பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

661

இந்தியா

டப்பட்டது. இது சோழரால் கடைசியாகக் கட்டப்பட்ட பெருங்கற்கோயில். முதலில் குலோத்துங்கன் தன் கவனத்தைப் பாண்டி நாட்டில் செலுத்தவேண்டியிருந்தது. மறுபடியும் பராக்கிரமபாகு வீர பாண்டியனையும் வேணாட்டரசனையும் தன்னுடன் சேர்ந்து சோழரை எதிர்க்கச் செய்தான். இதற்குள் குலசேகரன் இறந்துபட்டான். அவன் உறவினன் விக்கிரம பாண்டியன் என்பான் வீரபாண்டியனுக்கு விரோதமாகக் குலோத்துங்கன் உதவியை நாடினான். சோழ சேனை பாண்டிய நாட்டில் புகுந்து பாண்டியரையும் சிங்களரையும் போரில் வென்றது. வீர பாண்டியன் ஓடிவிடவே விக்கிரம பாண்டியன் மதுரைக்கரசனானான் (1182). வீரபாண்டியன் மறுமுறை எதிர்த்தபோது நெட்டூர்ப் போரில் தோற்று இலங்கைக்கு ஓடிப்போனான். ஆகையால் அவனும் வேணாட்டரசனும் குலோத்துங்கனைப் பணிவதே நலமென்று கருதி மதுரையை யடைந்து அவ்வாறே செய்தனர். அதே சமயத்தில் குலோத்துங்கன் இலங்கை வேந்தனுடைய முடிமேலடி வைத்ததாகச் சாசனங்கள் கூறுகின்றன (1189). வீர பாண்டியனுக்குச் சிறிது நிலமும் பொருளும் வழங்கப்பட்டன. அதுமுதல் அவன் அரசியலில் தலையிடவில்லை. இதற்குப்பின் குலோத்துங்கன் ஹொய்சளர் ஆதிக்கம் வளர்ந்து கொண்டிருப்பதைத் தடுக்க வேண்டிக் கொங்குநாட்டையடைந்தான். அங்குத் தகடூர் அதிகமானத் தனக்குக் கீழ்ப்படியச் செய்து, சேர வேந்தனைப் போரில் வென்று, கருவூரில் 1193-ல் வெற்றி விழாக் கொண்டாடினான். இதன் பிறகு II-ம் ஹொய்சள பல்லாளனுடன் நட்புக் கொண்டு, அவனுக்கு ஒரு சோழ வமிசத்துக் குமாரியை மணம் புரிவித்தான்.

விக்கிரம பாண்டியனுக்குப் பின் 1190 முதல் பாண்டிய நாட்டை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் குலோத்துங்கனுக்கு சரிவரக் கீழ்ப்படியாமையால் 1205-ல் சோழ சேனைகள் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்தன. மதுரையைத் தாக்கிப் பாண்டிய அபிஷேக மண்டபத்தைத் தகர்த்தன. குலசேகரன் மீண்டும் தன் நாட்டைப் பெற்றும், அவனும் அவன் தம்பி சுந்தர பாண்டியனும் தங்களுக்கேற்பட்ட அவமானத்தை மறக்கவில்லை.

