பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்

569

இந்தியத் தத்துவ சாஸ்திரக் காங்கிரசு

அரசியலமைப்பைப் பற்றி முடிவுக்கு வர முயன்றனர். காங்கிரசுக்கும் முஸ்லிம் லீகுக்கும் பாகிஸ்தான் பிரச்சினை பற்றி வேறுபட்ட கொள்கைகள் இருந்து வந்ததால், இறுதியாக ஆங்கில அரசாங்கமே முடிவு செய்து இந்தியச் சுதந்திரச் சட்டத்தை வெளியிட்டது. இச்சட்டத்தின் முக்கியமான ஷரத்துக்களாவன:

1. 1947 ஆகஸ்டு 15 முதல் இந்தியா, பாகிஸ்தான் என்னும் இரண்டு டொமினியன்கள் அமைக்கப்படும். கிழக்கு வங்காளம், மேற்குப் பஞ்சாப், சிந்து, பிரிட்டிஷ், பலூச்சிஸ்தானம் இவை சேர்ந்து பாகிஸ்தானாகும். எல்லை நிருணயிப்பதற்கு நியமிக்கப்படும் ஒரு கமிட்டியின் திட்டப்படி வங்காளமும் பஞ்சாபும் பிரிக்கப்படும். இது தவிர, அஸ்ஸாம் மாகாணத்திலுட்பட்ட சில் ஹெட், அந்த ஜில்லா மக்களின் வாக்குப்படி கீழ்வங்காளத்தோடோ, மேற்கு வங்காளத்தோடோ சேர்க்கப்படும். வட மேற்கு எல்லை மாகாணம் அவ்விடத்து மக்களின் வாக்கின்படி பாகிஸ்தானோடோ இந்தியாவோடோ இணைக்கப்படும். எஞ்சிய இடம் யாவும் இந்திய டொமினியனைச் சார்ந்தவையாகும்.

2. பிரிட்டிஷ் இந்தியாவிலுட்பட்டிருந்த நாடுகளில் அரசியல் பொறுப்பு யாதொன்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 1947 ஆகஸ்டு 15 முதல் கிடையாது. இந்த டொமினியன்கள் விரும்பினாலொழிய பிரிட்டிஷ் பார்லிமென்டின் சட்டம் ஒன்றும் அமலிலிராது. பிரிட்டிஷ் அரசாங்கம் தன் மந்திரி வாயிலாக அலுவலாளர்களை நியமிப்பதும் நிறுத்தப்படும்.

3. 1947 ஆகஸ்டு 15 முதல் இந்திய சுதேச சமஸ்தானங்களில் பிரிட்டிஷாரின் மேலாட்சியும், ஆதிக்குடிப் பிரதேசங்கள்மீதுள்ள அதிகார உரிமையும் நீங்கும்.

புதிய இரு சுதந்திர நாடுகளையும் உருவாக்கிய இச்சட்டம் ஆசிய வரலாற்றில் ஒரு சிறந்த சாசனமெனக் கருதப்படுமென்பதற்கு ஐயமில்லை. கே. க.


இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் (Indian Red Cross Society) : பண்டைக் காலமுதல் எல்லா நாடுகளிலும் துறவிகள் போர்க்களங்களில் காயமுறுவோர்க்கு உதவி செய்துவந்துளர். ஆனால், இதற்காக எந்த ஸ்தாபனமும் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நிறுவப்பெறவில்லை. இப்போது உலகமெங்கும் நடந்துவரும் மருத்துவத்தாதித் (Nurse) தொழிலை முதன் முதல் நிறுவிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் கிரிமியப் போர்க்காலத்தில் காயமுற்றவர்க்கு உதவி செய்தனர். அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்த காலத்தில் சிலர் ஒரு ஸ்தாபனமாக அமர்ந்து உதவி செய்தார்கள்.

1859-ல் மூன்றாவது நெப்போலியன் ஆஸ்திரியாவைத் தாக்கியபோது போர்வீரர்கள் காயமுற்றுக் கதறியதைக் கண்ணாரக்கண்ட சுவிட்ஸர்லாந்து நாட்டினரான ஜீன்ஹென்ரிடுனான்ட் இரக்கம் மிக்கவராய்ப் பக்கத்தூர் மக்களைச் சேர்த்துக்கொண்டு போர்வீரர்களுக்கு உதவி செய்தார். அதன்பின் நாடு பேதமின்றிக் காயமுறும் போர்வீரர்களுக்கு உதவி செய்ய ஒரு சர்வதேச சங்கம் நிறுவவேண்டும் என்று ஒறு சிறு விண்ணப்ப நூல் எழுதினார். அவ்வாறே 16 அரசாங்கங்களின் பிரதிநிதிகள் 1863-ல் ஜெனீவாவில் கூடி செஞ்சிலுவைச் சங்கம் என்ற பெயரால் அத்தகைய சீவகாருண்யச் சங்கம் நிறுவ முடிவு செய்தனர். சுவிட்ஸர்லாந்து நாட்டுக்கொடி வெள்ளைச் சிலுவைகொண்ட சிவப்புத் துணியாகும். டுனான்ட் பெரியாரின் நாட்டைப் பெருமைப்படுத்துவதற்காகச் சீவகாருண்யச் சங்கத்திற்கு வெள்ளையில் செஞ்சிலுவை பொறிப்பதை அடையாளமாக வகுத்தனர்.முஸ்லிம் நாடுகள் வெள்ளைத் துணியில் செம்பிறையைப் பொறித்துக் கொள்கின்றன. ஈரான் தன்னுடைய நாட்டு அடையாளமாகிய செவ்வரியையும் ஞாயிற்றையும் பொறித்துக் கொள்கின்றது.

