பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

584

இந்தியா

மாதங்களிலும் சிற்சில சமயங்களில் உண்டாகின்றன. பருவக்காற்றுத் தொடங்கும் ஜூன் மாதத்தில் அரபிக்கடலில் இது ஏற்படுவதுண்டு. பருவக்காற்று வீசும் மாதங்களிலெல்லாம் வங்காளவிரிகுடாவின் வடகோடியில் சீரழுத்தச் சுழல்கள் உண்டாகி வடக்கே உள் நிலத்தை நோக்கிப் பரவுகின்றன. நாசமுண்டாக்கும் காற்றுக்கள் அக் காலங்களில் வீசுவதில்லை. ஆனால் இச் சுழல்கள் பரவுமிடமெங்கும் ராஜபுதனம், பஞ்சாப் போன்ற உட்பிரதேசங்கள்வரை மழையைப் பெய்விக்கின்றன. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் பின்னும் முன்னும் காற்றுக்களின் வேகம் குறைந்தும் மாறியும் இருக்கும்போது, கடுஞ் சூறாவளிகள் உண்டாகின்றன. சராசரியில் பருவக்காற்றுக் காலத்துக்குமுன் ஒன்று அல்லது இரண்டு சூறாவளிகளும், பருவக் காற்றுக் காலத்துக்குப்பின் இரண்டு அல்லது மூன்று சூறாவளிகளும் உண்டாகின்றன. இச் சுழல்கள் தொடங்கும் இடமும் பரவும் இடங்களும் பருவக் காற்றோட்டத்தின் முகப்பை (Front) ஒட்டி மாறிவரும். எனவே, ஜூலை மாதத்தில் குடாவின் முனையில் இப் புயல்கள் தொடங்கிக் கங்கைப் பள்ளத்தாக்கின் வழியாகச் செல்கின்றன. சுமார் அக்டோபர் மாதத்தில் இவை பெரும்பாலும் அந்தமான் தீவுகளினருகே தொடங்கி, மசூலிப்பட்டினத்துக்கருகே கடற்கரையைத் தாண்டுகின்றன. நவம்பரில் இவற்றுள் பெரும்பாலானவை சென்னைக்கருகே செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் தீபகற்பத்தின் தென்கோடியில் மாத்திரம் காணப்படுகின்றன. இவற்றுள் சில தீபகற்பத்துக்கப்பாலும் சென்று, அரபிக்கடலை அடைந்து, மறுபடியும் வலியுற்று மிகக் கடும்புயல்களாக மாறுகின்றன. இக் கடுஞ்சூறாவளிகளால் சில சமயங்களில் தீபகற்பத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் வங்காளத்திலும் மிகுந்த உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் உண்டாகின்றன. கடற்கரைப் பகுதியில் விளையும் சேதங்களுக்குச் சூறாவளிகள் தோன்றும்போது உண்டாகும் பலத்த காற்றுக்களும் புயலலைகளுமே காரணமாம். பேரலைகள் தோன்றும்போது இப் புயல்கள் உண்டானால் அப்போது உண்டாகும் சேதத்துக்கு ஓர் எல்லை இல்லை. சில சமயங்களில் அலைகள் 25-30 அடி வரை உயர்கின்றன. ஆனால் இத்தகைய பெருஞ்சேதம் விளைக்கும் சூறாவளிகள் இந்தியாவில் சராசரியில் ஐந்தாண்டுகட்கு ஒரு முறையேதான் தோன்றுகின்றன.

பெய்யும் மழையளவில் வேறுபாடுகள் :இந்தியாவில் ஆண்டுதோறும் மழையின் சராசரி அளவு சுமார் 42 அங்குலம். இந்தியாவை மொத்தமாக எடுத்துக்கொண்டால் இவை மேயில் 3 அங்., ஜூனில் 8 அங்., ஜூலையில் 11 அங்., ஆகஸ்டில் 10. அங். செப்டம்பரில் 7 அங்., அக்டோபரில் 3 அங். வீதம் பெய்கின்றன. இந்த அளவு மிகுதலும் குறைதலும் உண்டு. 1917-ல் 12 அங். அதிகமாகவும், 1899-ல் 8 அங். குறைவாகவும் இருந்தன. தென்மேற்குப் பருவக்காற்று மழையில் நான்கு முக்கிய மாறுதல்களைக் காணலாம். முதலாவது இந்தியா முழுவதுமோ அல்லது ஒரு பகுதியிலோ மழை பெய்வதில் பெருந்தாமதம் ஏற்படலாம். இரண்டாவது ஜூலை ஆகஸ்டு மாதங்களில் பெரும்பகுதியில் மழையே பெய்யாமலிருக்கலாம். மூன்றாவது அதற்குரிய காலத்துக்கு முன்னரே மழைக்காலம் முடிந்துவிடலாம். கடைசியாக ஒரு பிரதேசத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவைக் காட்டிலும் குறைந்தும் மற்றொரு பிரதேசத்தில் அதிகமாகவும் மழை பெய்யலாம். பருபருவக்காற்று வெகு காலம் இல்லாமலிருந்து விடுவதாலும், சிறிது காலமே இருந்து திடீரென்று நின்று விடுவதாலும் பயிர்களுக்குப் பெருஞ்சேதம் உண்டாவதோடு வறட்சியும் பஞ்சமும் உண்டாகின்றன. அதிக மழை பெய்து வெள்ளத்தாலும் பெருங்கஷ்டங்கள் ஏற்படுவதுண்டு. மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் மாறுதல் குறைவு. நாட்டில் மிகவும் வறண்ட பாகங்களில் இவ்வேறுபாடு மிகவும் அதிகமாகவும், ஈரமான பாகங்களில் மிகவும் குறைவாகவும் இருக்கும். மழையின் குறைவினால் புன்செய்ப் பயிர்களும் இல்லாத வறண்ட பகுதிகளுக்கு இம் மழையின் அளவு வேறுபாட்டால் தீமை ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் சராசரி ஆண்டுதோறும் 25-50 அங்குல மழையுள்ள பிரதேசங்களுக்கு மழை அளவு வேறுபடுவதால் ஏற்படும் தீமைகள் மிகவும் அதிகம். வேண்டிய அளவுக்கு மிகக் குறைவாக மழை பெய்யுமிடங்களில் விளைவுக் குறைவும் பஞ்சமும் ஏற்படுதின்றன. அடியில் கண்ட இடங்களில் பயிர்த் தொழிலுக்கு ஏற்படும் கஷ்டம் மிகவும் அதிகம்.

