பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

625

இந்தியா

வன். இவன் உட்பட ஆறு அரசர்கள் 974 வரை ஆண்டபின் சாளுக்கியர்கள் ஆட்சி தொடங்கிற்று. இவ் வமிசத்தை நிறுவிய I -ம் மூலராஜன் (ஆ. கா. 974-995) ஒரு பேரரசன். இவன் ஆபு மலைக்கருகிலுள்ள ராஜபுத்திரர்களையும் சௌராஷ்டிரத்தையும் வென்றான். இவன் சௌஹான அரசன் இரண்டாம் விக்கிரக ராஜனால் போரில் கொல்லப்பட்டான். இவன் மகன் சாமுண்ட ராஜன் (996) தாராநகரத்துப் பரமார அரசன் சிந்து மன்னனைப் போரில் வென்றான். பேரன் பீமதேவன் I -ம் பரமார போஜனை வென்றான். கஜனி மாமூது இடித்துத் தகர்த்த சோமனாதர் கோயிலைத் திரும்பக் கட்டினான். இவன் சந்ததியாருக்கும் பரமார அரசனுக்கும் போர் நிகழ்ந்தது. இவன் பேரன் ஐயசிம்ம சித்தராஜன், பரமார யசோவர் மனைப் பிடித்துச் சிறையிலிட்டான். இவன் ஒரு சிவ பக்தனாய் இருந்தும், சமண ஆசிரியர் ஹேமசந்திரரை ஆதரித்தான். தவிரவும் பல மதஸ்தர்களையும் கூப்பிட்டு, அவர்களுக்குள் விவாதங்கள் நடக்கும்படி ஏற்பாடு செய்தான். அவனுடைய புகழ்பெற்ற மந்திரி பிருதிவிபாலன் அவனுக்குப்பின் ஆண்ட குமார பாலனுக்கும் மந்திரியாக இருந்தான். குமாரபாலன் 1144-ல் ஆளத் தொடங்கி, ஹேமசந்திரரால் சமண மதத்தில் சேர்க்கப்பட்டுப் பரம ஆர்கதன் என்ற பட்டம் பூண்டு ஆண்டுவந்தான். இவன் அஹிம்சா தருமத்தைத் தளர்ச்சியின்றி அனுசரித்தவன். குமாரபாலனுக்குப்பின் அவன் மருமகன் அஜயபாலன் (ஆ. கா. 1172-1176) பட்டம் பெற்றான். அவன் மகன் இரண்டாம் பீமதேவன் 1198 முதல் 1238 வரை ஆண்டான். இவன் துருக்க அரசருடன் பல போர்கள் புரிந்தான். 1195-ல் குத்புதீனைத் தோற்கடித்து அஜ்மீர் வரை விரட்டினான். ஆயினும் 1197-ல் துருக்கர்கள் அன்ஹில்வாராவைக் கைப்பற்ற நேர்ந்தது. அவனுக்குப்பின் அவன் மந்திரியாயிருந்த இலவணப் பிரசாதனுடைய சந்ததியார் இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டின் கடைசிவரை ஆண்டனர். அவர்களை வாகேல வமிசத்தவர் என்பது வழக்கம்.

பரமாரர்கள்: மாளவத் தேசத்தில் தாரா நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பரமார வமிசத்தார் சமஸ்கிருத இலக்கியத்தை ஆதரித்தனர். இவ்வமிசம் பத்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் உபேந்திரன் அல்லது கிருஷ்ண ராஜனால் ராஷ்டிரகூட அரசர்களுக்குக் கீழ் அடங்கிய சிற்றரசாக நிறுவப்பட்டது. ஆறாவது அரசனான II-ம் ஹர்ஷசீயகன் ஹுணர்களுடன் போர் புரிந்ததுமன்றி, ராஷ்டிரகூட நாடுகள் மேலும் படை யெடுத்தான். அவன் சக்கரவர்த்திப் பட்டம் பெற்றான். அவன் மகன் முஞ்சன் ஒரு கவி. பத்ம குப்தன், தனஞ்சயன் முதலிய கவிகளை ஆதரித்தான். ஹுணருடனும், சேதி அரசருடனும் போரில் வெற்றி யடைந்தான். சாளுக்கிய அரசன் இரண்டாம் தைலனுக்கு விரோதமாகப் பலமுறை போர் புரிந்து, கடைசியாக அவனால் சிறையில் இடப்பட்டான். அங்கிருந்து அவன் தப்ப முயன்றதால் 995-ல் கொல்லப்பட்டான். அவனுக்கு உத்பல ராஜன், வாக்பதி என்ற பட்டங்களும் உண்டு. அவனுக்குப்பின் அவன் தம்பி சிந்து ராஜனும், சிந்து ராஜன் மகன் போஜனும் முறையே ஆண்டனர். போஜன் ஆண்டது 1018-1060 வரை. அவன் ஆட்சியை எல்லோரும் புகழ்ந்தனர். ஹூணருடனும், கலியாணி சாளுக்கியருடனும், கஜனி மாமூதுவுடனும் போர் புரிந்து வெற்றி யடைந்தான். 1060-ல் கூர்ஜர அரசனும், சேதி அரசனும் சேர்ந்து அவனைத் தாக்கி வீழ்த்தினர். அதனுடன் அவன் வமிசத்தின் புகழ் குன்றியது. அவனுக்குப்பின் வந்த பரமாரர்கள் பதின் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை ஆண்டனர். பிறகு அவர் நாட்டைத் தோமரும் சௌஹாணரும் முறையே ஆண்டார்கள். போஜன் வானவியல், அலங்காரம், சிற்பம் முதலிய பல கலைகளில் தேர்ந்து, அவைகளில் நூல்களும் இயற்றினான். சரஸ்வதிக்கு ஒரு பெரிய கோவில் கட்டி, அதில் ஒரு சமஸ்கிருத கலாசாலையை அமைத்தான். அது இப்பொழுது முகம்மதியப் பள்ளிவாசலாக இருக்கிறது. போபாலுக்குத் தென்கிழக்கில் உள்ள மலைகளுக்கு நடுவே இருபத்தைந்து சதுர மைல் பரப்புள்ள போஜபுரி ஏரியைக் கட்டுவித்தான். இவ்வேரியின் கரைகள் பதினைந்தாம் நூற்றாண்டில் மாளவத்தை ஆண்ட குஷன்சாவின் ஆணையினால் உடைக்கப்பட்டன. ஏரி இருந்த இடத்தின் நடுவே இப்பொழுது ரெயில் பாதை போகிறது.

