பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியத் தேசிய ஆராய்ச்சி நிலையங்கள்

572

இந்தியத் தேசியக் காங்கிரசு

கொடுமை நீங்கும். ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளும் காரியங்கள் நடைபெறா. ஏகவஸ்துக் கருத்தை அனுபவ வாயிலாக அறிவதால் சகல சீவர்களையும் தனக்குச் சமானமென மட்டும் கொள்ளாமல் தானாகவே பாவித்து அன்பு செய்யும் குணம் தோன்றும். அதன் காரணமாகத் தாமாகவே பிறர் துன்பம் துடைக்கும் வேலையில் ஈடுபடுவர். அனேகாந்த வாதத்தை ஏற்கும் தர்சனங்களை நம்புகிற ஞானிகளும் இவ்விதமே ஈடுபடுவர். ஆனால் அவர்கள் பிறரைத் தாமாக எண்ணி அன்பு செய்வதற்குப் பதிலாகப் பிறரிடம் கருணை பிறக்க அன்பு செய்வர். ஆகவே உண்மை ஞானம் பெற்ற பெரியோர்கள் ஆன்ம ஞானமும் விடுதலையும் பெற்றதோடு திருப்தி அடையாமல் பிறரையும் அடையுமாறு செய்ய முற்படுவர். புத்தரைப் பிரதானமான உதாரணமாகக் கூறலாம்.ஆனால் இந்தியாவில் அவர் போல் எண்ணிறந்த பெரியோர்கள் தோன்றியுளர். ஆன்ம ஞானம் பெறுவதே தத்துவ சாஸ்திரத்தின் நோக்கம் என்று கூறினும், எல்லா மக்களும் நன்மை பெற உழைப்பது என்பதும் அதன் பொருளாகும். எம். ஹி.


இந்தியத் தேசிய ஆராய்ச்சி நிலையங்கள்: இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன் இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் மட்டும் விஞ்ஞான ஆராய்ச்சி ஓரளவு செய்து வந்தன. யுத்த முயற்சிக்கான பல பொருள்கள் பிற நாடுகளிலிருந்து வருவது தடைப்பட்டதால் நாட்டிலேயே ஆராயும் தேவை உண்டாயிற்று. அதன்மேல் இந்திய அரசாங்கம் 1940-ல் விஞ்ஞான, கைத்தொழில் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியது. இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றபின் பல ஆராய்ச்சி நிலையங்கள் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் கீழே குறித்துள்ளவாறு நிறுவப்பட்டுள்ளன:

1. தேசியப் பௌதிக சோதனைச்சாலை, புதுடெல்லி. 2. தேசிய ரசாயனச் சோதனைச்சாலை, பூனா. 3.உலோகத் தொழிற் சோதனைச்சாலை, ஜாம்ஷெட்பூர். 4. எரிபொருள் ஆராய்ச்சி நிலையம், ஜியோல்கோரா. 5. மத்திய உணவுத் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிலையம், மைசூர். 6. மத்திய மருந்துச் சரக்கு ஆராய்ச்சி நிலையம், இலட்சுமணபுரி. 7. மத்தியக் கண்ணாடி பீங்கான் ஆராய்ச்சி நிலையம், கல்கத்தா. 8. மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம், டெல்லி.9.மத்தியக் கட்டட ஆராய்ச்சி நிலையம், ரூர்க்கி. 10. மத்தியத் தோல் ஆராய்ச்சி நிலையம், சென்னை. 11. மத்திய மின்சார-ரசாயன ஆராய்ச்சி நிலையம், காரைக்குடி. 12. ரேடியோ மின்சாரப் பகுப்பியல் ஆராய்ச்சி நிலையம், பிலானி.

அணுகுண்டுச் சக்தியைக் கைத்தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கு உற்பத்தி செய்வதை ஆராயும் பொருட்டு அணுகுண்டுச் சக்திக் கமிஷனை அரசாங்கம் ஏற்படுத்தி யிருக்கிறது. இப்போது வகுத்துள்ள ஐந்தாண்டுத் திட்டத்தில் குடிசைக் கைத் தொழில்களை ஆராய்வதற்கான பொறியியல் ஆராய்ச்சி நிலையம், மத்திய உப்பு ஆராய்ச்சித்தலம் என்னும் இரண்டு ஆராய்ச்சி நிலையங்கள் சேர்ந்துள்ளன.


இந்தியத் தேசியக் காங்கிரசு : இந்தியத் தேசியக் காங்கிரசை ஏற்படுத்த முயன்றவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயரென்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசாங்க அலுவலிலிருந்து ஓய்வு பெற்றிருந்த இவர், இந்திய மக்களின் கருத்துக்களைத் துரைத்தனத்தாருக்கு அறிவிப்பதற்கு ஒரு சங்கம் தேவையென எண்ணினார். ரிப்பன் பிரபுவின் காலம் முதல் நாட்டில் தோன்றிய அரசியல் உணர்ச்சியின் விளைவால் சில அறிஞர்கள் இக்கருத்தை வரவேற்று, 1885 டிசம்பர் 28-ல் காங்கிரசை ஏற்படுத்தினர். முதல் காங்கிரசு பம்பாயிலே பானர்ஜியின் தலைமையில் கூடிற்று. அதற்கு ஹியூம், திலாங்கு, ஜீ. சுப்பிரமணிய ஐயர் உட்பட 72 அங்கத்தினர் வந்தனர். அது முதல் ஆண்டுதோறும் ஒரு தடவை இது கூடிவந்தது. அங்கத்தினர்களின் எண்ணிக்கை பெருவாரியாக மிகுந்து வந்தது. ஆதியில் சில திட்டங்களை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு அனுப்புவதில்தான் காங்கிரசு ஈடுபட்டது. சட்டசபைகளில் மக்களுடைய பிரதிநிதிகளுக்கு இடம் கிடைப்பது, சிவில் சர்வீஸ் தேர்வை இந்தியாவிலும் நடத்துவது, இந்தியப் படைச் செலவைக் குறைப்பது, இந்தியக் கவுன்சிலை நீக்குவது போன்ற தீர்மானங்களை இது நிறைவேற்றிற்று. 1905-ல் தலைமை வகித்த தாதாபாய் நௌரோஜி சுயராச்சியமே இலட்சியம் என்று கூறினார். ஆயினும், ஏறக்குறைய 1906வரை காங்கிரசு ஒரு மிதவாதக் கூட்டமாகவே நடந்து வந்தது. இதனால் பயனில்லையெனக் கண்ட சிலர் தீவிரக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இதற்கு ஊக்கமளித்தவர் பால கங்காதர திலகர். காங்கிரசில் தீவிரக் கொள்கையைப் பரவச் செய்தவர் இவர்தாமென்பதற்கு ஐயமில்லை. இவர் காங்கிரசின் செயலாளராகப் பல ஆண்டுகள் சேவை செய்தார். தாமே நடத்திவந்த 'கேசரி' என்னும் பத்திரிகையில் அரசாங்கக் கொள்கைகளையும் அடக்குமுறையையும் கண்டித்தார். இரு தடவை அரசியல் தண்டனைக்கு ஆளாயினார். இத்தண்டனைகள் பின்னும் நாட்டில் அரசியலுணர்ச்சியையும் கிளர்ச்சியையுமே வளர்த்தன.

ஆங்கில அரசாங்கம் ஒருபக்கம் அடக்குமுறையைக் கையாண்டது. மற்றொரு பக்கம் அரசியல் சீர்திருத்தச் சட்டங்களையும் வகுத்தது. 1892-ல் அமைத்த சட்டசபைகளைப் பின்னும் சீர்திருத்தி 1909-ல் மின்டோ மார்லி சட்டத்தைப் பிரசுரித்தது. இதன்படி சட்டசபைகளில் அங்கத்தினரின் எண்ணிக்கையும் உரிமைகளும் அதிகமாக்கப்பட்டபோதிலும், காங்கிரசு இச்சட்டத்தை ஆதரிக்கவில்லை. முகம்மதியர்களுக்குத் தனிப்பட்ட தொகுதி அளித்தது பிற்போக்கானதென வற்புறுத்தியது. கோகலே போன்ற மிதவாதிகள் கூட இச்சட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆயினும் காங்கிரசில் மிதவாதிகளுக்கு 1910 வரையில்தான் செல்வாக்கிருந்தது. அதற்குப்பின் மிதவாதிகள் தேசிய லிபரல் பெடரேஷன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரு தனி வகுப்பாக அமையவே, தீவிரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1918-ல் அரசாங்கம் ரௌலட் சட்டத்தை நிறைவேற்றத் துணிந்தது. இதன் நோக்கம் அரசியலுக்கு எதிராகச் சூழ்ச்சியோ, கிளர்ச்சியோ செய்பவர்களை விசாரணையின்றித் தண்டிக்க அரசாங்கத்திற்கு உரிமை கொடுப்பதேயாகும். நாடு முழுவதிலும் இதற்கு எதிர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தச் சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் பெரிய சத்தியாக்கிரகப் போர் நடத்தி, இந்தியா திரும்பிய காந்தியடிகளும் இச்சட்டத்தைத் தீவிரமாகக் கண்டித்தார்.

1919-ல் காங்கிரசுக் கூட்டம் அமிர்தசரசில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அவ்விடத்தில் அமைதிக் குறைவு இருப்பதால் கிளர்ச்சிக் கொள்கைகள் ஓங்கும் என்றும், மாநாடு அங்கு நடப்பது கலவரத்தை விளைக்குமென்றும், பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓடயர் அதைத் தடுக்க முன்வந்தார். காங்கிரசுத் தலைவர்களாகிய டாக்டர் கிச்சலுடாக்டர் சத்தியபால் இருவரையும் துரைத்தனத்தார் இரகசிய-