பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

653

இந்தியா

சமீபகாலத்தில் உள்சலா என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டொன்று கூறுகிறது. விக்கிரமாதித்தன் ஆட்சியின் முதல் ஆண்டுகளில் சிந்து நாட்டில் வேரூன்றியிருந்த அராபித் துருக்கர் தட்சிணத்தின்மீது படையெடுத்தனர். அவர்களைப் புலகேசி யென்னும் லாட தேசத்துச் சாளுக்கிய அரசனும், தந்திவர்ம னென்ற ராஷ்டிரகூடத் தலைவனுமாகச் சேர்ந்து தோற்கடித்து விரட்டி விட்டனர். புலகேசியின் வீரத்தை மெச்சி அவனுக்கு அவனி ஜனாசிரயன் என்ற பெயரை விக்கிரமாதித்தன் அளித்தான்.

பல்லவ நாட்டில் II-ம் பரமேசுவரன் இறந்ததும் பட்டத்துக்குத் தகுந்த வாரிசில்லை. ஆகையால் மந்திரிகள் சேர்ந்து ஹிரண்யவர்மனென்ற வேறொரு கிளையைச் சார்ந்த பல்லவத் தலைவனுடைய மகனும், II-ம் நந்திவர்மனுமாகிய பல்லவமல்லனைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவனுக்கு எதிரியாகச் சித்திரமாயன் என்ற ஒரு போலிப் பல்லவன் கிளம்பி, உள்நாட்டிலும் பாண்டிய அரசனிடமிருந்தும் உதவி பெற்றான். பாண்டி நாட்டில் அரிகேசரி பராங்குசனுக்குப்பின் அவன் மகன் கோச்சடையன் ரணதீரன் (700-730) ஆண்டான். அவன் பாண்டிய ஆதிக்கத்தைக் கொங்கு நாட்டில் பரவச் செய்தான். ஆய் என்னும் மலைநாட்டுத் தலைவன் பொதிய மலையில் கலகம் விளைத்தபோது அவனை அடக்கினான். சடையனுக்குப்பின் அவன் மகன் I-ம் மாறவர்மன் ராஜசிம்மன் பட்டம் பெற்றதும், சித்திர மாயன் கட்சியை ஆதரித்துப் பல்லவ மல்லனைப் பன்முறை தோற்கடித்துக் கும்பகோணத்திற்கருகிலுள்ள நந்திபுரத்தில் முற்றுகையிட்டான். பல்லவசேனாபதி உதயசந்திரன் பாண்டியப் படைகளைப் பன்முறை தாக்கிச் சித்திரமாயனையும் சிரச்சேதஞ் செய்து நந்திவர்மன் ஆட்சியை நிலைநிறுத்தினான். சபரராஜன் உதயணன், நிஷாதத்தலைவன் பிருதிவீ வியாக்கிரன் போன்ற மற்றப் பகைவர்களையும் வென்றான். இவர்களெல்லாம் சாளுக்கிய விக்கிரமாதித்தனுடன் நட்புப் பூண்டவராயுமிருந் திருக்கலாம். கி.பி. 740-ல் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான்; அவனுக்குக் கீழ்ச் சிற்றரசனான கங்க ஸ்ரீ புருஷனும் அவனுக்கு உதவி புரிந்தான், 'நந்திவர்மன் தோல்வி யடைந்தான் ; காஞ்சி நகரம் விக்கிரமாதித்தன் வசமாயிற்று. ஆனால் விக்கிரமாதித்தன் ஊருக்கு ஒரு சேதமுமில்லாமல் காத்து, கைலாசநாதர் கோயில் சொத்துக்களையும் கொள்ளையிடாமல் திருப்பிக் கொடுத்தான். தன் வெற்றிக்கு அறிகுறியாக ஒரு கன்னட சாசனத்தை மட்டும் ஒரு கற்றூணில் பொறிக்கச் செய்து, முற்காலத்தில் பல்லவர் பாதாமியில் பொறித்த சாசனத்திற்கு மாறு செய்தான். அதன்பின் இராச்சியத்தை நந்திவர்மனுக்குத் திருப்பிக்கொடுத்து ஊர் திரும்பினான், சில ஆண்டுகளுக்குப்பின் மற்றும் ஒருமுறை தன் மகன் கீர்த்திவர்மனைக் காஞ்சியின்மீது படையெடுக்கச் சொல்லிப் பல யானைகள், மணிகள், தங்கக் குவியல் முதலியவற்றைக் கவர்ந்துகொண்டான்.

