பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600

வும் கலாசார மொழியாகவும் விளங்கின. இந்தி மொழி இலக்கியத் துறையில் இந்தி என்றும் உருது என்றும் இரு மொழிகளாகப் பிரிந்துவிட்டது. மொகலாயச் சிப்பாய்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே எழுந்த வியாபாரத் தொடர்பால் பிறந்த மொழி உருது. இந்தியில் வடமொழிச் சொற்கள் மிகுந்தன ; வடமொழி யறியாத முஸ்லிம்கள் பாரசீக மொழியினின்றும் பல சொற்களைப் புகுத்தினர். இந்து-முஸ்லிம் பிளவு மிகவே, உருது பாரசீக மொழிப் பண்புகளைப் பெரிதும் ஏற்றுப் பாரசீக-அரபு லிபியிலும், இந்தி வடமொழிப் பண்புகளை ஏற்று நாகரி லிபியிலும் எழுதப்படலாயின. இந்துஸ்தானி என்பது இந்தியின் எளிய வடிவமுடையதும், நாட்டில் பெரும் பகுதியில் வழங்கி வருவதுமான மொழி. இதை நாட்டு மொழியாக்குவதே காந்திஜியின் விருப்பம். இந்திய ஐக்கியத்தின் தேசிய மொழி இந்தி. 1950 லிருந்து, 15 ஆண்டுகளுக்கு இராச்சிய நிருவாகத்திற்கும் மேற்படிப்பிற்கும் ஆங்கில மொழியே பயன்படும்.

இந்தோ ஆரியமொழிகளுள் முக்கியமானவற்றைப் பேசுவோர் மொத்தத் தொகை 2,570 இலட்சமாகும். இவற்றுள்

இலட்சம்
1. இந்தி பேசுவோர் தொகை 635
2. மராத்தி ,, 210
3. ஒரியா ,, 110
4. வங்காளி ,, 535
5. அஸ்ஸாம் ,, 20
6. பீகாரி ,, 370
7. பஞ்சாபி ,, 250
8. குஜராத்தி ,, 110
9. சிந்தி ,, 40
10. ராஜஸ்தானி ,, 140

அஸ்ஸாம். நேபாள மலையின் அடிவாரத்தில் வசிக்கும் லெப்சாஸ் போன்ற இமாலய ஆதிக்குடிகள் பேசும் திபெத்தோ-சீனமொழிக் கூட்டத்தில் முக்கியமானவை நேபாளத்திலுள்ள வோரியும் மணிப்பூரிலுள்ள மணிப்புரியுமாகும். இவற்றைப் பேசுவோர் தொகை சு. 40 இலட்சம். ஏ. சீ.

மதங்கள்

இந்தியாவில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்து, இஸ்லாம், பார்சி, கிறிஸ்தவம் என்பன தனித்தனி மதங்கள். இந்து மதத்திலிருந்து பிரிந்து தனியாக நிற்கும் மதங்கள் பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்பன வாகும். இவை தவிர ஆதிக் குடிகளுடைய மதம் என்று ஒன்றுண்டு. அந்த மதமும் ஓரளவு இந்து மதத்தில் ஒன்றாகக் கலந்துவிட்டதென்று கூறலாம்.

1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள மதத்தினர் தொகையும் விகிதமும் வருமாறு:

மதத்தினர் இலட்சம் சதவிகிதம்
இந்துக்கள் 3,032 84.99
முஸ்லிம்கள் 354 9.93
கிறிஸ்தவர் 82 2.30
சீக்கியர் 62 1.74
ஆதிக்குடிகள் 17 0.47
ஜைனர் 16 0.45
பௌத்தர் 2 0.06
பார்சிகள் 1 0.03
பிறர் 1 0.03


