பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

623

இந்தியா

பர் தாரநாத் என்னும் திபெத்து வரலாற்று ஆசிரியர். தர்மபாலன் காலத்திலும், அவனுக்குப்பின் ஆண்ட தேவபாலன் காலத்திலும் பல சித்திர வேலைக்காரர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள் முதலியோர் ஆதரிக்கப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் தீமான், விடபாலன் என்பவர்கள்.

தேவபாலன் என்னும் மூன்றாவது அரசன் மிகவும் வலிமையும் புகழும் பெற்றவன். இவன் நாற்பத்தெட்டு ஆண்டுகள் ஆண்டான். அவன் படைத்தலைவனான லவசேனன் அஸ்ஸாம், ஒரிஸ்ஸா முதலிய நாடுகளை வென்றான். தேவபாலன் மிகவும் பக்தியுள்ள பௌத்தன். அவனுக்குச் சுவர்ணத்வீபம் என்னும் சுமாத்ரா தீவில் ஆண்டுவந்த பாலபுத்திர தேவனோடு நட்பு ஏற்பட்டிருந்தது. அவ்வரசன் நாலந்தாவில் கட்டின விஹாரம் ஒன்றிற்குச் சில கிராமங்களை அளிக்க அனுமதி கொடுத்தான். பத்தாம் நூற்றாண்டில் பால ஆட்சி காம்போஜர்கள் என்னும் மலை நாட்டாரால் தடைப்பட்டிருந்தது. 1-ம் மகிபாலன் (ஆ.கா.978-1030) அக் காம்போஜர்களை விரட்டி இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். 1023-ல் சோழ அரசன் I-ம் இராசேந்திரனால் அவன் தாக்கப்பட்டபோது, அவன் சிற்றரசனாகிய தட்சிணராட அரசன் ரணசூரன் அவனுக்கு உதவிபுரிந்தான். பால அரசர்கள் எல்லோரிலும் இவனையே மக்கள் புகழ்ந்தனர். இவன் காலத்தில் தர்ம பாலன் முதலிய பௌத்த சன்னியாசிகள் கி.பி. 1013-ல் திபெத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கே சென்று அந்நாட்டிற்குப் புத்துயிக் கொடுத்தனர். மகிபாலனுக்குப் பிறகு ஆண்டவன் நயபாலன். நயபாலன் மகன் மூன்றாம் விக்கிரம பாலன் என்பவன். அவனுக்குப்பின் அவன் பிள்ளைகள் மூவருக்குள் சண்டை ஏற்பட்டதாலும், மற்றும் மாஹிஷ்யர்கள் என்னும் சாதியாரால் செய்யப்பட்ட கிளர்ச்சியாலும் அரசு நிலைகுலைந்தது. கடைசியாக ராமபாலன் என்னும் மூன்றாம் மகன் ராஷ்டிரகூடரின் உதவியால் இராச்சியத்தை மீண்டும் வலுப்படுத்தி ஆண்டான். அவனுடைய சரிதம் ராமசரிதம் என்னும் காவியத்தில் விரிவாகக் காணப்படுகிறது. புகழ்பெற்ற பால அரசர்களில் கடைசியானவன் அவனே. அவனுக்குப்பின் இந்திரத்தியும்னபாலன் இறுதியாக ஐந்து வலியற்ற அரசர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை ஆண்டு வந்தனர்.

பாலர்களுக்குப்பின் சேனவமிசத்து அரசர்கள் வங்காளத்தை ஆண்டனர். முதலில் இவர்கள் வட ஒரிஸ்ஸாவில் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திப் பிறகு பாலர்களுடைய வங்க நாட்டைக் கைப்பற்றினார்கள். பதினோராம் நூற்றாண்டின் நடுவில் இவ் வமிசத்தை ஸ்தாபித்த சாமந்த சேனனும், அவன் மகன் ஹேமந்த சேனனும், மயூரபஞ்சு நாட்டிலுள்ள காசீபுரத்தைத் (இப்போது கஸ்யாரி எனப்படும்) தலைநகராகக் கொண்டு, பாலர்களின் கீழ்ச் சிற்றரசர்களாக ஆண்டனர். அடுத்த அரசன் விஜயசேனன் சுதந்திரமடைந்து வங்கநாட்டின் பெரும்பகுதியைப் பாலர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். அவன் ஆட்சிக் காலம் நாற்பது ஆண்டுகள். அவன் மகன் கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கனுடன் நட்புப் பூண்டவன். அவன் மகன் வல்லாள சேனன் (ஆ. கா. 1108-1119) நாட்டுச் சாதி ஆசாரங்களை மாற்றினான். அவன் கௌர் அல்லது லக்னௌதி என்னும் தலைநகரத்தை நிறுவினான் என்று கூறுவர். சேனர்கள் தாந்திரிக இந்து மதத்தை அனுசரித்ததனால் பௌத்தர்களான பாலருக்கு விரோதிகளாயினர். நேபாளம், பூட்டான் முதலிய அயல் நாடுகளில் இந்து மதத்தைப் பரப்பப் பிராமண தூதர்களை அனுப்பினான். அவன் மகன் இலட்சுமண சேனன் பட்டத்திற்கு வந்த ஆண்டான. 1119 முதல் ஒரு புது சகாப்தம் ஆரம்பமாயிற்று. அவன் காலத்தில் கீதகோவிந்தம் பாடிய ஜயதேவரும், பவன தூதம் என்னும் காவியத்தை இயற்றிய தோயிக் கவியும் வாழ்ந்தனர். இலட்சுமண சேனனுக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் மாதவசேனன், விசுவரூபசேனன், கேசவசேனன் என்பவர். கேசவசேனன் பல சாசனங்களைப் பொறித்ததோடு பிரயாகை, காசி, பூரி ஆகிய மூன்று ஸ்தலங்களிலும் தன் புகழைக் குறிக்கும் ஸ்தம்பங்களை நாட்டினான். சேனர்கள் கடைசியாக ஆண்டது கல்கத்தாவுக்கு அறுபது மைல் வடக்கேயுள்ள நவத்வீபம்.

