பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

660

இந்தியா

துக் கொண்டான் (1116). இது குலோத்துங்கனுக்குப் பெரு நஷ்டமானதுடன், விக்கிரமாதித்தனுக்குக் கேடாகவே முடிந்தது. ஏனெனில் விஷ்ணுவர்த்தனன் உச்சங்கி பாண்டியனையும் கோவா (கதம்ப) II-ம் ஜயகேசியையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, விக்கிரமாதித்தனுக்கு விரோதமாகத் தோன்றி, வடக்கே கிருஷ்ணா நதி வரையிலுள்ள நாடுகளை விரைவில் ஆக்கிரமித்துக் கொண்டான். அப்போது சிந்தி வமிசச் சிற்றரசன் ஆசுகி என்பான் விக்கிரமாதித்தனுக்குப் பேருதவி புரிந்தான். கோவா தகர்க்கப்பட்டுத் தீக்கிரையாயிற்று. பாண்டியன் வெகு தூரம் துரத்தப்பட்டான். விஷ்ணுவர்த்தனன் சாளுக்கிய நாடுகளினின்று விரட்டப்பட்டதுமன்றித் தன்னாட்டு மலைக் கோட்டைகளில் சாளுக்கியப் படைகளால் முற்றுகையிடப்பட்டான். பல நீடித்த போர்களுக்குப் பின் விஷ்ணுவர்த்தனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக ஒப்புக் கொண்டான் (1122-23).

இதே சமயத்தில் விக்கிரமாதித்தன் குலோத்துங்கனுக்குத் தீங்கு விளைவிக்க முயன்றான். 1097-ல் கொலனு அரசனும் அனந்தவர்மனும் நடத்திய போரில் அவனுக்கு என்ன தொடர்புண்டென்று கூற இயலவில்லை. ஆனால் விசேஷமாக 1118 முதல் அதாவது விக்கிரமசோழன் தான் சோழநாட்டில் இளவரசு பதத்தை வகிப்பதற்காக வேங்கியை விட்டகன்றது முதல், விக்கிரமாதித்தன் வேங்கியில் தலையிட-ஆரம் பித்தான். 1118-ல் அனந்தபாலன் என்ற படைத்தலைவன் தன்னை வேங்கி அரசன் என்று கூறிக் கொண்டான்; வேறு சாளுக்கியச் சேனாபதிகளும் தெலுங்கு நாட்டில் ஆங்காங்கே சென்று சோழ ஆட்சியை முடித்தனர். இதுமுதல் பல ஆண்டுகள் வரையிற் சோழருடைய சின்னங்களே தெலுங்கு நாட்டில் இல்லாமற் போயின. ஆகவே குலோத்துங்கன் இராச்சியம் அவன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் தமிழ்நாடு மட்டுமே என்னும்படியாயிற்று. ஆயினும் குலோத்துங்கன் ஒரு பேரரசன் என்பதில் ஐயமில்லை. குடிகளின் நன்மையைக் கருதி அவன் வீண் போர்களில் தலையிடாமல் விலகினான். அவனுக்குப் பின் ஒரு நூற்றாண்டுக் காலம் சோழ சாம்ராச்சியம் சலியாமல் நீடித்திருந்தது அவனுடைய திறமைக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் சான்றாகும். அவனுக்குச் சுங்கந் தவிர்த்த சோழன் என்ற பெயருமுண்டு. ஆனால் இந்தச் சீர்திருத்தத்தின் விளக்கம் ஒன்றும் தெளிவாகக் கிடைக்கவில்லை.

விக்கிரமசோழன் ஆட்சி 1118-ல் ஆரம்பித்தது. ஆனால் I-ம் குலோத்துங்கன் அதற்குப்பின் நான்கு ஆண்டுகள் வாழ்ந்ததாக எண்ண இடமுண்டு. விக்கிரம சோழன் ஆட்சிக் காலமாகிய பதினேழாண்டுகளும் பொதுவாக அமைதியாகவே சென்றன. சிதம்பரத்திலும் ஸ்ரீரங்கத்திலும் அவன் பல திருப்பணிகளைச் செய்வித்தான். 1127-ல் விக்கிரமாதித்தன் இறந்தான். அவன் மகன் III-ம் சோமேசுவரன் பட்டம் பெற்றதும் விக்கிரமசோழன் வேங்கி நாட்டில் சோழ ஆட்சியை எளிதில் மீண்டும் ஸ்தாபித்தான்; 1133-ல் கோதாவரியாற்றங்கரையில் சோமேசுவரன் முன்னிலையிலேயே சாளுக்கியப் படை தோல்வியுற்றது. சாளுக்கியர் பக்கம். அனந்தவர்ம சோடகங்கனும், சோழர் சார்பில் வெலனாட்டு II-ம் சோடகங்கனும் கலந்து கொண்டனர். பல சாளுக்கியப் படைத்தலைவருடன் குதிரைகளும், ஒட்டகங்களும், நிதிக்குவையும் சோழர் வசமாயின. கோலார் மாவட்டத்தின் சில பகுதிகளை விக்கிரமசோழன் மீட்டுக்கொண்டபோதிலும், கங்க வாடியில் வேங்கியைப் போன்ற வெற்றி கிடைக்கவில்லை. அவனுக்குப்பின் அவன் மகன் II-ம் குலோத்துங்கன் (1133-50) ஆண்டான். தன் தகப்பன் ஆரம்பித்த திருப்பணி வேலையைச் சிதம்பரத்தில் நடத்தும் போது நடராஜர் சன்னிதியிலிருந்து கோவிந்தராசப் பெருமாளுடைய விக்கிரகத்தைப் பிடுங்கிக் கடலில் எறிந்துவிட்டான். அது திரும்ப விஜயநகர அரசர் நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. குலோத்துங்கன் மகன் II-ம் இராசராசன் 1046 முதல் இளவரசனாகவிருந்து 1050 முதல் 1073 வரை தானே அரசனாக ஆண்டான். அவனுக்கு வயதுவந்த மகனில்லாமையால் விக்கிரம் சோழனுடைய பெண் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராசாதிராசனை 1166-ல் இளவரசாக்கினான். மத்திய அரசாங்கத்தின் வலுக்குறைவினால் சிற்றரசரெல்லாம் கட்டுக்கடங்காமல் தாந்தோன்றிகளாக ஆரம்பித்தனர். அது அடுத்த ஆட்சிகளில் வரவர அதிகமாயிற்று.

