பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திய மாதர் சங்கம்

576

இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம்

குறைவான ஹைடிரோகுளோரிக அமிலத்துடன் வினைப்படுத்தினால், அமிலத்தில் கரையாத நீகத்தின் மேல் இந்தியம் படியும். இதைத் தனியே பிரித்தெடுக்கிறார்கள்.

இந்தியம் வெள்ளியை யொத்த வெண்மை நிறமுள்ள உலோகம். இது காரீயத்தைவிட மென்மையானது. இதைக் கம்பியாக இழுக்கலாம்; தகடாக அடிக்கலாம். இது உலர்ந்த காற்றினால் பாதிக்கப்படுவதில்லை. காற்றில் இதை எரித்தால் நீல நிறச் சுடருடன் எரிந்து ஆக்சைடாக மாறும். இது அமிலங்களில் கரையும். குளோரினுடனும் கந்தகத்துடனும் இது நேரடியாகக் கூடும்.

இந்தியம் ஆக்சைடுகளில் இந்தியம் செஸ்குவி ஆக்சைடு (In2 O3) முக்கியமானது. இந்தியத்தைக் காற்றில் எரித்து இதை மஞ்சள் நிறத்தூளாகப் பெறலாம். ஹைடிரஜனுடனும் கார்பனுடனும் இதைச் சூடேற்றினால் இது எளிதில் குறையும். இந்தியம் மூன்று குளோரைடுகளை அளிக்கிறது. இந்தியம் மானோகுளோரைடு (In Cl)கருஞ்சிவப்பு நிறமுள்ள படிகங்களாகக் கிடைக்கும். இந்தியம் டைகுளோரைடு (In Cl2 ) நிறமற்ற படிகங்களாகக் கிடைக்கும். இந்தியம் டிரைகுளோரைடு (In Cl2) வெண்மையான, கசியும் தன்மையுள்ள படிகம். இந்தியத்துடன் குளோரினை வினைப்படுத்தினால் டிரைகுளோரைடு கிடைக்கிறது. இந்தியத்தின் உப்புக்கள் சுடருக்கு நீல நிறத்தை அளிக்கும்.


இந்திய மாதர் சங்கம் (Women's Indian Association) 1917-ல் சென்னையில் நிறுவப்பெற்றது. பெண்கள் கல்வி வசதி பெறுவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும், ஆடவருடன் சம உரிமை பெறுவதற்கும் பாடுபடுவதே இதன் நோக்கம். அகில இந்திய மாதர் மாநாட்டையும் அகில ஆசிய மாதர் மாநாட்டையும் நடத்தியது. சென்னையிலுள்ள சேவா சதனம், சிசு உதவிச் சங்கம், ஒளவை இல்லம், மான்டிசோரி பள்ளி ஆகியவை இதன் முயற்சியினால் தோன்றியவை. இது நிலைதவறிய பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லம் நடத்திவருகிறது.


இந்திய முதிர்ந்தோர் கல்விச் சங்கம் (Indian Adult Education Association) 1937-ல் இந்திய முதிர்ந்தோர் கல்விச் சபை என்ற பெயருடன் டெல்லியில் நிறுவப்பெற்று, 1939-ல் இப்போதுள்ள பெயருடன் பதிவு செய்யப்பட்டது. இதன் நோக்கங்கள் எல்லாவிதமான அறிவையும் எளிதில் விளங்கும் முறையில் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்வது, இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை மாநாடு கூட்டுவது போன்றவையாம். அகில இந்திய ரேடியோ நிலையத்துடனும், இந்துஸ்தானி தாலீமி சங்கத்துடனும், யூனெஸ்கோவுடனும் தொடர்புடையது. அரசாங்கத்தின் ஆதரவு பெற்றுள்ளது. எல்லா இராச்சியங்களிலுமுள்ள முதிர்ந்தோர் கல்வி ஊழியர்க்குப் பயிற்சி முகாம்கள் நடத்துகின்றது. 'இந்திய முதிர்ந்தோர் கல்வி இதழ்' என்பதைக் காலாண்டு இதழாக நடத்தி வருகிறது. இது திங்கள்தோறும் வெளியிடும் 'முதிர்ந்தோர் கல்விச் செய்தித்தாள்' பல இடங்களிலும் நடைபெறும் முதிர்ந்தோர் கல்வி நிகழ்ச்சிகளைப்பற்றிய அறிவைப் பரப்புகிறது. சென்ற 15 ஆண்டுகளில் எட்டு மாநாடுகள் நடத்தியிருக்கிறது. 1950லும் 1951லும் சர்ச்சைச் சபைகள் நடத்திற்று. இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியிலுள்ளது.


