பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

680

இந்தியா

ராஷ்டிரபதி கலைக்கவும், அது கூடும் காலத்தை ஒத்திப்போடவும் செய்யலாம்.

பண மசோதா தவிர மற்ற மசோதாக்கள் இரண்டு சபைகளுள் எதிலும் தொடங்கலாம். ஆனால் இரண்டு சபைகளும் ஏற்றுக்கொண்டு ராஷ்டிரபதியின் இசைவு பெற்றால் தான் சட்டமாகும். ஆயினும் ராஷ்டிரபதி இசைவு மறுக்கமாட்டார் என்பதே கருத்து. இரண்டு சபைகளுக்குள் கருத்து வேறுபாடு தோன்றினால் ராஷ்டிரபதி இரண்டு சபைகளையும் ஒன்றாகக் கூட்டுவிப்பார். பெரும்பான்மையோர் மசோதாவின் கதியை முடிவு செய்வர். பண மசோதா மக்கள் சபையிலேயே தொடங்கும். மேல்சபை திருத்தங்கள் கூறலாம். ஆனால் மக்கள் சபை அவைகளை ஒதுக்கிவிட்டு மசோதாவை நிறைவேற்றலாம்.

இந்திய யூனியனின் தலையாய நீதி அமைப்பு உச்ச நீதிமன்றம். இது எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலாகவுள்ள அப்பீல் மன்றமாகும். அதன் நீதிபதிகளை ராஷ்டிரபதி நியமிப்பர். அறுபத்தைந்து வயதானதும் அவர்கள் பதவி விட்டு விலகுவர். திறமையில்லை என்றோ, தவறாக நடந்தார் என்றோ நிரூபிக்கப்பட்ட காரணத்தைக் காட்டி, ஒரு நீதிபதியை நீக்கவேண்டும் என்று பார்லிமென்டு சபைகள் இரண்டும் ராஷ்டிரபதியை வேண்டிக் கொண்டால் ராஷ்டிரபதி அவரை நீக்கலாம். வேறுவிதமாக நீக்க முடியாது. தேவை ஏற்பட்டால் விலகிய நீதிபதிகளை மறுபடியும் பதவி ஏற்குமாறு கேட்கலாம். இம்மன்றம் கிரிமினல் அப்பீல் மன்றமாகவும், சிவில், அசல் அப்பீல் மன்றமாகவும் இருக்கிறது. ஆதார உரிமைகள் சம்பந்தமான வழக்குக்களுக்கும், இராச்சியங்களிடையே எழும் வழக்குக்களுக்கும், இராச்சியத்துக்கும் யூனியனுக்குமிடையே நிகழும் வழக்குக்களுக்கும் அசல் மன்றமாகவும் உள்ளது. நாட்டிலுள்ள எல்லாவகை நீதிமன்றங்களையும் கண்காணிக்கும் உரிமை இதற்கு உண்டு. சட்டப் பிரச்சினைகளைப் பற்றி இம்மன்றத்தினிடம் யோசனை கேட்கும் உரிமை ராஷ்டிரபதிக்கு உண்டு. இது 1949க்குப்பின் பிரிவி கவுன்சில் தானத்திலுள்ள அப்பீல் கோர்ட்டாகும்.

முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாணமாயிருந்த ஒவ்வோர் இராச்சியத்திற்கும் ராஷ்டிரபதியால் ஐந்து ஆண்டுக்காலத்துக்கு நியமிக்கப்பட்ட கவர்னர் உண்டு. இவர் இராச்சியச் சட்ட அமைப்புக்குப் பொறுப்புள்ள மந்திரிசபையின் கருத்துப்படி நடப்பர். முன் சுதேச, சமஸ்தானமாயிருந்த ஒவ்வோர் இராச்சியத்திற்கும் ராஷ்டிரபதியின் அங்கீகாரம்பெற்ற ராஜப்பிரமுகர் உள்ளார். இவரும் சட்டசபைக்குப் பொறுப்புள்ள மந்திரிசபையின் கருத்துப்படியே நடக்கக் கடவர்.

