பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

648

இந்தியா

களில் ஆந்திரரும் ஒருவர் என்று ஐதரேய பிராமணம் கூறும். சாதவாகன குலத்து அரசர் கிழக்குத் தட்சிணத்தில் கிருஷ்ணா நதிக் கரையில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் முதன் முதல் தங்கள் ஆதிக்கத்தைத் தாபித்தனர் என்று சிலர் கொள்வது பொருத்தமின்று; ஆதி சாத வாகனரின் சின்னங்கள் ஒன்றும் கோதாவரி கிருஷ்ணா ஜில்லாக்களில் காணப்படவில்லை. இவ்வமிசத்தவர் மௌரிய அரசரிடம் உத்தியோகம் பெற்று, மேற்குத் தட்சிணத்தில் வேரூன்றியபின் மௌரியர் வலிமை குன்றவே தங்களுடைய சுதந்திரத்தைத் தாபித்தனர் என்று கொள்வதே தகும். சாதவாகனன் என்ற பெயரைப் பிற்காலத்தவர் சாலிவாகனன் என்று வழங்குவர். மேல்நாட்டு விமர்சகர் ஒருவர் இது சதம் (குதிரை), ஹபன் (மகன்) என்ற இரண்டு , முண்டா மொழிச் சொற்களடங்கியதால் அசுவமேதம் செய்தவன் மகன் எனப் பொருள்படும் என்பர். சாதகர்ணி என்ற பெயரும் அதே பொருளுடைத்தென்பர். இது உண்மையாயின், சதகர்ணியை நூற்றுவர் கன்னர். எனச் சிலப்பதிகார ஆசிரியர் மொழிபெயர்த்திருப்பது தவறாகும். கௌதமீ புத்ரசாதகர்ணி என்ற அரசன் நிகரற்ற பிராமணன் என்றும், க்ஷத்திரியர் பெருமையை அடக்கினவன் என்றும் சாசனங்களில் புகழப்படுகிறான். ஆகையால் சாதவாகனர் பிராமணரென்று கொள்ளலாம். மச்ச புராணத்தில் முப்பது சாதவாகன அரசர் சுமார் 460 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்படுகிறது; ஆனால் வாயுபுராணம் 17, 18 அல்லது 19 அரசர் 300 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறும். மச்சபுராணப் பட்டியிலுள்ள பல அரசர்களின் பெயர்கள் சாசனங்களிலும் நாணயங்களிலும் காணப்படுவதால் அதுவே சரியென்று கொள்ளவேண்டும்.

முதல் சாதவாகன அரசன் சிமுகன் (ஸ்ரீமுகன்) 23 ஆண்டுகள் ஆண்டபின் சில கொடுமைகள் விளைத்தபடியால் குடிகளால் கொல்லப்பட்டான் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவனுக்குப்பின் அவன் சகோதரன் கண்ணன் (கிருஷ்ணன்) இராச்சியத்தை நாசிக் வரை மேற்றிசையில் பரப்பினான். மூன்றாம் அரசன் முதல் சாதகர்ணி மிகவும் திறமை வாய்ந்தவன். அவனுக்கும் அவன் தகப்பன் சிமுகனுக்கும் நானாகாட் குகையில் உருவச் சிலைகள் செதுக்கப்பட்டன. அவை இப்போது சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அவன் மேற்கு மாளவ தேசத்தைச் சுங்கரிடமிருந்து வென்று கொண்டான். இரண்டாம் சாதகர்ணியான ஆறாம் அரசன் 56 ஆண்டுகள் ஆண்டான். இவன் ஆட்சியே சாதவாகன ஆட்சிகளெல்லாவற்றிலும் மிக வும் நீண்டதாகும். இவன் ஆட்சியிறுதியில் கிழக்கு மாளவ தேசமும் இவன்' வசமாயிற்று. ஆபீலகன் என்னும் எட்டாம் அரசன் காலத்தில் மத்தியப் பிரதேச மும் சாதவாகன ஆட்சிக்குள்ளடங்கியிருந்தது. பதினேழாம் அரசன்' ஹால (கி. பி. 20-24) என்பவன் சத்தசாயி என்ற 700 பாக்கள் கொண்ட அரிய மகாராஷ்டிரப் பிராகிருத நூலைத் தொகுத்தான்.

இதற்குப் பின் கூர்ஜரத்தில் ஆண்டு வந்த சக அரசர்களால் சாதவாகன இராச்சியத்திற்குத் தீங்கு ஏற்பட்டது. இவ்வரசர்களுக்கு க்ஷத்ரபர் என்று பெயர்; இவர்கள் சுகராத வமிசத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் முதல் அரசன் பூமகன். நகபானன் என்பவன் பெரிய வெற்றிகள்பெற்ற போர் வீரன். அவன் கூர்ஜரத்தைத் தவிர வடமகாராஷ்டிரம், கொங்கணம் முதலிய நாடுகளைச் சாதவாகனரிடமிருந்து வென்று கொண்டு தன் இராச்சியத்தைப் பெருக்கினான். அவன் காலத்தில் மேற்கு நாடுகளிலிருந்து வரும் வியாபாரக் கப்பல்கள் சாதவாகனத் துறைமுகமான கலியாணுக்குப் போகாமல் தடுக்கப்பட்டுப் பரிகஜா, பருகச்சா அல்லது ப்ருகுகச்சம் (தற்காலத்துப் புரோச்) என்னும் சகத் துறைமுகத்துக்கே சென்றன. சகர் ஆதிக்கத்தின் வெற்றிக்காலம் சுமார் கி. பி. 40-80 என்று கூறலாம்.