விக்கிரமாதித்தனுக்குபின் அவன் மகன் II-ம் கீர்த்தி வர்மன் 744-5 லிருந்து பாதாமியில் ஆண்டான். இவ் விருவர் ஆட்சிக் காலத்திலும் பல கோயில்கள் கட்டப் பட்டன. பாண்டிய மாறவர்மன் ராஜசிம்மன் கொங்கு நாட்டை ஆக்கிரமிக்கவே, அவனுக்கும் கங்க அரசன் மாரசிம்மனுக்கும் பகை ஏற்பட்டது. மாரசிம்மன் தன் மேலரசனான சாளுக்கிய கீர்த்திவர்மனுடைய உதவியை நாடினான். வெண்பையில் நடந்த பெரும் போரில் சாளுக்கியனும் கங்கனும் தோல்வியுற்றனர். கங்கனுடைய மகள் பாண்டிய இளவரசனுக்கு மனைவியானாள். பிறகு, சமாதானமும் ஏற்பட்டது. பாதாமிச் சாளுக்கியரில் இவனே கடைசி அரசன். அவன் அதிகாரத்தைப் படிப்படியாகச் சீர்குலைத்தவன் ராஷ்டிரகூடத் தந்திரவர்மன். இவன் லாடசாளுக்கியப் புலகேசியுடன் கூடி அராபியச் சேனையை எதிர்த்ததை முன்னமே கூறினோம். 742-ல் எல்லோராவில் இவன் ஆட்சி நடந்து வந்தது. மாளவம், தென்கோசலம், கலிங்கம், தெலுங்கு சோழராச்சியமாகிய ஸ்ரீசைலநாடு முதலிய தேசங்களை இவன் வென்று கொண்டான். தவிரவும், காஞ்சியின்மீது படையெடுத்த நந்திவர்ம னுடன் சமாதானம் செய்து, தன் மகள் ரேவா என்பவளை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். அவள் மகனே நந்திவர்மனுக்குப்பின் பல்லவ நாட்டை ஆண்ட தந்திவர்மன். இவ்விதம் படிப்படியாகக் கீர்த்திவர்மனுடைய இராச்சியத்தைக் கூறாக்கியபின் சுமார் கி. பி. 753-ல் ராஷ்டிரகூடத் தந்திவர்மன் தன் மேலரசனான சாளுக்கியக் கீர்த்திவர்மனைத் தோற்கடித்துத் தன் சுய ஆட்யைத் தாபித்தான்.

பல்லவ நந்திவர்மனோ விளந்தைப் போரில் ஸ்ரீபுருஷனை வென்று, அவன் முன்னோர் பல்லவரிடமிருந்து கவர்ந்த உக்கிரோதயமென்ற மணியடங்கிய ஆரத்தை மீட்டுக் கொண்டான். கங்கனிடமிருந்து சிறிது பூமியைப் பற்றித் தன் சிற்றரசன் பாணஜய நந்திவர்மன் வசமளித்தான். கி. பி. 777க்குப் பிறகு பாண்டிய அரசன் ஜடிலன் போர் தொடுத்தான். வரகுணன் I-ம் ராஜசிம்மனுடைய மகன். பெண்ணாகடப் போரில் பல்லவன் தோல்வியடைந்தான்; கொங்கன், கேரளன், தகடூர் அதிகமான் முதலியவருடைய உதவியைப் பெற்றுப் பாண்டிப் போரை விடாமல் நடத்தினான். ஆயினும் வெற்றி பாண்டியனையே சேர்ந்தது. அவன் கொங்க அரசனைச் சிறையிட்டதோடு, தொண்டை நாட்டில் புகுந்து, பெண்ணையாற்றங்கரையிலுள்ள அரசூரில் தன் பாடி வீட்டை அமைத்துக்கொண்டான். ஆகவே நந்திவர்மனால் பாண்டிய ஆதிக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடவில்லை.

வரகுணன் வேறிடங்களிலும் வெற்றிகள் பெற்றான். விழிஞத்துக் கோட்டையை அழித்து வேணாட்டை வென்றான். பொதியில் தலைவன் ஆயையும் போரில் வென்றான்; அவன் வேணாட்டரசனுடன் நட்புக்கொண்டனன் போலும். திருச்சிக்கப்பால் தஞ்சை, சேலம், கோயம்புத்தூர் ஜில்லாக்கள் அநேகமாக அவன் நாட்டின் பகுதிகளாயின. அவன் மகன் பரசக்ரகோலாகலன் என்ற விருது பெற்ற ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனும் (815-62) தன் தந்தையைப் போலவே நாட்டைப் பெருக்க யத்தனித்தான். இலங்கையின் மீது படையெடுத்து, அதன் வடபாகத்தைக் கைப்பற்றியதுடன் தலை நகரையும் தாக்கினான்; இலங்கை அரசன் I-ம் சேனன் (831-51) கீழ்ப்படிந்து சமாதானம் செய்யவே இலங்கையை விட்டகன்றான்.

பல்லவமல்லன் ஆட்சி சுமார் 789-ல் முடிவுபெற்றது. அவன் மகன் தந்திவர்மன் (789-839) பட்டத்துக்கு வந்ததும் அவனுக்குப் பாண்டியரால் மட்டுமன்றித் தன் பந்துக்களான ராஷ்டிரகூடராலும் இடையூறுகள் நேர்ந்தன.

கி. பி. 756-ல் தந்திதுர்க்கன் பிள்ளையில்லாமல் இறந்தான், அவன் சிற்றப்பன் I-ம் கிருஷ்ணன் பட்டம் பெற்று, எஞ்சியிருந்த சாளுக்கிய அதிகாரத்தை நீக்கித் தென் கொங்கணத்தை வென்று, அங்கே சிலாகார வமிசத்தவரைத்தன்னுள்ளடங்கிய சிற்றரசராகநியமித் தான். கங்க ஸ்ரீபுருஷனையும் தன் அதிகாரத்தை அங்கீகரிக்கச் செய்தான் (768). வேங்கி நாட்டின்மீது படை-