1864-ல் அமெரிக்காவும் 13 ஐரோப்பிய நாடுகளும் ஜெனீவாவில் கூடிச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஒப்பந்தத்தை வகுத்தன. அதை இப்போது ஜெனீவா ஒப்பந்தம் (Geneva Convention) என்று கூறுவர். இப்போது இந்தியா உட்பட அறுபத்துநான்கு நாடுகள் அவ்வொப்பந்தப்படி நடப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளன. செஞ்சிலுவைத் தாதிகள் போர்க்களத்தில் இரு திறத்துப் போர்வீரர்களுக்கும் உதவிசெய்வர். செஞ்சிலுவை பொறித்த கட்டடங்கள், கப்பல்கள் முதலியவற்றின்மீது இருதிறத்தாரும் குண்டுகள் வீசமாட்டார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் செஞ்சிலுவைச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. எல்லாச் சங்கங்களையும் ஒன்றாக இணைப்பதற்குச் சர்வதேசச் செஞ்சிலுவைக் கமிட்டி என்பதும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கழகம் என்பதும் நிறுவப் பெற்றுள்ளன. கமிட்டி போர்க்காலத்து வேலையையும், கழகம் அமைதிக்காலத்து வேலையையும் கவனிக்கும். கமிட்டி ஜெனீவாவிலும் கழகம் பாரிஸிலும் உள்ளன.

கமிட்டியின் உறுப்பினர் சுவிட்ஸர்லாந்து மக்களே. இவர்கள் கடமைகள் புதிய சங்கங்களை இணைத்தல், போர்க்கைதிகளையும் காயமுற்றோரையும் அன்புடன் நடத்துமாறு கூறும் ஜெனீவா ஒப்பந்தத்தை ஏற்குமாறு நாடுகளைத் தூண்டுதல், போர்க்காலத்தில் துன்ப நீக்கத்துக்கான ஏற்பாடுகள் செய்தல், போரில் துன்பப்படுவோர்க்குப் பிற நாடுகள் தரும் உதவிகளை அவரிடம் கொண்டு சேர்த்தல் என நான்காகும்.

கழகம், செஞ்சிலுவைச் சங்கம் இல்லாத நாடுகளில் சங்கம் அமைக்கவும், எல்லா நாடுகளிலும் உடல் நலம் உண்டாக்கவும், துன்பங்களை நீக்கவும், மருத்துவ அறிவையும் விஞ்ஞான அறிவையும் பரப்பவும் பாடுபடுகின்றது.

முதலாவது உலக யுத்தத்தில் இந்தியாவில் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பட்டிருக்கவில்லை. செஞ்சிலுவைச் சங்கம் செய்யக்கூடிய சீவகாருண்ய வேலைகளைச் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கமே செய்துவந்தது. பின்னர் 1920-ல் இந்திய அரசாங்கம் சட்டம் இயற்றி, இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தை அமைத்து, தான் ஏற்படுத்தியிருந்த 'கூட்டுப்போர்க் கமிட்டி' யிடமிருந்த பணத்தை அச்சங்கத்தினிடம் கொடுத்தது. இப்போது 26 இராச்சியக் கிளைகளும் 222 மாவட்டக் கிளைகளும் உள்ளன. ஐந்துவகையான உறுப்பினர்களும் சேர்ந்து மொத்தம் 15,732 (1949) பேருளர். ராஷ்டிரபதியே அதன் தலைவர்.

இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவில் உள்ள இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் என்பது குழந்தைகளின் உள்ளத்தில் செஞ்சிலுவைக் குறிக்கோள்களைப் பதியச் செய்வதற்காக நடந்து வருகிறது. அதிலுள்ள உறுப்பினர்தொகை : 7.04.855 (1949). இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் பிரசவ உதவி, குழந்தைகள் பராமரிப்பு, உடல்நலக் கல்வி, மருத்துவ உதவி முதலிய பல மக்கள் நலப் பணிகள் செய்துவருகின்றது.


இந்தியத் தத்துவ சாஸ்திரக் காங்கிரசு: (Indian Philosophical Congress) தத்துவ நூல் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்திய அறிஞர்கள் ஒன்று