபத்துநான்கு மணிநேரத்தில் 120 டன் நிறையை ஒரு அடி உயரம் தூக்கக் கூடிய வேலையைச் செய்கிறது. உடம்பிலுள்ள 5 குவார்ட்டு இரத்தமும் இரத்தக் குழாய்களில் 12 ஆயிரம் மைல் ஒடி இதயம் வந்து சேர்கிறது. இரத்தம் இதயத்தைவிட்டு வெளியேறி, உடம்பில் ஓடி, மீண்டும் இதயம் வந்துசேர ஒரு நிமிஷ நேரம் ஆகிறது.

கருப்பையில் போய்க் கருத் தங்கியதுமே இதயம் உண்டாகத் தொடங்குகிறது. அப்போது அது ஒரு சிறு குழாய் போலிருக்கும். ஆனால் துடிப்பு ஒழுங்காக நடைபெறும். இது விரைவில் வளர்ந்து ஆறு வாரமாகும்போது அறைகளாகப் பிரிகின்றது. அப்போது அது கழுத்தினிடமே காணப்படும். பிறகு மெதுவாகக் கீழிறங்கி நெஞ்சில் வந்து அமைகின்றது. அதனுடன் இரத்தம் வலது மேலறையிலிருந்து இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து நஞ்சுக்கொடிக்குச் செல்லுகிறது. குழந்தை பிறந்த பின்னர் மேலறைகளுக்கு இடையேயுள்ள துவாரம் மூடிக்கொள்கிறது. பிறக்கும்போது இதயம் அவுன்ஸும், இரண்டு வயதில் 1 அவுன்ஸும், 16 வயதில் 7 அவுன்ஸுமிருக்கும். குழந்தைகளுடைய உடம்பில் இதயம் கிடைமட்டமாக இருக்கும். பிறகு அது வளரும்போதுதான் ஏறக்குறைய நிலைமட்டமாக ஆகின்றது. சிசுவின் இதயம் ஒரு நிமிஷ நேரத்தில் 120 தடவை துடிக்கும். ஏழு வயதாகும்போது 90 தடவை துடிக்கும். நன்றாக வளர்ந்த பின்னர் 72 தடவை துடிக்கும்.

உடல் வேலை செய்யும்போது அதற்கு அதிகமான ஆக்சிஜனும் உணவும் தேவை. அவ்விரண்டும் இரத்தத்தின் வாயிலாகவே கிடைக்கும். ஆகவே வேலை செய்யும்போது இதயமும் விரைவாக வேலை செய்கின்றது.

இதுபோலவே ஆகாய விமானத்தில் போகும்போது மேலேயுள்ள காற்றில் ஆக்சிஜன் குறைவாயிருக்குமாதலால் அப்பொழுதும் இதயம் விரைவாக வேலைசெய்யும். உணவு உண்டதும் சீரணம் நன்றாக நடைபெறுவதற்காக அதிகப்படி இரத்தம் சீரணக்கருவிகளுக்குத் தேவையாயிருப்பதால், இதயம் சாதாரணமாக வேலை செய்வதைவிட மூன்றிலொரு பங்கு கூடுதலாக வேலை செய்யும். கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கும் இரத்தம் தரவேண்டியிருப்பதால், கர்ப்பிணியின் இதயம் அரை மடங்கு அதிகமாக வேலைசெய்யும். உடம்பில் காயமுண்டாகும்போது இரத்தம் வெளியே போய்விடுவதால், எஞ்சியுள்ள இரத்தம் பல அவயவங்களுக்குச் சென்று உதவுவதற்காக இதயம் விரைவாக வேலை செய்யும். கோபமுண்டானால் சண்டையிடவேண்டி-