பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

620

இந்தியா

தார்கள். அச்சங்கத்தார் பலர் சோதிடத்திலும் போர்புரிவதிலும் வல்லவர்கள் என்று அறிகிறோம். மேற்கே உள்ள அயல் நாடுகளோடு பாரசீக வளைகுடா மூலமாகவும், செங்கடல் மூலமாகவும், தரைமார்க்கமாகவும் வியாபாரம் நடந்து வந்தது. பிரயாணிகளையும் மற்றும் வியாபாரச் சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் 500 கப்பல்கள் கிழக்கே இந்தோனீசியா முதல் சீனா வரையுள்ள நாடுகளுடன் வியாபாரம் நடத்தி வந்தன.

கல்வியும் சிற்பமும் அக் காலத்தில் செழித்து வளர்ந்தன. இப்பொழுது டெல்லியில் குதுப்மினாருக்கு அருகே காணப்படும் இரும்புத் தூண் அக்காலத்து உலோக வேலையின் மேன்மையை நன்றாக வெளிப்படுத்துகிறது. இருபத்துநாலடி உயரமுள்ள இந்தத் தூண் ஆறரை டன் எடை உடையது. 1,500 ஆண்டுகளுக்கு மேல் வெயிலும் மழையும் தாங்கிய இத் தூணில் இது வரைக்கும் துரு ஏறியதே கிடையாது. சமீபகாலம் வரை இம்மாதிரி இரும்புத் தூண் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிலும் செய்திருக்க முடியாது. உயர்தரக் கல்விக்கு ஏற்பட்ட மொழி சமஸ்கிருதம். பீகாரும் நாலந்தாவும், கூர்ஜரநாட்டில் வல்லபியும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களாக விளங்கின. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஸ்மிருதிகள், இலக்கணம், தருக்கம், வேதாந்தம், வானவியல், சோதிடம், வைத்தியம், தனுர்வேதம் முதலிய எல்லாக் கலைகளும் நன்றாகப் பயிலப்பட்டு வந்தன. இக் காலத்துக் கவிகளில் மிகவும் புகழ் பெற்றவன் காளிதாசன். புராணங்கள் பலவும், யாஞ்ஞவல்கியர், நாரதர், காத்தியாயனர், பிருகஸ்பதி என்பவர்களின் பெயரால் உள்ள ஸ்மிருதிகளும் இக் காலத்தில் எழுதப் பெற்றன. நீதி நூல்களில் காமந்தகனுடைய நீதி சாரமும், சந்திரகோமி எழுதிய சந்திர வியாகரணம் என்னும் இலக்கணமும், அமரசிம்மன் தொகுத்த அமரகோசம் என்னும் நிகண்டும் இக்காலத்தவையே. வானவியலில் சிறந்த ஆரியபட்டீயமும் ஆரியபட்டரால் குப்தர்கள் காலத்திலேயே எழுதப் பெற்றது. இதை அவர் கி.பி.499-ல் இயற்றியபோது அவருக்கு வயது 23. அவருக்குப் பின் வந்தவர் வராகமிகிரர். அவருடைய நூல்கள் பிருகத் ஜாதகம், லகு ஜாதகம். பிருகத் சம்ஹிதை முதலியன. யவனர்களிடத்து வானவியல் மிகவும் வளர்ந்து இருப்பதால் அவர்களும் இந்திய ரிஷிகளுக்குச் சமமானவரே என்று அவர் கூறுகிறார். வைத்தியத்தில் வாக்படர் அஷ்டாங்க சங்கிரகம் என்னும் நூலை இயற்றினார். பாலகாப்பியர் யானை மருத்துவ நூலைச் செய்தார். பெளத்த ஆசிரியர்கள் ஆகிய புத்த கோஷர், புத்த தத்தர், வசுபந்து, ஆரிய சூரர், அசங்கர், தின்னாகர் முதலியவர்கள் பல சிறந்த நூல்களை இயற்றியதும் இக்காலமே. சமணர்களும், தங்களுடைய மத நூல்களைச் சீர்ப்படுத்தி, அவைகளுக்கு உரைகளான நிருக்திகளையும் சூர்ணிகளையும் எழுதினதும் இக்காலம். உமாசுவாதி, சித்தசேனர் என்ற இரண்டு சமண ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். பொதுவாகக் குப்தர்கள் ஆட்சிக் காலம் இந்திய வரலாற்றில் மிக்க ஒளி பெற்று விளங்குகிறது. இக்காலத்தில்தான் கலைகள் பலவும் மேன்மை யடைந்தன. நாட்டில் செல்வமும் அமைதியும் மிகுந்தன. இந்நாட்டு மக்கள் மத்திய ஆசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளிலும் ஏராளமாகக் குடியேறி, அங்கே இந் நாட்டு நாகரிகத்தைப் பல நூற்றாண்டுகளாகச் செழித்து ஓங்கும்படி நிலை நிறுத்தினார்கள்.

