பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

629

கள், முஸ்லிம் தலைவர்கள் ஆகியோருடைய வன்மையை அழிப்பது போன்ற நோக்கங்கள் இவனுக்கு இருந்தன. அவற்றையெல்லாம் இவன் நிறைவேற்றிவந்தான். இவன் தான் வெளியிட்ட காசுகளில் II -ம் அலெக்சாந்தர் என்ற விருதைப் பொறித்துக்கொண்டான்.

இவன் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் பல கடுமையான விதிகளைச் செய்தான். பிரபுக்கள் அடிக்கடி கலந்து உறவாடக் கூடாதென்றும், சுல்தானின் அனுமதியின்றி ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளக் கூடாதென்றும் கட்டுப்பாடுகள் செய்தான். அளவிறந்த செல்வச் செருக்கினால் பொதுமக்கள் ஒழுங்கு தவறுவதைக் கண்ட அவன் பொது மக்களிடமிருந்து இயன்ற வழிகளிலெல்லாம் வரிகள் வசூலிக்க உத்தரவிட்டான். இவ்வாறு தங்களிடமிருந்த பொருளில் மிகப்பெரும்பகுதியை அரசாங்க வரி கொடுப்பதன்மூலம் இழந்துவிட்ட பொதுமக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட நேர்ந்ததால் கலகங்கள் செய்ய முற்படவில்லை. நாடெங்கும் ஒற்றர்களை நியமித்துப் பொதுமக்கள், பிரபுக்கள் ஆகியோருடைய செயல்களைக் கவனித்தறியுமாறு இவன் ஏற்பாடு செய்தான். அவர்கள் அடிக்கடி தம்முடைய அறிக்கைகளைச் சுல்தானுக்கு அனுப்பிவந்தார்கள். இம்முறையால் கலகங்களையும் சதிகளையும் வெகு எளிதாக அரசாங்கம் அடக்க முடிந்தது. சாராயம் போன்ற மயக்கம் தரும் பொருள்களும் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டன. இம் மாதிரிச் சீர்திருத்தங்களில் அல்லாவுதீன் தானே தன் விதிகளின் படி நடந்து மற்றவர்கட்கு வழிகாட்டினான். அவன் காலத்தில் இந்துக்கள் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. அவர்கள் ஜசியா என்னும் வரி செலுத்தி வந்தார்கள். நெல், தயிர், பால் போன்ற பொருள்கள் தேவையான அளவுக்குமட்டும் அவர்களுக்குக் கிடைத்தன. அவர்கள் பொருள் சேர்க்கவும் செல்வர்கள் ஆகவும் இயலாமல் செய்யப்பட்டது. அவர்கள் எல்லாவிதமான சுதந்திரங்களையும் இழந்து வாழ்ந்துவந்தார்கள்.

அல்லாவுதீன் தன்னுடைய படைகளைத் திருத்தியமைத்து, அவை கட்டுப்பாடும் ஒழுங்கும் நிறைந்தவையாக்கினான். சேனைகள் சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் நேராகவே கவனித்து வந்தான். போர்க் குதிரைகட்குச் சூடு போடச் செய்ததால் குதிரை வீரர்கள் மாறாட்டம் செய்வதற்கியலாமல் செய்து விட்டான். அக்காலத்திய டெல்லி அரசின் சேனையானது கட்டுப்பாடு பொருந்திய சுமார் 4,75,000 முஸ்லிம் வீரர்களைக் கொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மதத்துக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்யப் பின்வாங்காதவர்கள் எனவும், தங்களுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை உண்மையோடு நிறைவேற்றுபவர்கள் எனவும் பெயர் பெற்றனர். எல்லைப்புற நாடுகளில் கோட்டைகள் பல புதிதாகக் கட்டப்பட்டன. பழைய கோட்டைகள் சீர்திருத்தி யமைக்கப்பட்டன. எல்லைப்புறக் காவலனுக்குத் தக்க தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அல்லாவுதீன் ஆட்சியில் கோதுமை முதலிய தானியங்கள், எண்ணெய், சர்க்கரை, நெய் முதலிய உணவுப் பொருள்கள், ஆடைகள் ஆகியவற்றின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டன. உற்பத்திக்காகும் செல்வோடு சிறிதளவு இலாபம் சேர்த்து ஒரு பொருளின் விலை நிருணயிக்கப்பட்டது. இவ் விலைக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் வசித்த அறிவுடை மக்கள் பொருள்களின் விலை எங்கும் ஒரேமாதிரியா யிருப்பதைக் கண்டு வியந்ததாகவும், இந்நிலை ஒரு பெரிய ஆச்சரியமென்றும் வேறு எந்த அரசனும் இதைச் செய்ய இயலாதென்றும் முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

நிலங்கள் எல்லாம் அளந்து கணக்கிடப்பட்டன. நிலத்தின் விளைச்சலில் பாதியை அரசாங்கம் வரியாகப் பெற்றுக் கொண்டது. இதைத் தவிர வீட்டு வரி, மேய்ச்சல் வரி போன்ற பல வரிகளும் வசூலிக்கப்பட்டன.