சாளுக்கிய III-ம் சோமேசுவரன் காலத்தில் ஹொய்சள விஷ்ணுவர்த்தனன் தன் ஆட்சியை மீட்டுக்கொண்டதுமன்றி, நுளம்பபாடி, வனவாசி, ஹானகல்லு முதலிய பிரதேசங்களில் சாளுக்கியருக்கு விரோதமாகத் தன் ஆட்சியை ஸ்தாபித்தான். சோமேசுவரனுக்குப் பின் ஆண்ட அவன் மக்கள் II-ம் ஜகதேகமல்லன் (1135-51), III-ம் தைலன் (1150-56) காலத்திலும் அப்படியே. 1149-ல் விஷ்ணுவர்த்தனன் தன் மகன் நரசிம்மனைத் துவாரசமுத்திரமாகிய தலைநகரில் இருத்தி விட்டுத் தான் பங்காபுரத்தில் பாடிவீடு அமைத்துக் கொண்டான். சாளுக்கிய சாம்ராச்சியம் நிலை குலைந்தது. III-ம் சோமேசுவரன் நாளிலிருந்து தர்த்தவாடியை ஆண்டுவந்த காலசூரி வமிசத்தாரும், அனுமகொண்டாவில் ஆண்டுவந்த காகதீயரும் தலை தூக்கினர். தேவகிரி யாதவரும் இதுவரை சாளுக்கியருக்கு விசுவாசமாக இருந்துவிட்டு, இப்போது வேறுவிதமாக நடக்க ஆரம்பித்தனர். மூன்றாம் தைலனை ஏமாற்றிக் காலசூரி பிஜ்ஜௗன் எல்லா அதிகாரங்களையும் தன் கைவசமாக்கிக் கொண்டு, 1157-ல் சக்கரவர்த்திப்பட்டம் ஏற்றுத் தன் குலப்பெயரால் ஒரு சகாப்தமும் ஏற்படுத்தினான். தைலன் காகதீய II-ம் புரோலனுடன் யுத்தத்துக்குச் சென்று அனுமகொண்டாவை முற்றுகையிட்டான். ஆனால் புரோலன் மகன் உருத்திரன் காலத்தில் தைலன் அவனுக்குப் பயந்து நோய்வாய்ப்பட்டு இறந்தான் (1163). காலசூரிகள் கையோங்கிற்று. பிஜ்ஜௗன் கலியாணியில் அரசனாகி ஆண்டான். அவன் வனவாசியை ஹொய்சள நரசிம்மனிடமிருத்து பிடுங்கிக் கொண்டான். 1168-ல் III-ம் ஜகதேக மல்லன் என்ற சாளுக்கிய அரசன் ஆண்டு கொண்டிருந்தபோதிலும், பிஜ்ஜௗன் ஆட்சியும் நடந்து வந்தது. அவனால் துன்புறுத்தப்பட்ட லிங்காயதர் கையால் அவன் உயிரிழந்தானென்று ஓர் ஐதிகம் உண்டு; அதன் உண்மை தெளியக் கூடவில்லை. அவனுக்குப் பின் அவன் மக்கள் மூவர் ஒருவர் பின் ஒருவராய் 1183 வரை ஆண்டனர்; அவர்கள் I-ம் ஹொய்சள பல்லாளனுடன்(1173-1200) போர்புரிந்து வெற்றி பெற்றனர். 1183-ல் III-ம் தைலப்பன் மகன் IV-ம் சோமேசுவரன் காலசூரிகளை நீக்கி அரசு புரிந்தான். இதற்கு அவனுக்கு உதவியாயிருந்தவன் முன்கால சூரிப் படைத் தலைவனாயிருந்த பிரம்மன் அல்லது பர்மிதேவன். சோமேசுவரனுடைய சிற்றரசன் யாதவ பில்லமன் (1187-91) சாளுக்கிய ஆட்சியின் வலியின்மை உணர்ந்து, சாளுக்கிய வடபாகங்களைக் கைப்பறினான் (1189). அவனுக்கும் தெற்கேயிருந்து சாளுக்கிய நாடுகளைக் கவர எண்ணிய ஹொய்சள பல்லாளனுக்கும் போர்கள் ஏற்பட்டன. பல்லாளன் சோமேசுவரனையும் அவன் சேனாதிபதி பிரம்மனையும் பல போர்களில் வென்று (1190), பில்லமனுடன் கடைசியாக கதக் என்னுமிடத்தில் போர் புரிந்து, பில்லமனைக் கொன்று வீழ்த்தி (1191), மலப்பிரபா, கிருஷ்ணா நதிகள் வரை தன் ஆதிக்கத்தைப் பரப்பினான். அதற்கு வடக்கேயுள்ள நாடுகள் யாதவர் வசம் தங்கின. பில்லமன் தேவகிரியைத் தன் தலைநகராக்கினான். சாளுக்கிய இராச்சியம் குலைந்ததில் காகதீயருக்கும் சிறிது நாடு கிடைத்தது. யாதவர் சும்மா இருக்கவில்லை. பில்லமன் மகன் ஜெய்துகி காகதீயருத்திரனைப் போரில் கொன்று, அவன் சிற்றப்பன் மகன் கணபதியைச் சிறைப்படுத்தினான் (1196). ருத்திரனுக்குப் பின் சில ஆண்டுகள் ஆண்ட அவன் தம்பி மகாதேவன் காலத்தில் குடிகளின் கலகமும் யாதவருடன் யுத்தங்களும் நிகழ்ந்தன. அவன் 1199-ல் இறந்த பின், ஜெய்துகி கணபதியை விடுவித்துக் காகதீய நாட்டை ஆளும்படி அனுப்பினான். ஜெய்துகியின் மகன் சிங்கணன் 1210-ல் பட்டம் பெற்று, கொங்கணத்துக் கதம்பர் உதவியைக்கொண்டு ஹொய்சள பல்லாளனுடன் போர்புரிந்து, அவன் சோமேசுவரனிடமும் பில்லமனிடமும் இருந்து வென்றிருந்த நாடுகளை மீட்டுக்கொண்டான் (1216).

வேங்கி நாட்டில் II-ம் இராசராசன் ஆட்சி முடிவுற்றது முதல் வெலநாட்டுச் சோடர்கள் தங்கள் சுய ஆட்சியை ஸ்தாபித்துக் கொண்டனர். பிறகு நெல்லூரில் விக்கிரமசோழன்கீழ்ச் சிற்றரசனாயிருந்த பேதன் சந்ததியாரான தெலுங்குச் சோடர்கள் நெல்லூரிலிருந்து ஆண்டனர். II-ம் இராசாதிராசன் நெல்லூரிலாவது அதற்கு வடக்கேயாவது ஆண்டதாகத் தெரியவில்லை. ஆனால் III-ம் குலோத்துங்கன் நாளில் தெலுங்குச் சோடர்கள் சோழ ஆதிக்கத்தை அங்கீகரித்தனர். இவர்கள் நல்லசித்தனும் அவன் தம்பி தம்முசித்தனுமாவர் (1187-1216). ஆனால் மத்தியில் சில ஆண்டுகள் (1192 96) நல்லசித்தன் காஞ்சியை ஆக்கிரமித்துக் குலோத்துங்கனை எதிர்த்து நின்றான். 1208 வாக்கில் குலோத்துங்கன் வடநாட்டில் போர்புரிந்து வேங்கியையடிப்படுத்திக் காகதீயத் தலைநகரான ஓரங்கல்லில் பிரவேசித்ததாகச் சாசனங்கள் கூறுகின்றன. குலோத்துங்கன் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் அவன் பாண்டியப் படை யெழுச்சியினால் வருந்தும்போது தெலுங்-