பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

652

இந்தியா

மும் பகவ தச்சுகமும் இவன் இயற்றிய சிறு நாடகங்கள். சங்கீதம் வல்லவன். இவன் முதலில் சமணனாகவிருந்து திருநாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்டானென்பது பெரிய புராண வரலாறு. இவனுடைய திருச்சி மலைக் கோட்டைச் சாசனத்தில் ஒரு சுலோகமும் இதையே குறிக்கின்றது. இவன் ஆட்சியின் துவக்கத்தில் இவ னுடைய இராச்சியம் கிருஷ்ணாநதி வரை பரவியிருந்தது. பாதாமி அரசன் இரண்டாம் புலகேசியினுடைய திக்குவிசயத்தில் அவன் வடக்கிலிருந்து கிருஷ்ணாவைத் தாண்டி, நெல்லூர் வழியாகக் காஞ்சியின் மீது படையெடுத்தான். அந்நகருக்கு Ι5 மைல் வடக்கே புள்ளலூரில் மகேந்திரவர்மன் புலகேசியைத் தோற்கடித்தான். ஆனால் நெல்லூரும் அதன் வடக்கேயுள்ள நாடுகளும் சாளுக்கியர் வசமாயின. இது முதல் பல்லவருக்கும் சாளுக்கியருக்கும் இடைவிடாத பகைமையும் போர்களும் ஆரம்பித்தன.

மறுமுறை புலகேசி பல்லவ நாட்டின்மீது படையெடுத்த காலத்தில் மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மன் (630-668) ஆண்டு கொண்டிருந்தான். இவனே மாமல்லபுரத்தை நிருமித்த மகாமல்லன்; இவ்வூரை மகாபலிபுரமென்று வழங்குவது தவறு. புலகேசி முதலில் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட பாண அரசரைத் தாக்கினான்; அவர்களை வென்றபின் பல்லவ நாட்டை அடைந்தான். அவனால் மறுபடியும் காஞ்சிக்கு அபாயம் ஏற்படடது. ஆனால் பல போர்களில் நரசிம்மன் சாளுக்கியரைத் தோற்கடித்தான் ; இப்போர்களில் ஒன்று காஞ்சிக்கு 20 மைல் கிழக்கேயுள்ள மணிமங்கலத்தில் நடைபெற்றது. இலங்கை அரச வமிசத்தைச் சேர்ந்த மானவர்மா நரசிம்மனுக்கு மிகுந்த உதவி புரிந்தான். கடைசியாக நரசிம்மன் சாளுக்கிய நாட்டில் புகுந்து, அவன் தலை நகர் வாதாபி (பாதாமி)யையே முற்றுகையிட்டான். புலகேசி போரில் உயிரிழந்தான் (கி. பி. 624). வாதாபி சில காலம் நரசிம்மனால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவ்வூர் மல்லிகார்ஜுனன் கோயிலின் பின்புறமுள்ள பாறையொன்றில் ஒருசாசனம் நரசிம்மனால் செதுக்கப்பட்டது. சிறிது சிதைந்தபோதிலும் அது இன்னும் அதே இடத்தில் காணப்படுகின்றது. நரசிம்மவர்மன் காஞ்சிக்குத் திரும்பியதும், தன் நண்பன் மானவர்மாவை இலங்கைக்கு அரசனாக்கவேண்டி இரண்டுமுறை கப்பற்படைகளை அனுப்பினான்; இரண்டாம்முறை வெற்றி கிடைத்தது (654-5). ஆயினும் மானவர்மா விரைவில் மறுபடியும் தன் நாட்டை இழந்து பல்லவ நாட்டில் வந்துவாழ நேர்ந்தது. நரசிம்மவர்மன் காலத்தில் பிரசித்திபெற்ற சீன யாத்திரிகன் 'ஹியூன் சாங்’ காஞ்சீபுரத்திற்கு வந்து சிறிது காலம் தங்கினான். சுமார் கி. பி. 668-ல் நரசிம்மவர்மன் இறந்தான்; அவன் மகன் ΙΙ-ம் மகேந்திரவர்மன் பட்டம் பெற்றுச் சில ஆண்டுகளே ஆண்டான் ; அதற்குள் அவனுக்கும் சாளுக்கியப் புலகேசியின் மகன் முதல் விக்கிரமாதித்தனுக்கும் போர் நிகழ்ந்தது. காஞ்சியிலுள்ள கடிகை (கல்லூரி) இம்மகேந்திரவர்மனால் ஆதரிக்கப்பட்டது. அவனுக்குப்பின் அவன் மகன் Ι-ம் பரமேசுவரவர்மன் (670-80) பட்டமடைந்தான். அவன் காலத்திலும் சாளுக்கிய Ι-ம் விக்கிரமாதித்தன் மகேந்திரவர்மனுடன் தொடங்கிய யுத்தம் சிலகாலம் நடந்தது. விக்கிரமாதித்தனுக்குப் பாண்டிய அரசன் அரிகேசரி மாறவர்மன் (670-7Ι0) உதவியாக இருந் தான், இந்த யுத்த வரலாற்றைக் கூறுமுன் பாண்டிய நாட்டு வரலாற்றைச் சிறிது கூறுவது அவசியம். களப்பிரரை வென்று பாண்டியர் ஆட்சியை மீண்டும் தாபித்தவன் கடுங்கோன் (590-620). அவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி (620-45) தன் தந்தையைப் போலவே பாண்டிய ஆதிக்கத்தை வளர்த்து வந்தான். இவ்வமிசத்து மூன்றாம் அரசனான சேந்தன் அல்லது ஜயந்தவர்மன் சேரரை வென்றான். அவன் மகன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஒரு பெரும் போர்வீரன். பாண்டிய ஆட்சியைப் பெருக்குவதற்காகப் பல்லவரோடு போர் புரிந்தான். ஆகவே அவர்களுடைய மற்றொரு பகைவனான விக் கிரமாதித்தனுடன் நட்புப் பூண்டான்.

