பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

656

இந்தியா

பிரதிகார I-ம் மகிபாலனை (ஆ. கா. 913-43) அவன் நாட்டை விட்டோடும்படி செய்தான் ; சில காலத்திற்குப் பின் அவன் சண்டேல ஹர்ஷதேவன் உதவியைக் கொண்டு தன் நாட்டை மீட்டுக்கொண்டான். வேங்கியின் அரசன் முதல் அம்மராஜன் கிருஷ்ணனுடைய பகைமையைப் பொருட்படுத்தாமல் ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்து 926-ல் இறந்தான். அதன் பிறகு ஏற்பட்ட சச்சரவுகளால் இந்திரனுக்கு வேங்கி நாட்டை ஆக்கிரமிக்க அவகாசம் கிடைத்தது. இந்திரனுக்குப் பின் ஆண்ட II-ம் அமோகவர்ஷன் (927-30) சிறிது காலம் ஆண்டபின் அவன் தம்பி IV-ம் கோவிந்தனால் நீக்கப்பட்டான். கோவிந்தனும் இன்பத்திலீடுபட்டு, அரசியலைக் கவனிக்காது தன் சிற்றரசரால் விலக்கப்பட்டபின், இந்திரனுடைய மாற்றாந் தாய் மகன் III-ம் அமோகவர்ஷன் பட்டம் பெற்றான். அவன் சாந்த குணமுடையவன்; அவன் மகன் III-ம் கிருஷ்ணன் அப்படியில்லை. அவன் கங்கராஜமல்லனுடன் போர் புரிந்து கங்கநாட்டைத் தன் சகோதரியின் கணவனான II-ம் பூதுகனை ஆளும்படி செய்தான். 939-ல் அமோகவர்ஷன் இறந்ததும் அவன் தானே அரசனானான். சிறிது காலஞ் சென்றதும் பாணராலும் வைதும்பராலும் தூண்டப்பட்டுச் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். பூதுகன் இதற்கு உதவியாக நின்றான். இதற்குள் II-ம் கங்க பிருதிவீபதி இறந்ததால் சோழநாட்டின் வடமேற்கு எல்லையைக் காக்கப் பராந்தகன் தன் மூத்த மகன் இராசாதித்தனையும் அவன் தம்பி அரிகுலகேசரியையும் தக்க படைகளுடன் அனுப்பினான். கிருஷ்ணனும் பூதுகனும் படையெடுத்து வரவே தக்கோலத்தில் ஒரு பெரும் போர் நிகழ்ந்தது (949). அதில் இராசாதித்தன் பூதுகனால் கொலையுண்டான். அதற்குப் பின் சில நாட்களில் சோழராச்சியத்தின் வடபாகம் கிருஷ்ணன் வசமாயிற்று ; அவனும் ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட’ என்ற பட்டம் பெற்றான். தவிர வேங்கி நாட்டிலும், 11-ம் அம்மராஜனுக்கு எதிராக அவன் அண்ணன் (மாற்றாந்தாய் மகன்) தானார்ணவனையும் வேறு ஒரு கிளையைச் சார்ந்த பாதபன் தாழன் ஆகிய ராஜகுமாரரையும் கிளப்பி விட்டான். பல இடையூறுகளுக்கிடையில் அம்மராஜன் 970 வரை ஆண்டு, பின் தானார்ணவனால் கொல்லப்பட்டான். தன் ஆட்சியின் இறுதியில் கிருஷணன் வட இந்தியாவின் மீது படையெடுத்து (963) மாளவநாட்டுப் பரமார அரசன் ஹர்ஷசீயகனை ராஷ்டிரகூட மேலாட்சியை ஒப்புக்கொள்ளச் செய்தான்; இப்படை யெடுப்பில் பூதுகன் மகன் II-ம் மாரசிம்மன் தன் மாமனுக்கு மிக்க உதவி புரிந்தான். கிருஷ்ணன் பெரிய வீரன். ஆயினும் இராச நீதியில் கை தேர்ந்தவனல்லன். அவன் பூதுகனுக்கும் அவன் மகனுக்கும் அதிகமாக இடங் கொடுத்ததுமன்றிச் சாளுக்கிய வமிசத்து ஆகவமல்ல தைலப்பனையும் முன்னேற விட்டான் ; தைலப்பனுக்குத் தன் இராசதானிக்கருகில் உள்ள நாட்டை அணுக்க ஜீவிதமாகக் கொடுத்தான். இது இவன் பின்னோருக்கு வினையாக முடிந்தது.