1. பம்பாய், சென்னை மாகாணங்களின் சில பகுதிகளும் ஐதராபாத்தும் அடங்கிய தக்கிணம். 2. இந்தியாவின் வடமேற்கு மத்தியப் பகுதிகள் : முக்கியமாகப் பஞ்சாப், கிழக்கு ராஜபு தனம், ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதிகள். முற்காலங்களில் நாடு முழுதும் கொடிய பஞ்சங்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. 1896-97-ல் சுமார் 2,25,000 சதுர மைல் வரை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டும் 620 இலட்சம் மக்கள் இப்பஞ்சத்துக் குள்ளாயினர். அரசாங்கத்தார் பஞ்ச நிவாரணத்துக்காக 7 கோடி ரூபாய் செலவு செய்தனர். 19ஆம் நூற்றாண்டில் முப்பது ஆண்டுகளுக்குள் நான்கு பஞ்சங்கள் ஏற்பட்டு மக்களை வாட்டின. ஓராண்டு முதல் நான்காண்டுகள் தொடர்ந்து, சிற்சில காலங்களில் பஞ்சநிவாரண வேலைகள் நடைபெற்றன. இப்போது பஞ்சத்தால் அவ்வளவு கஷ்டம் ஏற்படுவதில்லை. ஏனென்றால் இந்திய அரசாங்கம் நாடெங்கும் நீர்ப்பாசனம் நடைபெறுதற்குரிய சாதனங்களும் இருப்புப் பாதை வசதிகளும் ஏற்படுத்தியிருக்கின்றது.

மழைப்பிரதேசங்களும் உழவுத்தொழிலும்: இந்திய நாட்டை அ. ஈரப் பகுதி (ஆண்டிற்கு 50 அங்குலத்திற்குமேல் மழையுள்ளது), ஆ. வறண்ட பகுதி (ஆண்டிற்கு 25 அங்குலத்திற்குக்கீழ் மழையுள்ளது), இ. நடுத்தரமான பகுதி (25-50 அங்குல மழையுள்ளது) எனமூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இப் பாகுபாட்டினை ஒட்டியே பயிரிடப்படும் பகுதிகளும் அமைந்துள்ளன.

அ. ஈரப்பிரதேசத்தில் அடங்கியுள்ளவை பின் வருனவாம்: 1. பம்பாய்க்குச் சற்று வடக்கிலிருந்து தொடங்கும் மேற்குக் கடற்கரைப் பகுதி முதல் மேற்கு மலைத்தொடர்களின் தாழ்வரைகளுட்பட்ட தென் திருவிதாங்கூர் வரையிலுமுள்ள நாடு. 2. பீகார், வங்காளம், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா அடங்கிய வடகிழக்கிந்தியா, மத்தியப் பிரதேசத்தை அடுத்துள்ள பகுதிகள், வடசர்க்கார்கள். சுமார் 50 அங்குலம் மழை உள்ள தமிழ்நாட்டின் கடற்கரைப் பிரதேசத்தை இந்தக் கிழக்கு ஈரப்பகுதியின் தென்பகுதியாகக் கொள்ளலாம். இவ் ஈரப் பிரதேசங்களில் நெல், கரும்பு, தென்னை, வாசனைப்பொருள்கள், மலைத்தோட்டப் பயிர்கள், சணல் ஆகியவை மிகுதியாக விளைகின்றன. கால்நடை அதிகமாக விருத்தியாவதில்லை. எருமைகள் இங்கு ஏராளமாக உன்ளன.

ஆ. வறண்ட பகுதி வடமேற்கில் உள்ளது. பஞ்சாப், சிந்து, பலூச்சிஸ்தானம், எல்லைப்புறப் பிரதேசம், காச்மீரம், ராஜபுதனத்தின் மேற்குப் பகுதிகள்,