பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அட்ரோப்பீன்

40

அட்வொக்கேட்டு


அட்ரோப்பீன் (Atropine): ஆல்கலாயீடுகளில் (த.க) ஒன்று. லக்குமணச்செடி, கொர்சான் ஓமம் (Hyoscyamus Niger), ஊமத்தை, சில காட்டு மிளகுக்கொடி வகைகள் முதலிய தாவரங்களில் முக்கியமான ஆல்கலாயிடுகள் உள்ளன. இத்தாவரங்கள் அனைத்திலும் ஹயோசயமீன் உள்ளது. இத்துடன் அட்ரோப்பீனும் சேர்ந்திருப்பதுண்டு, ஹயோசயமீன் என்பது டிராபிக அமிலத்தின் டிரோப்பின் எஸ்ட்டர். அட்ரோப்பீன் விழியின் பாவையை விரித்துக் கண்ணின் தசைகளைச் செயலற்றவை யாக்குகிறது; ஆகையால் கண்ணைச் சோதிக்குமுன் இது கண்ணில் இடப்படுகிறது.

அட்லான்டா : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவின் தலைநகர். மக்: 327,090. (1950). இது தென் ஐக்கிய நாடுகளிலேயே ஒரு முக்கியமான ரெயில்வே சந்திப்பு நிலையம். இங்கு ஒரு பெரிய நூல்நிலையமும், பல்கலைக்கழகமும், பல பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. இந்நகரில் பருத்தி நெசவு முதலிய பல கைத்தொழிற் சாலைகள் உள்ளன.

அட்லான்டிக் உடன்படிக்கை : மேற்கு ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே 1949-ல் ஒரு ராணுவ உடன்படிக்கை ஏற்பட்டது. ரஷ்ய கம்யூனிஸ்டு நாடுகள் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கு எதிரிடையாக ஜனநாயக நாடுகள் ஐக்கியப்பட்டு நிற்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு இவ்வுடன்படிக்கை ஏற்பட்டது. இந்த ஐக்கியத்தை ஒரு கூட்டாட்சி என்றோ நாட்டுக்கூட்டம் என்றோ கூறமுடியாது. இது ராணுவ நிலைமைகளைச் சமாளிப்பதற்கு ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையேயாம். இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்ட எந்த அதன் உறுப்புநாடும் பகைவர்களால் தாக்கப்பட்டால் மற்ற உறுப்பு நாடுகள் உதவி கோரப்படாமலே உதவிக்குச் செல்லவேண்டும் என்பது இதன் கருத்து.

அட்லான்டிக் சமுத்திரம் : கிழக்கே ஐரோப்பா, ஆப்பிரிக்காக் கண்டங்களுக்கும், மேற்கே வட தென் அமெரிக்காக் கண்டங்களுக்கும் இடையே உள்ள பெரிய நீர்ப்பரப்பு. இதற்கும் பெரியது பசிபிக் சமுத்திரம் ஒன்றே. இச்சமுத்திரத்தின் வடகோடி ஆர்க்டிக் சமுத்திரத்தோடும், தென்கோடி அன்டார்க்டிக் சமுத்திரத்தோடும் கலக்கின்றன. இது தெற்கு வடக்கில் 9,000 மைல் நீளம் உள்ளது. இதன் உச்ச அகலம் (பிளாரிடாவிலிருந்து ஜிப்ரால்டர் வரை) 4.150 மைல். இச்சமுத்திரத்தின் பரப்பு : சு. 32 லட்சம் ச. மைல்.

இச்சமுத்திரம் போர்ட்டோ ரீக்கோ பள்ளம் என்னுமிடத்தில் 30,000 அடி ஆழம் இருக்கிறது. இதுவே இதன் உச்ச ஆழம்.

கிழக்கில் மத்தியதரைக் கடலும் மேற்கில் ஹட்ஸன் வளைகுடா, மெக்சிகோ வளைகுடா, கரிபியன் கடல் என்பவையும் இச்சமுத்திரத்தை அடுத்த நீர்நிலைகள். பிரிட்டிஷ் தீவுகளும், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நியூ பவுண்டுலாந்து முதலியவையும், மேற்கிந்தியத் தீவுகளும் இச்சமுத்திரத்திலுள்ள முக்கியமான தீவுகள். இச்சமுத்திரத்தின் நீர்மட்ட வெப்பநிலை 80° பா. லிருந்து 28° பா. வரையுள்ளது. வட அட்லான்டிக்கில் இரு நீரோட்டங்கள் முக்கியமானவை. வளைகுடா நீரோட்டம் பிளாரிடா ஜலசந்தியிலிருந்து தொடங்கி தென்மேற்கு ஐரோப்பாவரை செல்லுகின்ற வெப்ப நீரோட்டம்; இதனால் ஐரோப்பாவின் அட்லான்டிக் கடற்கரையில் அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையைவிட வெப்பம் அதிகமாயிருக்கிறது. லாப்ரடார் நீரோட்டத்தால் கானடாவில் குளிர் மிகுந்து காட்டுகிறது. அவ்வாறே தென் அட்லான்டிக்கிலுள்ள பிரேசில் நீரோட்டம் வெப்ப நீரோட்டமாகவும், பாக்லாந்து நீரோட்டம் குளிர் நீரோட்டமாகவும் உள்ளன. இங்குள்ள கனாரி, பெங்கூலா நீரோட்டங்களும் முக்கியமானவை.