சில இராச்சியங்களில் அசெம்பிளி என்ற சட்டசபையும், சில இராச்சியங்களில் அசெம்பிளியுடன் கவுன்சில் என்ற மேல் சபையும் காணப்படும். வயது வந்த வாக்காளர்கள் நேரடித்தேர்தல் மூலம் அசெம்பிளிக்கு 500க்கு அதிகப்படாமலும் 60க்குக் குறையாமலும் உறுப்பினர்களைத் தேர்வர். கவுன்சில் உறுப்பினர் தொகை அசெம்பிளி தொகையின் நாலில் ஒரு பங்குக்கு அதிகமாகாமலும் நாற்பதுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். அசெம்பிளி ஐந்துவருடமிருக்கும். கவுன்சில் இராச்சிய சபைபோல் இருந்துகொண்டே இருக்கும். மூன்றில் ஒருபகுதி உறுப்பினர் இரண்டாண்டுக்கு ஒரு முறை பதவியினின்றும் விலகுவார்கள். அசெம்பிளி உறுப்பினர்கள் சபாநாயகரையும் உபசபாநாயகரையும் தேர்ந்தெடுப்பார்கள். அதுபோல் கவுன்சில் உறுப்பினர்கள் தலைவரையும் உப தலைவரையும் தேர்ந்தெடுப்பார்கள். இரண்டு சபைகளும் நிறைவேற்றிய மசோதா கவர்னரிடம் அவருடைய இசைவுக்காக அனுப்பப்பெறும். அவர் இசைவார்; அல்லது இசைவு தரவில்லை என்பார்; அல்லது ராஷ்டிரபதியின் கருத்தறிய அனுப்புவார். கவர்னர் இசைவு தராவிடினும் சட்டசபை மறுபடியும் அம்மசோதாவை நிறைவேற்றினால் அது சட்டமாகி விடும். ஆனால் இராச்சிய சட்டசபை விவாதிக்கும் எந்த மசோதாவிற்கும் இசைவு மறுக்கும் உரிமை ராஷ்டிரபதிக்கு உண்டு. இரு சபைகளுக்குள் கருத்து வேற்றுமை தோன்றின், அசெம்பிளி மசோதாவை இரண்டாம் முறை நிறைவேற்றினால் அது சட்டமாகிவிடும். ராஜப்பிரமுகர் உள்ள இராச்சியங்களிலும் இதுபோலவே நடைபெறும்.

ஒவ்வோர் இராச்சியத்திலும் பிரதம நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் கொண்ட உயர் நீதிமன்றம் இருக்கும். நீதிபதிகளை ராஷ்டிரபதி நியமிப்பார். இவர்கள் அறுபது வயதுவரை வேலை பார்ப்பர், பார்லிமென்டின் இரண்டு சட்டசபைகளும் வேண்டும் பொழுது, ராஷ்டிரபதி நீதிபதியை நீக்கலாம். வேறுவிதமாக நீக்க முடியாது. நீதிபதி விலகியபின் இந்திய யூனியன் எல்லைக்குள் வழக்கறிஞராக இருக்க முடியாது. பிரதம நீதிபதி, ராஷ்டிரபதியின் இசைவு பெற்று, விலகிய நீதிபதி எவரையும் மறுபடியும் நீதிபதியாக வேலைபார்க்குமாறு அவர் இசைந்தால் வேண்டிக்கொள்ளலாம். உரிமைக் கட்டளைகளைப் பிறப்பிக்கவும், இராச்சியத்திலுள்ள சகல நீதி அமைப்புக்களையும் கண்காணிக்கவும், உயர் நீதி மன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

பார்லிமென்டு இயற்றும் சட்டங்கள் சம்பந்தமான விஷயங்களை யூனியன் நிருவாகமும், இராச்சியச் சட்ட சபைகள் இயற்றும் சட்டங்கள் சம்பந்தமான விஷயங்களை இராச்சிய நிருவாகமும் நிருவகிக்கும். சட்டம் இயற்றும் விஷயங்கள் அனைத்தும் (1) ஐக்கிய சட்ட சபை இயற்ற அதிகாரம் பெற்றவை, (2) இராச்சிய சட்டசபை இயற்ற அதிகாரம் பெற்றவை, (3) இரண்டு வித சட்டசபைகளும் இயற்ற அதிகாரம் பெற்றவை என்று மூன்று வகையினவாகும். ஆயினும் (1) அவசர நிலைமை உண்டாயபோதும், (2) இராச்சியங்களின் கவுசின்சில் மூன்றில் இரு பங்கு தொகை உறுப்பினரால் அவசியம் என்று தீர்மானிக்கும் போதும், (3) சட்டத்தின் முதல் தபசிலின் ஏ, பீ பிரிவுகளில் சேர்க்கப் படாத நிலப்பகுதிகள் சம்பந்தமாயும் இராச்சிய சட்ட சபை மட்டும் அதிகாரம் பெற்ற விஷயங்கள் பற்றிச் சட்டங்கள் இயற்ற அதிகாரம் உடையதாகும். பார்லி மென்டுச் சட்டமும் இராச்சியச் சட்டமும் முரணானால், பார்லிமென்டுச் சட்டமே அமலாகும். ஆனால் ராஷ்டிரபதி இசைவுடன், இரு சபைக்கும் அதிகாரமுள்ள விஷயங்கள் பற்றி இராச்சிய சட்டசபை சட்டமியற்றின், அது பார்லிமென்டுச் சட்டத்தை நீக்கி அமலாகும். இந்த மூன்றுவித விஷயங்களும் தவிர ஏனைய விஷயங்களைப் பற்றிச் சட்டம் இயற்றப் பார்லி மென்டுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் விதிகள் : இந்திய யூனியனை விட்டுப் பிரிய எந்த இராச்சியத்துக்கும் உரிமை கிடையாது. இந்தியர் ஒவ்வொருவரும் யூனியனுக்கே குடியாவர். யூனியனுக்கும் இராச்சியத்துக்கும் குடியாக மாட்டார். ஒவ்வொரு குடியும் அடிப்படை உரிமைகள் பெறுவார். இந்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்தினுடையதாகும். அரசியலின் நோக்கங்கள் எனப்படுபவை கோர்ட்டு மூலம் பெறக்கூடிய உரிமைகள் அல்ல. அரசாங்கம் நினைவில் வைத்துக் காரியங்கள் செய்வதற்காக வேண்டிய குறிப்-