பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தி

560

இந்தி

றாகும். ஆகவே பிராகிருதத்தின் கடைசி அபப்ரம்ச காலமாகிய சுமார் கி. பி. 1050லிருந்து தான் இந்தி இலக்கியத்தின் ஆரம்பகாலம் என்று கருதப்படுகிறது. மொகலாயர் படையெடுப்புத் தொடங்கிய பிறகு இந்தி இலக்கியத்தின் போக்குத் தனிப்பட்ட முறையில் முன்னேறி வந்ததாகக் காணப்படுகிறது. அச்சமயத்தில் டெல்லி, கன்னோஜ், மகோபா ஆகிய மூன்று இராச்சியங்களிலும் இந்தி பரவியிருந்தது. இந்த இராச்சியங்களின் அரசர்களது ஆதரவில் பல கவிகள் இலக்கியத் தொண்டு புரிந்து வந்தார்கள்.

ஏறக்குறைய கி. பி. 1206 முதல் 1536 வரை இந்தி மொழிப் பிரதேசத்தைத் தவிர மற்றப் பாகங்கள் முஸ்லிம் மன்னரின் ஆட்சியில் வந்து விட்டன. இந்தச் சரித்திர நிகழ்ச்சியினால் இந்தி மொழியின் வளர்ச்சி அல்லது இலக்கியங்களின் தோற்றத்தைப் பற்றி யாதொரு குறிப்பிடத்தக்க காரியமும் நடந்ததாகத் தெரியவில்லை. இக்காலத்தில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் அமீர்குஸ்ரூ ஒருவர் தான். இவரது மொழிப்பற்றுதலால் மொழி வளர்ச்சியில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு கிழக்கு இந்துஸ்தானத்தில் மதக்கிளர்ச்சிகள் நடைபெற்றன. அவற்றின் காரணமாக மொழி வளர்ச்சி பெரிதும் முன்னேற்ற மடைந்தது.

இந்தி மொழியானது சாரணர்களின் கீதங்களாலும், மதப்பிரசாரர்களின் சொற்பொழிவுகளாலும், பண்டிதர்களின் காவியங்களாலும், அரசர்களின் ஆதரவாலும் வளர்ச்சி பெற்று வந்தது. 10ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்தியில், அபப்ரம்சம், பிராகிருதம் என்னும் இவைகளின் ஆதிக்கமே இருந்து வந்தது. இந்த அபப்ரம்சங்கள் தத்தம் எல்லைகளுக்குள் சுயேச்சையாக வளர்ச்சியடைந்து இலக்கியங்களில் இடம் பெறத்தக்கவையாக ஆகிவந்தன. கோரக நாதரின் வசனம் இம்மாதிரி வளர்ச்சியடைந்த ஓர் அபப்ரம்சத்தின் இலக்கிய வடிவமாகும். இது வ்ரஜ மண்டலப் பிரதேசத்தில் வழங்கி வந்தது. ஆகையால் கோரக நாதர் இந்தியின் முதல் வசன எழுத்தாளரெனக் கருதப்படுகிறார்.

15ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருணத்தில் நாட்டின் நிலைமையில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. ஆட்சிக்கோல் துருக்கியர் கையிலிருந்து மொகலாயர் கைக்கு மாறியது. அவர்கள் பொதுமக்கள், இந்து அரசர்கள் ஆகியவர்களுடைய நாகரிகத்தையும் கலாசாரத்தையும் அறிந்துகொள்ளப் பெரிதும் முயன்றனர். இதனால் நாட்டில் அமைதி நிலவி வந்தது. கோரகநாதர் முதலிலேயே வ்ரஜ மொழியை இலக்கிய மொழியாக்கி விட்டிருந்தார். 15ஆம் நூற்றாண்டிற்கு முந்திய புராதன இந்தியின் அவதப்பிரதேசத்து மொழியான அவதியும் வழங்கிவந்தாலும், வ்ரஜ மொழிக்குத்தான் மத்தியப் பிரதேசம் முழுவதிலும் இலக்கிய மொழியின் அந்தஸ்து கிடைத்து வந்தது. இதே காலத்தில் கோஸ்வாமி துளசிதாசர் அவதரித்தார். அவர் அவதி மொழியில் ராமசரித மானஸ் என்ற இராமாயணம் இயற்றினார். இவருக்குச் சற்று முன்பு மலிக் முகம்மது ஜாயசி பத்மாவத் என்ற நூல் இயற்றினார். அவதீ மொழியில் இலக்கிய வடிவத்தில் இவ்விரண்டு காவியங்கள்தாம் புகழ் பெற்றுள்ளன. இதற்குப் பிறகு அவதீயில் இலக்கிய வளர்ச்சி ஏற்பட முடியவில்லை.

