பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

621

இந்தியா

றான். விந்திய மலைப் பிரதேசங்களில் ஒரு பௌத்த சன்னியாசியால் வழிகாட்டப் பெற்று, ராஜ்யஸ்ரீ தீயில் விழுந்து தன் உயிரைத் துறக்கும் தறுவாயில் அவள் இருந்த இடத்தைச் சேர்ந்தான். அவளை மீட்டுக் கொண்டு கன்னோசி நகருக்குத் திரும்பி, அவளுடன் சேர்ந்து அந்நாட்டு ஆட்சியை மேற்கொண்டான். ஸ்தாணேசுவரத்து ஆட்சியோ ராஜ்யவர்த்தனனுக்குப் பின் ஹர்ஷனுக்கே உரித்தாயிற்று. ஹர்ஷனுடைய சகாப்தம் ஒன்று கி. பி. 606-ல் தொடங்கிற்று. ராஜ்யவர்த்தனனைக் கொன்றதற்காகச் சசாங்கனுக்கு ஒரு தண்டனையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கி.பி. 619-ல் அவன் இன்னும் தன் இராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்ததாகச் சாசனங்களால் அறிகிறோம். அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் அவன் நாட்டை ஹர்ஷன் கைப்பற்றி யிருக்கலாம்.

ஹர்ஷ வர்த்தனனுடைய சேனை ஐயாயிரம் யானைகளும், இருபதினாயிரம் காலாட்களும் கொண்டது. இப்பெரும்படையுடன் கிழக்கும் மேற்குமாகச் சென்று, ஐந்தரை ஆண்டுகள் இடைவிடாமல் போர்புரிந்து, தனக்குக் கீழ்ப்படியாத மன்னர்களைப் படியவைத்து, வடஇந்தியா முழுவதையும் தன் வயமாக்கிக் கொண்டான் ஹர்ஷன் என்று ஹியூன் சாங் கூறுகிறான். நாளடைவில் அவன் படைகள் பெருகின. அவற்றில் அறுபதாயிரம் யானைகளும் இலட்சம் குதிரைகளும் இருந்தன. முதல் ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின் போர் ஒன்றும் இல்லாமல் அமைதியாக முப்பத்தைந்து ஆண்டுகள் ஹர்ஷன் தான் ஏற்படுத்திய சாம்ராச்சியத்தை ஆண்டு வந்தான் என்பதும் ஹியூன்சாங் கூற்று. ஆனால் இதைப் பொதுப்படையாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் இதர ஆதாரங்களால் ஹர்ஷன் புரிந்த வேறு சில போர்கள் புலப்படுகின்றன. சுமார் கி.பி. 620-ல் ஹர்ஷன் தட்சிண தேசத்தின்மேற் படையெடுக்க முயன்று, அந்நாட்டுச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலகேசியால் நருமதை நதிக்கரையில் தோல்வியுற்றான். கி. பி. 633 க்கும் 641 க்கும் இடையில் கூர்ஜர தேசத்தில் வல்லபியில் ஆண்டுவந்த மைத்ரக அரசன் பாலாதித்தியன் அல்லது II-ம் துருவசேனனோடு போர் புரிந்தான். சிறிதுகாலம் துருவசேனன் ஹர்ஷனுடைய விரோதிகளான II - ம் புலகேசி, பரோச்சில் ஆண்டுவந்த கூர்ஜர மன்னன் முதலியவர்களோடு நட்புக்கொண்ட போதிலும், கடைசியாக ஹர்ஷனுடன் சமாதானம் செய்துகொண்டு, அவன் மகளை மணந்து அவன்கீழ் ஒரு சிற்றரசனாக ஆண்டு வந்தான். மாளவ தேசத்தின் மேற்குப்பாகமும், அவன் இராச்சியத்தில் ஹர்ஷனால் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.

இப்பொழுது அஸ்ஸாம் என்று வழங்கும் பிராக்ஜோதிஷத்தின் அரசனான குமாரபாஸ்கரவர்மன் ஹர்ஷனுடைய நெருங்கிய நண்பன். வங்க அரசன் சசாங்கனுக்குப் பெரும்பகைவன். ஹர்ஷன் இராச்சியத்தில் நேபாளம் சேர்ந்ததா இல்லையா என்று ஐயுறுவர் சிலர். ஆனால் ஹர்ஷ சகாப்தம் அந்நாட்டில் உபயோகப்பட்டு வந்ததால், அது ஹர்ஷனால் ஆளப்பட்டதாகவே கொள்ளப்படவேண்டும். வடமேற்கில் ஜாலந்திரம் என்னும் ஊர் ஹர்ஷன் நாட்டிற்கு எல்லையாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஹியூன் சாங் சீனாவிற்குத் திரும்பிப் போகும்போது ஹர்ஷனால் அவனுடைய பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட படைகள் இவ்வூரில் நின்றுவிட்டன. ஹர்ஷன் ஆட்சியில் நிகழ்ந்த போர்களில் கடைசியாக நடந்தது கி. பி. 643-ல் கோங்கோதா (கஞ்சம்) என்னும் நாட்டின் படையெழுச்சி. ஹர்ஷனுடைய சிற்றரசர்களில் ஒருவன் மகதத்தில் ஆண்டுவந்த பூர்ணவர்மன் என்பான். இவன் மௌரிய அரசன் அசோகனுடைய சந்ததியைச் சார்ந்தவன். புத்த கயையிலுள்ள போதி மரத்தைச் சசாங்கன் வெட்டி வீழ்த்திச் சுட்டபின், நூற்றுக் கணக்கான பசுக்களின் பாலை வார்த்து, அப்புனித மரத்தைத் திரும்ப வளரச்செய்து, அதைச்சுற்றி ஒருவலுவான வேலியையும் கட்டிவைத்தவன் பூர்ணவர்மனே.