இருபத்து மூன்றாம் சாதவாகன அரசனான கௌதமீ புத்ர சாதகர்ணி (கி. பி. 80-104) நகபானனையும் அவன் நட்பரசரையும் பலமுறை தோற்கடித்துத் தன் முன்னோர் இழந்த நாடுகளை மீட்டுக் கொண்டான். அவன் ஆட்சி நருமதையைத் தாண்டி மாளவம், மேற்கு ராஜபுதனம் முதலிய நாடுகளில் நிலவியது. விதர்ப்ப தேசமும் (பேரார்) வனவாசியும் கூட அவனுக்குக் கீழ்ப்பட்ட நாடுகளே. அவன் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் புளுமாயி 24 ஆண்டுகள் ஆண்டான். அவன் நாணயங்கள் கோதாவரி, குண்டூர் ஜில்லாக்களிலும், சோழ மண்டலக் கரையில் கடலூர் வரையிலும் அகப்படுகின்றன. அவன் காலத்தில் கிழக்குத் தட்சிண நாடுகளை அவன் வென்றுகொண்டிருந்த காலத்தில் போலும் மேற்கே சகர்கள் மறுபடி சாதவாகன இராச்சியத்தின்மீது படையெடுத்துத் தங்கள் ஆட்சியைப் பெருக்கிக் கொண்டது. மேற்கு ராஜபுதனமும் மாளவ தேசமும் அவர்கள் வசமாயின (கி. பி. 126-31). அவர்களுடன் சமாதானம் ஏற்படும் பொருட்டுப் புளுமாயிக்குப்பின் ஆண்ட சாதகர்ணி ஒருவன் மகாஷத்ரப ருத்ரதாமன் மகளை மணந்தான். ஆனால் ருத்ரதாமன் அடுத்த சாதவாகன அரசருடன் இருமுறை போர்புரிந்து வெற்றி பெற்றான். கி. பி. 170 வாக்கில் 29 ஆண்டுகள் ஆண்ட யஞ்ஞ சாதகர்ணி மிகவும் பிரசித்தி பெற்றவன். பிராத வமிசத்தின் கடைசியான அரசன் நான்காம் புளுமாயி.

சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் (கி. மு. 230 கி. பி. 250) கைத்தொழில்கள், வியாபாரம், கலைகள் முதலியவை செழித்து வளர்ந்து வந்தன. குணாட்டியனென்னும் கவி பிருகத்கதை என்னும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினான். சாதவாகனருக்குப் பகையாக இருந்த சக மன்னர்கள் வட மொழியையும், விசேஷமாக நாடகத்தையும் போற்றி வந்ததாக எண்ண இடமுண்டு. பௌத்த விஞ்ஞானிகளான நாகார்ஜுனனும் அவன் சீடன் ஆரியதேவனும் இதே காலத்தவரே. சாதவாகனர் இந்துக்களே ஆயினும் அவர் காலத்தில் பௌத்த மதம் மிகவும் சிறப்பாக விளங்கிற்று. நாசிக், கார்லா, பேத்சா, கானேரி முதலிய மேலைமலைக் குகைக் கோயில்களும் அமராவதி, ஜக்கய்யபெட்டை, கண்ட சாலா முதலிய கீழ்த்தட்சிண ஊர்களிலுள்ள தூபிகளும் விஹாரங்களும் பௌத்தர்களுடைய சிற்பச் சிறப்பை நன்றாக வெளிப்படுத்துகின்றன.

சாதவாகனர் ஆதிக்கம் குன்றியபின் தட்சிணத்தில் பல சிறிய இராச்சியங்கள் ஏற்பட்டன. வடமேற்கில் ஆபீரா என்னும் அயல் நாட்டார் சிறிது காலம் ஆண்டனர். அவர்கள் முதலில் சகர்களுக்குப் படைத்தலைவராக இருந்தனர். புராணங்களில் பத்து ஆபீர அரசர்கள் 67 ஆண்டு ஆண்டனர் என்று காண்கிறோம்; ஆனால் ஈசுவரசேனன் (கி. பி. 235-40) என்ற ஓர் அரசன் பெயர் மட்டுமே கிடைத்திருக்கிறது. மகாராஷ்டிர தேசத்திலும் குந்தள தேசத்திலும் சுடு வமிசத்தவர் ஆண்டனர். அவர்களைச் சிலர் சாதவாகனரில் ஒரு பகுதியினர் எனக் கருதுவர் ; சிலர் நாக வமிசத்தவரென்பர். அவர்களுடைய சாசனங்களும் நாணயங்களும் வடகன்னடம், சித்திர துருக்கம், அனந்தப்பூர், கடப்பை ஜில்லாக்