பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

615

இந்தியா

முதலியோரை ஒழித்து, மகாராஷ்டிரம், கொங்கணம், நருமதா தீரம், சுராஷ்டிரம், மாளவம், மேற்கு ராஜபுதனம் ஆகிய நாடுகளைத் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். இவன் நகபானனைப் போரில் வென்று, அவனுடைய வெள்ளி நாணயங்களின்மீது தன்னுடைய சின்னங்களைப் பொறித்தான். இவன் ஆட்சி விதர்ப்ப நாட்டுக்கும் தெற்கே வனவாசிக்கும் பரவிற்று. இவன் இறந்தபிறகு இவன் மகன் இரண்டாவது புலுமாயியின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் இவன் தாயார் கௌதமி பலஸ்ரீ பொறித்த சாசனத்தில் இவனுடைய வெற்றிகள் விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளன. புலுமாயி குறைந்தது இருபத்துநாலு ஆண்டுகள் ஆண்டான். அவனுடைய நாணயங்கள் கோதாவரி குண்டூர் ஜில்லாக்களிலும், தெற்கே கூடலூர் வரை சோழமண்டலக் கரையிலும் அகப்படுகின்றன. இவன் கீழ்நாடுகளை வென்று கொண்டிருந்த காலத்தில் மேற்கே சகர்களின் வலிமை அதிகரித்து, மாளவமும் மேற்கு ராஜபுதனமும் அவர்கள் வசமாயின. கி.பி.126-131 புலுமாயிக்குப் பின் ஆண்ட சாதகர்ணி ஒருவன் மகாக்ஷத்திரபருத்திரதாமனுடைய மகளை மணந்து சகர்களுடன் நட்புப் பூண்டான். ஆனால் அவனுக்குப் பின் ஆண்ட சாதவாகன அரசன் ருத்திரதாமனால் இருமுறை தோல்வியுண்டு, வடகொங்கண நாட்டையும் நருமதாதீர நாட்டையும் இழந்தான். யஜ்ஞசாதகர்ண என்ற அரசன் கி.பி. 170 முதல் 29 ஆண்டுகள் ஆண்டான். அவன் சகர்களிடமிருந்து மேற்குத் தட்சிணத்தில் சில நாடுகளை மீட்டுக்கொண்டான். இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்கள் பொறிக்கப்பட்ட அவனுடைய நாணயங்கள் பாண கவியின் கூற்றுப்படி சாதவாகனர்கள் மூன்று சமுத்திரங்களுக்கும் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை விளக்குகின்றன. இவ்வரசனுடைய சாசனங்கள் மேற்கே நாசிக், காணேரி முதலிய இடங்களிலும், கிழக்கே சின்னகஞ்சத்திலும் காணப்படுகின்றன. சாதவாகன வமிசத்துக் கடைசி அரசனும் ஒரு புலுமாயி. அவனுடைய சாசனம் பல்லாரி ஜில்லாவிலுள்ளது. சாதவாகன சாம்ராச்சியம் எவ்வாறு நிலை குலைந்தது என்பது புலப்படவில்லை. இவ்வமிசத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் பலர் தட்சிணத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் அங்கங்கே ஆண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் தெரியவருகிறது.

கலிங்க தேசம் அசோகனுக்குப் பிறகு சுய ஆட்சி அடைந்ததாகக் கூறலாம். இவ்வாட்சியை நிலை நிறுத்தினவர்கள் சேத வமிசத்து அரசர்கள். இவர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் மூன்றாவது அரசனான காரவேலன். இவன் தனது பதினைந்தாவது வயதில் இளவரசனாகி, இருபத்துநான்காவது வயதில் பட்டத்திற்கு வந்தான். இவன் சாதவாகனர்கள்மீது இருமுறை போர் தொடுத்தான் எனத் தன் சாசனத்தில் கூறுகிறான். தன்னுடைய எட்டாவது ஆட்சி ஆண்டில் வடக்கு நோக்கிப் படையெடுத்து, ராஜக்கிருக அரசனை விரட்டிக் கோரகிரிக் கோட்டையைக் கைப்பற்றினான். பன்னிரண்டாம் ஆண்டு மகத அரசனை வென்றான். உத்தராபத அரசர்கள் இவனுக்கு அஞ்சியிருந்தனர். இவனுடைய சாசனம் மிகவும் சிதைந்துபோனபடியால் அதில் கூறப்பட்ட மற்றச் செய்திகள் நன்றாக விளங்கவில்லை.