கன்னோசி : ஹர்ஷனுக்குப் பிறகு பாஞ்சால நாட்டிலும் கன்னோசியிலும் மிகவும் புகழ்பெற்று ஆண்ட மன்னன் யசோவர்மன் என்பான். 731-ல் இவன் சீனாவுக்கு ஒரு தூது அனுப்பினான். உத்தர ராமசரிதம் முதலிய மூன்று நாடகங்களை எழுதின பவபூதி இவன் ஆஸ்தானத்தை அலங்கரித்தனன். அக் காலத்து மற்றொரு கவி வாக்பதி ராஜன். கௌடவஹோ என்னும் பிராக்ருத காவியத்தில் யசோவர்மன் வங்கநாட்டு அரசனைக் கொன்று, அவன் நாட்டைக் கைப்பற்றித் திரும்பிய வரலாற்றை விரிவாகக் கூறுகிறான். யசோவர்மன் கடைசியில் காச்மீர அரசன் லலிதாதித்திய முக்தாபீடன் என்பவனால் இராச்சியத்தை விட்டு விரட்டப் பட்டான். யசோவர்மன் சந்திரவமிசத்தைச் சார்ந்தவன் என்றும், சந்திரகுப்தன் வழியில் வந்தவனென்றும் கூறுவர். அவனுக்குப்பின் ஆண்ட வஜ்ராயுதனும் மற்றொரு காச்மீர அரசன் ஐயாபீடனால் சிம்மாசனத்தை இழந்தான். அவனுக்குப்பின் ஆண்ட இந்திராயுதன் 783-ல் தன் ஆட்சியை ஆரம்பித்தான். ஆனால் 800க்குப் பின் வங்கதேசத்து அரசன் தர்மபாலனால் தன் இராச்சியத்தைச் சக்ராயுதனுக்கு இழந்த செய்தி முன்னமே கூறப்பட்டது. சக்ராயுதனும் 816-ல் கூர்ஜர அரசன் நாவடனால் இராச்சியத்திலிருந்து விரட்டப்பட்டான்.

பிரதிஹாரர் : எட்டாம் நூற்றாண்டு முதல் வட இந்தியாவின் மேற்பாகத்தில் பல ராஜபுத்திர வமிசங்கள் ஆட்சிபுரியத் தொடங்கின. தற்காலத்து ஆராய்ச்சியாளர் சிலர் கருத்துப்படி இவ்வமிசங்களுக்கும், வெளியிலிருந்து படையெடுத்து வந்து குப்த இராச்சியத்தை அழித்த ஹூணர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அது எப்படியாயினும், ராஜபுத்திர வமிசங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பிரதிகார வமிசம். இதைக் கூர்ஜரப் பிரதிகார வம்சம் என்றும் கூறுவது உண்டு. இவர்கள் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வெகு விமரிசையாக ஆண்டனர். இராமனுக்குச் சகோதரனும் பிரதிகாரர் அதாவது வாயில்காப்பான் ஆகவும் இருந்த இலட்சுமணனுடைய வழித்தோன்றல்களாக அவர்கள் தங்களைக் கருதிவந்தனர். இவ்வமிசத்தை ஸ்தாபித்த I-ம் நாகப்பட்டன் (756) சிந்து நாட்டில் ஆண்ட துலுக்கரைத் தோற்கடித்தான். நான்காவது வங்காள அரசன் வத்சராஜன் (ஆ. கா. 775-800) வங்காள அரசனை வென்றபோதிலும், தட்சிண தேசத்து ராஷ்டிரகூட அரசன் துருவனால் தோற்கடிக்கப்பட்டான். இவன் மகன் II-ம் நாகப்பட்டன் (ஆ.கா. 800-833) தர்மபாலனால் கன்னோசியில் அரசனாக்கப்பட்ட சக்ராயுதனை விரட்டி அந்நகரைத் தன் தலைநகராக்கிக்கொண்டான் (816). அதற்கு முன் அவன் நாடு ராஷ்டிரகூட அரசன் III-ம் கோவிந்தனால் படையெடுக்கப்பட்டது. கூர்ஜரர்-