இராசாதிராசன் இளவரசானவுடன் பாண்டிய நாட்டில் ஒரு பெரிய தாயாதிச் சச்சரவு ஏற்பட்டு, அதில் சிங்களரும் சோழரும் தலையிட நேரிட்டது. பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகரனுக்கும் விவாதம் ஏற்பட்டுக் குலசேகரன் பராக்கிரமனை மதுரையில் முற்றுகையிட்டான். பராக்கிரமன் இலங்கை வேந்தன் I-ம் பராக்கிரமபாகு (1153-86)வின் உதவியை வேண்டினான். அவன் அனுப்பிய சேனை வருமுன் குலசேகரன் மதுரையைப் பிடித்துப் பராக்கிரமனையும் அவன் பெண்டிர் பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டான். ஆயினும் பராக்கிரமபாகு மதுரையைப் பராக்கிரமன் வமிசத்து அரசன் ஒருவன்கீழ் ஆக்கும்வரைப் போரை நிறுத்தக்கூடாதென்று உத்தரவனுப்பினான்; இலங்காபுரிக்கு உபரிப்படைகளும் அனுப்பிவைத்தான். குலசேகரன் சோழ மன்னனுடைய உதவியை வேண்ட, அவன் பல்லவராயனுடைய தலைமையின்கீழ் ஒரு பெருஞ்சேனையை யனுப்பிவைத்தான். முதலில் குலசேகரன் தோல்வியடைந்தான். பராக்கிரமன் மகன் வீர பாண்டியன் மதுரைக்கரசனானான். ஆனால் விரைவில் பல்லவராயன் சேனை சிங்களப் படைகளை முறியடித்துத் தலைவர்களுடைய தலைகளை அறுத்து, மதுரை மாநகர் மதில் கதவுகளில் ஆணிகளடித்துத் தைத்தது. குலசேகரன் மதுரையைப்பிடித்து, அது இலங்கையின் கீழ்ப்பட்ட நாடாகாமல் தடுத்தான். இதைக் கேள்வியுற்ற பராக்கிரமபாகு வேறு படையைத் திரட்ட ஆரம்பித்தான். பல்லவராயனோ பராக்கிரமபாகுவுக்கு விரோதமாக அவன் உறவினன் ஸ்ரீவல்லபனைத் தூண்டிவிட்டு, அவனுக்கு ஒரு படையை உதவி, இலங்கையின்மீது படையெடுக்கச்செய்தான். இதனால் தனக்குமிகுந்த இடையூறுகள் ஏற்படவே பராக்கிரமபாகு குலசேகரனை மதுரைக்கரசனாக ஒப்புக்கொண்டு, அவனுடன் சேர்ந்து சோழரை எதிர்க்க முயன்றான். குலசேகரன் மோசம் செய்ததைச் சோழன் கண்டுபிடித்ததும் பல்லவராயன் வீரபாண்டியனையே மதுரையில் ஆளச்செய்து குலசேகரனை வெளியே விரட்டினான். ஆகவே பராக்கிரமபாகுவின் எண்ணம் கைகூடவில்லை. இந்நிகழ்ச்சிகளெல்லாம் 1169 முதல் 1177 வரை நடந்தன. ஆனால் பாண்டிய நாட்டுப் போர் முடிந்தபாடில்லை.

இராசாதிராசன் 1182 வரை உயிருடன் இருந்தான். ஆனால் 1178 முதலே மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சி ஆரம்பித்தது. அவனுக்கும் இராசாதிராசனுக்கும் உள்ள உறவுமுறை புலப்படவில்லை. குலோத்துங்கன் திறமையால் சோழ ராச்சியத்தின் குலைவு ஒருவாறு தடுக்கப்பட்டது. அவன் காலத்தில் கும்பகோணத்துக் கருகில் திரிபுவனத்தில் கம்பகரேசுவரர் கோயில் கட்-