பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

633

இந்தியா

பிற்காலத்தில் அக்பரும் ஆங்கிலேயரும் கையாண்டனர். ஆங்கிலேயர் அம் முறைக்கு ரயத்துவாரி முறை எனப் பெயரிட்டனர். சிறந்த நிலப் படையொன்றையும் ஷெர்ஷா திரட்டி யிருந்தான்.

வர்த்தகம் பெருகுவதற்காக இன்றியமையாத சுங்கம் போன்ற சில வரிகளைத் தவிர வேறு வரிகளையெல்லாம் ஷெர்ஷா நீக்கினான். வர்த்தகர்களுக்காகவும் பிரயாணிகளுக்காகவும் நீண்ட சாலைகள் அமைக்கப்பட்டன. வங்காளத்திலிருந்து பஞ்சாபுக்கும் லாகூரிலிருந்து மூல்தானுக்கும் செல்லும் சாலைகள் போன்ற சில இவற்றில் முக்கியமானவை. வழிப் போக்கர் தங்குவதற்காகச் சுமார் 1,700 விடுதிகள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. புதுமுறையான நாணயங்கள் சில வெளியிட்டு, இந்திய நாணய வரலாற்றில் அவன் சிறந்ததோர் இடம் பெற்றான். அவன் வெளியிட்ட வெள்ளி ரூபாய் 178 குன்றிமணி நிறையுள்ளதாகும். தற்காலத்தில் வழங்கும் ரூபாய் நாணயத்துக்குத் தந்தை யென்று அவனைக் கூறலாம்.

உறவினர், நண்பர் என வேறுபாடு காட்டாமல் எல்லோருக்கும் குற்றத்திற்கேற்ற தண்டனை வழங்கிய ஷெர்ஷாவின் நீதி வழுவா முறை மிகவும் பாராட்டற்குரியது.

மொகலாயர் வரலாற்றில் அக்பர் ஆண்ட காலம் (1556-1605) மிகச் சிறப்புடையது. அந்தப் பேரரசை நன்றாக நிறுவிப் பல துறைகளிலும் அதை வலுப்பெறுமாறு செய்த பெருமை அக்பருக்கு உரியதாகும். அவன் வரலாற்றை அறிவதற்கு அபுல் பசல் எழுதியுள்ள அயினி அக்பரி போன்ற நூல்கள் மிகவும் உதவுகின்றன.

ஹுமாயூன் இறந்த பின்னர் அக்பரின் நெருங்கிய உறவினனாகிய பைராம்கான் அக்பருக்கு அமிர்தசரஸுக்கு அருகில் முடி சூட்டினான். அக் காலத்தில் வட இந்தியாவில் காச்மீரம், ராஜபுதனம், சிந்து, வங்காளம், கூர்ஜரம், மாளவம் முதலியவை சுயேச்சையாயிருந்தன. ஆப்கானிய வமிசத்தைச் சேர்ந்த முகம்மது ஆதில்ஷாவும், சிக்கந்தர் ஷா போன்றவர்களும் வலிமையோடு இருந்தனர். முகம்மது ஆதில்ஷாவின் மந்திரி ஹேமூதான் மொகலாயர்களின் உண்மை எதிரியாயிருந்தான். பல போர்களில் வெற்றியடைந்த அவன் விக்கிரமாதித்தன் என்னும் பட்டம் புனைந்துகொண்டு விளங்கினான். ஆக்ரா, டெல்லி ஆகியவற்றை அவன் கைப்பற்றினான். அவனோடு போர் புரிந்து, அவன் வலிமையை ஒழிப்பது பைராம்கானின் முதற் கடமையாயிற்று. 1556-ல் நடந்த இரண்டாவது பானிப்பட்டுப் போரில் அக்பர் ஹேமூவை முறியடித்துக் கொன்றான். இந்த இரண்டாவது பானிப்பட்டுப் போரால் வடமேற்கிந்தியாவில் அக்பர் ஆட்சி நிலைபெறுவதற்கும், பாபரால் நிறுவப்பட்ட மொகலாயப் பேரரசு மீண்டும் ஏற்படுவதற்கும் வழியாயிற்று. அக்பருடைய பிற எதிரிகள் வலியற்று ஒழிந்தனர்.

அக்பர் ஆதரவற்றிருந்த நிலையில் பேருதவி புரிந்து சிறந்த தொண்டு செய்த பைராம்கான் விரைவில் மதிப்பிழந்து வாட நேரிட்டது. இருவருக்குமிடையில் வேறுபாடுகள் பெருகின. பதவியினின்றும் விலகி அமைதியோடு வாழ்வதற்குப் பைராம்கான் ஒருப்படவில்லை. அக்பருக்கெதிராகக் கலகம் செய்து முறியடிக்கப்பட்டபின் நாட்டைவிட்டு அகலுமாறு உத்தரவு பிறந்தது. அவ்வாறே மெக்கா நோக்கிப் பைராம்கான் செல்லுகையில், 1561-ல் எதிரி யொருவனால் கொல்லப்பட்டு இறந்தான். பின்னர் அக்பர் தானே ஆள ஆரம்பித்தான்.

