பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

586

இந்தியா

முள்ளிலவு, வாட்டிக்கா ரொபஸ்ட்டா, காட்டுமா (புக்கன்னானியா), மரிமாங்காய் (ஸ்பான்டியாஸ்), புரசு (பூட்டியா ப்ராண்டோசா, பூட்டியா பார்விபுளோரா), கல்யாண முருங்கை (எரித்ரைனா),வாகை (அல்பிசியா லெபக்), சிவப்பு மந்தாரை (பாஹீனியா பர்பூரியா), இலையாகப்பயன்படும் மந்தாரை (பாஹீனியா வாலியை), வேம்பாடம் (வென்டிலாகோ), கோனோகார்ப்பஸ், கடுக்காய், மருதுசாதி (டெர்மினேலியா), அல்மஸ் இன்டெக்கபோலியா, இன்னும் குறைந்த தட்பவெப்பமுடைய பகுதிகளில் பெரணிகள், ரோடோடெண்டிரான்கள், ரூபியேசீ குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் முதலியன வளர்கின்றன.

மேற்கு இமயம் கிழக்கு இமயத்தைக் காட்டிலும் சராசரி உயரம் குறைவாக இல்லை. ஏனென்றால் 20,000 அடிக்கு மேற்பட்ட பல சிகரங்கள் இங்கு இருக்கின்றன. முக்கியமான தொடரானது கைலாசச் சிகரத்தில் புறப்பட்டு, மேற்கே ஆப்கானிஸ்தானம் வரையிலும், கிழக்கே திபெத்து வரையிலும் பரவியுள்ளது. மேற்கு இமயப் பிரதேசத்தில் மிகப் பெரிய ஏரிகளும், காச்மீரம், ஜம்மு போன்ற அழகிய பள்ளத்தாக்குக்களும் இருக்கின்றன. இப்பிரதேசத்திலே அயன மண்டலத் தாவரங்கள் நிறைந்துள்ளன. பாம்பாக்ஸ், நாக்லியா, லாஜெர்ஸ்ட்ரோமியா, கோனோகார்ப்பஸ், டெர்மினேலியா, ஸ்டெர்க்கூலியா முதலிய மிகுந்த உயரமுள்ள மரங்களும், இலந்தை (சிசிபஸ் ஜுஜுபா), புரசு சரக்கொன்றை (காசியா விஸ்ட்டூலா), கருவேல், காசுக்கட்டி (அக்கேசியா காட்டச்சூ) முதலிய கூரிய முட்களுடைய கரீடான மரங்களும் மிகுதியாகவுள்ளன. நடுநடுவே வக்கணை (டையோஸ்பைராஸ் கார்டிபோலியா), ஆடாதோடை (ஆடாதோடா வாசிக்கா), ஐசோரா காரிலி போலியா போன்றவை காணப்படும். மேற்குக் கோடியில் அக்கேசியா மாடெஸ்ட்டா மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

மேற்கு இமயத்தின் சம தட்பவெப்பப் பகுதிகளில், ஈரம் குறைந்த பாகங்களுக்குரிய ரோடோடெண்டிரான் ஆர்போரியம், ஆண்டுரோமெடா ஓவாலிபோலியா, குவர்க்கஸ் இன்கனா, குவர்க்கஸ் டைலேட்டா முதலிய மரங்களும், பெர்பெரிஸ், ரோஜா, ஸ்பைரீயா, ரூபஸ் போன்ற குற்றுச் செடிகளும் இருக்கின்றன. தாழ்ந்த சரிவுகளிலுள்ள சம தட்பவெப்பப் பள்ளத்தாக்குக்களில் செல்ட்டிஸ், ஆல்னஸ், பாப்யுலஸ் சிலியேட்டா, ப்ரூனஸ் பாடஸ், ஈஸ்க்யுலஸ், ஏசெர் முதலிய மரங்கள் காணப்படும்.

சம தட்பவெப்பப் பாகங்களிலே தட்பவெப்ப நிலையினால் ஏற்படும் விளைவுகள் மழைக்காலத்தில் முளைப்பவையும், சூழ்நிலை மாறுபாடுகளைத் தாங்கும் வலிமையுள்ளவையுமான ஒருபருவச் சிறுசெடிகளில் மிக நன்றாகத் தெரிகின்றன. சைட்டாயினீ குடும்பத்தைச் சேர்ந்த செடிகளும், தொற்றுச்செடிகளாயும் தரையில் வாழ்பவையுமான ஆர்க்கிடுகளும், ஆரேசீ, சிர்ட்டாண்டிரேசீ, மெலாஸ்டொமேசீ, பெகோனியேசீ முதலிய குடும்பங்களைச் சேர்ந்த வகைகளும் மிகுதியாக இருக்கின்றன.

8,000 அடிக்கும் 12,000 அடிக்கும் இடையே, இமயத்தின் கிழக்கு மேற்குப் பகுதிகளில் ஊசியிலை மரச்சாதிகளே முக்கியமாக வளர்பவை.

