பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

665

இந்தியா

குப் பிரதியாக அரசனுக்கு நிலவரியும் வேறு சில வரிகளும் மக்கள் கொடுத்து வந்தனர். மற்றப்படித்தற் காலத்திற்போலவே எல்லாக் காரியங்களிலும் புதிது புதிதாகச் சட்டம் ஏற்படுத்தும் உரிமை அரசாங்கத்துக்குக் கிடையாது. வேதங்கள், தரும சாத்திரம், முதியோர் பழக்கங்கள் ஆகிய இவையே நாட்டுப் பழக்கங்களுக்கு ஆதாரமாகும். சாதி, மதம், இருப்பிடம், தொழில் முதலியனபற்றி ஏற்பட்டிருந்த ஒவ்வொரு இனத்தாரும் தங்கள் விவகாரங்களைத் தங்களுடைய பஞ்சாயத்துக்களில் தீர்த்துக்கொள்வது வழக்கம். தீராத கட்சிகளுக்கு மட்டுமே அரசாங்க உத்தியோகஸ்தரிடமோ, கடைசியில் அரசனிடமோ செல்வது வழக்கம். அவர்களும் தீர்ப்புக் கொடுக்கும்போது தரும சாத்திரம் வல்லோரைக் கேட்டும், அந்தந்த இடம், பொருள் முதலியவற்றை நன்கு ஆராய்ந்தும் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் காரியங்களை நிருவகிக்கத் தனியாட்களையோ, சிறு சபைகளையோ, அவரவர் திட்டங்களுக்கேற்றவாறு தேர்ந்தெடுப்பது வழக்கம். கிராம சபைகள் இம்மாதிரிக் கூட்டங்களில் மிகவும் முக்கியமானவைகளாக இருந்து வந்தன. சபை, ஊர், நகரம் என மூன்று வகைப்பட்ட கூட்டங்கள் சாசனங்களில் அடிக்கடி காணப்படுகின்றன. சபையெனப்படுவது பிராமண அக்கிரகாரத்து நிலச்சுவான்களின் கூட்டம். ஊர் என்றது எல்லாக் கிராம நிலச்சுவான்களின் கூட்டம். நகரமெனப்படுவது வியாபாரிகளின் கூட்டம். பல பெரிய கிராமங்களிலும் பட்டணங்களிலும் இவை எல்லாம் சேர்ந்தோ அல்லது எவையேனும் இரண்டுவிதக் கூட்டங்கள் மட்டுமோ நடந்து வரக்கூடும். பல கிராமங்கள் சேர்ந்த நாடுகளுக்கும் இம்மாதிரிக் கூட்டங்களும், அவைகளுடைய நிருவாக அதிகாரிகளும் இருப்பதுண்டு. இக்கூட்டங்களுக்கும் அரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் உள்ள சம்பந்தம் இடத்தையும் காலத்தையும் பொறுத்து வேறுபட்டிருந்தது. உத்தரமேரூர் போன்ற பெரிய கிராம சபைகள் தங்கள் காரியங்களைப் பல வாரியங்களுக்குப் (கமிட்டிகள்) பங்கிட்டுக் கொடுப்பதும் உண்டு. தட்சிண பீட பூமியில் உள்ள கிராமங்களிலும் கிராம மக்களும் காமுண்டரும் காரியங்களைப் பார்த்து வந்ததாகச் சாசனங்களால் அறிகிறோம். கிராமத்தார் கோவில், குளம், சாலை முதலிய பொதுக்காரியங்களைக் கவனிப்பதுடன், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் கிராமத்தில் வந்து தங்கும்போதும், அதன் வழியாக மற்ற இடங்களுக்குச் செல்லும்போதும் அவர்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்யவேண்டும். தங்க இடம், உணவு, வண்டி, மாடு முதலியவெல்லாம் இலவசமாகக் கொடுக்கவேண்டும். மேற்குத் தட்சிணத்தில் தங்கிய அராபிய வியாபாரிகளும் யாத்திரிகர்களும் இந்தியாவில் வரிகள் அதிகமென்று கருதினர். அரசாங்க வரிகளைத் தவிரப் பலவிதமான சங்கங்கள் தங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்காக வரி வசூலித்துக் கொள்வதுமுண்டு. இம்மாதிரி சுயேச்சை வரிகளை கோவில் கட்டுவதற்கும், குளங்கள் தூர்ந்து போகாமல் காப்பதற்கும், பள்ளிக்கூடங்கள், மருத்துவச் சாலைகள் நடத்துவதற்கும், வேறு பல பொதுக் காரியங்களைச் செய்வதற்கும் வசூலிப்பதுண்டு.

