பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியத் தத்துவ சாஸ்திரம்

571

இந்தியத் தத்துவ சாஸ்திரம்

வுக்கு இரண்டு நூற்றாண்டுகட்கு முன் அறிஞர்கள் அவற்றை ஆராயலானார்கள். அதன் பயனாகவே ஆறு தர்சனங்களும் உண்டாயின. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தத்துவ நோக்கமுடையதா யிருக்கிறது. நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் என்னும் ஆறு தர்சனங்களும் வேதங்களைப் பிரமாணமாகக் கருதுவதால் வைதிக மதங்களேயாகும். இவற்றுடன் வேதங்களைப் பிரமாணமாகக் கொள்ளாத சார்வாகம், ஜைனம் அல்லது ஆருகதம், பௌத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முதல் ஆறு தர்சனங்களும் அனேகம், துவைதம், ஏகம் என்பன போன்ற பலவிதமான தத்துவக் கொள்கைகள் அடங்கியவை.

(1) நியாயம், வைசேஷிகம், மீமாம்சை ஆகிய மூன்றும் அடிநிலைப் பொருள்களைப் பல என்றே கூறுவதால் அவை அனேகாந்தத் தன்மையுடையன. சடப்பொருள் அணுவாலாகியது. அவ்வணுக்கள் பல இனங்களாம். அணுக்கள் சேர்ந்தே பிரபஞ்சம் உண்டாயிற்று. எல்லையற்ற நித்தியமான ஆன்மாவும் பல திறப்பட்டதே. அது தன் தனிப் பண்பு நிலையில் எதனுடனும் உறவற்றது. ஆனால் சத்துடன் உறவு கொள்ளும்பொழுது உடலும் பொறிகளும் பெற்று, எல்லை உணர்ச்சி பெறுகின்றது.

(2) சாங்கியமும் யோகமும் பௌதிக உலக முழுவதையும் 'பிரகிருதி' என்று கூறும். வேறு வேறு இயல்புகளிருப்பினும், வேறு வேறாகப் பிரிக்க வொண்ணாத குணங்களாகிய சத்துவம், ராஜசம், தாமசம் என்னும் மூன்று குணங்கள் பிரகிருதிக்கு உண்டு. இந்தக் குணங்கள் பலவிதமாகச் சேர்வதனாலேயே பௌதிக உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் உண்டாயிருக்கின்றன. ஆன்மா என்பதை இந்தத் தர்சனங்கள் 'புருஷன்' என்று கூறும். புருஷன் அந்தக்கரணம் போன்ற பௌதிகக் கூறுகளுடன் சேர்ந்தபோதிலும் அது தனித்தே நிற்கும் இயல்புடையது. புருஷர்கள் பலராயினும் புருஷன், பிரகிருதி என்னும் இரண்டு தத்துவங்களே பிரதானமாகக் கூறப்படுவதால் இவ்விரு தர்சனங்களும் துவைதத் தன்மையே உடையன.

(3) வேதாந்தம் ஒருபொருள் வாதத்தைச் சேர்ந்தது. அது உபநிடதக் கருத்துக்களை விவரித்துப் பிரமமே பிரபஞ்சத்துக்கும் ஆன்மாவுக்கும் மூலம் என்று கூறுகிறது. ஆயினும் பிரமத்துக்கும் பிரபஞ்சத்துக்குமுள்ள உறவும்,பிரமத்துக்கும் ஆன்மாவுக்குமுள்ள உறவும் வேறுவேறு விதமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு கருத்து, பிரபஞ்சமும் ஆன்மாவும் பிரமத்தைச் சார்ந்தனவாயிருப்பினும், உள்ள பொருள்களே என்று கூறுகிறது. மற்றக் கருத்து அவை இரண்டும் பிரமத்தின் தோற்றங்கள் மட்டுமே என்று கூறுகின்றது. உள்ள பொருள்களுக்கெல்லாம் பிரமமே மூலம். அதுவே தனிப் பரம்பொருள் என்பதை இரண்டு கருத்துக்களும் ஏற்றுக்கொள்கின்றன. பிரமத்தின் பண்பைக் கூறும்பொழுது ஒன்று சகுணம் என்று கூறுகிறது. மற்றது நிர்க்குணம் என்று கூறுகிறது. சகுணக் கருத்தே முதலில் தோன்றியது. ஆனால் சங்கரருடைய இரண்டாவது கருத்தே நீண்ட நாளாக நிலைத்து நிற்பது

