பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

609

இந்தியா

ஆனால் அதன் கிழக்கிலுள்ள அங்க நாட்டை விரைவில் தன்வயமாக்கிக்கொண்டு பெருகிற்று. புத்தர் காலத்தில் பிம்பிசாரன் அந் நாட்டுக்கு அரசன். இவனைச் சிரேணிகன் என்று சமணர்கள் அழைத்தனர். புத்தர் இறப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் இவன் இறந்தான். இவனுடைய பட்டத்துராணி, பிரசேனஜித்தின் சகோதரியான கோசல தேவி. லிச்சவி நாட்டுச் செல்லனா என்பவளும், பஞ்சாபிலுள்ள மத்திர நாட்டு ராஜகுமாரி கேமாரும் மற்ற ராணிகள். இதனாலேயே மகத நாட்டின் பரப்பு வளர்ந்து வந்தது விளங்கும். பிம்பிசாரனுடைய மகன் சமணரால் கூனிகன் எனப்பட்ட அஜாதசத்துரு. பிம்பிசாரன் புத்தரை அவர் குடும்ப வாழ்க்கையைத் துறந்தது முதலே அடிக்கடி சந்தித்தான். ஆனால் அவன் சமணர்களையும் போற்றினான். கிரிவ்ரஜம் என்னும் பழைய இராசதானியை விட்டு ராஜக்கிருகம் என்னும் புதிய இராசதானியை ஏற்படுத்தினான். அவன் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆண்டபின் தன் மகன் அஜாதசத்துருவால் கொலை யுண்டான். கோசல தேவியும் துக்கத்தால் உயிர் துறந்தாள். உடனே காசி நாட்டில் அவள் செலவுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலங்களைப் பிரசேனஜித் மீட்டுக் கொண்டான். இதற்காக அஜாதசத்துரு அவனுடன் போர் தொடங்கின போது தோல்வி யடைந்து, சிறை வைக்கப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்பட்டான். அவன் சோனை நதியும் கங்கையும் கூடுமிடத்தில் உள்ள பாடலிபுத்திர நகரைக் கோட்டை கட்டிப் பலப்படுத்தினான். அதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு தன் மந்திரி விருஷகாரனைக்கொண்டு வஜ்ஜி நாட்டு வைசாலி நகரத்தில் கலகங்களைக் கிளப்பிவிட்டு, அதன்பின் அந் நாட்டின் மீது படை யெடுத்து ஆக்கிரமித்தான். புத்தர் இறந்து கொஞ்ச காலத்திற்குப்பின் இது நடந்தது.

அக் காலத்தைக் குறிக்கும் பௌத்த நூல்களிலிருந்து சமூக நிலை நன்றாகத் தெரிகிறது. பிராமணர்கள் விவசாயம், வியாபாரம், தச்சு வேலை, உலோக வேலை, பசு மேய்த்தல், வியாபாரிகளின் கூட்டங்களுக்கு ஊருக்கு ஊர் வழி காட்டுதல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனர். க்ஷத்திரியர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டனர். சாதி விட்டுச் சாதி கலியாணங்கள் சாதாரணமாக நடந்தன. பணக்காரர்களுக்கு உயர்ந்த சாதிப் பெண்கள் கிடைப்பது எளிதாக இருந்தது. தொழிலாளிகள் பதினெட்டுச் சங்கங்களாக ஏற்பட்டிருந்தனர். சங்கத் தலைவர்கள் அரசர்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள். அரிசியைத் தவிர வேறு ஏழு வகைத் தானியங்களும், கரும்பும், பயறு வகைகளும் விளைவிக்கப்பட்டன. அடிமைகள் இருந்தார்கள். ஆனால் எசமானர்கள் அவர்களை அன்போடு நடத்தினார்கள். கடனாலோ, யுத்தத்தில் பிடிப்பட்டதாலோ அல்லது பஞ்சத்தினாலோ ஒருவன் அடிமையாகலாம். ஆனால் தொழில் செய்து, பொருள் சேர்த்து, மறுபடி அவன் சுதந்திரத்தை மீட்டுக் கொள்ளலாம். பட்டணங்களில் வியாபாரிகளுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. மஸ்லின்கள், பட்டுவகைகள், ஜமக்காளங்கள். வாசனைத் திரவியங்கள், நகைகள், போர்க் கருவிகள் முதலிய விலையுயர்ந்த சாமான்களை எடுத்துக்கொண்டு வியாபாரிகள் கூட்டங் கூட்டமாகச் செல்வது வழக்கம். அவர்கள் சிராவஸ்தியிலிருந்து ஒரு புறம் ராஜக்கிருகத்திற்கும், மற்றொருபுறம் பருகச்சாவிற்கும், இன்னொருபுறம் பஞ்சாபிற்கும், காந்தாரத்திற்கும் திருடர்களும் காட்டு மிருகங்களும் செய்யும் உபத்திரவங்களை எதிர்த்து வியாபாரத்திற்காகச் சென்றனர். பாலைவனங்களைக் கடப்பதற்கு நட்சத்திரங்களே அவர் களுக்கு வழிகாட்டின. கொடுக்கல் வாங்கலும், நாணயங்களும், உண்டியல்களும் அதிகமாகப் பழக்கத்திலிருந்தன.

