பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசிட்டிக் அமிலம்

30

அசிட்டிலீன்

இவற்றை நீர்த்த கந்தகாமிலத்துடன் கொதிக்க வைத்து எளிதில் அசிட்டால்டிஹைடாக மாற்றலாம். பாரால்டிஹைடு ஒரு தூக்க மருந்தாகவும், மெட்டால்டிஹைடு ஒரு திட எரி பொருளாகவும் பயன்பட்டு வந்தன.

அசிட்டால்டிஹைடிலிருந்து செயற்கை ரப்பர், அசிட்டிக அமிலம், அசிட்டோன் போன்ற பல கரிமப் பொருள்கள் தயாரிக்கப்படுவதால் தொழில் முறையில் இது மிகவும் முக்கியமானது.

அசிட்டிக அமிலம் (Acetic Acid) : [குறியீடு CH3COOH ] காடி என்ற பெயருடன் இது பழங்காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ளது. தாவரங்களில் இது தனி நிலையிலும், எஸ்டர்களாகவும் காணக்கிடைக்கிறது. வியர்வை நீரில் இது உள்ளது. ஒருவகை நுண்ணுயிர்களால் விளையும் நொதித்தலால் காடி தோன்றுகிறது. மதுவகைகள் நொதித்து அசிட்டிக அமிலம் தோன்றலாம்.

தயாரிப்பு: ஆல்கஹாலிலிருந்து : நீர்த்த ஆல்கஹாலைக் காற்றுப்பட வைத்திருந்தால் அதிலுள்ள சில பாக்டீரியா அதை மெல்ல அசிட்டிக அமிலமாக மாற்றுகின்றன. மதுக்களைத் தயாரிக்கையில் கிடைக்கும் கழிவுத் திரவத்தைக் கொண்டு இம்முறையில் அசிட்டிக அமிலத்தைத் தயாரிக்கலாம். மரச் சக்கைகளின்மேல் பாக்டீரியாவைக் கொண்ட திரவத்தைப் பூசி அவற்றின் மேல் ஆல்கஹால் உள்ள திரவத்தை மெதுவாகக் கசியுமாறு செய்து காடியாக்கலாம்.

மரத்திலிருந்து : மரத்தை வறட்சியில் வாலைவடித்தால் பைரோலிக்னிய அமிலம் என்ற திரவம் கிடைக்கும். இதிலுள்ள அசிட்டிக அமிலத்தை சோடியம் அசிட்டேட்டாகவோ கால்ஷிய அசிட்டேட்டாகவோ பெறலாம். வாலை வடித்துப் பகுத்தாவது, கரைப்பானாற் பிரித்தாவது இதை நேரே பிரித்தெடுக்கும் முறைகளும் தற்காலத்தில் வழங்குகின்றன.

இயல்புகள் : காரமான மணமுள்ள இது வழுவழுப்பான திரவம். இது தோலைப் புண்ணாக்கும். இதன் கொதிநிலை 1180; 150-ல் இதன் ஒப்படர்த்தி 1.055. இது நீருடனும் ஆல்கஹாலுடனும் எல்லா விகிதங்களிலும் கலக்கும்.

அசிட்டேட்டுகள் : அசிட்டிக அமிலத்தின் உப்புக்கள் அசிட்டேட்டுகள் எனப்படும். இதன் சாதாரண உப்புக்கள் நீரிற் கறையும். பல அசிட்டேட்டுகள் வாசனைத் திரவியங்களையும், பிளாஸ்டிக்குகளையும் தயாரிக்கப் பயன்படுகின்றன. அயச அசிட்டேட்டு இரும்புத் திரவம் என்ற பெயருடன் சாயத் தொழிலில் நிறம் நிறுத்தியாகப் பயனாகிறது. அயக அசிட்டேட்டு சாயத் தொழிலிலும், மருத்துவத்திலும் பயன்படுகிறது. அலுமினிய அசிட்டேட்டும், குரோமிய அசிட்டேட்டும் நிறம் நிறுத்தியாகப் பயனாகின்றன. ஈயச்சர்க்கரை என்ற பெயருள்ள சாதாரண காரீய அசிட்டேட்டு இன்சுவைள்ள நஞ்சு. இது வர்ணம் தயாரிக்கப் பயனாகிறது. வெர்டிகிரிஸ் என்னும் பெயருள்ள மூலச் செம்பு அசிட்டேட்டு பச்சை வர்ணமாகப் பயனாகி வந்தது. எஸ். எஸ். க.

அசிட்டிக அமிலத்தையும், அசிட்டேட்டுகளையும் எதில் ஆல்கஹாலுடனும், கந்தகாமிலத்துடனும் சேர்த்துச் சூடேற்றினால் நறுமணமுள்ள எதில் அசிட்டேட்டு வெளிப்படும். இதன் சிறப்பான மணத்தினின்று இப்பொருளைக் கண்டறியலாம்.

சேர்க்கைமுறைத் தயாரிப்பு : அசிட்டிலீன் வாயுவைச் சேர்க்கை முறைகளாற் பெறலாம். அசிட்டிலீனை அசிட்டால்டிஹைடாக ஆக்சிகரணிக்கலாம். மாங்கனீஸ் அசிட்டேட்டை ஊக்கியாகப் பயனாக்கி அசிட்டால்டிஹைடை ஆக்சிகரணித்தால் அசிட்டிக அமிலம் கிடைக்கும். அசிட்டிக அமிலத்தைத் தயாரிக்க இப்போது இம்முறையே அதிகமாக வழங்குகிறது.

