பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

631

இந்தியா

பிரோஸ் துக்ளக் (ஆ.கா.1351-1388) முகம்மதுவின் சிற்றப்பன் மகன். தன் சகோதரன் ஆட்சியில் ஏற்பட்ட இன்னல்களைப் போக்கி, மக்களுக்கு நன்மை புரிவதிலேயே அவன் கவனம் செலுத்தினான். முகம்மது துக்ளக்கின் அநீதியான செயல்களால் துன்பமுற்றவர்கட்கு நன்மைகள் செய்தும், அவர்கள் சந்ததியினர்க்குப் பல சலுகைகள் காட்டியும், அவனை மன்னிப்பதாக அவர்களிடமிருந்து கடிதங்கள் வாங்கி, அவற்றையெல்லாம் ஒரு பெட்டியிலிட்டு முகம்மதுவின் கல்லறையில் வைத்தான். இவற்றால் கடவுள் முகம்மது துக்ளக்கைத் தண்டிக்காமல் விடுவார் என்ற நம்பிக்கை பிரோஸ் துக்ளக்குக்கு இருந்தது.

பிரோஸ் நிலவரி முறையைச் சீர்திருத்தி யமைத்து விவசாயிகளுக்குப் பல நன்மைகள் செய்தான். அவன் காலத்தில் நீர்ப் பாசனத்துக்கான கால்வாய்கள் பல புதிதாக வெட்டப்பட்டன. நிலவரி குறைக்கப்பட்டது. நிலவரி சம்பந்தமான சீர்திருத்தங்கள் இன்னும் பல செய்யப்பட்டன. ஒழுங்கீனமான பல வரிகள் ஒழிக்கப்பட்டன. இந்துஸ்தானம் பொன் கொழிக்கும் நாடாயிற்று. விவசாயிகள் சுகமாக வாழவும், சிறிதளவு ஆடம்பர வாழ்க்கை நடத்தவும் வசதி யேற்பட்டது.

இந்துக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் ஜசியா வரி செலுத்த வேண்டியதாயிற்று. பிராமணர் மீதும் இவ்வரி விதிக்கப்பட்டது; ஆனால் அவர்கள் எதிர்த்ததால் அவ் வரி அவர்கட்கு மட்டும் குறைக்கப்பட்டது. சில இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மசூதிகள் கட்டப்பட்டன.

பிரோஸ் துக்ளக் புதிய நகர்கள் அமைப்பதில் விருப்பம் உள்ளவன். பிரோஸாபாத் (புது டெல்லி), ஜான்பூர் ஆகிய நகரங்களையும், பிரோஸாபாத்தில் எட்டு மசூதிகளடங்கிய பெரிய அரண்மனையையும் அவன் கட்டுவித்தான். அவை சிற்பப் புகழ் பெற்றவை. அசோகன் காலத்து இரு தூண்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து அகற்றப்பட்டு, ஒன்று பிரோஸாபாத்திலும், மற்றொன்று டெல்லிக் கருகிலும் நிறுவப்பட்டன. அவனால் வெட்டப்பட்ட யமுனை, சட்லெஜ் கால்வாய்கள் நீர்ப்பாசனத்துக்கு மிகவும் உதவின.

பிரோஸ் துக்ளக், பாரனி போன்ற அறிஞர்களை ஆதரித்துப் போற்றினான். முஸ்லிம் பள்ளிகளை அமைத்தான். டெல்லியில் பொது மக்களுக்கென மருத்துவச் சாலை யொன்றை யமைத்தான். ஏழைகட்கு உதவி புரியவும், வேலை யில்லாமல் வருந்துபவர்கட்கு வேலையளிக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்தான். பழைய ஜாகீர் முறையையும் அவன் புதுப்பித்தான். கடைக்காலத்தில் அவன் மகன் முகம்மது ஒழுங்காக இல்லாததால் தன் பேரன் துக்ளக் ஷா என்பவனைத் தன் வாரிசாக நியமித்து 1388-ல் இறந்தான்.

துக்ளக் ஷா விரைவில் பட்டமிழந்து மறைந்தான். பின்னர் பிரோஸ் துக்ளக்கின் மகன் முகம்மது ஷா சிறிது காலம் ஆண்டு 1394-ல் இறந்தான். பின்னர் அவன் மகன் இக்பால்கான் என்பவன் உதவியால் ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சிக் காலத்தில்தான் தைமூர் படை யெடுத்துவந்து பல அட்டூழியங்களை இந்தியாவில் நிகழ்த்தினான் (1398-1399). அதற்குப் பின்னர் துக்ளக் வமிசத்தினர் மிகச் சுருங்கிய நிலையில் 1412 வரை ஆண்டு அழிந்தனர். பின்னர்ச் சில பிரபுக்கள் 1414வரை அதிகாரஞ் செலுத்தினார்கள். 1414-ல் சையத் வமிசம் டெல்லியில் ஆள ஆரம்பித்தது.

