பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

617

இந்தியா

பின்னும் நெடுநாள் ஆட்சி புரிந்துவந்த மேற்குத் திசை க்ஷத்திரபர்கள் எனப்படுவோரே. இவர்கள் இரு கிளையினர். முதலில் இருந்தவர் க்ஷஹராத வமிசத்தைச் சார்ந்த பூமகனும் நகபானனும். அதற்குச் சில காலத்திற்குப்பின் ஆண்டவர்கள் சஷ்டனன் வமிசத்தவர். இவர்களுடைய தலைநகரம் உஜ்ஜயினி. சஷ்டனனுடைய ஆட்சி கி.பி.125-ல் தொடங்கியிருக்கலாம். அவன் பேரன் ருத்திரதாமன் (கி.பி.150). ருத்திர தாமன் மிகவும் புகழ்பெற்றவன். சமஸ்கிருத மொழியில் மிகவும் தேர்ச்சியடைந்து, கவிகளையும் நாடகக் கலையையும் ஆதரித்தவன். அவன் ஆந்திரருடனும் பவ்ஹேயருடனும் போர்புரிந்து வெற்றியடைந்தான் என்று தன் சாசனத்தில் கூறுகிறான். அவன் ஆட்சியில் ஒரு பெரும் புயலால் சுதர்சன ஏரியின் அணை உடைந்துபோயிற்று. அவனுடைய மந்திரிகளும் பொறியியலறிஞரும் மனம் கலங்கிச் செயலற்று இருந்தார்கள். மக்களும் மிகவும் அஞ்சியிருந்தனர். அச்சமயம் சுவிசாகன் என்னும் பாலவ உத்தியோகஸ்தன் பொது நன்மைக்காகவும் தன் அரசனுடைய மேன்மைக்காகவும் தான் அணையைக் கட்டி முடிப்பதாக முன்வந்தான்.ருத்திரதாமனும் புது வரி, வெட்டி (Forced labour) முதலிய துன்பங்கள் குடிகளுக்குஏற்படாமல் தன்னுடைய பொக்கிஷத்திலிருந்து பெரும்பணச் செலவு செய்து அவ்வணையைத் திருப்பிக் கட்டி முடித்தான். இச் செய்தியும் அதேசாசனத்தில் அடங்கியுள்ளது. ருத்திரதாமனுக்கு மகாக்ஷத்ரபன் என்ற பட்டம் உண்டு. அவன் வமிசத்தில் பரம்பரையாக இளவரசன் முதலில் க்ஷத்ரபனாக இருந்து, தன் தந்தைக்குப்பின் மகாக்ஷத்ரபனாவது வழக்கம். இம் மாதிரி இவன் சந்ததியார் கி. பி. நான்காம் நூற்றாண்டு இறுதிவரையில் ஆண்டனர். அவர்களுக்குப்பின் அவர்களுடைய இராச்சியமானது விக்கிரமாதித்தியன் என்ற பெயர் பெற்ற குப்த சக்ரவர்த்தி II-ம் சந்திரகுப்தனால் முடிவுபெற்றது.

குஷான சாம்ராச்சியம் மறைந்ததும் பல சிறு இராச்சியங்களும் குடியரசுகளும் தலை தூக்கின. இப்படிச் சிதறிக் கிடந்த சிறு இராச்சியங்களிலிருந்து குப்த வமிசத்து அரசர்கள் ஒரு சாம்ராச்சியத்தை உண்டாக்கினர். வைசாலியரின் (லிச்சவிகள்) அரசியான குமார தேவி I-ம் சந்திரகுப்தனை மணந்து கொண்டதே குப்த இராச்சியத்தின் பெருமைக்கு ஆரம்பம்.. குப்தன், கடோற்கசன் என்ற முதல் இரண்டு குப்த அரசர்களும் மகாராஜா பட்டம் பெற்றவர்கள். மூன்றாம் அரசனாகிய சந்திரகுப்தனோ மகாராஜாதிராஜன் எனப்படுகிறான். அவன் மகன் சமுத்திரகுப்தனும் தன்னை லிச்சவி தௌஹித்திரன் என்று பெருமை பாராட்டிக்கொள்கிறான். சில நாணயங்களில் ஒரு புறம் சந்திரகுப்தனும் குமார தேவியும், இன்னொரு புறம் சிங்கத்தின்மீது உட்கார்ந்திருக்கும் தேவியும், 'லிச்சவயஹு' என்ற எழுத்துக்களும் காணப்படுகின்றன. குமாரதேவியின் கலியாணத்தினால் லிச்சவி குப்த இராச்சியங்கள் ஒன்றுசேர்ந்து குப்தர்களுடைய அதிகாரம் வலுவடைந்தது என்று கருதலாம். குப்தர்களுடைய சகாப்தம் ஒன்று கி. பி. 318 லோ, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகோ ஆரம்பமாயிருக்க வேண்டும். இதை நிறுவியவன் I-ம் சந்திரகுப்தனோ அல்லது அவன் மகன் சமுத்திரகுப்தனோ என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. இந்தச் சகாப்தத்தின் ஐந்தாம், ஒன்பதாம் ஆண்டுகளில் சமுத்திரகுப்தனால் கொடுக்கப்பட்ட செப்பேடுகள் நாலந்தாவிலும் கயையிலும் கிடைத்துள்ளன. I - ம் சந்திரகுப்தன் காலத்தில் குப்த இராச்சியம் பீகாரும், வங்காளமும், உத்தரப்பிரதேசத்தில் சில பகுதிகளும் அடங்கியதாகலாம்.