அல்லாவுதீன் ஆட்சியின் முற்பகுதியில் மங்கோலியர் படையெழுச்சிகள் நிகழ்ந்தன. 1299-ல் ஏற்பட்ட படையெழுச்சியை ஜாபர்கான் என்னும் படைத் தலைவன் எதிர்த்து, வெற்றி கொண்டு வீர மரணம் எய்தினான். பின்னர் 1304லும் 1307லும் ஏற்பட்ட படை யெழுச்சிகளைக் காசிமாலிக் என்னும் தலைவன் முறியடித்து வெற்றிகொண்டான். 1307 க்குப் பின்னர் மங்கோலியர் படையெடுப்பு எதுவும் நிகழவில்லை. டெல்லி முஸ்லிம் அரசை மங்கோலியர் தொல்லையினின்றும் விடுவித்த பின்னர் அல்லாவுதீன் அதை எங்கும் பரப்புவதில் முனைந்தான். திறமை மிக்க படைத் தலைவர்களுள்ள சேனைகள் பல நாடுகளைக் கைப்பற்ற ஆரம்பித்தன. உலூக்கான், நுஸ்ரத்கான் என்னும் படைத் தலைவர்கள் குஜராத்தை வென்று, அன்ஹில்வாரா, காம்பே, சோமநாதபுரம் ஆகியவற்றைக்கைப்பற்றினர் (1297). சோமநாதபுரம் கோயில் அழிக்கப்பட்டது. இப்படை யெழுச்சியின்போதுதான் காபூர் என்ற அடிமை ஒருவனைப் படைத்தலைவர்கள் விலைக்கு வாங்கினர். இவனே பின்னால் அலாவுதீனுடைய சிறந்த படைத்தலைவனானான். 1301-ல் ரந்தம்போர் என்னும் பகுதியும், 1303-ல் சித்தூரும், 1305-ல் மாளவமும் டெல்லி அரசின் வசமாயின. 1305-ல் அல்லாவுதீன் வட இந்தியப் பேரரசனாக விளங்கினான்.

அல்லாவுதீன் தென்னாட்டை வென்று தனது பேரரசோடு சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தனது வடஇந்தியப் பேரரசுக்குத் தென்னாட்டு அரசுகளால் அபாயம் ஏற்படாமல் தடுக்கவும், அவைகளிடமிருந்து திறை வசூலிக்கவுமே அவன் கருதினான். முன்பே 1294-ல் அவன் தேவகிரியை ஆண்ட யாதவ மன்னன் இராமச்சந்திரனிடமிருந்து திறை வசூலித்திருந்தான். அவன் இப்போது ஒழுங்காகத் திறை செலுத்தாததாலும், வேறு சில காரணங்களாலும், அல்லாவுதீனுடைய படைத்தலைவனாக விளங்கிய மாலிக்காபூர் 1307-ல் தேவகிரி மீது படையெடுத்து வென்றான். யாதவ குல மன்னன் இராமச்சந்திரன் டெல்லி அரசின் சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டு கப்பம் செலுத்தச் சம்மதித்தான். அவன் வாழ்நாள் இறுதிவரையில் டெல்லிப் பேரரசுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்துவந்தான். பின்னர் 1309-ல் மாலிக்காபூர் ஓரங்கல் நாட்டு மன்னன் மீது போர்தொடுத்தான். சிறிதுகாலம் எதிர்த்துநின்றபின் பிரதாபருத்திரன் என்ற காகதீய மன்னன் மாலிக்காபூருக்குப் பணிந்து திறை செலுத்த ஒப்புக்கொண்டான். அவனது நாடாகிய ஓரங்கல் நாடு கொள்ளையிடப்பெற்றது. அதன் பயனாக அளவிறந்த விலைமதிப்புள்ள பொருள்கள் மாலிக்காபூர் வசமாயின. ஆயிரம் ஒட்டகங்கள் அவற்றை டெல்லிக்குச் சுமந்து சென்றன (1310). அதே ஆண்டில் மைசூர்ப் பகுதியை ஆண்ட ஹொய்சௗ III-ம் வீரவல்லாளதேவனும் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டுத் தன் ஏராளமான பொருள்களை இழந்தான். இவ்வாறாக மைசூர் மாலிக்காபூரால் கொள்ளையிடப்பட்டது. இந்நிலையில் பாண்டிய நாட்டில் அரசுரிமைக்காகச் சடையவர்மன் சுந்தரபாண்டியனும் சடையவர்-