அக்பர் பட்டம் பெற்ற சுமார் 20 ஆண்டுகளுக்குள் வட இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஆனான். ராஜபுதனத்தில் பெரும்பகுதி, கோண்டுவானா, மாளவம், கூர்ஜரம், வங்காளம், பீகார், காச்மீரம், சிந்து, ஒரிஸ்ஸா, பலூச்சிஸ்தானம், காந்தகார் ஆகியவை மொகலாயப் பேரரசில் சேர்க்கப்பட்டன. தக்கணத்தில் பேரார், அகமத்நகர், கான்தேசம் ஆகியவையும் 16ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அக்பர் வசமாயின. அகமத் நகரோடு நிகழ்ந்த போராட்டத்தில் II-ம் பர்ஹான் நையாம் ஷாவின் சகோதரியும், பிஜாப்பூர் சுல்தான் I-ம் அலி ஆதில்ஷாவின் மனைவியுமாகிய சாந்த் பீபீ மிகவும் தீரத்தோடு போர் புரிந்து புகழ்பெற்றாள். ஆனால் கடைசியில் அவள் பீராரை மொகலாயருக்கு அளிக்க நேரிட்டது. பின்னர் உள்நாட்டில் இருந்த சில பகைவரால் அவள் கொல்லப்பட்டாள். கோண்டுவானாவோடு நிகழ்ந்த போரில் இராணி துர்க்காவதி மிகவும் வீரத்தோடு போர்புரிந்தாள். மேவார் (மேவாட்) நாட்டு மன்னனாகிய பிரதாபசிம்மன் மட்டும் அக்பருக்குப் பணியாமலும் அவனோடு மணத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை வெறுத்தும் வந்தான். 1576-ல் ஹால்டி காட் கணவாயில் அவன் பெருந்தோல்வியுற்றும் மனந்தளரமால் விடாமுயற்சி செய்து, தனது நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றினான். 1597-ல் அவன் இறக்கவே மேவார் வரலாற்றின் மிகச் சிறந்த பகுதி முடிவடைந்தது.

அக்பருடைய பேரரசு மிகப்பரந்ததாகும். அப்பேரரசை ஆளுவதற்கு அக்பர் ஓர் ஆட்சிமுறையை வகுத்துக் கொண்டான். அம்முறை பெரும்பாலும் அவன் ஆட்சிக்கு முன் வழங்கிய முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி முறையைத் தழுவியிருந்தது. இவ்விரண்டுக்கும் இடையே சிற்சில மாறுபாடுகள் உண்டு. அவ்வாட்சி முறை இந்திய நிலைக்குத் தக்கபடி மாற்றியமைக்கப்பட்ட பாரசீக-அராபிய ஆட்சி முறை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் வரி வசூலிப்பதிலும், அமைதி நிலைநாட்டுவதிலும் மட்டும் ஈடுபடாமல் கலைகளை வளர்ப்பதிலும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்திற்று. மன்சப்தாரி முறை என்பது இவ்வாட்சி முறையில் ஒரு பகுதியாகும். இதன்படி மன்சப்தார் எனப்படுபவர்கள் பத்து முதல் பதினாயிரம் வரையில் குறிப்பிட்ட அளவு குதிரை வீரர்களை வைத்திருக்க வேண்டும். அரசாங்கம் விரும்பும்போது அவ்வீரர்களைப் போருக்கு அனுப்பவேண்டும். இதற்கென்று அரசாங்கம் அவர்கட்கு மாதச் சம்பளம் கொடுத்து வந்தது. இந்த மன்சப்தாரி அமைப்பில் எழுபது சதவிகிதம் வேற்று நாட்டினரும், பதினைந்து சதவிகிதம் இந்திய முஸ்லிம்களும், மீதமுள்ள பகுதி ராஜபுத்திரர்களும் இருந்தனர். 8,000, 10,000 குதிரை வீரர்களைக் கொண்ட படைப் பதவிகள் அரச குடும்பத்தினருக்கே அளிக்கப்பட்டன. தோடர்மால், மான்சிங் போன்றவர் 7.000 குதிரை வீரர் கொண்ட படைகட்குத் தலைவர்களாக விளங்கினர். சாதாரணமாக 5,000 குதிரை வீரர் கொண்ட படைக்குத் தலைமையே உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்பதவிகளின் உயர்வுக்குத் தக்கபடி உமாரா, அமீர்சி ஆசம் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் மிகச் சிறந்தவர்கள் அமீர் உல் உமாரா (பிரபுக்களின் தலைவன்), கான்கானன் என்னும் பட்டம் பெற்றுச் சிறப்புற்றனர். மத்திய அரசாங்கத்தில் முதல் மந்திரி, பொருளாதார மந்திரி, ராணுவ அதிகாரி, தலைமை நீதிபதி, மத இலாகா அமைச்சர் போன்றவர்கள் அதிகாரம் வகித்தனர். இம்மந்திரிகள்