சமுத்திரகுப்தனுடைய கல்வெட்டு ஒன்றில் அவனுடைய வெற்றிகரமான திக்குவிசய யாத்திரைகள் வருணிக்கப்படுகின்றன. அவன் அகிச்சத்திர அரசனான அச்சுதனையும், பத்மாவதியில் ஆண்ட நாகவமிசத்து அரசனாகிய நாகசேனனையும், அவர்கள் இராச்சியத்தை விட்டு விரட்டினான். இமய மலைக்கருகில் கங்கைக் கரையிலுள்ள தோடர்களையும், புஷ்பபுரம் என்னும் கன்யாகுப்ஜத்தையும் வென்றான். வேறு போர்களில் ஆர்யாவர்த்தத்தில் ஆண்டுவந்த ஏழு அரசர்களை நிருமூலமாக்கி, அவர்களுடைய நாடுகளைத் தன் இராச்சியத்தில் சேர்த்துக்கொண்டான். ஆகவே உத்தரப் பிரதேசம் முழுவதும், மத்திய பாரதமும், வங்காளத்தின் தென்மேற்குப் பாகமும் சமுத்திரகுப்தன் வசமாயின. இந்நாடுகளைச் சுற்றி உள்ள தேசங்களில் ஆண்டுவந்த அரசரும் சமுத்திரகுப்தனுக்குக் கப்பம் கட்டி அவன் ஆணைப்படி நடந்து வந்தனர். அப்படிச் செய்து வந்த அரசர்களில் சமதடம் அல்லது கீழ் வங்காளம், காமரூபம் அல்லது அஸ்ஸாமின் மலைப் பிரதேசம், நேபாளம், டவாகம் (அஸ்ஸாமிலுள்ளது), ஜலந்தர் முதலிய நாட்டரசர்கள் முக்கியமானவர்கள். மாளவர், ஆர்ஜுனாயனர், யவ்ஹேயர், மத்ரகர், சனகானீகர் முதலிய வட இந்தியக் குடியரசு நாட்டவர்களும் சமுத்திரகுப்தனுடன் நட்பாக இருந்தனர். ஆகவே வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலும், இமயமலை முதல் விந்தியமலை வரையிலும் உள்ள நாடுகள் சமுத்திரகுப்தனுடைய இராச்சியத்தில் அடங்கியிருந்தன. சமுத்திரகுப்தன் தட்சிணதேசத்தின் மேற் படையெடுத்துப் பன்னிரண்டு அரசர்களுடன் போர்புரிந்து, அவர்களைக் கைதியாக்கித் திரும்ப விடுவித்தான் எனச் சாசனம் கூறுகிறது. தென் கோசல நாட்டு மகேந்திரன், மகாகாந்தார (ஒரிஸ்ஸாவிலுள்ளது)வியாக்ர ராஜன், கொல்லேறு ஏரியில் ஆண்ட மண்டராஜன், இஷ்டபுரத்து மகேந்திரன், கொட்டூரத்துச் சுவாமிதத்தன், ஏரண்டபல்லத்துத் தமனன், காஞ்சியை ஆண்ட விஷ்ணு கோபன், அவமுக்த நாட்டு நீல ராஜன், வேங்கி நாட்டு ஹஸ்திவர்மன், பலக்க நாட்டு உக்ரசேனன், தேவராஷ்டிரம் அதாவது எலமஞ்சரியில் ஆண்ட குபேரன், குஸ்தலபுரத்துத் தனஞ்சயன் ஆகிய பன்னிருவர் சமுத்திரகுப்தனை எதிர்த்துத் தோல்வியுற்றவர்கள். இந்தப் படையெழுச்சியினால் சமுத்திரகுப்தனுக்கு இராச்சியம் பெருகா விட்டாலும் புகழ் மிகுந்தது. தென்னாடுகளிலும் அதிகக் குழப்பம் ஏற்பட்டு, அதன் விளைவாகப் புதிதான அரச வமிசங்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்னும் தூர தேசங்களில் ஆண்ட அரசர்களில் சிலர் சமுத்திரகுப்தனுடைய நட்பை வேண்டி, அவனை நேரில் சந்தித்தும், பெண் கொடுத்தும், தங்கள் நாடுகளை ஆள அவனிடம் அனுமதி கேட்டும் வந்தார்கள் என்று சாசனம் கூறுகிறது. இப்படிச் செய்தவர்கள் இந்தியாவின் மேற்கு நாடுகளில் ஆண்ட குஷானரும், சக அரசர்களும், இலங்கை முதலிய தீவுகளில் ஆண்டு வந்த அரசருமே. இலங்கையில் ஆண்ட மேக வர்ணன் (கி. பி. 352-379) சமுத்திரகுப்தனுக்குத் தகுந்த இரத்தினப்பரிசுகளுடன் ஒரு தூது அனுப்பிப்புத்த கயையில் இலங்கையிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்காகத் தான் ஒரு சத்திரம் கட்டுவதற்கு அனுமதி பெற்று ஒரு பெரிய மடமும் கட்டினான். அது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரயாணம் செய்த சீன யாத்திரிகன் ஹியூன் சாங் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிற்று. சமுத்திரகுப்தனுக்குப் பின் ஆண்ட இரண்டாம் சந்திரகுப்தனுடைய தங்க நாணயம் ஒன்று ஜாவாவில் கிடைத்திருக்கிறது. சாம்ராச்சிய தன் பதவியைக் குறிக்கச் சமுத்திரகுப்தன் ஓர்