அசிட்டலீன் (Acetylene): [CH=CH]; அபூரித ஹைடிரோ கார்பன்களில் (த.க.) இதுவே முக்கியமானது. இதை 1859-ல் பெர்தலோ என்ற பிரெஞ்சு அறிஞர் கண்டுபிடித்தார். ஒரு குழலில் ஹைடிரஜனை அடைத்து அதற்குள் இரு கரிக் குச்சிகளைச் செருகி அவற்றிடையே மின்வில்லை (Electric- arc) ஏற்படுத்தினால் கார்பனும், ஹைடிரஜனும் நேரடியாகக் கூடி அசிட்டிலீனைத் தரும் என அவர் காட்டினார். இது ஒரு நிறமற்ற வாயு. தூயநிலையில் இது நறுமணமுள்ளது. ஆனால் இதில் பொதுவாகக் கலந்திருக்கும் அசுத்தங்களால் இது ஒருவகைக் கெட்ட மணத்தைப் பெறுகிறது. அசிட்டலீன் சம பருமனுள்ள நீரிற் கரையும். இது ஆல்கஹாலிலும், அசிட்டோனிலும் ஏராளமாகக் கரையும். உயர்ந்த அழுத்தத்திலும், திரவநிலையிலும் இது அதிர்ச்சியுடன் வெடித்துச் சிதையும். இது காற்றில் ஒளியும் புகையும் உள்ள சுடர்விட்டு எரியும். இது ஒரு வெப்பமேற்கும் கூட்டு. அதாவது தனிமங்களிலிருந்து இதைப் பெறும்போது இது அதிகமான வெப்பத்தை ஏற்கிறது. அபூரிதக் கூட்டான இது கூட்டற் கூட்டுக்களை அளிக்கிறது. குளோரினுடன் இது அதிர்ச்சியுடன் வெடித்துக் கூட்டற் கூட்டுக்களை அளிக்கும். அசிட்டிலீனைச் செஞ்சூட்டிற்குட்படுத்தினால் அது கூட்டுறுப்பாகிப் பென்சீனாக மாறும் ( 3C2H2 H2O → C6H6). கந்தகாமிலமும், மெர்க்குரிக குளோரைடும் கலந்த நீரைக் கொதிக்க வைத்து அதன்வழியே அசிட்டிலீனைச் செலுத்தினால் அசிட்டால்டிஹைடு தோன்றி ஆவியாகப் பிரிகிறது. இந்த வினை தொழில் முறையில் ஆல்கஹாலையும், அசிட்டிக அமிலத்தையும் பெறப் பயனாகிறது.

தயாரிப்பு : தொழிலில், கால்ஷியம் கார்பைடு என்ற பொருளிலிருந்து அசிட்டிலின் தயாரிக்கப்படுகிறது. மின்சாரச் சக்தி மலிவாகக் கிடைக்கும் பகுதிகளில் கால்ஷியம் கார்பைடு தயாரிக்கப்படுகிறது. சுண்ணாம்பையும், கல்கரியையும் கலந்து மின்னுலையில் சுட்டால் கால்ஷியம் கார்பைடு கிடைக்கும். இதன்மேல் தண்ணீர் பட்டவுடன் அசிட்டிலீன் வாயு தோன்றும்: CaC2 + 2H2O → Ca(OH)2 . இந்த வினையின்போது வெப்பம் தோன்றும். அதை அகற்றிவிட்டல் அசிட்டிலீன் பென்சீனாக மாறிவிடலாம் அல்லது சிதைந்து போகலாம். இவ்வாறு பெறப்படும் அசிட்டிலீனுடன் பல அசுத்தங்கள் கலந்திருக்கும். அவற்றை நீக்க வேண்டும்.

பயன்கள் : ஒளியையும், வெப்பத்தையும் பெற அசிட்டிலீன் பயனாகிறது. வண்டிகளிலும், கடல் மிதவைகளிலும் (Buoys) விளக்கேற்ற அசிட்டிலீன் வாயு பயன்படுகிறது. இதை ஆக்சிஜன் வாயுவுடன் கலந்து எரித்தால் மிக உயர்ந்த வெப்பத்தைப் பெறலாம். இத்தத்துவத்தைக் கொண்ட ஆக்ஸி-அசிட்டிலீன் ஊது குழல் உலோகங்களை இணைக்கவும், உலோகத் தகடுகளை வெட்டவும் பயனாகிறது.

எளிய அமைப்புள்ளதும், எளிதில் தயாரிக்கத் தக்கதுமான அசிட்டிலீனிலிருந்து தொடங்கி, முக்கியமான பல கரிமப்பொருள்கள் தொகுப்பு முறைகளால் தயாரிக்கப்படுகின்றன. அசிட்டிக அமிலம், ஆல்கஹால், அசிட்டோன், வைனைல் அசிட்டேட்டுப் போன்ற பல பொருள்கள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அசிட்டிலீனையும் குளோரினையும் வினைப்படுத்திப் பெறப்படும் பல