சமணர்கள் மகாவீரரைக் கடைசியான. இருபத்து நாலாவது தீர்த்தங்கரர் என்று கூறுகிறார்கள். இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் மகாவீரருக்கு 250 ஆண்டுகளுக்குமுன் காலம் சென்றார். அவர் காசி அரசரான அசுவசேனனுக்கும் அவன் ராணி வாமா என்பவளுக்கும் பிறந்தவர். மகாபாரதத்தில் அசுவசேனன் என்பது ஒரு நாகராஜன் பெயர். பார்சுவநாதருக்கு ஏற்பட்ட அடையாளமும் ஒரு பாம்பே. பார்சுவநாதர் தம் சீடர்களுக்கு நான்கு விரதங்களை விதித்தார். அவை கொல்லாமை, சத்தியம், திருடாமை, எளிமை என்பன. மகாவீரர் பிரமசரியம் என்ற ஐந்தாவது விரதத்தையும் சேர்த்தார். பார்சுவநாதர் இரண்டு உடைகள் உடுக்கலாம் என்றார். மகாவீரரோ நிர்வாணமே மேல் என்று வற்புறுத்தினார். மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர். அவர் வைசாலி நகரத்துக்கு அருகிலுள்ள குண்டக் கிராமத்து ஞாத்ருக குலத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்னும் க்ஷத்திரியனுடைய புதல்வர். அவர் தாய் வைசாலி நகரத்துச் சேடகன் என்னும் அரசனுடைய சகோதரி. அவள் பெயர் த்ரிசலா. வர்த்தமானருக்கும் அவர் மனைவி யசோதைக்கும் ஒரு பெண் பிறந்தாள். அவள் கணவன் ஜமாலி என்பவனுக்கும் வர்த்தமானருக்கும் பிற்காலத்தில் ஏற்பட்ட பேதங்களால் சமண மதத்தில் பிளவு உண்டாயிற்று. வர்த்தமானருடைய பெற்றோர்கள் இறந்த பிறகு அவர் தம் தமயன் அனுமதியுடன் முப்பதாவது வயதில் இல்லற வாழ்க்கையைத் துறந்து 13 ஆண்டுகள் சன்னியாசியாகப் பல இடங்களில் திரிந்து, பின் கேவல ஞானம் பெற்றார். கோசாலன் என்னும் மஸ்கரி சன்னியாசி ஒருவன் நாலந்தா என்னுமிடத்தில் மகாவீரரைச் சந்தித்து, ஆறாண்டுக் காலம் அவருக்குச் சீடனாக இருந்தான். அதற்குப்பின் அவரை விட்டு விலகி, அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே, தான் ஞானம் பெற்ற தீர்த்தங்கரன் ஆகிவிட்டதாகக் கூறிக்கொண்டு, ஆசீவகர்கள் என்னும் சன்னியாசிக் கூட்டத்தை ஸ்தாபித்தான். மகாவீரருக்கு அருகன், ஜினன் என்ற பெயர்களும் உண்டு. அவரைப் பின்பற்றியவர்கள் முதலில் நிர்க்ரந்தர், அதாவது பற்றற்றவர் எனப் பெயர் பெற்றுப் பிறகு சைனர்கள் அல்லது சமணர்கள் என்றழைக்கப்பட்டனர். ஞானம் பெற்றது முதல் முப்பது ஆண்டுக் காலம் மகாவீரர் மத்தியக் கங்கை நாடுகளில் தமது மதத்தைப் பிரசாரம் செய்தார். சம்பா, மிதிலை, சிராவஸ்தி, வைசாலி, ராஜக்கிருகம் முதலிய நகரங்களில் மழைக்காலங்களில் தங்கினார். பிம்பிசாரனையும் அவன் மகன் அஜாதசத்துருவையும் பலமுறை சந்தித்தார். புத்தருடன் பலதடவை வாதங்கள் நடத்தினதாக, பௌத்த நூல்கள் கூறுகின்றன. எழுபத்திரண்டாவது வயதில் ராஜக்கிருகத்திற்கருகே பாவா என்னும் சிற்றூரில் மகாவீரர் மரணமடைந்தார். அவர் கொள்கைகளில் முக்கியமானது உயிரில்லாததுபோல் தோன்றும் பொருள்களுக்குக்கூட ஆன்மாவும் உணர்ச்சியும் ஒருவாறு உண்டு என்பதே. ஆகையால் அஹிம்சை என்பது ஒரு முக்கியமான தருமம். மற்ற மதங்களைப் போல் சமணர்கள் கடவுளை நம்பி ஆராதிப்பதில்லை. ஒவ்வோரான்மாவும் தன்னுடைய கருமத்திற்கேற்றவாறு பல பிறவிகளில் பலனை அனுபவித்துப் பின் முத்தி பெறவேண்டும். வாழ்க்கையின் முக்கிய நோக்-