பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

664

இந்தியா

நூலைத் தொகுத்தான். அவன் காலத்தில் அமலாநந்தர் வேதாந்தகல்பதரு என்னும் சிறந்த உரை நூலை இயற்றினார். கிருஷ்ணனுக்குப்பின் அவன் தம்பி மகாதேவன் (1260-71) ஆண்டான். அவன் காகதீய ருத்ராம்பாளுடன் போர்புரிந்து, பல யானைகளையும் அரச சின்னங்களையும் கவர்ந்து, அவளைப் பெண்ணாகையாற் கொல்லாது விடுத்தான் என்பர். மேலும் அவன் வட கொங்கணத்தின் மீது படையெடுத்துச் சிலாகார சோமேசுவரனை வென்று, அவன் நாட்டை யாதவ இராச்சியத்துடன் சேர்த்தான். புகழ்பெற்ற ஸ்மிருதி நூல்களெழுதிய ஹேமாத்திரி பண்டிதர் அவன் காலத்திலும் அவன் பின்னோர் காலத்திலும் ஸ்ரீகரணாதிபதன் என்ற பதவியை வகித்தார். அவர் பல பண்டிதரை ஆதரித்தார். தாமும் பல நூல்களியற்றினார். பல கோயில்களும் கட்டிவைத்தார். கிருஷ்ணன் மகன் இராமச்சந்திரன் 1271-ல் சிம்மாதனமேறினான். அவனுக்கும் மகாதேவன் மகன் ஆமணனுக்கும் ஒரு சிறு போர் ஏற்பட்டது. இராமச்சந்திரன் மாளவ அரசனுடனும் ருத்ராம்பாளுக்குப்பின் ஆண்ட காகதீய அரசன் II-ம் பிரதாபருத்திரனுடனும் போர்கள் தொடுத்தான். 1276-7-ல் அவனுடைய படைத்தலைவன் சாளுவதிக்கமன் ஹொய்சள நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகராகிய துவாரசமுத்திரத்தை முற்றுகையிட்டுச் சிறந்த வெற்றியுடனும் மிகுந்த கொள்ளையுடனும் திரும்பினான்; ஆனால் ஹொய்சள III-ம் நரசிம்மன் தன் இராச்சியத்தில் சிறிதும் இழக்கவில்லை. இராமநாதனுடனும் போர் நிகழ்ந்தது. பிறகு இராமச்சந்திரனுக்கும் III-ம் பல்லாளனுக்கும் போர் ஆரம்பித்தது. ஆனால் துருக்கர் படையெடுப்பினால் அது அதிகமாக முதிரவில்லை. இராமச்சந்திரன் ஆட்சியில் மகாராஷ்டிர வேதாந்தி ஞானேசுவரர் கீதைக்குச் சிறந்த மகாராஷ்டிர வியாக்கியானமாகிய ஞானேசுவரி என்னும் நூலை 1290-ல் இயற்றினார்.