கிருஷ்ணனுக்குப் பின் அவன் மாற்றாந்தாய் மகன் கொட்டிகன் (967) ஆளத் தொடங்கினான். உடனே பரமார ஹர்ஷசீயகன் நருமதைக் கரையில் ராஷ்டிர கூட சேனையை முறியடித்துக் கொட்டிகனுடைய இராசதானியாகிய மானிய கேடத்தைத் தாக்கினான் (927-3). மாரசிம்மன் உதவியால் பெருங்கேடு ஒன்றும் ஏற்படவில்லை. பரமார சைனியமும் திரும்பிப் போயிற்று. இதற்குப்பின் கொட்டிகன் இறந்தான். அதன் மகன் II-ம் கர்க்கன் பட்டத்துக்கு வந்ததும் சாளுக்கிய வமிசத்துத் தைலப்பன் அவனை நீக்கி இராச்சியத்தைத் தன் வசமாக்கிச் சாளுக்கிய வமிசத்தை மறுபடி நிலை நிறுத்தினான். மாரசிம்மனும் (975) அவன் மருமகனும், கிருஷ்ணன் பேரனுமாகிய IV-ம் இந்திரனும் (982) சல்லேகனமெனும் சமண முறையால் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தனர். மாரசிம்மன் கீழ்ச் சிற்றரசனாயிருந்த பாஞ்சால தேவன் தைலப்பனால் போரில் கொன்று வீழ்த்தப்பட்டான்.

சோழநாட்டில் I-ம் பராந்தகனுக்குப்பின் ஆண்ட கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் சிறந்த சிவபக்தர்கள். கண்டராதித்தன் 957-ல் காலஞ்சென்றான். அப்போது சோழராச்சியம் மிகக் குறுகியிருந்தது; கண்டராதித்தன் தம்பி அரிஞ்சயன் ஆண்டது சிறிது காலமே (956-7). அவனுக்குப்பின் அவன் மகன் II-ம் பராந்தகனான சுந்தரசோழன் (957-973) ஆண்டான். பாலனான அவன் மகன் II-ம் ஆதித்தன் இளவரசனானான். பாண்டி நாட்டில் சுய ஆட்சி செய்துவந்த வீரபாண்டியன் இலங்கை அரசன் IV-ம் மகிந்தாவுடன் நட்புக் கொண்டு சுந்தரசோழனை எதிர்த்தான். இதற்கு முன்னமே அவன் ஒரு சோழனை வென்று, ‘சோழன் தலை கொண்ட’ என்ற பட்டமேற்றிருந்தான். வீரபாண்டியன் இரண்டு போர்களில் தோல்வியுற்று, இரண்டாம் போரில் ஆதித்தனால் கொல்லப்பட்டான். பாண்டியர்களை வென்று, வீரபாண்டியனைக் கொன்று இலங்கைமீதும் படையெடுத்தான் (959). என்ன இருந்தும் சோழ ஆதிக்கம் தென்னாட்டில் முன்னேறவில்லை. வடக்கே சுந்தரசோழனுக்கு வெற்றி கிடைத்தது. அவன் 973-ல் காஞ்சியில் இறந்தான். கடைசிக் காலத்தில் சுந்தர சோழனுக்கு ஒரு பெருந்துன்பம் ஏற்பட்டது. கண்டராதித்தன் மகன் உத்தமசோழன் இளவரசுப் பதவி பெற ஆசைப்பட்டு, ஆதித்தனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தான் (969). சுந்தரசோழன் தன் இரண்டாம் மகன் அருள்மொழியை மறந்து, உத்தம சோழனை இளவரசனாக்க வேண்டி வந்தது. உத்தமசோழன் 973-ல் அரசனாகு முன் தொண்டைமண்டல முழுவதும் ராஷ்டிரகூடரிடமிருந்து மறுபடியும் சோழர் வசமாயிற்று.

ஆனால் சோழராச்சியத்தின் பெருமை அருள்மொழியாகிய I-ம் இராசராசன் (985-1014) பட்டம் பெற்ற பிறகே வளர்ந்தது. I-ம் இராசராசன் இரண்டு போர்களில் பாண்டியரை வென்று, காந்தளூரையும் விழிமத்தையும் வென்று கேரள நாட்டைத் தன் வசமாக்கினான். பிறகு இலங்கைக்கெதிராக ஒரு கப்பற் படையை அனுப்பி, V-ம் மகிந்தனை அத்தீவின் தென் கிழக்கிலுள்ள மலை நாட்டில் ஓடி ஒளியுமாறு செய்து, அனுராதபுரத்தை அழித்துப் பொலன்னருவாவைச் சோழப் பிரதிநிதியின் தலைநகராக்கினான். அதற்குப் பின் மைசூர் நாட்டில் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலிய பகுதிகளை வென்று, சாளுக்கிய தைலப்பனுடன் போர் புரியத் தயாரானான். முதலில் வெற்றி பெறாவிடினும் தைலப்பன் மகன் சத்தியாசிரயனைத் தோல்வியுறச் செய்தான்.

சாளுக்கிய II-ம் தைலப்பன் ராஷ்டிரகூடரை வென்றபின் மானிய கேடத்தையே தன் தலைநகராகக் கொண்டு, தன்னாட்டின்மீது படையெடுத்து வந்த பரமார முஞ்சனைச் சிறை வைத்துப் பலவிதமாக அவமானப்படுத்திக் கடைசியாகக் கொன்று விட்டான். தைலப்பனுடைய போர்களிலெல்லாம் உதவியாக நின்ற அவன் மகன் சத்தியாசிரியன் தைலப்பனுக்குப் பின் 997-ல் அரசனானான். அவன் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த சோழ ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டி