நோக்கம்: பிரபஞ்சத்தின் காரணம் யாது என்று சிந்திப்பது மனித அறிவின் இயல்பு. காரணத்தைக் கண்டுவிட்டால் அது திருப்தி அடையும். அதுவே தத்துவ சாஸ்திரத்தின் நோக்கம் என்பது மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகளின் கருத்து. ஆனால் அது போதாது, அறவாழ்வு விஷயத்தைப் பற்றிய கருத்தையும் கூறி, மனிதனுடைய முழு இயல்பையும் திருப்தி செய்வதே தத்துவ சாஸ்திரத்தின் நோக்கம் என்று இந்தியத் தத்துவ சாஸ்திரிகள் கூறி வருகிறார்கள். ஆறு தர்சனங்களும் ஆன்மாவைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் வேறு வேறு விதமான கருத்துக்கள் உடையனவாயிருப்பினும், அவை ஒன்றுபோலப் பிரபஞ்சத்தைவிட ஆன்மாவையே பிரதானமாகக் கருதுகின்றன. இக்காரணத்தால்தான் இந்தியாவில் தத்துவ சாஸ்திரம், அத்யாத்ம சாஸ்திரம் அதாவது ஆன்ம விஞ்ஞானம் என்று கூறப்படுகிறது. ஆகவே அது பௌதிகக் கலையாக ஓதப்படுவதைவிட அதிகமாக ஆன்மக் கலையாகவே ஓதப்படுகிறது. தத்துவ சாஸ்திரம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாகும். கருத்தையும் வாழ்வையும் பிரிக்கக் கூடாது என்பது இந்திய அறிஞர்களுடைய திடமான எண்ணம்.

அதற்காகவே அவர்கள் உயர்ந்த உண்மையை அறிய விரும்புகிறார்கள். ஒவ்வொரு தர்சனமும் உண்மையான ஆன்மா என்றும், சீவாத்மா என்றும் வேறுபடுத்திக் கூறுகின்ன்றது. உதாரணமாக வேறு வேறாகத் தோன்றும் ஆன்மாக்கள் உண்மையிலேயே எல்லையற்ற ஏகவஸ்துவே என்பது வேதாந்தத்தின் கருத்து. சீவான்மா குறைபாடு உடையது. உண்மையான ஆன்மா அஃதில்லாதது. இந்தக் கருத்தை அறிவது அறிவைத் திருப்தி செய்வதற்காக மட்டுமன்று, அதைப் பயன்படுத்தி வாழ்வை நடத்துவதற்காகவுமாகும். அதாவது தாழ்ந்த தன்மையை விடுத்து, உயர்ந்த ஆன்ம தத்துவத்தின் பிரகாரம் நடப்பதற்காகவேயாகும். இதுதான் ஆன்ம விடுதலையாகிய முக்தி என்பது. இதுதான் மனிதனுடைய குறிக்கோளா யிருக்கத் தகுவது.

இந்த நிலையை அடைவதற்குக் கையாள வேண்டிய அனுஷ்டான நெறிகளை எல்லாத் தர்சனங்களும் வகுத்திருக்கின்றன. அவை இரு வகைப்படும். (1) கீதையில் கூறப்பட்டுள்ள நிஷ்காமியகருமம் என்னும் கருத்தைக் கையாண்டு, பற்றற்ற தன்மையாகிய வைராக்கிய நிலையை அடைவதற்காக ஏற்பட்டது ஒரு முறை. (2) தத்துவ சாஸ்திரத்தைக் 'கற்று அறிந்துகொண்டு, ஆன்ம உண்மையை அனுபவ வாயிலாக உணர்வதற்காக ஏற்பட்டது மற்றொரு முறை. உண்மையான ஆன்மாவைச் சதாகாலமும் தியானம் செய்வதால் அந்த அனுபவம் கைகூடும்.

இந்த இலட்சியம் கைகூடுமா என்பதில் இந்தியர்களுக்கு ஒரு நாளும் ஐயமில்லை. ஆனால் பரத்தில்தான் கைகூடும் என்று ஆதியில் எண்ணி வந்தார்கள்; இகத்திலேயே கைகூடும் சீவன் முக்தி (உயிருள்ளபொழுதே விடுதலை) பெறலாம் என்று பின்னால் கருதலானார்கள். ஆகவே எவரும் முயன்றால் இகத்திலேயே அந்த இலட்சியத்தை அடைய இயலும். ஆகவே மனிதனுடைய இலட்சியம் பரத்திலடையும் ஒன்று என்பதுமாறி, இகத்தில் அடையும் ஒன்றுக்காகச் செய்யும் இடைவிடாமுயற்சி என்று விரிவடைந்தது. இந்தக் கருத்தைச் சாங்கிய யோகமும் வேதாந்தமுந்தான் ஏற்றுக் கொள்கின்றன. ஆயினும் அவைகளும் யோகிகள் வாழ்வின் இறுதியில் விடுதலை பெறுவதாகவே கூறுகின்றன. வேறுபாடெல்லாம் வைராக்கிய, தியான அனுஷ்டான முறைகள் எதுவரை கையாளப்பட வேண்டும் என்பதிலேயே. உண்மை ஞானம் உதித்தபின் அவை தேவையில்லை என்று சாங்கிய யோகமும் வேதாந்தமும் கூறுகின்றன. மற்றத் தர்சனங்கள் இறக்கும்வரை தேவையே என்று கூறுகின்றன.

மேற்கூறிய வைராக்கிய, தியான முறைகளை மேற்கொண்டு சீவன் முக்தி பெற்றால், அப்பொழுது சுயநலக்-