பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

616

இந்தியா

களை விரட்டிவிட்டுத் தன் வசம் ஆக்கிக்கொண்டான். சிலர் கருத்துப்படி I- ம் ஏசஸ் கி. மு. 57-ல் ஆரம்பிக்கும் விக்கிரம சகாப்தத்தை ஸ்தாபித்தவன் ஆவான். ஆனால் உஜ்ஜயினியில் ஆண்ட விக்கிரமாதித்தனே விக்கிரம சகாப்தத்தை ஆரம்பித்தவன் என்பது ஓர் ஐதீகம். அவன் தந்தை கர்த்தபில்லன், காலகன் என்னும் ஒரு சமண முனிவன் கோபங் கொள்ளும்படி நடந்தான் என்றும், காலகன் சகஸ்தானத்திலிருந்து சகர்களை உஜ்ஜயினிக்கு அழைத்துக் கர்த்தபில்லனைப் பழி வாங்கினான் என்றும், அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் கர்த்தபில்லன் மகன் பிரதிஷ்டானத்திலிருந்து ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு உஜ்ஜயினிமீது படை யெடுத்து வந்து, சகர்களைப் போரில் வென்று, இராச்சியத்தை மீட்டுக்கொண்டு, விக்கிரம சகாப்தத்தை ஸ்தாபித்தான் என்றும் கூறுவர். இந்த ஐதிகத்தை வலியுறுத்தும் சாசனங்களோ வேறு தக்க சான்றுகளோ இல்லை. கி. மு. முதல் நூற்றாண்டில் ஒரு விக்கிரமாதித்தன் உண்மையில் உஜ்ஜயினியில் சகர்களுக்கு விரோதியாக ஆண்டிருக்கலாம்; ஆயினும் அவனைப் பற்றிய கதைகள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட குப்த அரசனாகிய II-ம் சந்திர குப்தனைச் சார்ந்தவை என்பது உறுதி. அவனும் தன் காலத்துச் சக அரசர்களை வென்று விக்கிரமாதித்தன் என்னும் பட்டம் பெற்றவன்.

சகர்களின் இரண்டாம் கிளையினரில் வோனோனிஸ் (Vonones) என்பான் முக்கியமானவன். இவர்கள் இராச்சியம் கிழக்கு ஈரானும் அரக்கோசியாவும் ஆகும். இப் பெயர்களிலிருந்து இவர்கள் சகர்களோ, பாலவர்களோ எனும் சந்தேகம் ஏற்படக் கூடும். பஞ்சாபில் முதலாம் ஏசஸுக்குப் பின் ஆண்டவர்களைக் கொண்டா பர்னஸ் கி.பி.19-45-ல் வென்றதாகத் தெரிகிறது. இவன் பாலவன். இவன் பெயர் பாரசீக மொழியில் விந்தபர்ன அதாவது கீர்த்தி சம்பாதிப்பவன் எனப்படும். இயேசு கிறிஸ்துவின் சீடனான தாமஸ் இவனைச் சந்தித்து, இவன் நாட்டில் கிறிஸ்துமதப் பிரசாரம் செய்து கொலையுண்டான் என்பது ஒரு கிறிஸ்தவ ஐதிகம். கொண்டாபர்னஸின் பரம்பரையினரின் ஆட்சி கி.பி. 50-ல் குஷானர்களால் முடிவு பெற்றது.

குஷானர் மத்திய ஆசியாவிலிருந்து வெளிக் கிளம்பி முதலில் சகர்களை அவர்கள் இருப்பிடத்தினின்றும் விரட்டி. இந்தியாவில் புகச் செய்து, அதற்குச் சில தலைமுறைகளுக்குப்பின் தாமே இந்தியாவில் புகுந்தனர். இவர்களில் பிரசித்தி பெற்ற முதலரசன் கூஜலகர கட்பீசிஸ் என்பான். இவன் ஐந்து சிறு இராச்சியங்களாக ஏற்பட்டிருந்த குஷான நாடுகளை ஒன்று சேர்த்தான் (கி. பி. 40). பிறகு இந்துகுஷ் மலையைத் தாண்டிக் காபுல் நதிக் கரையிலும் அரக்கோசியாவிலும், அதாவது சிந்துநதிக்கு மேற்புறத்திலுமிருந்த பாலவ இராச்சியங்களைத் தன் வசமாக்கிக் கொண்டான். அவன் அன்னியனாய் இருந்தும், இந்தியாவில் புகுந்ததும் இந்துக் கொள்கைகளைப் பின்பற்றினான். இவன் நெடுநாள் செங்கோல் செலுத்தியபின் எண்பதாவது வயதில் கி.பி. 64-ல் இறந்தான். இவனுக்குப்பின் பட்டம் பெற்றவன் இவன் மகன் வேமோ கட்பீசிஸ். அவன் சிந்து நதியைத் தாண்டி மதுராவரை உள்ள நாட்டைத் தன் இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டான். அவன் காலத்தில் ரோமானிய சாம்ராச்சியத்துடனும் சீன தேசத்துடனும் அதிகமாக வியாபாரம் நடந்தது. அவன் தன்னை மாகேசுவரன் என்று கூறிக்கொள்கிறான். அவன் நாணயங்களிலும் சிவன், நந்தி, ஆல், மழு முதலிய உருவங்கள் பொறிக்கப் பெற்றிருக்கின்றன. தன் தகப்பனைப் போலத் தானும் தன்னுடைய உயர்ந்த பதவியைக் குறிக்கும் விருதுகள் பல உபயோகித்து வந்தான்.

