பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

593

இந்தியா

சாதாரணமாக மீன்கள் நீர்வாழ்வனவென்றும், நீரிலிருந்து வெளியே வந்தால் இறந்து போகும் என்றும் நினைப்பது வழக்கம். ஆனால் வெப்ப நாடுகளில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் வற்றிப்போவதால், சிலமீன்கள் காற்றை உட்கொள்ள வசதி யேற்படுத்திக் கொண்டுள்ளன. வெளியிலுள்ள காற்றையும் நீரில் கரைந்திருக்கும் காற்றையும் தனித்தனியே சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. செந்நெல் அல்லது பனையேறிக்கெண்டை என்பது ஓர் ஏரியைவிட்டு மற்றோர் ஏரிக்குப் போவதை அநேகர் பார்த்திருக்கிறார்கள். அதன் செவுளுக்குள்ளே சிலபாகம் காற்றைச் சுவாசிக்க ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. அதுபோலவே வரால், குறவை, ஆற்று வாளை முதலிய மீன்களும் வெகுநேரம் வரையில் நீருக்கு வெளியே உயிருடன் இருப்பதையும், கடைகளில் உயிருடன் விற்பதையும் காண்கிறோம். மற்றும் கெளிற்றினத்தைச் சேர்ந்த தேளி மீன் (சாக்கோப் ராங்க்கஸ்) போன்றவைகளும் காற்றைச் சுவாசிக்கும். இவைகளிலெல்லாம் காற்றைச் சுவாசிப்பதற்கென்றே செவுளுக்குள் ஒரு பாகம் இருக்கின்றது. அதை நுரையீரலுக்கு ஒப்பிடலாம். ஆதலால் இம்மீன்களை நீருக்கு மேலே வாராமல் தடுப்போமானால்-ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் நீரைவிட்டு, அதனுள் இரண்டொரு மீன்களை நீருக்குள்ளேயே தங்கும்படியாக ஒரு மரப்பலகையையோ, தகரத்தையோ வைத்தால்-இம்மீன்கள் நீர்மட்டத்துக்குமேலே வர முயல்வதையும், முடியாமல் மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கீழே சாய்ந்து விழுவதையும், இறந்து போவதையும் காணலாம். இதனால் வாழ்விற்கு இவைகளுக்கு நீரைப்போல் காற்றும் அவசியம் என்பது புலப்படும். வங்காளத்தில் கழனிகளில் ஆம்பிப்னோஸ் (Amphipnous) என்னும் ஒருவகை மீன் வளைகளில் வசிக்கின்றது. இதுவும் காற்றையே சுவாசிக்கும். பார்வைக்கு மலங்கு போல் இருக்கும். காற்றைச் சுவாசிக்கும் மீன்கள் நீரில் வாழும்போது அடிக்கடி நீர் மட்டத்துக்கு மேலே வந்து, காற்றை வாய்வழியாக உட்கொண்டு, உபயோகப்படுத்திய காற்றைச் செவுள் வழியாக வெளியேற்றும்.

இந்தியாவில் இருக்கின்ற மீன்களில் சில தாய்மையை மிக அழகாகக் காண்பிக்கின்றன. குறவை மீன்கள் குளத்தின் தரையில் பள்ளம் செய்து, அதில் முட்டைகளையிட்டு, ஆணும்பெண்ணுமாக அவற்றைக் காக்கும். நீர்க் கொடிகளைக் கொண்டு அப்பள்ளத்தை மூடுவதுமுண்டு. குரமி என்னும் மீன் நீர்க்கொடிகளைக் கொண்டு பறவைக் கூட்டைப் போலவே கூடுசெய்து, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்க்கின்றது. சிலவகைகளில் ஆண்மீன் முட்டைகளைப் பொரிப்பதில் சிரத்தை யெடுத்துக் கொள்கின்றது. உப்பங்கழிக் கெளிறு (ஏரியஸ்) என்னும் மீனில் பெண் இடுகின்ற 100-200 முட்டைகளை 3 அல்லது 4 ஆண்கள் தங்கள் வாயில் எடுத்துக்கொண்டு, வாயை மேற்புற மாக வைத்துக் கொண்டு பல நாள் உணவில்லாமல் இருக்கின்றன. கடலில் வாழும் குதிரைமீனில் ஆணின் வயிற்றைச் சார்ந்து ஒரு பை இருக்கிறது. அப்பையில் பெண்மீன் 200-300 சிறு முட்டைகளை இட்டு, அதை மூடிவிடுகிறது. சில நாட்கள் கழித்து, அப்பையினின்றும் 100-200 குஞ்சுகள் கேள்விக் குறிகள்போல வெளிவருகின்றன. சில வகைகளில் பெண்மீன்கள் சிலவற்றைப்போல ஆண் மீன்களும் தம் அடிவயிற்றில் முட்டைகளை ஒட்டி வைத்துக்கொள்கின்றன.

