பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

578

இந்தியா

வான் பிரிவும், கல்கத்தா, 24 பர்கனாக்கள், முர்ஷிதாபாத், டார்ஜிலிங் ஆகிய மாவட்டங்களும் சேர்க்கப்பட்டன. நதியா, ஜெஸ்ஸோர், தினாஜ்பூர், ஜல்பாய்குரி, மால்ட்டா ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அஸ்ஸாமில் ஏறக்குறைய சில்ஹெட் மாவட்டம் முழுதும் கி. பாகிஸ்தானைச் சேர்ந்தது.

இயற்கை அமைப்பு: இந்தியாவில் தெளிவான மூன்று இயற்கைப் பிரிவுகள் உள்ளன. அவை வடக்கே உள்ள மலைத்தொடர்கள், தெற்கே உள்ள தீபகற்பம், இடையிலுள்ள ஆற்றுச் சமவெளிகள் ஆகியவை. மேற்பரப்பின் அமைப்பைத் தவிரப் புவியியல் வரலாற்றிலும், தரையடியிலுள்ள பாறைகளின் தன்மைகளிலும் இம்மூன்று பிரிவுகளிலும் தெளிவான வேறுபாடுகள் உள்ளன.

இம்மூன்று பிரிவுகளுள் தீபகற்பமே மிகப் பழமையானதும் நிலையானதுமாகும். புவியின் மேற்பொருக்கில் காணப்படும் மிகப் பழமையான படிகப்பாறைகளும், மடிப்புறாப்படிவுப் பாறைகளும் இங்குக் காணப்படுகின்றன. தீபகற்பத்தின் பெரும் பகுதியில் பரந்துள்ள தக்காண பீடபூமி மிகத் தொன்மையான புவியியல் யுகத்திலேயே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் மேற்பரப்பில் ஆழமற்ற அகலமான ஆற்றுப் பள்ளத்தாக்குக்கள் உள்ளன. இப்பீடபூமியின் செங்குத்தான விளிம்புகள் இதன் சிறப்பான அமிசமாகும். இந்த விளிம்புகளே மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுமாம். இதன் வடமேற்கிலுள்ள ஆரவல்லி மலைத்தொடர்கள் இப்போது அறவே தேய்ந்துபோன பழைய மலைத்தொடரின் எச்சமாகும்.

வடக்கிலுள்ள பெருமலைத் தொடர்கள் மூன்றாம் யுகத்தில் மேலெழுந்தவை. பெரிதும் நெருக்கப்பட்ட இம் மடிப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக இணையாக உள்ள பெருவளைவுகளாக உள்ளன. வடமேற்கில் கிர்தார், சுலைமான், இந்துகுஷ் மலைகள் சிந்து நதிப் பள்ளத்தாக்கைப் பலூச்சிஸ்தானத்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் உள்ள பாலைகளிலிருந்தும், மலைப் பிரதேசங்களிலிருந்தும் பிரிக்கின்றன. இமயமலைத் தொடர்கள் வடக்கே காச்மீரத்தில் 16,000 அடி உயரமுள்ள வளைவாகத் தொடங்கி, முதலில் தென்கிழக்காகவும், பின்னர்க் கிழக்கு நோக்கியும் அஸ்ஸாம்வரை சுமார் 1,500 மைல் நீளமுள்ளன. காரகோரம் தொடர் இமயத்திற்கு வடக்கே காச்மீரத்திலும் கிழக்குத் திபெத்திலும் உள்ளது. தெற்கே உள்ள சிவாலிக் தொடர்கள் இமயத்தின் அடிமலைகளைப்போல் பஞ்சாபிலும், உத்தரப் பிரதேசத்திலும் உள்ளன. அஸ்ஸாமிலுள்ள இந்தியாவின் வடகிழக்கு எல்லையிலும் இதையொத்த பாட்காய், நாகா, லூஷாய் ஆகிய மலைத்தொடர்கள் உள்ளன. காசி, காரோ, ஜயந்தியா மலைகளாலான ஷில்லாங் பீடபூமி தக்கணத்தைப்போல் படிகப் பாறைகளாலானது. தக்கணத்தின் தொகுதி என்றே இதைக் கருதலாம்.

சிந்து கங்கைத் தாழ்நிலங்களே நாட்டின் மிகப் பெரிய சமவெளிகளாகும். நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை சுமார் 1,500 மைல் இவை பரவியுள்ளன. இவற்றின் அகலம் 200 மைலுக்குக் குறையாமல் உள்ளது. ஆறுகளின் வண்டல் படிந்து, வற்றாதநீர் வசதியும் கொண்ட இப்பிரதேசம் இந்தியாவிலேயே மக்கள் தொகையும் செழுமையும் மிக்க இடமாகும். இதைத் தவிரக் கடற்கரையோரத்திலுள்ள சமவெளிகள் தீபகற்பப் பகுதியில் உள்ளன. இவற்றுள் மேற்குச் சமவெளி குறுகலாகவும், நடுப்பாகத்தில் பிரிந்தும் உள்ளது. ஆனால் இது மழை மிக்க பிரதேசம். கிழக்குச் சமவெளி அகலமானது. பெரிய ஆறுகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவற்றின் டெல்ட்டாக்கள் இங்கு உள்ளன. பீ. எம். தி.

புவியடுக்கியல் (Stratigraphy) : இந்தியப் புவியடுக்கு வரலாற்றை உரைப்பதற்கு இந்தியாவைத் தீபகற்பப் பகுதி என்றும், தீபகற்பப் புறப்பகுதி என்றும் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். கங்கை சிந்து (வண்டல்) சமவெளிக்குத் தெற்கேயுள்ளது தீபகற்பப் பகுதி. அச் சமவெளிக்கு வடக்கே உள்ளது தீபகற்பப் புறப்பகுதி. இதில் இமயமலையும், பலூச்சிஸ்தான் மலைகளும், பர்மா எல்லையிலுள்ள மலைகளும் அடங்கும். இந்த இரண்டு பகுதிகளின் வரலாறுகளும் பல முக்கிய விஷயங்களில் வேறுபட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் அவை ஒரு காலத்தில் ஒன்றற்கொன்று வெகுதூரம் விலகியிருந்து, பிறகு மூன்றாம் புவியியல் யுகத்தில் மலைகள் உண்டானபோது ஒன்று சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதே.

இந்தியத் தீபகற்பப் பகுதியானது புவியியலார் கோண்டுவானாலாந்து என்று கூறுவதும், தென் திசையிலே மிகப் பரந்திருந்ததுமான கண்டத்தின் ஒரு பாகமே என்று கருதப்படுகிறது. அது பெரும்பான்மையாக மிகப் பண்டைய உருமாறிய பாறைகளாலும் (Metamorphics), வண்டல்களாலும், சிறுபான்மை மேற்கு இந்தியாவில் மிகுதியாகக் காணப்படும் கனமாக ஒழுகியோடிய எரிமலைப் பாறைகளாலும், கடற்கரை ஓரங்களிலே சிறிதளவிற்கு வண்டல்களாலும் ஆனதாகும்.

இந்தியாவிலுள்ள பெரிய புவியடுக்குப் பகுதிகள் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு ஒத்த ஐரோப்பியத் திட்ட அளவுகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆர்க்கியன்: ஆக்கியன் பாறைகள் என்பவைதாம் பூமியில் முதன்முதல் உண்டான பாறைகள். ஆதியில் பூமி குளிர்ந்தபோது உண்டான புறணியைச் சேர்ந்த துண்டு எதுவும் அவற்றில் இருப்பதில்லை. ஏனெனில் புவியியல் ஆதிகாலமாகிய ஆர்க்கியன் யுகத்தில் அக்கினிப்பாறை உள்புகுதலும் இளகுதலும் மடிதலும் பல தடவைகளில் நிகழ்ந்துள்ளன என்று தெரிகிறது. இப்பொழுது நாம் காண்பது பழைய உருமாறிய பாறைகளின் எச்சங்கள் மட்டுமே. அவற்றுடன் பிற்காலத்திய இடைபுகுபாறைகள் நெருங்கிய தொடர்புடையன. இரண்டும் ஆர்க்காடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள் போன்ற பல தென் இந்தியப் பகுதிகளில் காணப்படும் கலப்பு வகைகளாகவும், பட்டை (Banded) வகைகளாகவும் ஆகியிருக்கின்றன.

ஆர்க்கியன் யுகத்தின் பிற்பகுதியில் பூமியின் புறணி நீர்தேங்கிக் கடல் உண்டாகும் அளவு குளிர்ந்தது. அந்த நீரில் வண்டல் படியத் தொடங்கிற்று. அதில் பெரும்பாகம் மடிந்து பாளம்பிரி (Schistose) பாறைகளாக ஆகியிருக்கிறது. உருமாறுதல் நடைபெறாத சில இடங்களில் இந்த வண்டல்களில் சிலவற்றை இப்பொழுதும் பார்க்கலாம். அவற்றில் நீர்பாய்ந்த (Current bedding) அடையாளங்களும் சிற்றலை அடையாளங்களும் காணப்படும். இந்தப் பாறைகள் பம்பாய் இராச்சியத்திலுள்ள தார்வார் மாவட்டத்தில் நன்கு உருவாகி யுள்ளதால் இவற்றைத் தார்வார் பாறைகள் என்பர். இவை மைசூர் இராச்சியத்தில் பட்டை வரிசைகளாகக் காணப்படுகின்றன. அவை மூன்று பிரிவுடையன. அடியிலுள்ளவை மிகப் பழையன ; பெரும்பாலும் அக்-