விக்கிரமாதித்தனோ தன் தந்தையின் இறுதிக் காலத்தில் நடந்த பல்லவப் போரில் உண்டான கேடுகளைத் தன் தாய்ப் பாட்டன் உதவி கொண்டு சீர் செய்தான். பிறகு பல்லவருடன் போர் தொடங்கி, ΙΙ-ம் மகேந்திரனை மைசூர் நாட்டில் கொன்று வீழ்த்தி, அவன் மகன் பரமேசுவரவர்மனுடைய ஆட்சியின் தொடக்க ஆண்டுகளில் காஞ்சியின் அருகில் வந்து தன் பாடிவீட்டைத் தாபித்தான். அப்போது பரமேசுவரவர்மன் காஞ்சி நகரை விட்டோடினான். விக்கிரமாதித்தனும் காவேரிக் கரையிலுள்ள உறையூருக்குச் சென்று, அங்கே வந்திருந்த பாண்டிய சேனைகளுடன் கலந்து கொண்டு பரமேசுவரனை எதிர்க்க ஆயத்தமானான். இதற்குள் பரமேசுவரனுக்கும் விக்கிரமாதித்தனுடைய சிற்றரசனான கங்கபூதிவிக்கிரமனுக்கும் விளந்தை என்னுமிடத்தில் போர் நிகழ்ந்தது. பரமேசுவரன் தோல்வியுற்றான். உக்கிரோதயம் எனப்பட்ட அரிய மணிகள் பதித்த மாலை யொன்றைப் பல்லவனிடமிருந்து கங்க அரசன் பறித்துக்கொண்டான். இத் தோல்வியால் மனம் தளராத பரமேசுவரன் தன் படைத்தலைவர் சிறுத்தொண்டரை வாதாபி நகரத்தைத் தாக்கச் சொல்லியனுப்பிவிட்டுத் தான் வேறொரு பெருஞ் சேனையுடன் உறையூருக்கு இரண்டு மைல் வடமேற்கேயுள்ள பெருவள நல்லூரில், விக்கிரமாதித்தனுடன் கடும் போர் புரிந்து அவனை வென்றான், சிறுத்தொண்டரும் வாதாபியைத் தாக்கி, வெற்றி பெற்றுத் திரும்பி வந்தார் (670-74). இவ்வெற்றிகளுக்குப்பின் சில காலம் பல்லவருக்குச் சாளுக்கியருடைய தொந்தரவு குறைந்தது.

பரமேசுவரவர்மனுக்குப்பின் அவன் மகன் ΙΙ-ம் நர சிம்மவர்மன் (680-720) நாற்பது ஆண்டுகள் ஆண்டான். அவனுக்கு ராஜசிம்மன் என்ற பெயரும் உண்டு. பாதாமியில் அவனுக்குச் சமகாலத்தவர் விக்கிரமாதித் தன் மகன் வினயாதித்தனும் (681-96), அவன் மகன் விஜயாதித்தனும் (697-733) ஆவர். இவ்வரசர்கள் எல்லோரும் சமாதானத்தில் மனமுடையவர். அவர்கள் காலத்தில் கோயில் கட்டுவதும் இன்னும் மற்றப் பொது நன்மை விளைவிக்கக்கூடிய வேலைகளும் ஆதரிக் கப்பட்டன. வினயாதித்தன் ஒருமுறை தன் மகனுடன் வட இந்தியாவின்மீது படையெடுத்தான். ராஜசிம்மன் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலையும் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலையும் கட்டி முடித்தான். தண்டி என்னும் புலவன் அவனால் ஆதரிக்கப்பட்டான். கடல் வியாபாரம் செழித்துச் சீனாவுடன் தூதர் போக்கு வரத்து ஏற்பட்டது. அவனுக்குப்பின் அவன் மகன் II-ம் பரமேசுவரன் ஆண்டான் (720-31). அவன் திருவதிகைக் கோயிலுக்கும் பெரிய திருப்பணி செய்திருக்கலாம். அங்கு அவன் சாசனம் ஒன்று இருக்கிறது. அக்கோயில் பிற்காலத்தில் பலமுறை புதுப் பிக்கப்பட்டிருக்கிறது. பாதாமியில் விஜயாதித்தனுக்குப் பின் அவன் மகன் ΙΙ-ம் விக்கிரமாதித்தன் பட்டத்துக்கு வந்தான் (733-4). விக்கிரமாதித்தன் இளவரசனாக இருந்த காலத்தில் காஞ்சியின் மீது படையெடுத்துப் பரமேசுவரவர்மனிடம் திறை கொண்டதாகச் (731)