அசோகனுக்குப் பின் வடமேற்கு இந்தியாவில் வெளி நாட்டிலிருந்து படையெழுச்சிகள் நிகழ்ந்தன. முதலில் படையெடுத்து வந்தவர்கள் கிரேக்கர்கள். சிரியா அரசனான III-ம் ஆன்டியாக்கஸ் கி. மு. 206-ல் காபுல் நதிக்கரை நாடுகளின்மேற் படையெடுத்து, அங்கே ஆண்ட சுபாகசேனனிடமிருந்து சில யானைகளைப் பெற்று மீண்டான். பாக்ட்ரியா தேசத்திலிருந்து ஆண்ட டெமட்ரியஸ் என்பவனே இந்தியாவின் மீது படையெடுத்த கிரேக்கர்களுள் முக்கியமானவன். இவன் நாணயங்களில் யானை முகத்தோடு கூடின கிரீடத்துடன் இவன் உரு காணப்படுகிறது. இந்தியாவில் இவனுடைய தலைநகரம் பஞ்சாபிலுள்ள சாகளம் (தற்காலத்துச் சியால்கோட்). யவனர்கள் சாகேத நகரத்தையும் மத்யமிகா என்னும் நகரத்தையும் முற்றுகை இட்டார்கள் எனப் பதஞ்சலி தம் மகாபாஷியத்தில் கூறுகிறார். ஒரு புராண நூலிலும், முரட்டு வலிமை பூண்ட யவனர்கள் பாஞ்சாலம், மதுரா, சாகேதம் முதலிய ஊர்களை ஆக்கிரமித்துப் பாடலிபுத்திரத்தை அடைந்தார்கள் என்றும், ஆனால் அவர்கள் நாட்டில் உட் கலகங்கள் பிறந்ததால் மத்திய தேசத்தில் நெடுநாள் தங்கியிராமல் மீண்டு விட்டார்கள் என்றும் காண்கிறோம். சுங்கர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் போர் நடந்தது. டெமட்ரியஸினுடைய இந்தியப் படை யெடுப்புக்களில் அவனுக்கு உதவியாக இருந்தவர்கள் அப்பல்லோடோடஸ், மினாண்டர் என்னும் இரண்டு போர் வீரர்கள். கங்கைக்கரை நாடுகளின் மேற் படையெடுத்தவனும் மினாண்டரே. அவன் சாகளத்தைத் தலைநகராகக் கொண்டு, காபுல் முதல் மதுரா வரை பரவியிருந்த ஒரு பெரிய இராச்சியத்தைப் பல ஆண்டுகள் ஆண்டு, சு. கி. மு. 150-ல் இறந்தான். அவனுக்கும் நாகசேனன் என்னும் பௌத்த சன்னியாசிக்கும் நடந்த சம்வாதங்கள் மிலிந்தன்ஹோ என்னும் பாலி மொழியிலுள்ள பௌத்தநூலில் காணப்படுகின்றன. கடைசியாக மிலிந்தன் (அதாவது மினாண்டர்) பௌத்த மதத்தைத் தழுவினதாகவும், அவன் இறந்தபோது பல நகரங்கள் அவனுடைய எலும்புகளில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று போட்டியிட்டன வென்றும் காண்கிறோம். இது புத்தருடைய வரலாற்றை ஒட்டின கட்டுக்கதையோ அல்லது வரலாற்று நிகழ்ச்சியோ என்று தெளிவாகக் கூற முடியவில்லை. அப்பல்லோடோடஸ் என்பவனும் மகாபாரதத்தில் பகதத்தன் என்று கூறப்படும் சிந்து அரசனும் ஒருவனே என்பது சிலர் கருத்து. இது எவ்வாறாயினும் அப்பல்லோடோடஸ் குஜராத்திலிருந்து காபிச என்னும் கிழக்கு ஆப்கானிஸ்தானம் வரை உள்ள நாடுகளைப் பல ஆண்டுகள் ஆண்டான். மினாண்டருக்கும் அப்பல்லோடோடஸுக்கும் பின்வந்த கிரேக்க அரசர்கள் பஞ்சாபிலும் ஆப்கானிஸ்தானத்திலும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆண்டனர். கடைசியாக அவர்களுடைய ஆட்சிமத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த சகர்களாலும் பாலவர்களாலும் முடிவு பெற்றது.

சகர்கள் இந்தியாவிற்குள் பலூச்சிஸ்தானம், போலன் கணவாய் வழியாகப் பிரவேசித்தார்கள். அவர்கள் ஆட்சி இந்தியாவில் தொடங்கின பிறகும் காபுல் நதிக்கரையில் கிரேக்க அரசர்களுடைய ஆட்சி முடிவுபெற வில்லை. சக அரசர்கள் ராஜாதிராஜன் என்ற பட்டம் தரித்துக்கொண்டு இரு கிளையினராக ஆண்டு வந்தனர். ஒரு கிளை பஞ்சாபில் சுமார் கி.மு. 72-ல் மோக அல்லது மோவஸ் என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டது. அவன் இராச்சியம் புஷ்கலாவதி முதல் தட்சசீலம் வரைக்கும் சிந்து நதியின் இரு கரைகளிலும் பரவியிருந்தது. அவன் நாணயங்களில் சிவனும் கிரேக்கத் தெய்வங்களும் பொறிக்கப்பெற்றிருக்கிறார்கள். அவனுக்குப்பின் ஆண்ட முதலாம் ஏசஸ் (Azes) பஞ்சாப், காந்தாரா, காபிச நாடுகளை அங்கங்கே ஆண்ட கிரேக்க அரசர்-