பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

612

இந்தியா

முதலியோருடைய உதவியைப் பெற்று மகதநாட்டின் மீது படையெடுத்துப் போரில் நந்த அரசனையும், அவன் படைத்தலைவன் பத்திரசாலனையும் தோற்கடித்துப் பாடலிபுத்திர நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். சாணக்கியன் சந்திரகுப்தனை அரசனாக்கினான். சந்திரகுப்தன் சில ஆண்டுகளில் தன் ஆட்சியை வடஇந்தியா முழுவதும் பரப்பினான். அலெக்சாந்தருக்குப்பின் அவனுடைய சாம்ராச்சியத்தின் ஆசியப் பகுதியை ஆண்ட செலுக்கஸ் என்னும் கிரேக்க அரசன் அலெக்சாந்தர் இந்தியாவில் வென்ற நாடுகளையும் தான் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சிந்து நதியைத் தாண்டி, இந்தியாவின் வடமேற்கில் சில நாடுகளின்மேற் படையெடுத்தான். ஆனால் அவன் தன் பெண் ஒருத்தியைச் சந்திரகுப்தனுக்கோ அல்லது அவன் மகனுக்கோ மணம்புரிவித்துவிட்டுப் போரில் தேர்ந்த ஐந்நூறு யானைகளைப் பதிலாகப் பெற்று ஊர் திரும்பினான். இது நடந்தது சுமார் கி. மு. 305-ல் எனலாம். சில ஆண்டுகளுக்குப் பின் செலுக்கஸ், மெகஸ்தனீஸ் என்னும் தூதனைச் சந்திரகுப்தனது தலைநகரான பாடலிபுத்திரத்திற்கு அனுப்பினான். மெகஸ்தனீஸ் இந்தியாவைக் குறித்து விரிவான அரிய நூல் ஒன்றை இயற்றினான். அது இப்போது கிடைக்கவில்லை. ஆனால் அதன் பகுதிகள் பலவற்றைப் பிற்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் நூல்களில் எடுத்து எழுதியிருக்கிறார்கள். அவைகளிலிருந்து அக்காலத்து இந்தியாவின் நிலைமையும் சந்திரகுப்தனின் ஆட்சித்திறனும் நன்றாக வெளியாகின்றன.

சுமார் கி.மு.305-ல் சந்திரகுப்தன் சாம்ராச்சியம் மேற்கில் இந்துகுஷ்வரை பரவியிருந்தது. காச்மீர தேசமும் அதில் அடங்கியிருந்தது. சந்திரகுப்தனுக்காக அந்நாட்டை ஆண்டுவந்த புஷ்ய குப்தன் என்பவன் ஜூனாகத்திற்கு அருகே சுதர்சனம் என்ற ஒரு பெரிய ஏரியைக் கட்டுவித்தான். தட்சிண தேசமும் வங்காளமும் மௌரிய இராச்சியத்தைச் சேர்ந்திருந்தன. சந்திரகுப்தன் இருபத்துநான்கு ஆண்டுகள் அரசாட்சி புரிந்தான். பின் சமண முனிவன் பத்திரபாகு, ஒரு பெரும் பஞ்சம் வரப்போவதைக் குறித்த படியால் அவனுடன் சந்திரகுப்தனும் இராச்சியத்தை விட்டுவிட்டுச் சமணனாகித் தெற்கே மைசூர் இராச்சியத்திற்குச் சென்று, அங்கே சிரவணபெள்கொள என்னுமிடத்தில் உயிர் துறந்தான் என்று சமணர் சொல்வர். அவன் மகன் பிந்துசாரன் இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுக்கு அமித்ரகாதன் என்ற பட்டம் இருந்தது. சாணக்கியன் அவனுக்கும் முதல் மந்திரியாய் இருந்ததாக எண்ண இடமுண்டு. அவன் காலத்தில் தட்சசீலத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட, அதை அடக்குவதற்குத் தன் மகன் அசோகனை அனுப்பினான் என்று வித்யாவதானம் என்னும் பெளத்த நூலில் காண்கிறோம். அந்நகரத்து மக்கள் உத்தியோகஸ்தர்கள் செய்த கொடுமைகளைத் தாங்கள் வெறுப்பதைத் தவிர, அரசனிடத்திலும் அரசகுமாரனிடத்திலும் தங்களுக்கு விசுவாசக் குறைவு இல்லை என்றனர். பிந்துசாரன் மேனாட்டுக் கிரேக்க அரசர்களுடன் நட்புப் பாராட்டி வந்தான். தனக்கு இனிப்பான சாராயத்தையும் அத்திப் பழங்களையும் ஒரு கிரேக்கத் தத்துவஞானியையும் வாங்கி அனுப்பும்படி அவன் சிரியா தேசத்து அரசன் ஆன்டியாக்கசை வேண்டினான். அவ்வரசன் சாராயத்தையும் அத்திப்பழங்களையும் அனுப்புவதாகவும், தத்துவஞானி விலைபொருள் அல்ல என்றும் பதிலளித்தான்.

