பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

632

இந்தியா

கி. பி. 1526-1858 : கி. பி. 1526 முதல் 1556 வரை உள்ள காலப் பகுதியில் மொகலாயர்களும் ஆப்கானியரும் இந்தியாவில் ஆதிக்கம் வகிப்பதற்காகத் தமக்குள் போராடினர். தைமூர் மரபில் வந்த பாபர், வட இந்தியாவைக் கைப்பற்றிப் புதிய துருக்கியர் (மொகலாயர்) அரசுக்கு வழிகோலினான். அந்த அரசு அவன் மகன் ஹுமாயூன் காலத்தில் அழிந்து மீண்டும் 1556-ல் ஏற்பட்டது. ஹுமாயூன் புதல்வன் அக்பர் படிப்படியாக அவ்வரசை வட இந்தியா முழுதும் பரப்பினான்.

பாபர் தந்தைவழியில் தைமூரையும் தாய்வழியில் செங்கிஸ்கானையும் சேர்ந்தவன். இளம்பருவத்தில் பல அல்லல்களை அனுபவித்த அவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களைத் துணிவோடு எதிர்த்துப் போராடுவதற் கேற்ற மனப்பண்புடையவனாயிருந்தான். சாமர்கண்டை வென்று தன்னடிப் படுத்த முயன்றதில் தோல்வியுற்ற பாபர் ஓராண்டு தனது சொந்த நாட்டையும் இழந்து நின்றான். இந்நிலையில்தான் இந்துஸ்தானத்தை வெல்ல வேண்டும் என்னும் ஆவல் அவனுக்குண்டாயிற்று. சில ஆண்டுகள் கழித்துக் காபுல் அவன் வசமாகியது.

இந்தியாவில் டெல்லி அரசின்கீழிருந்த பல பிரபுக்களும் ராஜபுத்திர மன்னனாகிய ராணா சங்கிராம் சிங்கும் பாபரோடு தொடர்புகொண்டு, இந்தியாமீது படையெடுக்குமாறு அவனுக்கு ஆலோசனைகள் கூறிவந்தனர். அவற்றின்படி பாபர் 1525-ல் காபுலினின்றும் புறப்பட்டுப் பஞ்சாபை வசப்படுத்தி, டெல்லியை நோக்கி முன்னேறினான். லோடி வமிசத்து மன்னன் இப்ராகீம் தனது பெரும்படையோடு 1526 ஏப்ரல் 21-ல் பானிப்பட்டுப் போர்க்களத்தில் மொகலாயப்படையை எதிர்த்தான். தன்னுடைய சிறந்த தலைமையினாலும், போர் முறைகளாலும், பீரங்கிப்படையாலும் பாபர் எதிரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றான். இப்ராகீம் லோடி போர்க் களத்தில் இறந்தான். பாபர் விரைவில் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினான். லோடி வமிசத்தினர் வீழ்ச்சியினால் மட்டும் இந்துஸ்தானம் பாபர் வசமாகி விடவில்லை. பானிப்பட்டுப் போருக்குப் பின்னர் தான் பாபர் மொகலாயப் பேரரசை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டான். பல ஆப்கானியத் தலைவர்களையும் ராஜபுத்திரர்களையும் அடக்கினால் தான் அதுமுடியும் என்று அவன் உணர்ந்தான். அவர்களோடு நிகழ்த்திய போரில் பாபரின் வீரர்கள் ராஜபுத்திரர்களை அடியோடு தோற்கடித்தார்கள். 1527-ல் நடந்த கான்வாப்போரில் ராணா சங்கர் படுதோல்வியுற்றுப் போர்க் களத்தினின்றும் தப்பியோடி, மனமுடைந்து சில ஆண்டுகளில் இறந்தான்.

ராஜபுத்திரர்களை வென்றபின் பாபர் ஆப்கானியத் தலைவர்களை முறியடிக்க முற்பட்டான். கோக்ரா ஆறு கங்கையோடு கலக்குமிடத்துக் கருகில் 1529 மே 6ஆம் நாள் நிகழ்ந்த கடும்போரில் பாபர் ஆப்கானியரை வென்றான். இதன் விளைவாக வட இந்தியாவில் பெரும் பகுதி பாபர் வசமாயிற்று. ஆக்சஸ் ஆறுமுதல் கோக்ரா வரையிலும், இமயமலை முதல் குவாலியர் வரையிலும் அவனது அரசு பரவிற்று.

ஆயினும் பாபர் தனது அரிய முயற்சிகளின் நற்பயனை நீண்டகாலம் அனுபவிக்க இயவில்லை; 1530-ல் ஆக்ராவில் இறந்தான்.

