பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

618

இந்தியா

அசுவமேத யாகம் செய்தான். யூபத்தில் கட்டப்பட்ட குதிரை உருவம் பொறிக்கப்பட்ட சில தங்கப் பதக்கங்களும், இப்பொழுது இலட்சுமணபுரி பொருட்காட்சிச் சாலையில் காணப்படும் ஒரு பெரிய கல் குதிரையும் இந்த யாகத்தைச் சார்ந்தவையே. பொதுவாகச் சமுத்திரகுப்தன் காலத்து நாணயங்கள் மிகவும் அழகாக அமைந்துள்ளன. அந் நாணயங்களில் காணப்படும் சமுத்திரகுப்தனுடைய உருவம் அவன் மிகவும் உயர்ந்து வலிமை வாய்ந்த போர்வீரன் என்பதை விளக்குகிறது. இசையிலும் கவி பாடுவதிலும் அவன் வல்லவன். இளமையில் பௌத்த ஆசிரியர் வசுபந்துவிடம் அம்மதத்தைச் சார்ந்த நூல்களைக் கற்றான். பிறகு வசுபந்துவைத் தன் மந்திரியாக்கிக் கொண்டான். சமுத்திரகுப்தன் ஆட்சி முடிவடைந்தது எப்பொழுது என்று உறுதியாகத் தெரியவில்லை. அவன் மகன் II-ம் சந்திரகுப்தனுடைய சாசனங்கள் கி. பி. 380 முதல் ஆரம்பிக்கின்றன. ஆகவே நீண்டகாலம் ஆண்ட பிறகு சமுத்திரகுப்தன் சு. கி.பி.375-ல் இறந்தான் எனக் கொள்ளலாம்.

சமீபத்தில் கிடைத்த தேவீ - சந்திரகுப்தம் என்னும் நாடகத்தின் சில பகுதிகளிலிருந்து சந்திரகுப்தனுக்கு இராமகுப்தன் என்ற அண்ணன் இருந்தான் என அறிகிறோம். அவன் ஒரு காலத்தில் சகர்களோடு போர்புரிந்து, தோல்வியுற்றுத் தன் இராணியான துருவதேவியைச் சக அரசனுக்குக் கொடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டானாம். இதைக் கேட்ட சந்திரகுப்தன் தான் துருவதேவி வேடம் பூண்டு, சக அரசனிடம் சென்று, அவனைக் கொன்று, துருவ தேவியைத் தானே மணந்து கொண்டு, இராமகுப்தனுடைய இராச்சியத்தைக் கவர்ந்துகொண்டு ஆண்டான் என்பது நாடகம். இவை வரலாற்று நிகழ்ச்சிகளா என்பதைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் சந்திரகுப்தனுக்குமுன் இராமகுப்தன் சிறிது காலம் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும் என்பர். வேறு சிலர் அதை மறுப்பர்.

சந்திரகுப்தன் ஆட்சியில் முக்கிய நிகழ்ச்சி மாளவத்திலும் கூர்ஜாத்திலும் ஆண்டு வந்த சக அரசர்களை அவன் வென்றதுதான். சகர்களுடன் யுத்தம் தொடங்குமுன் பீரார் நாட்டில் ஆண்டு வந்த வாகாடக அரசர்களுடன் சந்திரகுப்தன் நட்பு ஏற்படுத்திக் கொண்டான். அவன் மகள் பிரபாவதி குப்தா என்பவளை II-ம் ருத்திரசேனனுக்கு விவாகம் செய்து கொடுத்தான். ஆனால் ருத்திரசேனன் ஒரு சிறு மகனை விட்டுவிட்டுக் காலமானான். அப்பிள்ளையின் சார்பாக ஆட்சிபுரிந்து வந்த பிரபாவதி தன் தகப்பனுக்குச் சகர்களுடன் நடந்த போரில் உதவி புரிந்தாள். பல நூற்றாண்டுகளாகக் கூர்ஜரத்தில் ஆண்டுவந்த க்ஷத்ரபர்களுடைய ஆட்சி சுமார் கி.பி. 390-ல் முடிவு பெற்றது. அதன் பிறகு அவர்களுடைய நாணயங்களைப் போன்ற சந்திரகுப்தனுடைய நாணயங்கள் அந்நாட்டில் பழக்கத்திற்கு வந்தன. கூர்ஜரமும் மாளவமும் குப்த சாம்ராச்சியத்தைச் சேர்ந்ததனால் அதற்கு வெளி நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு வியாபாரமும் வளர்ந்தது. சகர்களைத் தான் வென்றதைக் குறிப்பதற்குச் சந்திரகுப்தன் விக்கிரமாதித்தியன் என்னும் பட்டத்தைப் பூண்டான். சந்திரகுப்தனுடைய இராணி நாக வமிசத்தைச் சேர்ந்த குபேரநாகா என்பவள்; அவளுடைய மகள் தான் பிரபாவதி. சந்திரகுப்தன் வெள்ளியிலும் செம்பிலும் நாணயங்கள் அடித்தான். அவனுடைய தங்க நாணயங்கள் உருவாலும் அழகினாலும் அவன் சாம்ராச்சியத்தின் செழிப்பையும் பெருமையையும் விளக்குகின்றன. அவைகள் சிலவற்றில் அவன் வில்லாளியாகவும், வேறு சிலவற்றில் அவன் ஒரு சிங்கத்துடன் போர் புரிவதாகவும் காணப்படுகிறான். அவன் ஆட்சியின் கடைசி ஆண்டு 412-3. அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப்பின் அவனுக்குத் துருவதேவியினிடம் உண்டான மகன் குமாரகுப்தன் ஆட்சி புரிவதைக் காண்கிறோம். சந்திரகுப்தன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பிரயாணம் செய்த சீன யாத்திரிகன் பாஹியான் இராச்சியத்தின் செழிப்பையும் நல்ல அரசாட்சியையும் கண்டு மன மகிழ்ந்ததாகத் தன் யாத்திரை நூலில் கூறுகிறான்.