மொத்தம் 3,567 100.00


கங்கை ஆற்றின் கழிமுகம், சிந்து நதியும் அதன் உபநதிகளும் பாயும் இடம் ஆகிய பகுதிகளில் தவிர, இந்தியாவில் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலெல்லாம் இந்துக்களே மிகுதியாக வாழ்கின்றனர். இந்துக்கள் மிகுதியாக வாழும் கங்கையாற்றின் பிரதேசமும் தென்கிழக்குக் கடற்கரையும் தொன்று தொட்டு இந்திய நாகரிகத்தின் நடுக்களங்களாக இருந்து வருகின்றன. டெல்லிக்கும் காசிக்கும் இடையிலுள்ள பகுதி இந்து மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றின் பிறப்பிடமாம். ஆனால் பௌத்த மதத்தினரும் ஜைன மதத்தினரும் இந்தப் பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த தொகையினராகவே உளர்.

இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுள் பெரும்பாலோர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்துக்களே யாவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக உள்ள பகுதிகள் பஞ்சாபும், லாகூருக்கு மேற்கேயுள்ள வடமேற்கு இந்தியாவும் ஆகும். இவர்கள் இந்துஸ்தானத்தின் நடுப்பகுதியில் குறைவாகவும், கிழக்குப் பகுதியில் அதாவது கங்கை யாற்றுப் பள்ளத்தாக்கிலும் கழிமுகத்திலும் மிகுதியாகவும் காணப்படுகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராகவுள்ள பகுதிகள் 1947 முதல் பாகிஸ்தான் என்னும் தனி அரசாகவும், ஏனைய இந்தியப் பகுதிகள் இந்திய ஐக்கியம் என்னும் தனி அரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

சீக்கியர்கள் என்போர் மதச் சீர்திருத்தம் செய்ய எழுந்த ஒரு குழுவினர். பின்னர் அரசியல் அமைப்பும் வகுத்துக் கொண்டனர். அவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி சட்லெஜ் நதிக்கும் செனாப் நதிக்கும் இடையிலுள்ளதாகும். பெரோஸ்பூர் என்னும் நகரத்துக்குத் தெற்கேயுள்ள ஒரு சிறு பகுதியில் இவர்கள் 50 சதவிகிதத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள்.

இந்தியாவிலுள்ள முக்கிய மதத்தினருள் கிறிஸ்தவர்களை மூன்றாவதாகக் கூறலாம். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் சிரியன், ரோமன் கத்தோலிக், பிராட்டெஸ்டென்டு என மூன்று பிரிவுகள் உள. இந்த மூன்றும் இஸ்லாமைப் போல மேற்கேயிருந்து வந்தவையாகும். அவற்றுள் சிரியன் கிறிஸ்தவ மதமே முதன் முதல் வந்தது. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் உள்ள இடம் திருவிதாங்கூர்-கொச்சி, சென்னை ஆகிய இரண்டு இராச்சியங்களாகும். திருவிதாங்கூர்-கொச்சி இராச்சி யத்திலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பகுதியார் கிறிஸ்தவர்கள். அடுத்தபடியாக இவர்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் பம்பாயும் பஞ்சாபுமாம்.

ஜைனர்கள் மிகுதியாகவுள்ள பகுதிகள் கத்தியவாரும் பம்பாயுமாகும். ஆனால் எந்தப் பகுதியிலும் ஐந்து சதவிகிதக்திற்கு மிகுதியாக அவர்கள் இல்லை. பௌத்தர்கள் பெரும்பாலும் இமயமலைச் சாரலிலேயே காணப்படுகிறார்கள். பார்சிகள் மிகவும் குறைந்த தொகையினர்; ஜாரதூஷ்டிர மதத்தைத் தழுவுபவர்கள் உலகத்தில் பார்சிகள் மட்டுமே. பார்சிகளில் பாதிப்பேர் பம்பாய் நகரத்திலேயே வசித்து வருகிறார்கள். ஆதிக் குடிகளுள் பெரும்பாலோர் இந்தியாவின் நடுப்பகுதிகளிலும், கிழக்குப் பகுதியிலுள்ள காடுகள் நிறைந்த குன்றுகளிலும் வசிக்கிறார்கள். ஏ. சீ.