காகதீய இராச்சியத்தில் ஜெய்துகியால் விடுவிக்கப்பட்ட கணபதி அறுபத்து மூன்று ஆண்டுகள் (1199-1262) மிக்க திறமையுடன் ஆண்டான். ஆந்திர தேசத்தில் வெலநாட்டுச் சோடர் ஆட்சி 1186க்குப் பின் குன்றியது. அந்நாட்டின் செல்வத்தையும் வியாபாரத்தையும் கைப்பற்றிக்கொள்ள நல்ல இடம் கொடுத்தது. அந்நாட்டில் இரும்பு, வைரம் முதலிய சுரங்கங்களும் நல்ல துறைமுகங்களும் மிகுந்திருந்தன. அதைக் கணபதி 1209-14-ல் ஆக்கிரமித்தான். நெல்லூரில் ஆண்ட தெலுங்குச் சோடர்களைத் தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்தான். அவர்களுக்காக அவன் III-ம் குலோத்துங்கனுடன் புரிந்த போர்களைப் பற்றி ஏற்கெனவே கூறியுள்ளோம். கலிங்க நாட்டு மூன்றாம் அநங்க பீமனுடனும் (1211-38) போர்கள் ஏற்பட்டன. பீமனுக்கு அச்சமயம் வங்காளத்துத் துருக்கரும், தும்மணத்தில் ஆண்ட சேதி மன்னருங்கூட வீரோதிகளாக இருந்தனர். 1231-ல் யாதவ சிங்கணனோடு போர் நடந்தது. கடப்பை, கர்நூல் மாவட்டங்களில் ஆண்ட காயஸ்தத் தலைவர்களையும் கங்கய சாகினியையும் அவன் மருமக்கள் திரிபுராந்தகன் அம்பதேவன் முதலியோரையும் கணபதிவென்று தனக்குக் கீழ்ப்படுத்திக்கொண்டான் (1239). அதன் பிறகு தன் பெண் ருத்ராம்பாளை வாரிசாக நியமித்ததுடன் அவளை ருத்ரதேவ மகாராஜா என்று அழைக்க ஆரம்பித்துத் தான் இருக்கும்போதே அவளுக்கு அரசாட்சியில் ஒரு தக்க பங்கும் கொடுத்தான். கடல் வழியாக வந்து வர்த்தகம் செய்யும் பிற நாட்டு வியாபாரிகளுக்கு அபய சாசனம் ஒன்று கொடுத்தான். அது மோடுபள்ளியில் ஒரு கல்வெட்டாக இன்றும் காணப்படுகிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் நெல்லூரை விட்டகன்றபின், தெலுங்கு பாரத ஆசிரியர் திக்கனசோமயாஜியின் வேண்டுகோளின்படி கணபதி மனுமசித்தரசனுக்கு உதவி புரிந்து, அவன் விரோதிகளை விரட்டி, நெல்லூர் இராச்சியத்தை அவன் வசமாக்கினான். முரடனான கோப்பெருஞ்சிங்கனுங்கூடக் கணபதிக்குப் படிந்தான். கணபதிக்குப்பின் அவன் மகள் ருத்ராம்பாள் அரசியானாள். அவளுக்குக் கோப்பெருஞ்சிங்கன், அம்பதேவன் யாதவ மகாதேவன் முதலியோரால் கெடுதிகள் நேர்ந்தன. அவள் பெண் வயிற்றுப் பேரன் பிரதாபருத்ர தேவன் வாலிபத்திலேயே இப்போர்களில் தன் வீரத்தைக் காட்டினான். 1280-ல் அவன் இளவரசனாக்கப்பட்டான். எட்டாண்டுகளுக்குப் பின் மறுமுறை அம்பதேவன் ஹொய்சள யாதவ அரசருடைய உதவியுடன் கலகம் விளைவித்தபோது, பிரதாபருத்ரன் அவர்களுடைய படைகளை அழித்து அம்பதேவனைக் கீழ்ப்படிய வைத்தான் (1291). அதற்கு நான்காண்டுகளுக்குப் பின் ருத்ராம்பாள் இறந்ததும் தானே பட்டம் பெற்று, 1326 வரை ஆண்டான். ஆட்சியின் ஆரம்பத்தில் ஆதவானி (ஆதோனி), ராய்ச்சூர் முதலிய கோட்டைகளைப் பிடித்து, யாதவருடைய நாடுகள் சிலவற்றைக் காகதீய இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். நாட்டின் அரசியல் முறையை முற்றிலும் சீர்திருத்திப் பத்மநாயக்கர் எனப்பட்ட இனத்தாரிலிருந்து நாயக்கர்களைப் பொறுக்கியெடுத்து, நாடு முழுவதையும் 77 நாயக்க ஆட்சிப் பிரிவுகளாகச் செய்தான். இந்நாயக்கர்களிலே பிற்காலத்தில் காபய நாயக்கன் முதலானோர் துருக்க ஆதிக்கம் வலுக்காமல் தடுப்பதற்கு முன் வந்து, விஜயநகர சாம்ராச்சியம் ஏற்படுவதற்கான வசதிகளைச் செய்தனர்.

கலிங்க நாடு கங்க அரசர் வசமிருந்தது. அநந்தவர்மன் சோடகங்கனுடைய பேரன் III-ம் இராசராசன் (1198-1211) நாளில் துருக்கர் முதன்முதல் ஒட்ட நாட்டின்மீது படையெடுத்தனர் (1205). அப்போதும் மறுமுறை III-ம் அனியங்க பீமன் காலத்தில் (சு. 1220) மற்றொரு படையெடுப்பிலும் துருக்கருக்குத் தோல்வியேற்பட்டது. அனியங்க பீமன் காகதீய கணபதியுடன் போர்புரிந்தான். அவன் படைகள் முன்னமே கூறியபடி காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம் வரை சென்றன; அவன் மகன் I-ம் நரசிம்மன் (1238-64) வங்காளத் துருக்க அரசர்மீது மூன்று முறை படையெடுத்துச் சென்றான். II-ம் பானுதேவன் (1306-28) காலத்தில் துக்ளக் அரச குமாரன் உலுக்கான் ஒரிஸ்ஸாவின்மீது படையெடுத் துப்பானுதேவனிடம் யானைத் திறைகொண்டான். III-ம் பானுதேவன் (1352-78) பிரோஸ் துக்ளக்படையெடுப்புக்குத் தணிந்துகொடுக்க வேண்டியதாயிற்று. IV-ம் நரசிம்மன் (1378-1414) கங்க வமிசத்தைச் சார்ந்த கடைசிப் பேரரசன். அவன் காலத்தில் மாளவ நாட்டுத் துருக்க அரசன் ஒரிஸ்ஸாமீது படையெடுத்து வந்தும் பயன் ஒன்றும் பெறவில்லை. IV-ம் பானு தேவன் (1414-32) சந்ததியில்லாமல், இறக்கவும், அவன் சேனாபதி கபிலேசுவர கஜபதி சிங்காதனம் ஏறினான்.

இனி, கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருந்த அரசியல் முறைகளைச் சற்றுக் கவனிப்போம். அக்காலத்தில் அரசனுடைய முக்கியமான கடமை உள் நாட்டுக் கலகங்கள் ஏற்படாமலும், அயல் நாட்டு அரசரிடமிருந்து தொல்லை ஏற்படாமலும் நாட்டைக் காத்துக் குடிகள் தத்தம் தொழில்களைச் சரிவரச் செய்து சமாதானமாக வாழ ஏற்பாடு செய்வதேயாகும். இதற்-