சந்தேலரும் சேதி அரசர்களும் : இப்போது புந்தேல்கண்டு எனப்படும் நாடு, முன்னாளில் ஜேஜாகபுக்தி அல்லது ஜஜா ஹுதி எனப் பெயர் கொண்டது. சந்தேல வமிசம் 831-ல் நன்னுகன் என்னும் தலைவனால் பிரதிகாரருடைய உதவியைக் கொண்டு இங்கு நிறுவப்பட்டது. இவ் வமிசத்து ஆறாவது அரசன் ஹர்ஷன், ராஷ்டிரகூட இந்திரன் படையெழுச்சிக்குப் பிறகு பிரதிகார அரசன் மகிபாலனுக்குத் தன் இராச்சியத்தை மீட்க உதவி புரிந்த செய்தி முன்னமே குறிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷன் ஆட்சிக் காலத்தில் சந்தேலர்கள் சுயேச்சையாக ஆளத் தொடங்கினர். அவன் மகன் யசோவர்மனும் பெரிய அரசன்; காளஞ்சரத்தைத் தன் நாட்டுடன் முதலிற் சேர்த்தவன் அவனே. அவனுக்குத்தான் முற்கூறியபடி கன்னோசி அரசன் தேவபாலன் ஓர் அரிய விஷ்ணு விக்கிரகத்தைக் கொடுத்தான். யசோவர்மன் மகன் தங்கன் (ஆ.கா.954-1002) இவ் வமிசத்தாருள் மிகவும் பிரசித்தி பெற்றவன். அவன் நூறு வயதிற்குமேல் வாழ்ந்திருந்தான். கஜராவிலுள்ள நேர்த்தியான கோவில்கள் அவன் கட்டியன. 990-ல் அவன் பஞ்சாப் அரசருடன் சேர்ந்து சபக்டிஜின் என்னும் கஜனி அரசனால் குர்ராம் நதிக்கரையில் தோல்வியடைந்தான். மற்றப்படி இவன் ஆட்சி வெற்றிகரமாகவே இருந்தது. இவன் காலத்தில் சந்தேல இராச்சியம் யமுனை முதல் சேதி வரையும், காளஞ்சர் முதல் குவாலியர் வரையும் பரவி இருந்தது. இவன் மகன் கண்டனும் 1008 - 9-ல் பஞ்சாப் அரசனோடு கஜனி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்டான். இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப்பின் 1019-ல் முற் கூறியபடி இவன் மகன் வித்யாதர தேவன், கன்னோசி அரசனான இராச்சிய பாலன் மாமூதுவின் ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டதற்காக அவனைத் தாக்கினான். ஆனால் 1023-ல் மாமூது, தன் நாட்டின்மேற் படை யெடுத்தபோது காளஞ்சரக் கோட்டையைக் கூட அவன் காப்பாற்றவில்லை. அவன் மகனும் பேரனும் சேதி அரசர்கள் காங்கேயன், கர்ணன் என்பவர்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும்படி நேர்ந்தது. 1054-ல் பட்டம் பெற்ற பதின்மூன்றாம் அரசன் கீர்த்திவர்மதேவன் தன் நாட்டின் சுய ஆட்சியை மீட்டுக் கொண்டான். அவன் ஆட்சியில் 1065-ல் கிருஷ்ணமிசிரகவி எழுதின பிரபோத சந்திரோதயம் என்னும் வேதாந்த நாடகம் அவன் முன் நடிக்கப்பட்டது. 1165 முதல் 1203 வரை ஆண்ட பரமால் எனப்பட்ட பரமர்த்தி தேவனே இவ்வமிசத்துப் பேரரசருள் கடைசியானவன். அவன் 1182-ல் சௌஹாண அரசன் பிருதிவி ராஜனாலும் 1203-ல் காளஞ்சரைப் பிடித்துக்கொண்ட குத்புதீனாலும் தோற்-