பல கிராமங்கள் கூடின தொகுதி ஆஹாரம், ராஷ்டிரம், நாடு, கோட்டம், விஷயம் எனப் பல பெயர்கள் பெற்ற பிரிவுகளாகும். அவைகளுக்கு மேற்பட்ட பிரிவு வளநாடு அல்லது மண்டலமெனப்படும். சில பிரிவுகள் பாணராஜ விஷயம் என்றாற் போலப் பாணர் ஆட்சியை ஒத்த வரலாற்று நிகழ்ச்சிகளால் பெயர் பெறும். இப்பெரும் பிரிவுகளை ஆள, அநேகமாக அரசகுமாரர்களை அனுப்புவது வழக்கம். இவ்வழக்கம் சில சமயங்களில் கேடு விளைவிக்கவும் கூடும். II-ம் புலகேசி வாதாபி முற்றுகையில் உயிரிழந்ததும் (642), அவன் மக்கள் நால்வர் அவரவர்கள் பிரிவுகளைத் தனி, நாடுகளாக்க முயன்றனர் ; I-ம் விக்கிரமாதித்தன் பெருமுயற்சியால் அது தடுக்கப்பட்டுச் சாளுக்கிய இராச்சியத்தின் ஒற்றுமை காப்பாற்றப்பட்டது (642-55). பல அரசியல் அதிகாரிகளின் பெயர்கள் முக்கியமாகப் பல்லவ சாசனங்களில் காணப்படுகின்றன; அப்பெயர்கள் பொதுவாக வடமொழிப் பெயர்களே. உதாரணமாக : சாடர், படர், சாசனர், சஞ்சாரி, கோசாத்யட்சன், ரகசி, யாதிக்ருதனர் என்பன. நிலக்களத்தார், வாயில் கேட்பார் என்பன போன்ற தமிழ்ப் பெயர்களும் உண்டு. மந்திரி சபைகள் அரசர்களுக்குப் பேருதவியாயிருந்தன. பல்லவ மல்லனைத் தேர்ந்து பல்லவ அரசனாக்கியவர்கள் முக்கியமான பல்லவ மந்திரிகளும் கடிகை எனப்பட்ட காஞ்சீபுரத்துக் கல்லூரி ஆசிரியருமே. அக்காலத்து அரசர்கள், முக்கியமாகப் பல்லவர்கள் தங்களைத் தரும மகாராஜாதிராஜர் என்று சொல்லிக் கொண்டனர். இதனால் அவர்களுக்குத் தருமங்களைக் காப்பாற்றுவதில் ஏற்பட்டிருந்த அக்கறை புலப்படுகிறது. அவர்கள் தங்களுடைய மதப்பற்று எதுவாயிருப்பினும், பொதுவாக எல்லா மதங்களையும் ஒருங்கே ஆதரித்து வந்தனர். ஆயினும் நாயன்மாரும் ஆழ்வார்களும் சமணரையும் சாக்கியரையும் நாட்டை விட்டொழிப்பதற்காகச் செய்த பெருங் கிளர்ச்சியை அரசர் தடுக்க எண்ணவில்லை. புதிதாக வென்ற நாடுகளில் பழைய ஸ்தாபனங்களை மாற்றாமல் தொடர்ந்து நடக்கும்படி செய்வதே பொதுவான வழக்கமாயிருந்தது.

ஒவ்வொரு அரச வமிசமும் தனக்கெனக் கொடியும் இலச்சினையும் பெற்றிருந்தது. உதாரணமாகப் பல்லவருக்கு விடைக்கொடி, சோழருக்குப் புலிக்கொடி, பாண்டியருக்குக் கயற்கொடி, சேரருக்கு விற்கொடி, சாளுக்கியருக்குக் கேழற்கொடி. சத்துருக்களிடமிருந்து கவர்ந்து கொண்டுவந்த யானை குதிரைகளையும், சில சமயம் வாயில் காப்பானாகத் தோல்வியுற்ற மன்னனுடைய உருவச்சிலையையும் அரண்மனை வாயிலில் நிறுத்துவதுண்டு. ராஷ்டிரகூடத் துருவன் இராணியாகிய சீல பட்டாரிகை, பல்லவ ராஜசிம்மன் இராணியாகிய ரங்க பதாகை போன்ற சில அரச வமிசத்துப் பெண்டிர் அரசியல் நிருவாகங்கள் செய்தும் வந்தனர். II-ம் புலகேசி யின் மருமகள் விஜயப்பட்டாரிகை தேர்ந்த வடமொழிக் கவியாயிருந்தாள்.

ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் விஜயாலயன் வமிசத்துச் சோழரும் கலியாணிச் சாளுக்கியரும் பெரிய சாம்ராச்சியங்களை ஆண்ட காலத்தில் அரசனுடைய ஆடம்பரமும் அரண்மனையின் செல்வச் செருக்கும் மிகுந்தன. அரசனுடைய முடிசூட்டு விழாவும் அதிக விமரிசையுடன் நடந்தது. சாளுக்கியர் பட்டதகல் என்னும் ஊரில் முடிசூட்டிக் கொண்டனர். சோழருக்குத் தஞ்சை, சிதம்பரம், காஞ்சீபுரம், கங்கை கொண்டசோழபுரம், ஆயிரத்தளி என்று பல ஊர்களிருந்தன. I-ம் இராசராச சோழன் காலமுதல் அந்தந்த அரசன் ஆட்சியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளை அழகிய அகவற்பாவால் அமைந்த மெய்க்கீர்த்திகளில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. போகப் போக இவை பெருகிக் கொண்டே போவது வரலாற்று ஆராய்ச்சிக்குப் பேருதவியாக அமைந்திருக்கிறது. சோழ அரண்மனையின் சேவகர்கள் பல வேளங்களாகப் பிரிக்கப்பட்டுத் தலைநகரில் பல இடங்களில் வசித்து