குப்த ஆட்சி முடிந்தபின் சிறிது காலம் வட இந்திய வரலாறு தெளிவாக விளங்கவில்லை. மகதத்தில் ஆண்ட பிற்காலத்துக் குப்தர்கள் மௌகரிகளுடன் போர்கள் நடத்துவதும், சமாதானங்கள் செய்வதுமாக இருந்து வந்தனர். சிறிது காலம் மௌகரி மகத அரசர்களை வெற்றிகொண்டு, அந் நாட்டை அடக்கி ஆண்டனர். சர்வவர்மன் என்னும் மௌகரி அரசன் தாமோதர குப்தனைப் போரில் வீழ்த்தினான்.

பஞ்சாபின் கீழ்க்கோடியில் குருக்ஷேத்திரம் என்னும் புண்ணிய பூமியில் ஸ்தாணேசுவரம் என்ற ஒரு சிவ ஸ்தலம் உள்ளது. குப்தர்கள் காலத்தில் ஹுணர்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட அரண்களில் இது முக்கியமானது. இதை ஆண்டவர்கள் புஷ்பபூபதி வமிசத்து அரசர்கள். இவ்வமிசத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவன் ஹர்ஷ வர்த்தனன். இவனை ஹியூன் சாங் வைசியன் என்கிறான். ஆனால் பிருகத் சம்ஹிதையில் வைஸ்ய என்ற ராஜபுத்திர குலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் இவ்வமிசம் க்ஷத்திரிய வமிசமே. இதில் உதித்த ஆதித்திய வர்த்தனன் பிற்காலத்துக் குப்த வமிசத்து மகாசேன குப்தா என்பவளை மணந்தான். இவர்களுக்குப் பிரபாகர வர்த்தனன் என்ற ஒரு மகன் பிறந்தான். ராஜ்ய வர்த்தனன், ஹர்ஷ வர்த்தனன். ஆகிய இரு புத்திரர்களும், ராஜ்யஸ்ரீ என்ற பெண்ணும் அவனுடைய மக்களாவர். ராஜ்யஸ்ரீ கன்னோசியில் ஆண்ட மெளகரி அரசன் கிருகவர்மனுக்கு இராணியானாள். இவ்விஷயங்களும் ஹர்ஷவர்த்தனன் காலத்து நிகழ்ச்சிகளும் பாணகவியினுடைய ஹர்ஷசரிதத்திலும், ஹியூன் சாங் பிரயாணக் குறிப்புக்களிலும் விவரமாகக் காணப்படுகின்றன. ஹர்ஷன் காலத்துச் செப்பேடுகளும் இரண்டு இருக்கின்றன.புஷ்ப பூபதிவமிசத்தில் உண்டான முதல் பேரரசன் பிரபாகரவர்த்தனனே. இவன் ஹூணர், கூர்ஜரர், மாளவர், லாடர் முதலியவர்களுடன் பல போர்கள் புரிந்து தன் நாட்டைப் பெருக்கிய வீரன். கி. பி. 604-ல் யௌவனமடைந்த தன் மகன் ராஜ்ய வர்த்தனனை ஒரு பெரும் படையுடன் ஹூணர்களை எதிர்க்க அனுப்பினான். ஹர்ஷ வர்த்தனனுக்கு அப்போது வயது பதினைந்து. அவனும் ஒரு குதிரைப் படையுடன் தன் தமையன் பின் சென்றான். அப்பொழுது தன் தந்தை கடுமையான சுரத்தால் சாகுந் தறுவாயில் இருப்பதாகச் செய்தி வந்தது. உடனே திரும்பி வந்த ஹர்ஷன்தன் தந்தையினுடைய மரண காலத்தில் அவர் அருகில் இருந்தான். ராஜ்யவர்த்தனன் ஹூணர்களைத் தோற்கடித்துத் திரும்பினதும் அரசனானான். அப்பொழுது மாளவ அரசனால் கிருகவர்மன் கொல்லப்பட்டு, அவன் மனைவி ராஜ்யஸ்ரீ கடுஞ்சிறையிலிடப்பட்டதாகச் செய்தி வந்தது. இங்கே குறிக்கப்பட்ட மாளவ தேசம் இன்னதென்று தெளிவாகவில்லை. அதே மாதிரி பாணனால் தேவகுப்தன் என்றழைக்கப்பட்ட அதன் அரசனைப் பற்றியும் வேறு விவரங்கள் புலப்படவில்லை. தன் தங்கைக்கு நேரிட்ட துன்பத்தை அறிந்த ராஜ்ய வர்த்தனன் பதினாயிரம் குதிரைப் படைகளுடன் உடனே கிளம்பிச் சென்று, மாளவ அரசனை எளிதில் தோற்கடித்தான். ஆனால் அவ்வரசனுடன் நட்புக் கொண்டிருந்த கௌட அரசன் சசாங்கன் என்பான் ராஜ்யவர்த்தனனுடன் சமாதானம் பேசுவதாகப் பாசாங்கு செய்து, அவனை வஞ்சனையாற் கொன்று விட்டான். இந்தச் செய்தியும், ராஜ்யஸ்ரீ சிறையிலிருந்து வெளியேறிக் காட்டுக்கு ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தியும் ஹர்ஷனுக்கு எட்டின. ஹர்ஷன் உடனே புறப்பட்டுத் தன் பந்துவும், படைத் தலைவனுமான பண்டி என்பானைச் சசாங்கனைத் தொடரும்படி அனுப்பிவிட்டுத் தான் தன் தங்கையைத் தேடிச் சென்-