தைமூர் (1336-1405) மத்திய ஆசியாவில் சாமர்க்கண்டு பகுதியை ஆண்டு வந்தவன். அவன் பாரசீகம், ஆப்கானிஸ்தானம், மெசபொட்டேமியா முதலியவற்றைக் கைப்பற்றியபின் இந்தியாமீதும் படையெடுக்க விரும்பினான். டெல்லிப் பேராசின் குழப்பமான நிலை அவன் விருப்பம் நிறைவேறுவதற்குச் சாதகமாய் அமைந்தது. 1398-ல் சிந்து நதியைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து, பல நகரங்களைக் கைப்பற்றி டெல்லியை நோக்கிச் சென்றான். கடும் போருக்குப்பின் டெல்லியைக் கைப்பற்றி, ஐந்து நாட்கள் அதைக் கொள்ளைவிட்டான். பலவாறு குடிகளைத் துன்புறுத்தினான் இரண்டு வாரங்கள் கழித்து ஹரித்துவாரம், மீரட், ஜம்மு ஆகியவற்றின் வழியாகத் திரண்ட பொருளோடும் சிறைப் படுத்தப்பட்ட சிற்பிகளோடும் சாமர்க்கண்டு திரும்பினான். டெல்லி தன் பழம்பெருமை யனைத்தும் இழந்து சிறுமையுற்றது. பஞ்சமும் நோயும் எங்கும் பரவின. தைமூர் சென்ற வழியெல்லாம் குடிகள் கொள்ளையிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அளவற்ற அல்லல்கட்கு உள்ளாயினர்.

கிசிர்கான் என்பவன் சையத் வமிசத்து முதல் அரசன். அவன் தைமூர்ப் படையெடுப்பின்போது அவனோடு ஒத்துழைத்தவன். தைமூருடைய பிரதிநிதியாக இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட அவன் 1414-ல் டெல்லியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தான். சையத் என்பது முகம்மது நபியின் வழி வந்தவன் என்னும் பொருள் கொண்டதாகும். கிசிர்கான் தன்னை முகம்மது நபியின் வழி வந்தவன் என்று கூறிக்கொண்டதால் அவன் வமிசத்தினர் சையத் வமிசத்தவர் எனக் கூறப்படுகிறார்கள். அரசபதவிக் குரிய பட்டம் எதுவும் புனைந்து கொள்ளாமல் தைமூருடைய பிரதிநிதியாகவே 1421 வரை அவன் ஆண்டு வந்தான்.

முபாரக்ஷா (ஆ. கா. 1421-34), முகம்மதுஷா (ஆ. கா.1434-45), ஆலம்ஷா (ஆ. கா. 1445-51) என்பவர்கள் அவன் சந்ததியினர் ஆவர். 1451-ல் லாகூர் கவர்னரான பாஹ்லால் லோடி ஆலம்ஷாவைத் தோற்கடித்து டெல்லி மன்னன் ஆனான். ஆகவே 1451-ல் சையத் வமிச ஆட்சி முடிவுற்றது. அதன் பிறகு லோடி வமிசம் டெல்லியில் ஆண்டது.

அவ் வமிசத்து முதல் மன்னனான பாஹ்லால் லோடி (ஆ. கா. 1451-1489) ஆப்கானியர்களில் லோடி என்னும் வகுப்பைச் சேர்ந்தவன். முதல் ஆப்கானிய அரசை அவன் டெல்லியில் ஏற்படுத்தினான். அவனுக்கு நேர்மை, பக்தி, இரக்கம் முதலிய நற்குணங்கள் இருந்தன. அவனுக்குப் பிறகு பட்டமெய்திய சிக்கந்தர் லோடி (ஆ. கா. 1489-1517) காலத்தில் டெல்லி அரசு பஞ்சாபிலிருந்து பீகார்வரை பரவியிருந்தது. அவன் திறமையோடு ஆண்டபோதிலும் இந்துக்கள்மீது கொடுங்கோலாட்சி செலுத்தினான். அவர்களுடைய கோயில்கள் இடிக்கப்பட்டன.

சிக்கந்தரின் மூத்த மகனான இப்ராகீம் லோடி (ஆ. கா.1517-1526) தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்த விரும்பிப் பிரபுக்களைக் கொடுமையாக நடத்தினான். இவன் மேவார்மீது படையெடுத்து அதை வென்றான். பிரபுக்கள் நாடெங்கும் கலகம் செய்தனர். பீகார் சுயேச்சை யடைந்தது. லாகூர் கவர்னரான தௌலத்கான் லோடி என்பவன் இந்தியா மீது படை யெடுக்குமாறு பாபரை அழைத்தான். அவ்விதமே பாபர் படையெடுத்து வந்து, 1526-ல் பானிப்பட்டுப் போரில் இப்ராகீம் லோடியை வென்று கொன்றான். அதனோடு லோடி வமிசம் முடிவடைந்து, மொகலாயர் ஆட்சி வட இந்தியாவில் ஏற்பட்டது. எஸ். தி.