சுமார் 414 முதல் குமாரகுப்தன் நாற்பது ஆண்டுகளுக்குமேல் ஆட்சிபுரிந்தான். அவன் மகேந்திராதித்தன் எனப் பட்டம் பூண்டனன். ஓர் அசுவமேத யாகமும் செய்தான். அவன் தங்க நாணயங்களில் சிலவற்றில் ஒரு புறம் மயிலின்மேல் கார்த்திகேயனும், மற்றொரு புறம் மயிலுக்கு உணவு அளிக்கும் அரசனும் பொறிக்கப்பட்டிருக்கிறார்கள். குமாரகுப்தன் தனது ஆட்சியின் இறுதியில் தன் இராச்சியத்தைக் குலைக்கவந்த பகைவர்களுடன் கடும்போர் புரிய வேண்டி இருந்தது. இந்தப் பகைவர்களில் ஒரு சாரார் விந்திய மலைச் சாரல்களில் வசித்துவந்த புஷ்யமித்திரர் என்னும் சாதியார். மற்றவர் வெளிநாட்டிலிருந்து சகர்களையும் குஷானர்களையும்போல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஹூணர்கள். பாரசீகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே சமயத்தில் இவர்கள் செய்துவந்த தீமைகள் பல. சுமார் கி.பி. 450-ல் ஹூணர்கள் முதன்முதல் குப்த இராச்சியத்தைத் தாக்கினார்கள். அப்போது குமாரகுப்தன் வயது முதிர்ந்த கிழவனாக இருந்திருக்கவேண்டும். அவன் சைனியங்கள் தோல்வியுற்று இராச்சியம் சின்னபின்னம் ஆகும்போல் இருந்தது. அப்பொழுது அவன் மகன் ஸ்கந்தகுப்தன் எதிரிகளோடு விடாப் போர் புரிந்து வெற்றி பெற்றான். இப்போரில் ஒருநாள் இரவில் அவன் வெறுந்தரையில் தூங்கும்படியாக நேர்ந்தது என்று ஒரு சாசனம் கூறுகிறது. அவனுடைய வெற்றிச் செய்தியைக் கேட்குமுன் குமாரகுப்தன் இறந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஸ்கந்தகுப்தன் போரினின்று திரும்பிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த தன் தாயாரிடம், கிருஷ்ணன் தேவகியிடம் கூறுவதுபோல் தன் வெற்றியைக் கூறினான் என்று சாசனத்தால் அறிகிறோம். குமாரகுப்தன் நாலந்தாவிலுள்ள பெரிய பெளத்த விஹாரத்திற்கு அதிக உதவிபுரிந்தான் என்று சீன யாத்திரிகர்கள் கூற்றுக்களால் அறிகிறோம். ஸ்கந்தகுப்தன் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்டான் (455-67). அவன் பட்டத்திற்கு வருவதற்கு ஏதோ தடையிருந்து நீங்கினதாக ஊகிக்க இடமுண்டு. அவன் கல்வெட்டு ஒன்று இராச்சியலக்ஷ்மியானவள் மற்ற அரசகுமாரரைப் புறக்கணித்து, அவனைத் தெரிந்து மணந்தாள் எனக் கூறுகிறது. அவன் நாணயங்கள் சிலவற்றிலும் அவன் அம்பும் வில்லுமாக நிற்க, அவன் எதிரில் ஒரு கருடத்துவசத்தையும் வலது புறத்தில் கையில் கிரீடத்தோடு லட்சுமி நிற்பதையும் காண்கிறோம். தான் பட்டம் பெற்றதும் ஸ்கந்தகுப்தன் நாட்டில் குழப்பம் ஏற்படாமல் பார்க்க அங்கங்கே கவர்னர்களை நியமித்தான். அவர்களில் ஒருவன் சௌராஷ்டிரத்தை ஆண்ட பர்ணதத்தன். ஸ்கந்தகுப்தன் ஆட்சியின் முதல் ஆண்டிலேயே மறுபடியும் சுதர்சன ஏரியின் கரை உடைந்தது. அதைத் திரும்ப வலுப்படக் கட்டின புகழ் பர்ணதத்தனையும் கிரி நகரத்துத் தலைவனாக இருந்த அவன் மகன் சக்ரபாலிதனையும் சார்ந்தது. ஸ்கந்தகுப்தன் காலத்-