பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசல் குறிப்பு

29

அசிட்டால்டிஹைடு

பானது. இங்கு விளையும் பழங்கள் முதலியவை அநேகமாக சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மரங்கள் அடர்ந்துள்ள காடுகள் இங்கு அதிகம் இல்லை.

அசர்பைஜான்

இந்நாட்டு மக்கள் போர்த் தொழிலுக்கு ஏற்றவர்கள். பரப்பு : 32,000 சதுரமைல்; மக் ; சு. 20 லட்சம். தலை நகரம் : டப்ரீஸ் (மக்.272,000) (1949). டப்ரீஸிலிருந்து, பல ரெயில் பாதைகள் வடக்கும் தெற்கும் நோக்கிச் செல்லுகின்றன.

அசல் குறிப்பு : கணக்குப் புத்தகங்களிலாவது பேரேட்டிலாவது பதிவு செய்யப்படுவதற்குமுன், ஒவ்வொரு வியாபார நடவடிக்கையும் முதலில் பதிவு செய்யப்படும் முதற்பதிவுப் புத்தகமே அசல் குறிப்புப் புத்தகமாகும். அசல் குறிப்புப் புத்தகத்தில் பதிவுற்றுள்ள பற்றுவரவு நடவடிக்கைகளை, இரட்டைப்பதிவு முறைப்படி, அவற்றிற்கு உரிய கணக்குகளாகப் பகுத்து எழுதும் முறை அசல் குறிப்புப் பதிவு எனப்படும். நெப்போலியன் சட்டத் தொகுப்பு அமலில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலத்திலும் அசல் குறிப்புப் புத்தகத்தைக் கையாளுவது மிகத் தேவையாக இருப்பதுமன்றி, எல்லா வியாபார நடவடிக்கைகளும் அவை எத்தகைய இயல்புடையனவாயினும் இப்புத்தகத்தில் முதலில் பதிவு பெற வேண்டும். ஆயினும் எல்லா நடவடிக்கைகளும் ஒரே புத்தகத்தை உபயோகிப்பதால், அக்குறிப்புகளைப் பெயர்த்தெழுதும் வேலை சலிப்பையுண்டாக்கும் என்று கருதப்பட்டது. விற்பனைச் சிட்டை, விற்பனை வாபசு சிட்டை, கொள்முதல் குறிப்பு, கொள்முதல் வாபசு குறிப்பு, செலுத்து உண்டியல் குறிப்பு, வரத்து உண்டியல் குறிப்பு, ரொக்கச் சிட்டை, சில்லறைப் பணச் சிட்டை முதலிய தற்காலத்தியத் துணைச் சிட்டைகள் பயன் முறையில் கொண்டுவரப்பட்டிருப்பதால் பெயர்த்தெழுதும் வேலையினால் உண்டாகும் சலிப்பு பாதிக்குமேல் குறைந்துவிட்டது. ஆயினும் இச்சிட்டைகள் இப்பொழுதும் விற்பனை அசல் குறிப்பு என நடைமுறையில் வழங்கப்படுகின்றன. தற்காலத்தில் அசல் குறிப்புப் புத்தகம், மேற்கூறப்பட்ட சில்லறைச் சிட்டைகளில் பதிவு செய்யமுடியாத விவகாரங்களைக் குறிக்கவும், கணக்கு மாற்றுதல், பிழையைத் திருத்துதல், விடுபட்டதைச் சேர்த்தல், கணக்கு முடித்தல் போன்ற மிக முக்கியமான பதிவுகளைச் செய்யவும் உபயோகிக்கப்படுகின்றது. ஜீ. சௌ.

அசாவ் கடல் : சோவியத் ரஷ்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கடல் கருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு உள்நாட்டுக் கடல்.

அசாவ் கடல்

பரப்பு: சு.14,500 சதுரமைல். இதன் வடகிழக்குப் பகுதியில் டாகன்ராக் வளைகுடா இருக்கிறது. இங்கு டான் ஆறு கடலோடு கலக்கிறது. இக்கடலின் சராசரி ஆழம் சு.53அடி. கோடை காலத்தில் சிறு கப்பல்கள் இக்கடலிற் செல்ல முடியும்.

அசிட்டினிலைடு (Acetanilide): [குறியீடு C6H5NH. CO. CH3] படிக அசிட்டிக அமிலத்துடன் அனிலீனை வினைப்படுத்தி இதை பெறலாம். இது 115-ல் உருகும் வெண்மையான படிகப் பொருள்; இது தண்ணீர், சாராயம் முதலியவற்றில் கரைய வல்லது. இது தலைவலி, காய்ச்சல் முதலிய கோளாறுகளைத் தற்காலிகமாக நீக்கப் பயன்படுகிறது.

அசிட்டால்டிஹைடு (Acetaldehyde):[குறியீடு CH3 CHO.] ஆல்டிஹைடு இனத்தில் இரண்டாவது. சர்க்கரை வகைகள் ஆல்கஹால்களாக நொதிக்கும்பொழுது அசிட்டால்டிஹைடு உடன் வினைபொருளாக உண்டாகிறது. எனவே நொதித்த திரவத்தில் இது அசிட்டால் வடிவத்தில் காணப்படுகிறது. பிராணிகளின் உயிரணுக்களில் நடக்கும் கார்போஹைடிரேட்டு வளிர்சிதை மாற்றத்தில் இந்த ஆல்டிஹைடும் கலந்து கொள்கிறது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் இது சிறுநீரிலும் காணப்படுவதுண்டு.

தொழில் முறையில் அசிட்டால்டிஹைடு இருமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றின் முன்னிலையிலோ அல்லது அதில்லாமலோ செம்பு வெள்ளி முதலிய சில உலோகங்களை ஊக்கிகளாகக் கொண்டு எதில்ஆல்கஹாலுக்கு ஹைடிரஜனை ஏற்றி இதைத் தயாரிக்கலாம். ரச உப்புக்களின் உதவியால் அசிட்டிலீன் தண்ணீரைக் கிரகிக்குமாறு செய்து இதைத் தயாரிக்கலாம்.

அசிட்டால்டிஹைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21°). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124° கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH3 CHO)3 மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது.