பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

654

இந்தியா

யெடுக்கத் தன் மகன் II-ம் கோவிந்தனை அனுப்பினான். அந்நாட்டரசன் I-ம் விசயாதித்தன் (755-762) கீழ்ப் படிந்து சமாதானம் செய்து கொண்டான். எல்லோராவிலுள்ள அற்புதமான கல்வெட்டுக் கோயிலை நிருமித்து, அதற்குக் கைலாசமென்ற பெயரிட்டான். அவன் மகன் கோவிந்தன் சுமார் 773-ல் பட்டம் பெற்றான். மூன்று நான்கு ஆண்டுகளுக்குப்பின் அவனும் பல்லவ நந்திவர்மனும் சேர்ந்து, கங்க அரசன் II-ம் சிவமாரனுக்கு அவன் சகோதரன் துக்கமார எறெயப்பனுக்கு எதிராக உதவி புரிந்து பட்டமெய்தச் செய்தனர். கோவிந்தன் அரசியல் காரியங்களைக் கவனிக்காது இன்பத் துறைகளில் மூழ்கினான். அவன் தம்பி துருவன் தானே அரசனாக முயன்று அரசனானான் (780). கோவிந்தன் கடைசியில் என்ன ஆனான் என்பது தெரியவில்லை. துருவன் தனக்குப் பகைவனான கோவிந்தனுடன் நட்புக்கொண்ட அரசரைத் தண்டித்தான். கங்க மன்னனான II-ம் சிவமாரனைச் சிறையிலிட்டான். பல்லவனிடமிருந்து யானைத்திறை கொண்டான். விந்திய மலையைக் கடந்து, மாளவத்திலாண்ட கூர்ஜர அரசன் வத்சராஜனை விரட்டியடித்தான். வேங்கி அரசன் IV-ம் விஷ்ணுவர்த்தனனிடமிருந்து சிறிது நாட்டைப் பற்றிக் கொண்டதுமல்லாமல் அவன் மகள் சீலமகா தேவியை மணந்துகொண்டான். மாளவ வெற்றிக்குப் பின் கங்கைக்கும் யமுனைக்கும் நடுவேயுள்ள நாட்டுக்குச் சென்று, அங்கே வந்த அரசன் தர்மபாலனைப் போரில் வென்றான். கடைசியாகத் தன் மக்களுக்குள் மிகுந்த திறமைசாலியான II-ம் கோவிந்தனை அரசனாக்கித் தான் சிம்மாசனத்தைத் துறந்தான். ஆனால் அவன் 793-4-ல் இறந்து படவே, கோவிந்தனுக்கும் அவன் சகோதரருக்கும் கலகம் உண்டாயிற்று. துருவனுடைய மூத்த மகன் கம்பன் உட்படப் பன்னிரண்டு சிற்றரசர்கள் கோவிந்தனை எதிர்த்தனர். கோவிந்தனால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கங்கசிவமாரனும் அவர்களையே சேர்ந்தான். கோவிந்தன் தன்னந்தனியே இவர்களெல்லோரையும் ஒருங்கே வென்று தன் சத்துருக்களைப் பழிவாங்காமல் பட்சமாகவே நடத்தினான். கம்பனுக்கு மறுபடியும் அவனுடைய பழம் பதவியாகிய கங்கவாடியின் ஆட்சியை அளித்தான். சிவமாரனை மட்டும் மறுபடியும் சிறை வைத்தான். தனக்கு அனுகூலமாக விருந்த தம்பி இந்திரனை லாடதேசத்திற்குத் தன் பிரதி நிதியாக அனுப்பினான். இவ்வெற்றிக்குப்பின் கோவிந்தன் வடஇந்தியா மீது படையெடுத்தான். மாளவ அரசன் இரண்டாம் நாகப்படனை வென்று, அவன் நாட்டை லாடநாட்டுப் பிரதிநிதியின் கீழாக்கினான். இன்னும் வடக்கே சென்று, கன்னோசி அரசன் சக்ரா புதனும் அவன் மேலரசன் வங்கநாட்டுத் தர்மபாலனும் கீழ்ப்படியும்படி செய்தான். திரும்பும் வழியில் நருமதைக்கரையில் ஸ்ரீபவனத்தில் கோவிந்தனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான் (602). அவனே I-ம் அமோகவர்ஷன். அவன் ஸ்ரீபவனத்தினின்றும் விரைவாய்ப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்துச் சென்று (803-4), தந்தி வர்மனைப் போரில் வென்று, காஞ்சிக்கு இலங்கை அரசனால் அனுப்பப்பட்ட தூதருடைய வணக்கத்தைப் பெற்றுப் பின் துங்கபத்திரைக் கரையை அடைந்து, இராமேசுவர தீர்த்தமென்னுமிடத்தில் தன் பாடிவீட்டை யமைத்தான். வேங்கி அரசர்கள் IV-ம் விஷ்ணு வர்த்தனனும் II-ம் விசயாதித்தனும் 808-ல் கோவிந்தனுடன் போர் புரிந்தனர். ஆகவே III-ம் கோவிந்தன் ராஷ்டிரகூட அரசரில் மிகப் பிரசித்திபெற்ற வீரன்.

தென்னாட்டில் பல்லவ தந்திவர்மன் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பகைவர்களால் தாக்குண்டு நிலைக்க முடியாமல் தவித்தான். அவன் மகன் III-ம் நந்திவர்மன் (839-60) தன் தகப்பனைவிடத் திறமைசாலி. அவன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியனுக்கு விரோதமாகப் பல மன்னரை ஒருங்கு சேர்த்துத் தெள்ளாற்றுப் போரில் முறியடித்துத் தெள்ளாறெறிந்த நந்தி எனப் புகழ் பூண்டான். கங்கர், சோழர், ராஷ்டிரகூடரும்கூடத் துரத்தப்பட்டதுமன்றிப் பல்லவ சைனியம் வைகையாறு வரை படையெடுத்தும் சென்றது. ஆயினும் ஸ்ரீமாறன் மறுபடி போர் தொடங்கி, நந்தியையும் அவன் நண்பர்களையும் கும்பகோணப் போரில் தோல்வியுறச் செய்தான் (859). இத்தோல்விக்குப் பின் நந்தி வெகுகாலம் உயிருடனிருக்கவில்லை. அவன் காலத்தில் ஒரு பெருங் கடற்படையிருந்தது. நந்திவர்மனுக்குப் பின் அவன் மகன் நிருபதுங்கன் பட்டம் பெற்றான் (860); விரைவில் பல்லவ நிருபதுங்கன் அரிசிலாற்றங்கரைப் போரில் ஸ்ரீமாறனுடன் பொருது, வெற்றி பெற்றுப் பல்லவருக்குக் கும்பகோணப் போரினால் உண்டான அபகீர்த்தியைத் துடைத்தான்.

ஸ்ரீமாறனுக்கு தோல்வியைத் தவிர வேறு விபத்துக்களும் நேரிட்டன. இலங்கை அரசன் II-ம் சேனன் (851-885) பல்லவருடன் சேர்ந்துகொண்டு, ஒரு பாண்டிய இளவரசனுக்கு உதவியாக மதுரைமீது படையெடுக்கத் தன் சைனியத்தை அனுப்பினான். ஸ்ரீமாறன் அரிசில் தோல்விக்குப்பின் திரும்பி வரும்பொழுதும் மதுரை, இலங்கைப் படைகளால் தாக்கப்பட்டது ; ஸ்ரீமாறன் உயிரிழந்தான். அவன் மகன் II-ம் வரகுண வர்மன் சிங்களப் படைத் தலைவனால் அரசனாக்கப்பட்டான் (862) ; ஆனால் அவன் பல்லவனுக்குள்ளடங்கிய சிற்றரசனாக ஆள வேண்டியிருந்தது.

ராஷ்டிரகூட நாட்டில் III-ம் கோவிந்தன் மகன் I-ம் அமோகவர்ஷன் நிருபதுங்கன் இளமையில் அரசனானான் (814). பல சிற்றரசர்களால் சச்சரவு ஏற்பட்டது; கீழைச் சாளுக்கிய III-ம் விசயாதித்தனும் I-ம் கங்கராசமல்லனும் கலகக்காரருடன் சேர்ந்தனர். ஆனால் லாடதேசத்துச் சிற்றரசன் கர்க்கன் தன் உறவினன் அமோகவர்ஷன் பக்கம் சேர்ந்து, சத்துருக்களை முறியடித்து இராச்தியத்தை நிலைநிறுத்தினான் (821). ஆயினும் அமோகவர்ஷனுடைய நீண்ட ஆட்சிக்காலமான 64 ஆண்டுகளிலும் ஒருகாலும் அவன் இராச்சியத்தில் முற்றிலும் அமைதியிருந்ததாகச் சொல்ல இய லாது. கி.பி. 850-ல் மறுபடியும் கீழைச் சாளுக்கிய III-ம் குண கவிஜயாதித்தனுடன் போர் தொடங்கினான். இவன் விஜயாதித்தன் பேரன். புகழ்பெற்ற வீரன், வேங்கியைச் சுயஆட்சி நாடாக்க முயன்றான். ஆனால் கம்பத்தி னருகில் வீங்காவல்லிப் போரில் படுதோல்வியடைந்தான். அதற்குப்பின் அமோகவர்ஷனோடு மிகுந்த விசுவாசத்துடன் உழைத்து வந்தான். நீதிமார்க்கன், ரணவிக்கிரமன் என்ற பட்டங்கள் பெற்ற கங்க அரசன் ஏறெயப்பன் (837-70) I-ம் ராஜமல்லன் மகன் அமோக வர்ஷனுக்கு விரோதமாகக் கிளம்பினான். வேறு சில சிற்றரசரும் அவனுடன் சேர்ந்தனர். ராஷ்டிரகூடப் படைத்தலைவன் பங்கேசன் அவர்களைப் பலமுறைத் தோற்கடித்தான். அவன் இருந்து தன் காரியத்தைச் சரிவர முடிக்குமுன் உள்நாட்டில் வேறு கலகங்கள் ஏற்பட்டதால் அவைகளைத் தடுப்பதற்காக அமோகவர்ஷன் அவனைத் திரும்பச் சொன்னான். இக்கலகம் இளவரசன் II-ம் கிருஷ்ணனாலும், லாட அரசன் கர்க்கன் மகன் I-ம் துருவனாலும் ஆரம்பிக்கப்பட்டது. பங்கேசன் போரில் துருவனைக் கொன்றது மல்லாமல், அவன் மகன் அகாலவர்ஷனுடனும், பேரன் II-ம் துருவனுடனும் போர் நடத்த வேண்டியதாயிற்று. மாளவ-