வ்ரஜ மொழி 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 17, 18ஆம் நூற்றாண்டுகள்வரை இலக்கியத்தில் நன்கு கையாளப்பட்டு வந்தது. வல்லபாச்சாரியரின் அஷ்டசாப் கோஷ்டியின் கவிகளில் முக்கியமானவரான பெயர் பெற்ற கவி சூர்தாசர் இயற்றிய சூர சாகர் வ்ரஜ மொழியின் மிகச் சிறந்த களஞ்சியமாகும். இதோடு கோஸ்வாமி துளசிதாசரின் வினய பத்ரிகா, கீதாவளீ ஆகிய இரண்டும் வ்ரஜ மொழியிலேயே இயற்றப்பட்டவை. அஷ்டசாப் கவிகள் எட்டுப் பேர்களும் வ்ரஜ மொழியிலேயே கவிதைகள் இயற்றினர். இவ்வாறாக 17, 18ஆம் நூற்றாண்டுகளில் இந்தி இலக்கியம் முழுவதும் வ்ரஜ மொழியிலேயே இயற்றப்பட்டு வந்தது.

துருக்கியர், மொகலாயர் ஆகியோரின் நெருங்கிய தொடர்பால் நாட்டு மொழிகள் சில மாறுதல்கள் அடைந்தன. அதாவது இந்தியின் சொற் களஞ்சியத்தில் துருக்கி, பாரசீக மொழிகளின் சொற்களும் புகுந்துவிட்டன. இவ்விதம் தற்கால இந்தியின் 'கடீபோலீ' என்னும் உருவம் அக் காலத்திலேயே உண்டானதாகும். 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் டெல்லி, ஆக்ராப் பக்கத்து நூலாசிரியர்கள் இந்தக் கடீபோலீயை இலக்கிய மொழியாக்கத் தொடங்கினர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த கவி வலீ என்பவரை இந்தக் கடீபோலீயின் முதல் கவியெனக் கொள்ளலாம். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியின் இந்தக் கடீபோலீ உருவத்தை நன்கு கையாண்டு, இன்ஷா அல்லாகான், மீர், சௌதா, தாக், காலிப், ஜௌக் முதலிய கவிகள் செய்திருக்கும் இலக்கியத் தொண்டுகள் குறிப்பிடத்தக்கவை.

கோரக நாதர் தம் வசனக் கிரந்தங்களுக்கு ஏற்றதாகக் கருதி உபயோகித்து வந்த உருவத்தை சௌராசீ வைஷ்ணவோங்கீ வார்த்தா என்ற நூலில் காணலாம். அந்த உருவம் செய்யுளில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந் நிலையில் நாட்டின் ஆட்சி மொகலாயர்களின் கையிலிருந்து ஆங்கிலேயர் கைக்கு மாறிற்று. இதனால் நாட்டில் பெரிய மாறுதல்கள் தோன்றின. 18ஆம் நூற்றாண்டின் வ்ரஜ மொழியின் பிரசாரம் மந்தமடைந்து, கடீபோலீயின் வளர்ச்சி அதிகரித்து வந்தது. ஆங்கிலேயர் கடீபோலீ வசன நடையைப் பிரபலப்படுத்தத் தொடங்கினர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியின் வசன இலக்கியத்தில் கடீபோலீயின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பெருமை யாவும் ஸ்ரீபார தேந்து அரிச்சந்திரர், சுவாமி தயானந்தர் ஆகிய இருவரையுமே சாரும். அச்சியந்திர வசதி அதிகரித்ததினால் கடீபோலீ மேன்மேலும் வேகமாகப் பரவத் தொடங்கியது. கடீபோலீயின் வளர்ச்சி முக்கியமாக டெல்லி, மீரட் பிரதேசங்களில் அதிகம் ஏற்பட்டது. இதே பகுதியில்தான் மேற்கு இந்தி உருவாயிற்று. இதன் பிரிவுகள் இன்றும் காணப்படுகின்றன. ஒன்று தற்கால இலக்கிய இந்தி. இது வடக்கு, மத்திய பாரதத்தில் வழங்கி வருவது. மற்றொன்று உருது. இது படிக்கத் தெரிந்த சில முஸ்லிம்களிடையே வழங்கி வருவது. இந்தக் கடீபோலீ இந்திதான் இன்று பாரதத்தின் அரசாங்க மொழியாக இடம் பெற்றுள்ளது. இந்தி மொழியானது தன் ஆதிகாலத்திலிருந்தே முழுச் சக்தியுடன் பல்வேறு நிலைமைகளில் வெவ்வேறு உருவங்களோடு மக்களின் தேவையை பூர்த்தி செய்து வந்திருக்கிறது.

இது இந்தியாவின் வெவ்வேறு மாகாணங்களின் மொழிகளிலிருந்து சொற்களை ஏற்றுக் கொண்டும், அவைகளுக்குத் தம் சொற்களை வழங்கியும் வந்திருப்பது தெளிவாகப் புலப்படுகிறது. இது இம் மொழியின் ஒரு சிறந்த அமிசமாகும். இவ்வாறு இந்தி மொழி-