பிந்துசாரனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தவன் அவன் மகன் அசோகன். இவன் மிகவும் பிரசித்தி பெற்ற தரும சக்கரவர்த்தி. இவன் பௌத்தமதத்தை மிகவும் ஆதரித்தான். ஆனால் பௌத்த நூல்களில் இவனைக் குறித்துக் காணப்படும் கதைகளெல்லாம் உண்மையல்ல. உதாரணமாக இவன் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்று பட்டமெய்தினான் என்ற கதைக்கு மாறாசு, இவன் தன்னுடைய சாசனங்களில், தன் சகோதரர்கள், சகோதரிகள், அவர்களுடைய குடும்பங்களுடன் பல ஊர்களில் வசித்து வந்தார்களெனக் குறிப்பிடுகிறான். தன் சாசனங்களில் பொதுவாகத் தன்னைத் தேவானாம்பிரியன் பிரியதரிசி என்று படர்க்கையிலேயே குறித்துக்கொள்ளுகிறான். அசோகன் என்னும் பெயர் ஐதராபாத் இராச்சியத்தில் மாஸ்கியிலகப்பட்ட சாசனம் ஒன்றில் மட்டுமே காணப்படுகிறது. அசோகன் தன்னுடைய ஆட்சியின் ஒன்பதாவது ஆண்டில் கலிங்க நாட்டில் போர்புரிந்து, அதைத் தன் சாம்ராச்சியத்தில் சேர்த்துக்கோண்டான். இது ஒன்றுதான் அவன் செய்த போர். அதனால் ஏற்பட்ட கஷ்டங்களைப் பார்த்து, மனம் வருந்திப் பெளத்த தருமத்தைத் தழுவினான். அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பௌத்த தருமத்தைப் பற்றித் தன் இராச்சியத்தில் மட்டும் அல்லாமல் அயல்நாடுகளிலும் பிரசாரம் செய்து வந்தான். இவன் நாட்டில் மூலைக்கு மூலை பாறைகளிலும், பெரிய கல்தூண்களிலும் தன்னுடைய அரசியல் நோக்கங்களையும் தரும விஷயங்களையும் எல்லோரும் அறிந்துகொள்ளும்படி பல சாசனங்கள் பொறிக்கச் செய்தான். புத்தர் பிறந்த இடத்திற்கு யாத்திரை போய்த் தான் அந்த ஊருக்கு யாத்திரையாக வந்ததையும், அவ்வூரார் கொடுக்க வேண்டிய வரியைப் பாதியாகக் குறைத்ததையும் அறிவிக்கும் சாசனம் ஒன்றைக் கல்தூணில் வரையச் செய்து அவ்விடத்தில் நிறுத்தினான். சாலைகளுக்கு அருகில் கிணறுகள் வெட்டச் செய்தான். மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தினான். அங்கங்கே பழமரங்களையும் மருந்துச் செடிகளையும் பயிரிடச் செய்தான். பிராணிகளைக் கொல்வதைப் பல சட்டதிட்டங்களால் மிகவும் குறைத்தான். தானும் வேட்டையாடுவதை நிறுத்திப் புலால் உண்ணுவதையும் மிகவும் குறைத்துக் கொண்டான். தருமங்களை நாடு முழுவதும் எடுத்து ஓதிக்கொண்டே இருப்பதற்குத் தரும மகாமாத்திரர்கள் என்ற தனி உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்தினான். தெற்கே தமிழ் நாடுகளுக்கும், மேற்கே கிரேக்கர்களுடைய தேசங்களுக்கும். தருமத்தைப் பிரசாரம் செய்வதற்கும், மருத்துவச் சாலைகளையும் மருந்துச் செடித் தோட்டங்களையும் உண்டுபண்ணுவதற்கும் தூதர்களை அனுப்பினான். இலங்கை அரசனான தேவானாம் பிரிய திஸ்ஸனோடு நெருங்கிய நட்புக் கொண்டான். இலங்கை பௌத்தமதத்தைத் தழுவியது இக்காலத்தில் தானென்றும், அதற்குக் காரணமாக இருந்தவர்கள் அசோகனுடைய குழந்தைகள் மகேந்திரனும் சங்கமித்திரையுந்தான் என்றும் மகாவமிசம் கூறுகிறது. அசோகன் காலத்தில் அவன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் சன்னியாசிகள் அதாவது பிக்ஷுக்களின் சங்கம் ஒன்று நடைபெற்றது. அதன் பயனாக, அசோகனால் கொடுக்கப்பட்ட மிகுதியான பொருளைத் தாங்கள் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு கபடமாகச் சங்கத்தின் உட்புகுந்து கலகங்கள் விளைவித்த அன்னிய சமயத்தினர் வெளியேற்றப்பட்டனர். தவிரவும் சங்கத்தில் கலகம் உண்டுபண்ணுபவர்கள் அந்தந்த நாட்டு அரசாங்க உத்தியோகஸ்தர் களால் சங்கத்தைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்ற சட்டமும் ஏற்பட்டது. அசோகன் சுமார் நாற்பது