அடுத்த குஷான அரசன் புகழ்பெற்ற கனிஷ்கன். இவனுக்கும் இவனுக்குமுன் ஆண்ட அரசருக்கும் என்ன தொடர்பு என்பது புலப்படவில்லை. கி.பி. 78-ல் தொடங்கும் சகாப்தம் கனிஷ்கனாலேயே தொடங்கப்பட்டது. கனிஷ்கனுடைய தலைநகரம் புருஷபுரம் (தற்காலத்துப் பிஷாவர்). காச்மீரும், பஞ்சாபும், பாடலிபுத்திரம் வரை உள்ள பல மத்திய ஆசிய நாடுகளும், தென் சிந்து நாடும், மாளவமும் கனிஷ்க சாம்ராச்சியத்திற்கு உள்ளடங்கி யிருந்தன. அவன் ஆட்சியின் கடைசிக் காலத்தில் புகழ் பெற்ற சீனப்படைத் தலைவன் பாஞ்சோவிடம் தோல்வியடைந்து மத்திய ஆசிய நாடுகள் சிலவற்றையும் இழந்தான். கனிஷ்கன் அசோகனைப்போல் பௌத்த மதத்தை மிகவும் ஆதரித்தான். ஆனால் அவன் நாணயங்களில் பல நாடுகளையும் மதங்களையும் சார்ந்த தெய்வங்கள் காணப்படுகின்றன. இதனால் இவன் ஆட்சியின் பரப்பும், மத விஷயங்களில் இவனுடைய சமநிலையும் நன்றாகப் புலப்படுகின்றன. தான் பௌத்தனாக இருந்ததனால் தன் தலைநகரில் பெரிய ஸ்தூபம் ஒன்றைக் கட்டுவித்தான். இவன் காலத்துக் காச்மீர தேசத்தில் உள்ள குண்டலவன விஹாரத்திலோ அல்லது ஜாலந்தரத்தில் கவன விஹாரத்திலோ ஒரு பௌத்த சங்கம் நடைபெற்றது. இதற்கு அசுவகோஷன் போன்ற பெரிய கல்விமான்கள் பலர் வந்திருந்தனர். பௌத்த சமய நூல்கள் யாவையும் நன்றாக ஆராய்ந்து விளக்கப்பட்டன. அவை எல்லாம் செப்பேடுகளில் வரையப் பெற்றுக் கனிஷ்கனால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபத்தின் நடுவே வைக்கப்பட்டதாக ஐதிகம். இந் நூல்களெல்லாம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன.

கனிஷ்கனுக்குப்பின் ஆண்ட அரசர்களின் வரலாறு நன்றாகத் தெரியவில்லை. அவன் இறந்த சிறிது காலத்திற்கெல்லாம் மத்திய ஆசிய நாடுகள் குஷான இராச்சியத்தினின்றும் விலகிப்போயின. அவனுக்குப் பின் ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்த வாசிஷ்கன் அவன் மகனாக இருந்திருக்கலாம். வாசிஷ்கன் மகன் இரண்டாம் கனிஷ்கன் கி. பி. 119-ல் ஆர நகர சமீபத்தில் ஆண்டான். ஆனால் வாசிஷ்கனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவன் ஹுவிஷ்கன் (கி. பி. 107-138). அதற்குச் சிறிது காலத்திற்குப்பின் ஆண்டவன் வாசுதேவன் (152-176). மதுராப் பிரதேசமும் அயோத்தியும் அவனுக்குக் கீழ்ப்பட்டிருந்தன . அவனுடைய நாணயங்களும் அவனுக்குப்பின் ஆண்ட மூன்றாம் கனிஷ்கன் (176-210), இரண்டாம் வாசுதேவன் (210-230) ஆகியவர்களுடைய நாணயங்களும் பாரசீகத்தில் ஆண்டுவந்த சசானிய அரசர்களுடைய நாணயங்களை ஒத்திருப்பதால் குஷானரின் ஆட்சி சில காலம் சசானியருக்கு உட்பட்டிருந்திருக்கக்கூடும் என்று எண்ண இடமுண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஹூணர் படையெழுச்சி வரைக்கும் காபுல் பிரதேசத்தில் குஷான சிற்றரசர்கள் ஆண்டுவந்தார்கள். உள்நாட்டிலும் மாளவர், வ்ஹேயர், நாகர், குணிந்தர் முதலான குடியரசு நாட்டினர் குஷானருக்கு விரோதமாகக் கிளம்பித் தங்கள் சுயராச்சியத்தை நிறுவிக்கொண்டனர்.

குஷானர்கள் தங்கள் இராச்சியத்தில் பல இடங்களில் க்ஷத்ரபர்கள் என்ற கவர்னர்களை நியமித்தார்கள். மதுரையிலும் காசியிலும் க்ஷத்ரபர்கள் இருந்தார்கள். ஆனால் இவர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் மாளவத்திலும், கூர்ஜரத்திலும், குஷானருக்குப்