ஹர்ஷ வர்த்தனன் தன்னுடைய பரந்த இராச்சியத்தில் அடிக்கடி பிரயாணம் செய்து, அங்கங்கே உள்ள விசேஷங்களைத் தான் நேராகவே கண்டு கண்காணித்து வந்தனன். ஹியூன் சாங் அவனது ஆட்சி முறையைப் புகழ்ந்து பேசுகிறான். ”வரிகள் அதிகமில்லை. எல்லாச் சமயத்தவரும் அரசனால் ஆதரிக்கப்பட்டு வந்தனர். கொடிய குற்றங்கள் அதிகமில்லை. ஆயினும், குப்தர்கள் காலத்தைப்போலப் பிரயாணிகளுக்கு வழிநடைப் பயமில்லை என்று கூறமுடியாது” என்று அவர் கூறுகிறார். இரண்டு தடவை ஹியூன் சாங்கும் கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டான். நீதிமன்றங்களில் உண்மையறிவதற்குச் சபதங்களும் கடுஞ்சோதனை முறைகளும் (Trial by Ordeal) பழக்கத்திலிருந்தன. சிறு குற்றங்களுக்கு அபராதமும், பெரிய குற்றங்களுக்கு அங்கச் சேதமும் கடுஞ்சிறையும் தண்டனைகள். ஹர்ஷனைச் சிவபக்தன் என்று பாணன் கூறுகிறான். ஹர்ஷனுடைய தகப்பன் சூரிய பக்தன். அவன் தமையனும் தங்கையும் பௌத்தர்கள். ஹியூன் சாங் சந்தித்த பிறகு ஹர்ஷனுக்கு மகாயான பௌத்த மதத்தில் பற்று ஏற்பட்டது. பௌத்த மதம் நாடெங்கும் தாழ்வடைந்த போதிலும், ஹியூன் சாங் இரண்டு இலட்சம் பௌத்தசன்னியாசிகள் இருந்ததாகக் கணக்கிடுகிறான். சமண மதம் சில இடங்களில் மட்டுமே பழக்கத்தில் இருந்தது. பொதுப்படையாக இந்து மதம் எங்கும் பரவியிருந்தது. மத பேதங்களால் சில சச்சரவுகளும் கலகங்களும் ஏற்பட்டன. மதக்கொள்கைகளைப் பற்றிய வாதங்களும் அடிக்கடி நிகழ்ந்தன. கி.பி.643-ல் ஹர்ஷனுடைய இராசதானியான கன்னோசி நகரத்தில் ஒரு பெரிய உற்சவம் நடைபெற்றது. இதில் பல நாட்களாகப் புத்த விக்கிரகங்கள் ஆராதிக்கப்பெற்றன. திடீரென்று ஒருநாள் பெரிய புத்த விக்கிரகம் இருந்த பந்தலில் தீ மூட்டப்பெற்றது. இது ஹர்ஷனுடைய பௌத்த மத அபிமானத்திற்காக அவனைக் கொல்லப் பிராமணர்கள் செய்த சதி என்று ஹியூன் சாங் கூறுகிறான். இது எவ்வளவு தூரம் உண்மையென்று அறிந்து கொள்ள இடமில்லை. ஹர்ஷனும் அசோகனைப்போல் உணவிற்காகப் பிராணிகளைக் கொல்வதைக் குறைக்க முயன்றான். கன்னோசி உற்சவத்திற்குச் சில நாட்களுக்குப்பின் பிரயாகையில் வேறு ஒரு விழா நடந்தது. அதற்கு ஹியூன் சாங் பிரத்தியேகமாக அழைக்கப் பெற்றான். அதனால் அவர் சீனாவிற்குத் திரும்புவதற்குக் குறித்திருந்த நாளைச் சிறிது தள்ளிவைக்க நேர்ந்தது. பிரயாகைக் கூட்டம் எழுபத்தைந்து நாட்கள் நடைபெற்றது. வேறு நாட்களில் புத்தனும், சூரியனும், சிவனும் ஆராதிக்கப்பட்டார்கள். எல்லா மதத்தினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஐந்தாண்டுகளாக ஹர்ஷனது பொக்கிஷத்தில் சேர்ந்த சொத்தெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டன. இது ஹர்ஷனுடைய ஆட்சிக் காலத்தில் நடந்த கொடைகளில் ஆறாவது.

ஹியூன் சாங் இந்தியாவை விட்டகன்ற சிறிதுகாலத்துக்கெல்லாம் கி.பி. 646 - ன் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ ஹர்ஷன் மரணமடைந்தான். பெரிய கவிகளை ஆதரித்ததுமன்றித்