இச்சமுத்திரத்தில் உணவிற்குரிய மீன் மிகுதியாகக் கிடைக்கிறது.

அட்லான்டிக் சாசனம் : 1939ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக, நெவில் சேம்பர்லின் என்னும் ஆங்கிலப் பிரதம மந்திரி பதவியிழந்தார். 1940-ல் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதம மந்திரியானார். அப்போது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையே எப்பொழுதுமேயுள்ள நல்லுறவு மேலும் வலிவடைந்தது. சர்ச்சிலும், அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த பிராங்லின் ரூஸ்வெல்ட்டும் அட்லான்டிக் கடலில் ஒரு போர்க் கப்பலில் 1941 ஆகஸ்டு 14-ல் சந்தித்து எட்டு அமிசங்கள் கொண்ட ஒரு சாசனத்தை வகுத்தனர். இது 1918-ல் ஜனாதிபதி வில்சன் தயாரித்த பதினான்கு அமிசத் திட்டத்தின் முதல் ஐந்து அமிசங்களை யொத்திருந்தது. நேசநாடுகள் வெற்றிபெற்ற பின்னர் ஏற்படும் சமாதானத்தின் தன்மையை நிருணயிக்கும் முறையில் இச்சாசனம் அமைந்தது.

அட்லான்டிஸ் : ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு மேற்கே அட்லான்டிக் சமுத்திரத்தில் இருந்ததாகக் கிரேக்கர்களும் ரோமானியர்களும் நம்பிவந்த ஒரு பண்டைய புராணத் தீவு. அங்கே ஒரு பெரிய ஜனசமூகம் வாழ்ந்து வந்ததாகவும் அது தமது காலத்துக்கு எண்பதாயிரம் ஆண்டுகட்குமுன் சமுத்திரத்தில் ஆழ்ந்து விட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். அது இப்போதுள்ள கனாரித் தீவு என்று சிலரும், அமெரிக்கா என்று சிலரும், ஸ்காந்தினேவியா என்று சிலரும் கூறுகிறார்கள். ஆட்லெஸ் மலையை வைத்தே அட்லான்டிக் சமுத்திரமும் அட்லான்டிஸ் தீவும் பெயர் பெற்றன.

அட்லாஸ் (Atlas) பார்க்க: ஆட்லெஸ்.

அட்வொக்கேட்டு (Advocate) : சாதாரணமாகக் கட்சிக்காரர்களுக்காகக் கோர்ட்டு அல்லது வேறு விசாரணை மன்றங்களில் (Tribunals) வாதம் செய்பவர்கள் அட்வொக்கேட்டு என்று அழைக்கப்படுவார்கள். இங்கிலாந்திலுள்ள பாரிஸ்ட்டர் போலல்லாமல் இந்தியாவிலுள்ள அட்வொக்கேட்டுகளுக்குக் கட்சிக்காரர்களுக்காக வக்காலத்து வாங்கவும் கோர்ட்டில் வாதம் செய்யவும் அதிகாரமுண்டு. முக்தியார், பிளீடர், வக்கீல்,அட்வொக்கேட்டு எனப் பலவகைப்பட்ட வழக்கறிஞர்களில் 1926 ஆம் ஆண்டின் இந்திய வழக் கறிஞர் சபைச் சட்டப்படி (Indian Bar Council Act) தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்பவர்கள் அட்வொக்கேட்டு எனப்படுவர். ஒவ்வொரு இராச்சியத்திலும் உள்ள வழக்கறிஞர் சபை இவ்விஷயத்தில் தகுந்த விதிகளை ஏற்படுத்தும். பல்கலைக் கழகங்களில் சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள், தேர்ந்த அட்வொக்கேட்டுகளிடம் ஓராண்டு சட்டப் பயிற்சி மாணவராக (Apprentice) ஆகித் தொழில் கற்றுக்கொண்டு அட்வொக்கேட்டுகளாகப் பதிவு செய்து கொள்வார்கள். ஒரு பிளீடர் குறிக்கப்பட்ட சில ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு அட்வொக்கேட்டாகப் பதிவுசெய்து கொள்ளலாம். ஓர் உயர் நீதிமன்றத்திலுள்ள (High Court) அட்வொக்கேட்டு-