பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

642

இந்தியா

(Cabinet Mission) எவ்வளவு முயன்றும் ஒற்றுமையை நிலவச் செய்ய முடியாமற் போனதால், பெரும்பான்மை முகம்மதியர்கள் அடங்கிய சில இந்தியப் பகுதிகளைச் சேர்த்துப் பாகிஸ்தான் என்னும் தனி நாடு ஏற்படுத்தப்பட்டது. 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு, இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு தனி நாடுகள் ஏற்பட்டன. இந்தியாவில் காங்கிரசுக் கட்சி பதவியேற்று ஆண்டு வந்தது. அரசியல் திட்டம் அமைக்கும் பொருட்டு உருவாகியிருந்த அரசியல் நிருணய சபையின் பெருமுயற்சியால் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி அச் சட்டம் அமலுக்கு வந்தது.

போர்களும், வெளிநாட்டுத் தொடர்பும், ஆப்கானிஸ்தானமும்: 1858க்குப் பின் இந்திய அரசாங்கம் அருகிலுள்ள சில நாடுகளோடு போர் புரியவேண்டி வந்தது. ரஷ்யாவைப்பற்றி ஆங்கிலேயருக்கிருந்த அச்சமே இதற்குக் காரணம். இதுபற்றியே ஆப்கானிஸ்தானத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்றனர். கவர்னர் ஜெனரல் ஆக்லந்து காலத்தில் ஆப்கானிய அரசராயிருந்த தோஸ்த்து முகம்மது பதவியினின்றும் அகற்றப்பட்டு, 1838-ல் அவர் தம்பியான ஷாஷூஜா அமீராக்கப்பட்டார். ஆனால், ஆப்கானிய மக்கள் கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் படையைத் துரத்தி விட்டனர்.

லிட்டன் பிரபு வைசிராயாயிருந்தபோது (1876-80) இரண்டாவது ஆப்கானிய யுத்தம் மூண்டது. அப்போது ஆப்கானிய அரசராயிருந்த ஷெர் அலி ரஷ்யாவோடு நட்புக்கொள்ளக் கூடுமென்ற அச்சம் லிட்டன் பிரபுவுக்கு ஏற்பட்டது. ஆகவே, பிரிட்டிஷ் ஸ்தானீகர் ஒருவரைக் காபுலில் ஷெர்அலி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று லிட்டன் பிரபு வற்புறுத்தினார். அவரது வற்புறுத்தலுக்கு ஷெர் அலி இணங்காததால் பிரிட்டிஷ் படை காபுல்மீது படையெடுத்தது. ஷெர் அலி உடனே நாட்டைவிட்டு ஓடினார். பிரிட்டிஷார் ஷெர் அலியின் மகன் யாகூப் கானை அமீராக நியமித்தனர். அவரும் பிரிட்டிஷாருடன் நட்புடன் நடந்து கொள்வதாகவே ஒப்புக்கொண்டார். ஆனால், ஒரு மாதத்திற்குள் ஆப்கானியர் கிளர்ச்சிசெய்து, பிரிட்டிஷ் ஸ்தானிகரைக் கொலை செய்தனர். மீண்டும் ஒருமுறை பிரிட்டிஷ் படை ஜெனரல் ராபர்ட்ஸின் தலைமையில் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுத்தது. யாகூப் திறமையற்றவராகக் காணப்பட்டதால், அவர் அமீர் பதவியினின்றும் அகற்றப்பட்டார். தகுதியுள்ள அமீர் ஒருவரை நியமிப்பது எளிதாகக் காணப்படவில்லை. முடிவில் ஷெர் அலியின் மருமகன் அப்துல் ரஹ்மானை ஆங்கிலேயர் அமீராக்கினர். ரஹ்மானும் (1881-1901) அவர் மகன் ஹபீபுல்லாவும் (1901-1919) அவரவர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருடன் நட்பினராகவே இருந்துவந்தனர்.

1919-ல் அமானுல்லா அமீரானார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிய வேண்டுமென்ற விருப்பம் ஆப்கானியரிடம் மிகுதியாயிருந்தது. ஆகவே அமானுல்லா இந்தியாவோடு போர் செய்யத் துணிந்தார். பிரிட்டிஷ் படை ஆப்கானிஸ்தானத்துக்குள் புகுந்தது. ஆகாய விமானங்கள் காபுல்மீதும் ஜலாலாபாத்மீதும் குண்டுகள் வீசின. இதனை எதிர்த்து நின்று போர்செய்ய இயலாமல், அமீர் வெகு விரைவில் உடன்படிக்கை செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். அவர் அமீராக இருத்தலை ஆங்கிலேயர் ஏற்றுக்கொண்ட போதிலும், இந்தியாவின் வழியாக யுத்த தளவாடங்களை ஆப்கானிஸ்தானத்துக்குக் கொண்டுசெல்ல அனுமதியளிக்க மறுத்தனர். ஆனால் பின்னர் 1923-ல் நடைபெற்ற சமரச ஒப்பந்தப்படி இந்தத் தளவாடக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