2. மேற்குக் கடற்கரைத் தாவரங்கள்: தென் கன்னடம், மலையாளம், நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களிலும், திருவிதாங்கூர்-கொச்சி இராச்சியத்திலும் உள்ள கடற்கரைப் பிரதேசம்,சு.6,000 அடிவரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பாகமும் இப்பகுதியைச் சேர்ந்தவை. இப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் பல வேறுபாடுகள் உள்ளவை; பல இனங்களானவை. இந்தப் பகுதியிலே உயரத்துக்கும், நோக்கும் திக்குக்கும், அட்சரேகைக்கும் ஏற்பவும், இவற்றின் பயனாக உண்டாகும் மழையின் அளவுக்கும், வெப்ப நிலைக்கும் ஏற்பவும், பல உட்பகுதிகள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன.

இங்குக் கடற்கரை அருகில் ஹோப்பியா பார்விபுளோரா, பயினி அல்லது குங்கிலியம் (வாட்டீரியா இண்டிக்கா), இருள் (க்சைலியா க்சைலோக்கார்ப்பா) காணப்படுகின்றன. கடற்கரையைவிட்டுத் தூரத்தில் ஈரமாக உள்ள இலையுதிர் காடுகளில், தேக்கு (டெக்ட் டோனா கிராண்டிஸ்), நூக்கு அல்லது ஈட்டி (டால் பெர்ஜியா லாட்டி போலியா), வேங்கை (டெரொக் கார்ப்பஸ் மார்சூப்பியம்), கருமருதம் (டெர்மினேலியா கிரெனுலேட்டா), நந்தி அல்லது வெண்தேக்கு (லாஜெர்ஸ் டிரோமியா லான்சியோலேட்டா) முதலிய மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. மலைகளின் மேலே உயரத்திலே இலையுதிரா இனங்களைச் சேர்ந்த புன்னைக் குடும்பம் (கட்டிபெரீ,) நாவல் குடும்பம் (மிர்ட்டேசீ), நுணாக் குடும்பம் (ரூபியேசீ), ஆடாதோடைக் குடும்பம் (அக்காந்தேசி), ஆமணக்குக் குடும்பம் (யூபோர்பியேசீ ஆர்க்கிடேசீ), இஞ்சி, வாழைக் குடும்பம் (சைட்டா மினீ) முதலிய குடும்பங்களில் தாவரங்கள் காணப்படுகின்றன. இப் பகுதியில் ஓடைகளின் ஓரங்களில் நாணல் போன்ற மூங்கில் காடுகளும், ஆக்லாண்டிரா திருவாங்கோரிக்கா மரங்களும், பெரணிச் செடிகளும், பாசிகளும், பெரணி மரங்களும் அதிகமாக வளர்ந்து காணப்படுகின்றன.

இந்த உட்பகுதியில்தான் இந்தியாவிற்கு உரியவையான ஒரே ஊசியிலை மரமும் (போடோகார்ப்பஸ் லாட்டிபோலியா), கம்பாசிட்டீ குடும்பத்தைச் சேர்ந்த மரமாக வளரும் இரண்டு இனங்களாகிய வெர்னோனியா மொனாசிஸ், வெர்னோனியா திருவாங்கோரிக்கா என்பவைகளும் வளர்கின்றன.

நீலகிரி, பழநி, ஆனைமலை, திருவிதாங்கூர், திருநெல்வேலியிலுள்ள தொடரிலும், 6,000 அடிக்கு மேற்பட்ட உயரமான பாகங்களிலே ஆல்ப்பைன் பிரதேசம் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் சிறிய ஆல்ப்பைன் செடிகளும் புதர்களும் இருக்கின்றன. அவற்றுள் பரோகீட்டஸ் கம்யூனிஸ், ஹைப்பெரிக்கம் மைசோரென்ஸி, காசித்தும்பை சாதியைச் சேர்ந்த பல இனங்களும், ஓல்டென்லாண்டியா, அனபாலிஸ், எக்சாக்கம், சோனரிலா. தரையில்வாழும் ஆர்க்கிடுகள்,அரிசீமா இனங்கள், எரியோக்காலான் இனங்கள் முதலியவைகளும் காணப்படுகின்றன. மலை இடுக்குக்களிலுள்ள சோலைகளில் ரோடோடெண்ட்ரான் நீலகிரிக்கம், சிசீஜியம் ஆர்னோட்டியானம், மைக்ரோட்டிராப்பிஸ், ரப்பேனே வைட்டியானா, உருத்திராட்ச மரம் (எலியோகார்ப்பஸ் பெரூஜீனெஸ்), டாப்னோபில்லம் கிளாசியஸ் முதலிய இலையுதிரா மர இனங்கள் வளர்கின்றன. மேலே கூறப்பட்டுள்ள சோலைகளின் ஓரங்களில் குறிஞ்சி (ஸ்ட்ரோபிலான் தஸ் குன்தியானஸ்), கால்தீரியா பிராக்ரன்டிஸ்ஸிமா, ரூபஸ் இனங்கள் முதலியன காணப்படுகின்றன.

கடற்கரை ஓரங்களிலுள்ள ஆறுகளின் கழிமுகங்களில் கண்டல் (ஆவிசென்னியா அபிஷினாலிஸ்), லூம்னிட்சேரா ராசிமோசா, புருகுயீரா இனங்கள், ரைசோ போரா இனங்கள், உப்புத் தாவர வகையைச் சேர்ந்த கீனோப்போடியேசீ இனங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.