பாபருக்குப் பின் பட்டம்பெற்ற ஹுமாயூன் (ஆ. கா. 1530-40; மறுபடியும் 1555-56) போதுமான அளவு ஆளும் திறனும் போர்த்திறனும் பெற்றிருந்தான். தன் தந்தை நடத்திய போர்களில் அவனும் கலந்து கொண்டான். அவனது ஆட்சியின் முற்பகுதியில் புதிதாக ஏற்பட்ட அன்னிய அரசு நன்றாக வலுப்பெறவில்லை. ஹுமாயூன் தன் சகோதரர்களாகிய காம்ரான் முதலியவர்களோடும், ராஜபுத்திரர்களோடும், ஷெர்கான் என்னும் ஆப்கானியத் தலைவனோடும், குஜராத் சுல்தான் பகதூர்ஷாவோடும் போராட வேண்டி ஏற்பட்டது. அப்போராட்டங்களில் எல்லாம் அவன் தனது உறுதியற்ற தன்மையாலும், உலகவின்பங்களில் செலுத்திய அளவிறந்த விருப்பத்தாலும் தோல்வியடைய நேரிட்டது. சிற்சில வெற்றிகள் பெற்றபோதிலும், தொடர்ந்து எதிரியை முறியடிப்பதில் போதிய கவனம் காட்டாததனால், எதிரிகள் வலுப்பெற்று அவனைத் தோற்கடித்தனர். பகதூர்ஷாவோடு நடத்திய போராட்டத்தில் அவன் உறுதியோடு நின்று எதிரியின் வலுவை அழிக்காததால் இறுதியில் மாளவத்தையும் குஜராத்தையும் இழக்க நேர்ந்தது. ஷெர் கானுடன் நடத்திய போராட்டத்திலும் தீவிரம் கொள்ளாததால், ஷெர்கான் ஹுமாயூனை 1539-ல் சௌசாவிலும், 1540-ல் முடிவாகக் கன்னோசியிலும் தோற்கடித்து, ஆக்ரா, டெல்லி ஆகிய இடங்களைக் கைப்பற்றினான். ஹுமாயூன் நாடிழந்து 1540 முதல் 1555 வரை பல அல்லல்களை அனுபவித்தான். இக்காலத்தில் 1542-ல் அவனுடைய மகனான அக்பர் அமரக் கோட்டையில் பிறந்தான். பின்னர் ஹுமாயூன் பாரசீகம் சென்று, அந்நாட்டு மன்னனுடைய ஆதரவைப் பெற்று அங்கே தங்கியிருந்தான். சிறிது சிறிதாகக் காந்தகார், காபுல் முதலியவற்றைக் கைப்பற்றியபின், 1555-ல் இந்தியாமீது படையெடுத்து, சர்ஹிந்து என்னுமிடத்தில் டெல்லி சுல்தானை வென்று, டெல்லி, ஆக்ரா இவற்றைக் கைப்பற்றிச் சுமார் ஆறுமாதங்கள் மட்டும் அரசாண்டு 1556-ல் இறந்தான்.

1540 முதல் 1555 வரை டெல்லியில் ஆப்கானியர் ஆட்சி மீண்டும் நடைபெற்றது. ஷெர்கான் சிறந்த வெற்றிகள் பெற்று, ஆப்கானிய அரசை மீண்டும் வட இந்தியாவில் ஏற்படுத்தினான். அவனும் அவன் சந்ததியினரும் 1540 முதல் 1556 வரை வட இந்தியாவில் பற்பல இடங்களில் ஆட்சிபுரிந்து வந்தனர். 1556-ல் இறுதியாக அவர்கள் இரண்டாவது பானிப்பட்டுப் போரின் பயனாக அதிகார மிழந்தனர்.

சக்கரவர்த்திஷெர்ஷா (ஆ.கா. 1539-1545) நீண்ட காலம் தனது பேரரசை ஆளவில்லை. ஆயினும் அவன் வகுத்துக் கையாண்ட பல அரசியல் திட்டங்கள் பின்னர் மொகலாயராலும் ஆங்கிலேயராலும் கையாளப்பட்டன. ஆங்கிலேயருடைய இந்திய அரசியலைக் கூர்ந்து நோக்கினால் ஷெர்ஷா காலத்திய முறைகள் பல அதில் செறிந்து கிடப்பதைக் காணலாம்.

அவனுடைய பேரரசானது பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப் பெறாமல், சிறு சிறு சர்க்கார் (ஜில்லா) களாகவும், பர்கனாக்களாகவுமே பிரிக்கப்பட்டிருந்தது. பல கிராமங்கள் சேர்ந்த ஒரு தொகுதி ஒரு பர்கனாவாகும்.

குடிமக்களிடமிருந்து வரி வசூலிப்பதில் ஷெர்ஷா சிறந்த முறைகளைக் கையாண்டான். உழவர்களைக் கருணையோடு நடத்துவதனால் வரும் நன்மையை அவன் உணர்ந்தவனாதலின் அவர்களிடமிருந்து அநீதியான வரிகள் வசூலிக்கவில்லை. தேவையானபோது உழவர்கட்கு அவன் அரசாங்கம் கடன் கொடுத்து உதவியது. உத்தியோகஸ்தர்களுக்கு மாதச் சம்பளத்துக்குப் பதிலாக ஜாகீர்கள் அளிக்கும் முறையை அவன் வெறுத்தான். அவனுடைய நிலவரித் திட்டத்தைத்தான்