இதனிடையே 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆப்கானிஸ்தானத்தின் தென் பகுதியில் வாழ்ந்திருந்த ஆப்ரீடிகள் வசீரிகள் போன்றவர்களை அடக்குவதற்குப் பற்பல படையெடுப்புக்கள் நடத்தவேண்டி வந்தது. 1893-ல் அவர்களை இந்திய அரசாங்கம் தனது மேற்பார்வைக்கு உட்படுத்தியது. ஆனால் பின்னும் அவர்கள் சச்சரவுகள் நின்றபாடில்லை. ஆகவே, பிரிட்டிஷார் அடிக்கடி படை யெடுக்க வேண்டி வந்தது. கர்சன் பிரபு ஆப்கானிய நாட்டு மலைக்கூட்டத்தாரிலிருந்தே ஒரு படையைத் தயாரித்து அமைதியை நிலவச் செய்தார். கடைசியாக அவர் சிந்துநதியின் வடபாகம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணமாக ஒரு தலைமைக் கமிஷனரின் கீழ் அமைத்தார். இவ்வித ஏற்பாடுகள் எவ்வளவு செய்யப்பட்ட போதிலும் 1925லும் 1930லும் சச்சரவுகள் ஏற்பட்டன.

திபெத்து : இந்நாடு பெயரளவில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது. 1898-ல் திபெத்து மன்னராகிய தலைலாமா சீனாவிடமிருந்து விடுதலைபெற எண்ணி ரஷ்யாவுக்கு ஒரு தூது அனுப்பினார். ரஷ்யாவின் செல்வாக்குத் திபெத்தில் ஏற்பட்டால் இந்தியாவுக்குத் தீங்கு நேரக்கூடுமென்று அஞ்சிய கர்சன் பிரபு உடனே பிரான்சிஸ் யங்ஹஸ்பண்டு என்பவர் தலைமையில், திபெத்துக்கு ஒரு தூது அனுப்பினார். இதற்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் ஒரு சிறு சேனையையும் அனுப்பினார். இறுதியில் திபெத்தோடு பிரிட்டிஷார் 1904-ல் லாசா என்னுமிடத்தில் ஓர் உடனபடிக்கை செய்துகொண்டார்கள். இதன்படி திபெத்து யுத்தத்தை நிறுத்தும் பொருட்டு ஒரு தொகை கொடுக்க வேண்டுமென்பதுடன், அந்நாட்டின் வெளிநாட்டு விவகாரங்களும் பிரிட்டிஷாரின் வசமே ஒப்புவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஸ்தானிகர் ஒருவரும் லாசாவில் அமர்த்தப்பட்டார். ஆனால், திபெத்துடன் கர்சன் பிரபு செய்து கொண்ட இவ்வொப்பந்தம் அக்கிரமச் செயலேயாகும்.

பர்மா : முதல் பர்மிய யுத்தம் நடந்ததில் 1826-ல் யாண்டபூ ஒப்பந்தப்படி ஆங்கிலேயருக்கு அஸ்ஸாம், அரக்கான், தெனாசரீம் என்னும் நாடுகள் கிடைத்தன. டால்ஹௌசி பிரபுவின் காலத்தில் பர்மிய அரசர் யாண்டபூ ஒப்பந்தத்தை நிராகரித்து, ஆங்கிலேய வியாபாரிகளுக்குப் பல இடையூறுகளும் உண்டாக்கினார். மேலும், பர்மாவுக்கு அனுப்பியிருந்த பிரதிநிதியை அவமதித்துத் துரத்தினார். டால்ஹௌசி பிரபு சமரசமாகவே சச்சரவைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் லாம்பர்ட்டு என்பவரைத் தூது அனுப்பினார். ஆனால் பர்மிய அரசர் லாம்பர்ட்டையும் அவமதித்ததால் சண்டை தொடங்கிற்று. டால்ஹௌசி பிரபு போரை ஊக்கமாய் நடத்தினார். இது தான் இரண்டாவது பர்மா யுத்தமாகும். விரைவில் ரங்கூன், பிரோம், பெகு என்னுமிடங்களைப் பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றிக் கீழ்ப்பர்மாவைப் பிரிட்டிஷ் வல்லரசுடன் இணைத்துக்கொண்டன.

டபரின் பிரபு வைசிராயாக இருந்தபோது (1884-88) மூன்றாவது பர்மிய யுத்தம் நடைபெற்றது. பர்மாவில் தொழில் நடத்திவந்த ஒரு வர்த்தகக் கம்பெனிக்கும் பர்மிய அரசருக்கும் நிகழ்ந்த சச்சரவே இப்போருக்கு அடிப்படையான காரணம். அக் கம்பெனியார் பர்மிய