மலங்குகளில் ஒருவகை (ஆங்க்வில்லா) கடலிலிருந்து ஆறுகளுக்குள் சென்று, அங்கே வளர்ந்து, முட்டையிடும் சமயத்தில் மறுபடியும் கடலில் சென்று முட்டைகளையிடுகின்றன. இவ்வகை மலங்குகளை நாம் கழனிகளிலும் காணலாம். கடலில் இடுகின்ற முட்டைகள் மலங்குகளாக உடனே பொரிப்பதில்லை. மிகச் சிறிய தலையும், நாடா போன்ற உடலும் உள்ள லெப்ட்டோ செபாலஸ் (Leptocephalus) என்னும் உருவாகப் பொரிக்கிறது. இது வளர்ந்து,உருளை வடிவான உடல் அமைப்புள்ள தாகிப் பிறகு குட்டி மலங்காக மாறி, ஆறுகளுக்குள் ஏறி. அங்கே முதிர்ச்சியுற்று வயதை அடைகின்றது. இது வெள்ளங்களில் கழனிகளில் அடித்துக் கொண்டு போகப்பட்டு, அங்கே தங்கிச் சேற்றில் வளைகளில் புதைந்து வசிக்கின்றது. சில சமயங்களில் வேர்களை அறுத்துப் பயிர்களை நாசம் செய்கின்றது.

சில கெளிற்று மீன் களில் துடுப்புக்களிலுள்ள முட்கள் நஞ்சுள்ளவை. அவை குத்தினால் மனிதனுக்கு மிகுந்த தொந்தரவு உண்டாகும். ஒருவகைக் கெளிற்று மீனின் நஞ்சு, தேள் கொட்டுவதுபோல இருப்பதனால் அந்த மீனுக்குத் தேளி என்று பெயர், அதே காரணத்தைக் கொண்டு கடலில் பாறைகளின் நடுவே வாழும் மிக அழகான மற்றொரு வகை மீனுக்கும் தேளி என்ற பெயர் உண்டு.

பறவை மீன்கள்: மீன்கள் சாதாரணமாய் நீரில் நீந்துகின்றன. கோலா அல்லது பறவைமீன் (எக்சொ சீட்டஸ்) பறந்து செல்லக்கூடிய தன்மை பொருந்தியிருக்கிறது. கூட்டம் கூட்டமாக இவை செல்லும் போது நீருக்குமேல் குதித்துத் தாண்டிப் போவதைக் காணலாம். இவற்றை எண்ணூர் முதலிய உப்பங்கழிகளிலும் காணலாம். எண்ணூரில் செம்படவர் பல படகுகளில் ஏறிக்கொண்டு ஒன்றாகக் கூச்சலும் சத்தமும் செய்தால் இவை கும்பல் கும்பலாகத் துள்ளிப் படகுகளில் விழுவதைக் காணலாம்.

மலையருவிகளில் வாழும் சிறு மீன்களை அடித்துக் கொண்டு போகாதபடி அவற்றின் மோவாய்க்கு அடியில் உறிஞ்சு தட்டுக்கள் (சக்கர்) இருக்கின்றன. அவற்றின் மூலமாகப் பாறைகளை உறுதியாகப் பிடித்துக் கொள்கின்றன.

முதுகெலும்பு இல்லாதவை: இப்பிரிவில் பலவிதமான உயிர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலில் மைக்ராஸ்கோப்பினால் பார்க்கக்கூடிய ஓரணுவுயிர்கள் 'புரோட்டோசோவா' தண்ணீரிலும், தண்ணீரின் கீழிருக்கும் தரையிலும் ஈரமான மண்ணிலும் இருக்கின்றன. இவற்றி மேற்படியாகக் கடற்பஞ்சு அல்லது 'புரையுடலி" (போரிபெரா Porifera) என்னும் கூட்டம் இருக்கிறது. இது பெரும்பாலும் கடல் நீரில் வாழும். நல்ல தண்ணீரில் வாழும் சில இனங்களைக் கழனிகளிலும் குளங்களிலும் காணலாம். அவை புற்று மண்போல் கழனிகளில் வெயிற்காலங்களில் தெரியும். அவற்றிலுள்ள வெண்கடுகு போன்ற குருத்துமணிகள் (ஜெம்யூல்) மழை வருங் காலத்தில் உடைந்து, புதிய கடற் பஞ்சுகளாக வளர்கின்றன.

சொறித் தொகுதி : கடற்கரையோரங்களில் நுங்கு போன்ற தன்மையுடைய உயிர்களைச் செம்படவர்கள் வலையிலிருந்து எடுத்து எறிந்து விடுவர். இவையே சொறிவகைகள். இவை பெரும்பாலும் கடல் நீரில் வாழ்கின்றன. சிற்சில நல்ல தண்ணீரில் வசிக்கின்றன. இந் நன்னீர்ச் சொறிகள் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் இந்தியாவிலும், சூரத்துக்கு அருகேயும், தென் இந்தியாவில் பெரியாற்றுத்தேக்கத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. பவளம் இச்சொறியினத்தைச்சேர்ந்தது. சொறியினங்களில் பல வெண்மை அல்லது கருமைப் பொருள்களை உண்டாக்குகின்றன. இராமேசுவரம், பாம்பன் முதலிய இடங்களில்