இந்திய யூனியன்: பார்க்க : இந்தியா அரசியல் அமைப்பு.


இந்திய ரசாயனச் சங்கம் (Indian Chemical Society) சர் பி. சி. ரே போன்ற பெரிய இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியால் 1924-ல் கல்கத்தாவில் நிறுவப்பெற்றது. சர் பி. சி. ரே முதல் தலைவராயிருந்தார். இதன் நோக்கம் ரசாயன விஞ்ஞானத்தை வளர்ப்பதாகும். இப்போது திங்கள் இதழ் ஒன்றை வெளியிடுகின்றது. அன்றியும் கைத்தொழில் அனுபந்தம் ஒன்று காலாண்டுதோறும் வெளியிடுகின்றது. எல்லா நாடுகளிலிருந்தும் ரசாயன இதழ்களைச் சேகரித்து ஒரு நூல் நிலையம் ஏற்படுத்தியுளது. சர் பி. சி.ரே நினைவு நிதியின் உதவி கொண்டு சொற்பொழிவு நடத்தவும், வெண்கலப் பதக்கப் பரிசு கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.


இந்திய ராணுவம் : பார்க்க: ராணுவம்-இந்திய ராணுவம்.


இந்திய வரலாற்றுக் காங்கிரசு தற்கால இந்திய வரலாற்றை ஆராய்வதற்காக 1938-ல் நிறுவப்பெற்றது. தொடக்கக் காலமுதல் இக் காலம் வரையுள்ள இந்திய வரலாற்றை ஆராய்வதென்று பின்னர் முடிவு செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை எந்தப் பல்கலைக் கழகம் அழைக்கின்றதோ அங்குக் கூடும். அப்போது வரலாற்றுப் புலவர்கள் இந்திய வரலாற்றுப் பகுதிகளைப் பற்றிய பிரச்சினைகளை விவாதிப்பர். கூட்டத்தின் நடவடிக்கைகள் அச்சிட்டு வெளியிடப்படும். இந்திய வரலாற்றை விரிவாக எழுதி 13 தொகுதிகளாக வெளியீடும் பணியைச் செய்து வருகிறது. இக்காங்கிரசின் தலைமை அலுவலகம் ஆண்டுதோறும் மாறும். ஆண்டுச் சந்தா பத்து ரூபாய் தருவோர் உறுப்பினராகலாம். இந்திய வரலாற்று அறிஞர்களுள் பெரும்பாலோர் உறுப்பினராயுள்ளனர்.


இந்திய வரலாற்றுப் பத்திரக் கமிஷன் (Indian Historical Records Commission) இந்திய அரசாங்கத்தால் 1919-ல் நிறுவப்பெற்று, 1941-ல் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் வரலாற்றுப் பொருள்கள் அடங்கிய பத்திரங்களைப் பாதுகாப்பதும், தனி ஆட்களிடமுள்ள பத்திரங்களைக் கண்டுபிடிப்பதும், இந்திய வரலாற்று அண்மைக்காலம் பற்றிய பத்திரங்களை வெளியிடுவதும், பத்திரங்களைப் பாதுகாக்கும் முறைகளைப்பற்றிப் பயிற்சியளிப்பதுமாகும். ஆராய்ச்சி வெளியீட்டு உட்குழு என்றும், தலப்பத்திர உட்குழு என்றும் இரண்டு உட்குழுக்கள் இருக்கின்றன. இது ஆண்டுதோறும் தன் நடவடிக்கைகளை வெளியிடுகிறது. இதன் தலைவர் இந்திய அரசாங்கக் கல்வி அமைச்சர்; செயலாளர் இந்திய அரசாங்கப் பத்திரத் தலைவர்; அலுவலகம் புதுடெல்லியில் உள்ளது.


இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம் (Association of Scientific Workers of India) விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுடைய நிலையை உயர்த்தவும், விஞ்ஞான அறிவை மக்களிடைப் பரப்பவும், 1947-ல் ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைமையில் நிறுவப்பெற்றது. விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும், பொறிவலாளர்களும், மருத்துவப் பட்டதாரிகளும், சமூக விஞ்ஞானப் பட்டதாரிகளும் உறுப்பினராகலாம். ஏறக்குறைய 1500 உறுப்பினர்கள் (1952) உளர். இதற்குப் பன்னிரண்டு கிளைகள் உள்ளன. தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இருந்து

வருகிறது. இது 1949 முதல் 'விஞ்ஞான கர்மீ' என்ற பெயரால் ஓர் ஆங்கிலத் திங்கள் இதழை வெளியீட்டு வருகிறது.